Friday, October 16, 2015

மனிதரில் மாணிக்கம் - கலாம்




ஒல்லும் வகையான், அறவினை, ஓவாதே,
செல்லும்வாய் எல்லாம் செயல்.

உரை: செய்யக்கூடிய வகையால், எக்காரணம்கொண்டும் தவிர்க்காமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலையே செய்ய வேண்டும். 

Tuesday, October 13, 2015

நாலடியார் - பொறையுடைமை




அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.


அறிய வேண்டிய நன்மை தீமைகளனைத்தும் அறிந்து, தன்னடக்கமுடையவராக, அஞ்ச வேண்டிய பழி பாவங்களுக்கு அச்சம்கொண்டு, தாம் செய்யும் காரியங்களை உலகம் உவக்குமாறு செய்து, நேர்மையான வழியில் சம்பாதிக்கும் பொருள்கொண்டு இன்பாக வாழும் இயல்புடையவர்கள் எக்காலத்தும் துன்புற்று வாழ வேண்டியிருக்காது.

இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.

உயர்ந்தோங்கிய மலையிலிருந்து வீழும் அருவிகளைக் கொண்ட நாட்டை உடையோனே! இழிவே வந்தாலும் வரட்டும் என்று இன்பம் கிடைக்கின்றதே என்பதால், அச்செயலின் பக்கம் இருப்பவனுக்கு இன்பம் தொடர்ந்து கிடைக்கும் என்றாலும், உலகம் பழிக்காமல் இருக்க வழியில்லை என்ற நிலையில் அச்செயலை செய்யாமல் இருப்பதே நன்மை பயக்கும். அதாவது, இடையறாத இன்பம் உண்டாவதாயினும் பழிப்பில்லாத நற்செயல்களே செய்யத்தக்கது.

இணையப் படத்திற்கு நன்றி

புறநானூறு 106



பாடியவர்: கபிலர் 
பாடப்பட்டோன்: வேள் பாரி, 
திணை: பாடாண், துறை: இயன் மொழி


நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.


உரை : சூடும் மலரில் நல்லது, தீயது என்பதெல்லாம் நம்மைப்போல் இறைவனுக்கு இல்லை. அதாவது எவரும் விரும்பாத, குவிந்த மலர்களும், புல்லிய இலைகளையும் கொண்ட எருக்கம் பூவேயானாலும் அதனை உள்ளன்போடு அணிவித்தால் கடவுள் வேண்டாம் என்று மறுக்காமல் ஏற்பார் ! அதைப்போன்று ஏதுமறியா அறிவிலர், புல்லிய குணமுள்ளவர், வறுமையுற்றார் என எவர் வரினும் பாரி வாரி வழங்குவான்!