Thursday, October 21, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 6 .


உடன்பிறப்புக்களே, நேற்று இட்ட இடுகையின் தொடர்ச்சிதான் இது. பல நட்பூக்களின் விருப்பத்திற்கிணங்க இந்த உப்புமா ரெசிப்பியின் அடுத்த பாகமும் வழங்கியிருக்கிறேன்.

* பாசிப்பருப்பு உப்புமா :

தேவையானப் பொருட்கள் :

1 கப் பாசிப் பருப்பு.
1 டே. ஸ்பூன் எண்ணெய்
1 டே. ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய்.
ஒரு கொத்து கருவேப்பிலை.
2 டே. ஸ்பூன் நிலக்கடலை
2 டே. ஸ்பூன் பச்சை பட்டாணி
உப்பு தேவைக்கேற்ப.
1 டி.ஸ்பூன் கடுகு
1/2 டி.ஸ்பூன் சீரகம்
2 -3 பச்சை மிளகாய்
1 எலுமிச்சை பழம்
1 தக்காளி
1 வெங்காயம்
1 கேரட்
2 -3 சிகப்பு வர மிளகாய்

செய்முறை :

பருப்பை வறுத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதில் உப்பு, சிகப்பு மிளகாய் கிள்ளியது, மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சேர்க்கவும். கொதி வந்தவுடன் தீ
யைக் குறைக்கவும்.

அதில் பருப்பு, நிலக்கடலை, நறுக்கிய தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். தண்ணீர் வற்றும் வரை கிளறி விடவும்.

எலுமிச்சை சாறையும், நெய்யும் சேர்த்து கிளறி 10 நிமிடம் சிறி தீயில் மூடி வைத்து இறக்கவும்.

துறுவிய கேரட், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய் அலங்கரித்து பறிமாறவும்... பிரட் உப்புமா :தேவையான பொருட்கள் :

2 கப் ரொட்டித்தூள்.[ Breadcrumbs]
3/4
கப் தண்ணீர்
1 வெங்காயம் [ பெரிய சதுரமாக வெட்டியது]
2 பச்சை மிளகாய் [ நறுக்கியது]
1/2 கப் நிலக்கடலை [வறுத்தது ]
1/2 டி.ஸ்பூன் கடுகு
கருவேப்பிலை சிறிது.
2 டே.ஸ்பூன் சமையல் எண்ணெய்
1/2 ஸ்பூன் மிளகாய் பொடி
கொத்தமல்லி அலங்கரிக்க.

செய்முறை :

எண்ணெய் இல்லாமல் ரொட்டித் தூளை மிதமாக வறுக்கவும். கடாயில் எண்ணெய் விடவும். கடுகு போட்டு அது பொரிந்தவுடன் கருவேப்பிலை போடவும். வெங்காயமும், பச்சை மிளகாயும் சேர்க்கவும். நன்கு வதக்கவும். ரொட்டித்தூளைப் போட்டு தண்ணீரும் ஊற்றவும். நன்கு கிளறி நிலக்கடலையும் சேர்க்கவும். 1 நிமிடம் மூடி வைக்கவும். கீழே இறக்கி விடவும். கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பறிமாறவும். .

Tuesday, October 19, 2010

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் - பாகம் - 5.


உடன்பிறப்புக்களே வணக்கம். இன்று நம் உடல் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையான புரோட்டீன் சத்து நிறைந்த உணவு பற்றி பார்க்கலாம். புரோட்டீன் என்பது நம் உடல் கட்டுமான பணியின் முக்கிய அங்கம் வகிக்கக் கூடிய ஒன்றாகும். இந்த புரோட்டீன் சத்து நாம் உட்கொள்ளும் உணவின் மூலமேக் கிடைக்கிறது. இது உடல் தசைநார்களின் வளர்ச்சி மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள், நோயைத் தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாடுகள் மற்றும் ஹார்மோன்கள், சுரப்பிகளின் செயல்பாட்டு ஒழுங்குமுறை ஆகிய அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்றாகும்.

தேவையான புரோட்டீன் அளவு :

உதாரணமாக உடல் எடை 55 கிலோ இருப்பவர்களுக்கு கலோரி அளவின் தேவை - 2200 க [ ஒரு நாளைக்கு]

புரோட்டீன் சத்தின் தேவை - 55கி * 1கிம் = 55 கிம்

புரோட்டீன் சத்து நிறைந்துள்ள உணவு வகைகள் என்று பார்த்தால் அவை தானியங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், நட்ஸ், விதைகள் டோஃபு, [ சோயா பன்னீர்] போன்றவைகள். பருப்பு வகைகளில் 27% கலோரிகள் புரோட்டீன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாவுக்கினிய சத்தான உப்புமா :

பருப்பு உப்புமா :

தேவையான பொருட்கள் :

* 1 1/2 கப் துவரம் பருப்பு
* 1/2 கப் பாசிப்பருப்பு
* 1 டீஸ்பூன் கடுகு
* 8 -10 கருவேப்பிலை இஅலை
* 1/4 டீஸ்பூன் உப்பு
* 3 -4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
* 1/2 கப் தேங்காய் துறுவியது
* 1/4 டீஸ்பூன் கடலைப் பருப்பு
* 1/4 டீபூ உளுத்தம் பருப்பு
* 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
* 3 -4 பச்சை மிளகாய்

செய்முறை :

இரண்டு பருப்புகளையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் அதை பருபருப்பாக அரைத்து பொடியாக்கவும். ஒரு கடாயில் எண்ணை சூடு செய்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு போட்டு, 2 நிமிடம் வதக்கி, பின்பு மிளகாயும் கருவேப்பிலையும் சேர்த்து வதங்கியவுடன், அதில் அரைத்த பருப்பைப் போட்டு நன்கு கலக்கவும். 3/4 கப் தண்ணீர் சேர்க்கவும். குறைந்த தீயில் 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும். பிறகு துறுவிய தேங்காயும் உப்பும் சேர்த்து நன்கு கிளறவும். சூடாகப் பறிமாறவும்.


2 . மக்காச் சோள மாவு உப்புமா :

தேவையான பொருட்கள் ;

* 1 கப் சோள மாவு.
* 1 டே. ஸ்பூன் எண்ணெய்
* 1 டே. ஸ்பூன் வெண்ணெய் [அ] நெய்
* 2 டே. ஸ்பூன் வெந்தயக் கீரை இலை [ நறுக்கியது]
* 1 டே. ஸ்பூன் கருவேப்பிலை [ நறுக்கியது]
* 1 டே.ஸ்பூன் கடலைப் பருப்பு
* 1 சிறிய உருளைக் கிழங்கு
* 1 தக்காளி
* 1 டீ. ஸ்பூன் கடுகு
* 1/2 ஸ்பூன் ஓமம்
* 1 ஸ்பூன் உலர் திராட்சை
* முந்திரி தேவையான அளவு
* 2 -3 பச்சை மிளகாய்
* 1 கேரட்
* 2 -3 காய்ந்த சிகப்பு மிளகாய்

செய்முறை :

சோள மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து, கடுகு, கடலை பருப்பு, ஓமம், பொடியாக நறுக்கிய உருளை மற்றும் கேரட் அனைத்தையும் நன்கு வதக்கவும்.

பிறகு, உப்பு, பச்சை மிளகாய், திராட்சை, கிள்ளிய சிகப்பு மிளகாய் , வெந்தய இலை, நறுக்கிய தக்காளி, மற்றும் 3 கப் தண்ணீர் அனைத்தையும் சேர்த்து குறைந்த தீயில் வேக விடவும்.

சோள மாவை போட்டு கைவிடாமல் நன்கு கிளரவும். வெண்ணெய் சேர்த்து, நன்கு கிளறி, 10 நிமிடம் மூடி வைக்கவும்.

முந்திரி, கொத்தமல்லி இலை போட்டு அலங்கரித்து, சூடாகப் பறிமாறவும்.

பாசிப்பருப்பு - 24 கிம் [ 100 கிம் பருப்பில்]புரோட்டீன்
துவரம் பருப்பு - 24.5 கிம்


Sunday, October 17, 2010

எத்துனை கோடி இன்பம்................


தொடர்ந்த ஏமாற்றங்கள்......
மனம் நொந்து நிந்தித்தேன்.

சுயத்தைத் தீண்டியச் சோதனைகள்...........
உன் தோற்றத்தை பரிசோதித்தேன்.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை உணரச் செய்தாய்.....
உன்னை வெறுக்கவும் முயற்சித்தேன்.

உன் உதார குணத்தையே சந்தேகித்தேன்.......
இரக்கமற்ற அரக்கன் என நிந்தித்தேன்.

மாற்று உபாயம் தேடி சிந்தித்தேன்.......
மன வலிமையை வளர்த்தேன்.


வாழ்க்கைப் போராட்டத்தைக் கையாளும் கலையைக் கற்றேன்........
சீற்றத்திலிருந்து மீண்டுவரும் தெளிவும் பெற்றேன்.

அமைதியின் பாதையைக் கண்டறியும் சக்தி கிடைத்தது.......
இயற்கை அன்னையின் உன்னதத்தை உணர்ந்தேன்.

இன்ப மணத்தைக் கொடுத்த அவளேதான்
துன்பச் சுமையும் சுமக்கச் செய்கிறாள்.

முள்ளோடு தோன்றும் மலரின் மகிமையை உணர்ந்தேன்......
முள் தீண்டாமல் மலர் பறிக்கும் ஆற்றலும் பெற்றேன்.

இருளைப் படைத்தாய் ஒளியை உணர......
வெறுமையைப் படைத்தாய் இறைமையை உணர.

வறண்ட பாலைவனம் படைத்தாய்.....
பாலைவனச் சோலையும் படைத்தாய்.

படைப்பின் இலக்கணம் உணரச் செய்தாய்!
பண்படுத்தி எனை வழி நடத்தினாய் கச்சியே கம்பனே!

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...