பவள சங்கரி
இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற மிக நல்ல உபாயம் யோகாசனம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை. யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது . அனுதினமும் முப்பது நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயிற்சி செய்தால் வெகு விரைவிலேயே நல்ல பலனை அடைய முடியும். தியானம் நம்மை நாமே உணரச் செய்கிறது. மனதை ஒருமுகப்படுத்துவதே தியானம். சாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடுமின்றி மனதோடு உடலை இணைத்து பயிற்சி செய்வதே யோகம். தியானத்தின் மூலம் பூரண மன அமைதி பெற முடியும். இருதயத்தின் படபடப்பு குறைவதோடு, நினைவாற்றலும் அதிகரிக்கும். அமைதியான, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்துவதால் வேலை செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். இரத்த அழுத்தம், ஆத்துமா போன்ற அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடிவதோடு ஆயுளும் கூடும்.
ஏற்கனவே உள்ள நோயின் உபாதைகளை படிப்படியாகக் குறைத்து, அதனை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியம் கூடும். நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம் போன்ற உடலின் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும் வாய்ப்பு அதிகரிக்கும். இளமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
5000 ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் நாட்டுச் சித்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஆய்ந்தறிந்த அறிவியல் உண்மை யோகாசனம் என்பது.
ஓகம் என்று சித்தர்களால் வழங்கப்பட்ட சொல்தான் உயிரும் மெய்யும் கூடும் கலை. இச்சொல்தான் மருவி வடமொழியில் யோகம் என்று அழைக்கப்படுகிறது. உடலும் மெய்யும் ஒன்றாக இருப்பினும் உயிரைத் தனியே நம்மால் உணர முடிவதில்லை. ஆனால் யோகக் கலையை உளப்பூர்வமாக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நம்மால் அறிய முடியும் என்பது சித்தர்களின் வாக்கு. அதனால் உயிரையும் உடலையும் பாதுகாக்கும் உத்தியை அறிவதும் எளிதாகிறது . தினமும் காலை மற்றும் மாலையிலும், அல்லது காலையில் மட்டுமாவது இப்பயிற்சியை பழகி வந்தால், நம் உடலோடு உயிரும் புத்துணர்வு பெறுவதை அறியலாம். யோகாசனத்தை முதன்முதலாகப் பழக விரும்புபவர் குறைந்தது ஒரு வார காலமாவது நன்கு பயிற்சி பெற்ற ஒரு குருவிடம் ஒழுங்காகப் பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் நலம்.