Thursday, May 6, 2021

மனச்சுமை

 

தீநுண்மி  தற்காப்புக்கு

தடுப்பூசியே சரணாகதி

முடிவாயிற்று

உயிர் வாழும் ஆசை.

 

வியர்வையுமில்லை சிறுவாடும் இல்லை

பசியும் நோயும் தொல்லை

சிறுசுகளைக் காக்கவேணும்

போடணும் தடுப்பு ஊசி

என்போர் ஆயிரமாயிரம்

அவர்களுக்கானதுதானே

அரசு மருத்துவமனையின்

இலவச சேவைகள்!

 

என்கையில் கொஞ்சம் சேமிப்பும்

கணவன் மகனின் அரவணைப்பும்

இருக்கும் நம்பிக்கையில் முதல்

தவணை தனியார் மருத்துவமனையில்

மறுதவணைக்கு போட்டிபோட வாய்க்காத

பிரிதொரு பொழுதின் நிர்ப்பந்தத்தில்

அரசு மருத்துவமனை நோக்கிய

பார்வையில் குத்தீட்டியாய் வரிசை

ஒழுங்குபடுத்தி உள்ளனுப்பும் இளைஞி

 

தனியார் மருத்துவமனை சென்றுவந்த

தருக்கில் இருப்பதாய் தப்புக்கணக்கில்

வந்தவரையெல்லாம் தனி வரிசையில்

ஒதுக்கியவளின் பார்வையில்

வன்மத்தின் ரேகைகள் தாராளமாய்

 

மணிக்கணக்கில் காக்க வைத்து

வஞ்சம் தீர்த்தவளின் மனம்

இரங்கவேயில்லை.

இறுதிவரை புரியாத புதிராகவே

விடைகொடுத்த அவள் என்நிலையை

உணரவுமில்லை

என் மனச்சுமையை இறக்க இடம்

கொடுக்கவுமில்லை.