Showing posts with label கோகுலம் கதிர் பிரசுரம். Show all posts
Showing posts with label கோகுலம் கதிர் பிரசுரம். Show all posts
Saturday, March 7, 2020
Friday, February 14, 2020
Friday, December 6, 2019
இணைந்த கோடுகள்! - கோகுலம் கதிர் இதழில்
வண்டி ஓட
சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில்
ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?
கணவன்,
மனைவியின் ஏற்றத் தாழ்வுகள் குறித்த கவியரசு கண்ணதாசனின் அற்புதமான வரிகள்!
சுவர்கத்தில் மட்டுமே நிச்சயிக்கப்படுவதாக நம்பப்பட்ட
திருமணங்கள் இன்று பணியிடம், தகவல் மையம், இடைத்தரகர் போன்று பல்வேறு இடங்களில்,
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்டு, அதே வேகத்தில் முறிவும்
ஏற்பட்டு சமூக கலாச்சாரங்களின் சீரழிவிற்கும் காரணமாகிவிடுகின்றன. இயந்திரமயமாக
மாறிவரும் சமுதாயத்தின் தேவைகளும், அது நிறைவேறுவதற்கான போராட்டங்களும் பல
நேரங்களில் பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடுகின்றன. பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்க்கையின் பலவிதமான திருப்பங்களை
ஏற்படுத்தக்கூடிய கனவுகள், கற்பனைகள், பருவம்
ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் என்று மண நாளை எதிர்நோக்கி காத்திருக்கச்செய்கிறது.
கடந்த இரண்டு
பத்தாண்டுகளாக விவாகரத்து செய்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளன
என்று சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின்
அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து விகிதங்கள் அதிகரித்த போதிலும், நகர்ப்புறங்களில் உள்ள 1.1% பெண்கள் மட்டுமே
விவாகரத்து செய்யப்படுகிறார்கள். பெண்களின் உரிமைகள் முன்னேறியுள்ள நிலையில்,
உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் அன்பு மற்றும் ஒற்றுமைக்கான இடமாக
மாறியிருந்தாலும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள்
நீடிக்கும் ஒரு இடமாகவும் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
அனைத்துப் பகுதிகளிலும்
பெண்களின் திருமண வயது அதிகரித்துள்ள அதே நேரத்தில் பிறப்பு விகிதங்கள்
குறைந்துவிட்டன. பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். உலகளாவிய
விவாகரத்து விகிதம் 1960 முதல் 251.8% வரை அதிகரித்துள்ளதாக ஐ.நா தெரிவிக்கின்றது.
இந்தியாவில் விவாகரத்து
விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. 1000 திருமணங்களில் 13 பேர் மட்டுமே
விவாகரத்து பெறுகிறார்கள். விவாகரத்து என்பது
வெட்கக்கேடான ஒரு விசயமாகக் கருதப்படுகிறது. இதனால் பல பெண்கள்
இன்னல்களுக்கும் உள்ளாகின்றனர்.
இந்தியப்
பெண்கள் பொதுவாகவே தங்கள் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை
முறைகள் போன்ற அனைத்தையும் தங்கள் மதம் சார்ந்தே கடைபிடிக்கிறார்கள். சென்ற
தலைமுறையின் பெண்கள் கூட, வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்
என்று அனைவரின் தேவைகளை நிறைவு செய்துகொண்டு, அமைதியாக பூசை,
துளசிச் செடியை வலம் வருதல், ஓரளவிற்குப்
படித்தவர்கள் என்றால் வீட்டுக் கணக்குகள், கணவனுக்குச் சின்ன
உதவிகள் செய்வது போன்றவற்றில் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மிக அமைதியான
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பழமைவாதத்தில் பாங்காக குடும்பத்திற்கு
அடங்கிய மருமகளாக, குழந்தைகளின் பாசமிகு தாயாக, இப்படி ஒரு
கட்டுப்பாடான வாழ்க்கையில் சுகம் கண்டவர்கள். ஆனால் இன்றைய கால மாற்றங்கள் சென்ற
தலைமுறையின் நம் பெற்றோர் அனுபவித்த ஒரு அமைதியான வாழ்க்கை என்பதே கேள்விக்குறியாக
உள்ளது. அவர்களிடம் பெரிய சொத்து, அதிக செல்வம் இல்லாவிட்டாலும் இன்றைய இக்கட்டான இயந்திர வாழ்க்கை அன்று
இல்லை. எளிய வாழ்க்கை முறையால், பொருளாதார பற்றாக்குறையால் மனநிம்மதி கெட்டு,
உடல் நலக் குறைவும் ஏற்படும் அவல நிலை அன்று இல்லை. உள்ளதைக்கொண்டு
மகிழ்ச்சியாக வாழக் கற்றிருந்தார்கள்.
நம் இந்தியக்
கலாச்சாரம் பொருத்தவரை ஒரு திருமணம் என்பது இரண்டு குடும்பங்களுக்கான உறவு. இரண்டு
வேறுபட்ட கலாச்சாரங்கள் இணையும்போது சில நேரங்களில் சில பிரச்சனைகள் தலைதூக்குவது
இயற்கை. பல நேரங்களில் சிறிய பிரச்சனைகள் கூட மனம் விட்டு பேச முடியாமல் தடுக்கும்
ஈகோவினால் பெரும் இடைவெளியை ஏற்படுத்தி, நாளடைவில் நிரந்தரப் பிரிவிற்குக்கூட
வழிவகுத்துவிடுகின்றன.
திருமணம்
முடிந்த கையுடன் இரண்டு குடும்பங்களுக்கும் அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்புகள் வர
ஆரம்பித்துவிடுகின்றன. புதிய மருமகள் வரும்போதே குடும்ப பராமரிப்பு, சமையல் கலை என
அனைத்திலும் மிகப்பெரும் வல்லுநராக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அப்பெண்
எத்தகைய பெரிய பதவியிலோ அல்லது கல்வியாளராகவோ இருந்தாலும் சில அற்ப விசயங்களைக்கூட
பெரிதாக்கி அதன் மூலம் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட விரும்பும் குறுகிய மனப்பான்மை
கொண்டவர்களாக உள்ளனர்.
பல உறவுகள்
தோல்வியில் முடிவதற்கான காரணம் அடிப்படை நம்பிக்கையும், பொறுமையும் இல்லாத
தன்மையுமே. இன்றைய இளைஞர்கள் (இரு பாலரும்) ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் கால
அவகாசம் கூட இல்லாமல் பொறுமையின்றி உறவுகளை எளிதாக உடைத்து விடுகின்றனர். இரு
தரப்பினரும் விட்டுக்கொடுக்கவோ அல்லது தமது தவறை ஒப்புக்கொள்ளவோ தயாராக
இருப்பதில்லை.
தேவையற்ற ஐயம்
குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெண் திருமணத்திற்கு முன் வேலை பார்த்த அதே நிறுவனம்,
அதே பணியிடம், அதே வருமானம் என்றாலும் புகுந்த வீட்டாருக்கு அது குறித்த பலப்பல
ஐயங்கள் உருவாகி தேவையற்ற குழப்பங்களையும்
ஏற்படுத்திவிடுகிறது.
பெரும்பாலான குடும்ப நல வழக்கறிஞர்களின் கருத்தின்படி பெண்ணைப்
பெற்றவர்கள் தங்கள் மகள் கணவன் வீட்டில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவராக இருக்க
வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் மகளுக்கு பலவிதமான அறிவுரைகளை வழங்கி மேலும்
குழப்பத்தை அதிகப்படுத்திவிடுகிறார்கள். இதே நேரத்தில் கணவனின் பெற்றோரும் மருமகள்
முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து
அதற்கேற்றார்போல் அப்பெண் மீது பல கருத்துகளை திணிப்பது போன்ற செயல்களால் அப்பெண்
ஒரேயடியாக திருமண உறவிலிருந்தே விட்டுவிலக நினைப்பது இயல்பாகிறது. பல நேரங்களில்
பெற்றோர் தங்கள் சுயநலத்திற்காக தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையே பணயம்
வைக்கிறோம் என்பதை உணருவதில்லை.
இரண்டு
குடும்பத்தினரின் தலையீடு இல்லாமல் கணவனும், மனைவியும் குடும்பநல ஆலோசனைகளுக்குப்
பிறகு தனியாக மனம் விட்டுப் பேசினாலே பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு இருவரும்
புத்துணர்வோடு மகிழ்ச்சியாக வாழத் தொடங்குவார்கள்.
பொதுவாக
கணவனும், மனைவியும் மட்டும் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டால் அதனை எளிதாக சமாளித்து
விடுவார்கள். எதுவாகினும் போகப்போக பழகிக்கொள்ளலாம் என்ற யதார்த்த மன நிலையில்
புது மனைவியை எந்த விதத்திலும் சங்கடப்படுத்தக் கூடாது என்று நினைக்கலாம்.
மனநிலை
என்பது மனிதருக்கு மனிதர், காலத்திற்கு காலம் மாறக்கூடியது. இரண்டு
தரப்பினருக்கும் ஒரே விசயம் இரு வேறு கருத்துகளை வெளிப்படுத்தலாம். இருவரும் சம
நிலையில் ஒத்துப்போக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேவையற்றது. ஆரம்பக்
கட்டத்திலேயே இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் ஈகோ குறுக்கிடும்போது
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வருவதில்லை.
சோதிடப்
பொருத்தம், கல்வித் தகுதி, சொத்து
மதிப்பு, வெளித்தோற்றம், குடும்பப்
பாரம்பரியம் என்று அனைத்தையும் பார்ப்பவர்கள் மணமகனுக்கு மருத்துவப் பரிசோதனை
செய்ய வேண்டும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில்
மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு
உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு
காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதும் அதிகரித்து வருகிறது. திருமணத்திற்கு
முன்பு கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம்
இயற்றப்பட்டால் அது பல திருமண முறிவுகளுக்கான தீர்வாக அமையக்கூடும். பிரச்சனை வந்த
பின்பு அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறிபோய்விடும் என்பதற்காக வாய் மூடி
மௌனம் காப்பதால் தவறிழைத்தவர்களைக் காப்பாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட
பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. திருமணத்திற்கு ஆண்மை பரிசோதனை
அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருதுவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்தியாவில் 40 சதவீதம் ஆண்களுக்கு முழு அளவிலான
ஆண்மை குறைவும், 60 சதவீதம் ஆண்களுக்கு ஓரளவிற்கு ஆண்மை
குறைவும் (partial impotance) இருப்பதாக இந்திய செக்ஸாலஜி
மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இன்று உணவு முறைகள், வாழும் முறைகள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விதவிதமான புதிய
நோய்களையும் உருவாக்கியுள்ளன. இதில் மிக முக்கியமானது ஆண்களைப் பாதிக்கும் ஆண்மைக்
குறைவு. சுரப்பிகளின் குறைபாடு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்றைய பெரும்பாலான விவாகரத்திற்கான காரணம் ஆண்மைக் குறைவு என்றும்
கூறப்படுகின்றன.
அன்றாடம்
70,000 குழந்தைகள் பிறக்கும் நம் இந்திய சமூகத்தில் பாலியல் கல்வி என்பது ஒரு
அதிசயமான விசயம். நம் பண்டைய சமூகத்தில் காமசூத்திரம் போன்ற நூல்கள் இந்த குழப்பத்தை
மிக வெளிப்படையாக தெளிவுபடுத்துகிறது. ஆனாலும் பெரும்பாலான நம் சமூகத்தில் இன்று இது
சற்று பூதாகரமாகத்தான் காணப்படுகிறது. இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதோ அல்லது
விவாதிப்பதோ இயலாத காரியம். பல்வேறு பிரச்சனைகளால் ஏற்படும் ஏமாற்றங்கள் பலரின்
வாழ்க்கையை ஒரு கேள்விக்குறியாக்கிவிடுகிறது. இந்த பிரச்சனைக்காக மருத்துவரை
அணுகுவதுகூட இயலாத காரியமாகக் கொள்வதாலேயே பல பிரிவுகளுக்கு வித்தாக
அமைந்துவிடுகின்றன. அந்த வகையில் முறைப்படுத்தப்பட்ட பாலியல் கல்வியின் தேவையும்
அதிகரித்து வருகிறது.
நம்
இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார்கள். நால்வரில் மூவர் திருமணம் அல்லது குடும்பப் பிரச்சனை,
விவாகரத்து செய்யத் துணிவு இல்லாமை போன்ற காரணங்களாலேயே தற்கொலை செய்கின்றனர்.
நவீனமயமாக்கலில்
கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை முற்றிலுமாக மறைந்து தனிக்குடும்பமாக மாறியதில் வாழ்க்கையின்
அடிப்படை ஆதாரமான அன்பின் குறைபாடுகள் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது என்பது உளவியல்
வல்லுநர்களின் கருத்து. காதல் விவகாரம் அல்லது பாலியல் காரணமாக பல கொலைகள் கூட நடப்பதை
2012 இன் தேசிய குற்றவியல் அறிக்கைகள் உறுதிபடுத்துகின்றன.
15
– 49 வயதிற்குள்ளான பெண்களின் மூன்றில் ஒரு பங்கினர் உடலாலும், பத்தில் ஒருவர்
பாலியல் தொல்லைகளையும் அனுபவிக்கின்றனர். அதாவது ஐந்தில் இரண்டு (37%) பெண்கள்
உடலளவிலோ, மனதளவிலோ திருமண வாழ்க்கையால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வறிக்கைகள்
கூறுகின்றன.
பொருளாதாரச்
சுதந்திரம் அதிகம் பெறும் பெண்கள் ஆண்கள் துணையின்றி தனித்து வாழ முடியும் என்ற
நம்பிக்கையும் பெற்றுவிடுகிறார்கள். இந்த சுதந்திரம் பல நேரங்களில் அவர்களுடைய பொறுமையை
இழக்கும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. பெண்களின் இந்த மனமாற்றங்களை ஆண்களால்
ஏற்றுக்கொள்ள முடியாமல் பழைய பழக்கவழக்கங்களை விட முடியாமல் அதே நினைவுகளுடனேயே
இருக்கிறார்கள். மேலை நாடுகளில் குழந்தைகள் பெரும்பாலும் குடும்பத்தைச் சார்ந்து
இருக்காமல் தனித்து இயங்கும் வகையில் வளர்க்கப்படுகிறார்கள். இந்திய இளைஞர்களும் இது
போன்ற மேலை நாட்டு நாகரிகங்களைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக
பிரிந்து விடுவதை எளிதானத் தீர்வாகக் கருதிவிடுகிறார்கள்.
மண முறிவிற்கான சில முக்கியமான காரணங்கள்:
·
குழந்தையின்மை –
குறிப்பாக ஆண் குழந்தை இன்மை
·
உடல் துன்புறுத்தலோ, மன
உளைச்சலோ ஏற்படுத்துவது (இரு பாலரும்)
·
வரதட்சணை கொடுக்க
முடியாத பெண்
·
முறைபிறழ்புணர்ச்சி
·
மனநலப் பிரச்சினைகள் அல்லது
தீராத நோய், உண்மையான கல்வித் தகுதிகள் அல்லது வேலை விவரங்களை பிற
தரப்பினரிடமிருந்து மறைத்தல்.
·
இரண்டாவது திருமணம்
·
கற்பழிப்பு, கொலை போன்ற
கொடூரமான குற்றவாளி கணவன்
சமூகக் கட்டுப்பாடு இன்மை, எல்லையற்ற சுதந்திரம், பெரியோர்களிடமும்,
தங்களுக்குள்ளும் மரியாதைக் குறைவான செயல்பாடுகள், கொள்கைகளைக்காட்டிலும் சட்டதிட்டங்களுக்கு
முக்கியத்துவம் கொடுத்தல், பொறுமையின்மை, அதிகப்படியான தற்பெருமை, கோபம், பொறாமை,
பேராசை, பண்பாடு - கலாச்சாரம் போன்றவற்றிற்கு மதிப்பின்மை போன்றவைகளே இன்று நச்சு
மரங்களாக வளர்ந்து அமைதியான திருமண வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கின்றன.
சில பத்தாண்டுகளுக்கு
முன்புவரை இந்தியப் பெண்களின் பெரும் பகுதியினர் கல்வியாளர்களாகவோ அன்றி
வேலைக்குச் செல்லவோ இல்லாத நிலையில் திருமணத்திற்குப் பிறகு தங்கள் தேவைகளுக்காக கணவனை
முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனைக் காரணமாகக்
கொண்டு பெரும்பாலான கணவன்மார்கள் அவர்தம் கையறு நிலையைக் கருத்தில்கொண்டு தங்கள்
மனைவிமார்களை மதிக்காமலும், அவமதித்தும், வரதட்சணை கேட்டும் தொல்லை கொடுத்து
வந்தனர். தங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள இயலாத நிலையில் மணமுறிவிற்கான
துணிவு இருப்பதில்லை. திருமணத்திற்குப் பின்பு கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்குச்
செல்லும் ஒரு பெண்ணிற்கு, ஓய்வு பெற்ற தந்தையாலோ அல்லது சகோதரர்களாலோ, அவர்களின்
மனைவிமார்களாலோ எந்த விதமான பொருளாதார ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை.
ஆனாலும் சமீப
காலங்களில் இது போன்ற சூழலில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய
பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை எப்பாடுபட்டேனும் படிக்கவைத்து, வேலை
வாங்கிக்கொடுத்து அவர்களைத் தங்கள் சொந்தக் காலில் நிற்கவும், தன்னம்பிக்கையுடன் வாழவும்
பழக்கிவிடுகிறார்கள். கணவன் அல்லது அவன்தம் குடும்பத்தினராலோ ஏற்படும் பிரச்சனைகளை
அவள் துணிவுடன் எதிர்கொள்ளத் தயாராகிறாள். இன்றைய பெரும்பாலான பெண்களுக்குத்
தங்கள் கல்வியும், பணியும் மட்டுமே முதன்மையிடத்தைப் பெறுகிறது. அவர்கள் தங்கள்
உரிமைகள் பற்றிய விழிப்புணர்வையும் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் மண
வாழ்க்கை நரகமானால் அதிலிருந்து விடுபடவும் அவர்கள் தயங்குவதில்லை.
பல சந்தர்ப்பங்களில் புதுமணப் பெண்கள் புதிய வாழ்க்கையின்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற முயல்வதோ அல்லது கணவனின் குடும்பத்தாரால்
ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைக்களைக்கூட சமாளிக்கும் பொறுமையோ இல்லாமல் தவறான
முடிவெடுப்பதில் அவசரம் காட்டவும் செய்கின்றனர். உடனடியாக அதனை தொலைபேசி மூலம்
பெற்றோருக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி, அதன் மூலம்
தவறான அறிவுரையையும் பெற்று சூழலை மேலும் மோசமடையச் செய்துவிடுகின்றனர். சில
பெற்றோர் மிக அதிகமாகவே பிள்ளைகளின் வாழ்க்கையில் தலையிட்டு சூழலை மிக மோசமாக்கிவிடுகின்றனர்.
IPC 498-A சட்டத்தின்
தவறான பயன்பாடு
இன்று விவாகரத்து வழக்குகள் மிக அதிகமாக மலிந்து விட்டதற்கான
முக்கியக் காரணம், பொறுமையிழந்த பெண்கள், திருமண வாழ்க்கை அல்லது குடும்ப
வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தங்களுக்கு மிக சாதகமான சட்டங்கள் இருப்பதையும், கணவன்
அல்லது மாமனார், மாமியார், நாத்தனார் என எவர் மீதும் வழக்கறிஞர், காவல்துறை, ஊடகம்,
பெண்கள் செல் போன்றவற்றில் புகார் அளிப்பதன் மூலம் நடவடிக்கை எடுப்பது எளிதான காரியம் என்றும் எண்ணிவிடுகிறார்கள்.
பலர் சட்டத்தின் 498-A பிரிவைப் பயன்படுத்தி கணவனையும், அவர்களின் குடும்பத்தினரையும்,
வரதட்சணைக் கொடுமை, உளவியல்பூர்வமான துன்புறுத்தல் போன்ற காரணங்களைக்காட்டி பழிவாங்கத்
துடிக்கிறார்கள். பல நேரங்களில் உண்மையான காரணங்களுக்காக திறந்த மனதுடன் விவாகரத்து
நடந்தாலும், அடுத்து நல்ல வாழ்க்கைத்துணை அமையும் வரையில், சமூகம் அமைதியாக வாழ விடாது
என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
திருமண உறவிற்குத் தடை நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கல்வி,
தொழில், ஆரோக்கியம் போன்ற எந்த விதமான பிரச்சனைகளாக இருந்தாலும் அதை மறைக்கவோ
அல்லது பொய் சொல்லி ஏமாற்றவோ கூடாது.
திருமண வாழ்க்கை என்பது வணிக ஒப்பந்தம் என்ற எண்ணம் எக்காரணம்
கொண்டும் வந்துவிடக்கூடாது. ஒரு மணமகனோ அல்லது மணமகளோ திருமண உறவிற்குத் தம்மை
தகுதியுடையவராக ஆக்கிக்கொன்ட பின்பே அதற்கு இணங்க வேண்டும்.
வாழ்க்கையின் சாதனைகளின் அடிப்படையில் பெருமளவிலான கனவோ, கற்பனையோ,
கொள்கையோ என எதுவாகிலும் தமது சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமேயொழிய அதனை
திருமண உறவின் மூலம் அடைய நினைப்பது சரியான திட்டம் அல்ல. அவரவர் தகுதிக்கு ஏற்ப
பெரும்பாலும் மணப்பெண் வீட்டார் இயன்ற வரதட்சணையை கொடுக்கத்தான் செய்கிறார்கள்.
அது போதும், போதாது என்ற விவாதம் எல்லாம் தலை தூக்க ஆரம்பித்தால் அது திருமண
வாழ்க்கையின் அமைதியைப் பறித்துவிடும். திருமணத்திற்கு முன்பே மணமகனோ, மணமகளோ தமது
கல்வித் தகுதிக்கும், குடும்பம், செல்வ நிலை என அனைத்திற்கும் பொருத்தமானவர்தானா
என்பதை கலந்தாலோசனை செய்த பிறகே திருமண உறவிற்குள் நுழைவது உத்தமம்.
வாழ்க்கைத் துணையின் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் மீதுற்ற
உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். உங்களைவிட அவர்களுடைய குடும்பத்தாரை அதிகம்
நேசிப்பது இயற்கை என்பதை அவர்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளத்தான்
வேண்டும். வாழ்க்கைத் துணையை விவாகரத்து செய்வது போன்று சொந்த இரத்த சம்பந்த
உறவுகளை விலக்க இயலாது என்பதை நினைவில் கொள்வது நலம்.
கண்மூடித்தனமான கோபக்காரராக இருக்கும் நிலையில் திருமணத்திற்கு
முன்பாகவே கவுன்சிலிங் செல்வதோ அல்லது தியானப் பயிற்சி மேற்கொள்வதோ எதையேனும் செய்து
சரிசெய்து கொண்டு துணைநலம் காப்பது நல்லது.
முன் காலங்களில் பெற்றோர் பார்த்து உறுதி செய்யும் திருமணங்களில்
ஒருவருக்கொருவர் குடும்ப வழியில் நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் தோல்வி ஏற்படுவது
அரிதாகத்தான் இருந்தது. தற்காலங்களில் திருமண மையங்கள், நாளிதழ்கள் போன்றவற்றின்
மூலமாக முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய
கட்டாயத்தில் பொய், பிரட்டுகளும் மலிந்து விவாகரத்தில் சென்று முடிந்து விடுகின்றது.
காதல் மணங்களில் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்ள
வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், ஆரம்பத்தில் நல்ல நட்பின் அடிப்படையில்
ஆரம்பமாகும் வாழ்க்கை போகப்போக நல்ல துணை நலமாக மாற வேண்டும் என்றால் எந்த ஒளிவு
மறைவும் இல்லாத திறந்த புத்தகம் போன்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றும் உறுதி கொள்ள
வேண்டும்.
பின்
இணைப்பு
தேராவாத புத்த தத்துவம் நீண்டு நிலைத்து நிற்கும் திருமண உறவு
குறித்து இப்படிச் சொல்கிறது:
கணவன்-மனைவி
இருவரும் இனிவரும் அடுத்த பிறவியிலும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி சேர்ந்து வாழ
விரும்பினால், அவர்கள் மன உறுதி,
நல்லொழுக்கம், தாராள மனப்பான்மை
போன்றனைத்துடனும், இசைக்கு ஏற்ற தாளம் என்ற விவேகத்துடன் இருக்க வேண்டும்.
கணவனைப்
பொறுத்தவரை மனைவியிடம் மரியாதையாகவும், அவளை இகழாமலும், அவளுக்கு உண்மையாகவும்
இருப்பதன் மூலமும், அதிகாரத்தை ஒப்படைப்பது,
அலங்காரப் பொருட்களை வழங்குவது போன்றவற்றின்
மூலம் திருமண உறவைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
அதேபோல
ஒரு மனைவியைப் பொறுத்தவரை, அவள் தனது கடமைகளைச் சிறப்பாகச் செய்யவும், கணவரின்
உறவுகள் மற்றும் உதவியாளர்களுக்கு விருந்தோம்பல் பண்பாடு காக்கவும், உண்மையுள்ளவளாகவும்,
கணவர் கொண்டு வருவதை பொறுப்பாக பாதுகாத்து வைப்பவளாகவும், தனது கடமைகளை
நிறைவேற்றுவதில் திறமையானவராகவும், உறுதியானவராகவும் இருப்பவளாகவும் இருக்க
வேண்டும்.
திருமணம்
என்பது சம்பந்தப்படாத இரண்டு நபர்களின் சேர்க்கைக்கு ஒரு புதிய தொடக்கம் என்ற
உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். இருவரும் இயற்கையாக பரிணமிக்க ஒருவருக்கொருவர்
போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். இருவரும் அர்த்தமுடன் பேசுவதன் மூலம் பல
சிக்கல்களையும், தவறான கருத்தாக்கத்தையும் தீர்க்க இயலும். திருமணத்திற்கு முன்
ஒருவருக்கொருவர் வருங்காலத்தைப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சிறப்பாக
வாழும் வழிமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படவேண்டும்!
Monday, September 2, 2019
தங்கமே .. தங்கம்
தங்கமே ...... தங்கம்!
பவள சங்கரி
இந்திய மக்கள்
சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர்கள் அதாவது
சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மக்குவேரி
தெரிவிக்கிறது. நம் மக்கள் நகைகளாகவும்,
தங்கக்காசுகளாகவும் சேமித்து வைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாக இருக்கலாம் என்பது இவர்கள் கணிப்பு! அதாவது இந்தியர்களின் இந்த தனிப்பட்ட சேமிப்பாக
இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11% இருக்கும் என்ற ஆச்சரியமான தகவல்களையும் இந்த அறிக்கை அளிக்கிறது. நம் மக்களைப் பொருத்தவரை தங்கம் என்பது ஒரு அலங்காரப் பொருள் என்பதல்லாது,
ஒரு பாதுகாப்பான சேமிப்புக் கருவி என்ற அளவில் தனித்து நிற்பதை உணர முடிகிறது.
ஒரு
குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிடும் முக்கியக் காரணிகளில் தங்கத்திற்கு
சிறப்பான ஒரு இடம் உள்ளது. இது ஒரு ஆடம்பரப் பொருள் என்ற நிலையைத் தாண்டி வாழ்க்கையின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்காக சேமிக்கப்பட்டு வரும் இன்றியமையாத
சொத்தாகக் கருதப்படுகிறது.
தங்க நகைகள்
என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அழகிற்கும் ஆடம்பரத்திற்காகவும் மட்டுமே நகைகள் என்பதல்லாமல், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் இவைகள்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல வகையான நம் பாரம்பரியச் சம்பிரதாயங்களைப்
போல நகை அணிவதிலும் மறைமுகமாக விஞ்ஞான கருத்துகளைக்
கொண்டிருக்கிறார்கள் நம் தமிழர்கள்.
நகைகள் அணிவதன்
மூலம் நம் உடலில் உள்ள பல முக்கியமான வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு
உறுப்புகளும் பராமரிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது. அதிலும் ஆபரணங்கள் தங்கத்தில்
அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற பூமத்தியரேகைக்கு அண்மையில் இருக்கும் நாடுகள்
வெப்பமான நாடுகள். தங்கம் அணிவதன் மூலம் இந்த வெப்பத்தை ஓரளவிற்குக் குறைத்துக் கொள்ள
ஏதுவாகும் என்று நம்பப்பட்டு வருகிறது. உடலோடு ஒட்டி உறவாடும் இந்த தங்க ஆபரணங்கள்
தங்கள் மேனி அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளவை என்ற நம்பிக்கையும் வலுவாக உள்ளது.
பலவிதமான நவநாகரீக, பல்வேறு உலோகங்களால் ஆன நகைகள் சந்தைக்கு வந்தாலும்
இன்றும் தங்க நகைகளின் மதிப்பு மட்டும் சற்றும் குறைந்துவிடவில்லை. குறிப்பாகப் பெண்கள்
எத்துணை ஏழ்மை நிலையில் இருந்தாலும்கூட ஒரு பொட்டுத் தங்கமாவது அணிந்திருக்க வேண்டும்
என்று விரும்புவார்கள்.
மக்கள் விரும்பி
விரல்களில் அணியும் மோதிரம் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இனிமையான பேச்சுத் திறன்,
அழகான குரல் வளம் போன்றவற்றை ஊக்குவிப்பதோடு. இதயக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் போன்றவை நீங்கவும் உதவுவதாக
நம்பப்படுகிறது. இதே போன்று வளையல்கள், வெள்ளி மெட்டி,
வெள்ளிக் கொலுசு போன்ற அனைத்து ஆபரணங்கள் அணிவதற்கும் ஒவ்வொரு வகைக்
காரணம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
தமிழர்கள்
தங்கள் செல்வ மகளின் திருமணத்தின் போது தங்கள் சக்திக்கு ஏற்ப நகைகள் அணிவித்து
புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆதி காலத்திலேயே இந்தியாவின் செல்வ
நிலையை அறிந்த வேற்று நாட்டவர்கள், மிக ஆர்வமாக கடல்வழி வாணிபத் தொடர்பு
கொண்டிருந்தனர். சங்க காலத்தில் உரோம் நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான
வணிகம் நடைபெற்றதற்குச் சான்றாக உரோமானியக் காசுகள் தமிழகத்தில் அகழாய்வுகளில்
கிடைத்துள்ளன. அவைகளில்
திண்ணன், எதிரான் சேந்தன் என்ற பெயர்கள் பிராமி எழுத்துக்களில்
பொறிக்கப்பட்டுள்ளன. சேந்தன் என்பவர் அகநானூற்றுப் பாடலில்
குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
தங்க நகை பயன்பாடு
எந்த காலத்தில், யாரால் முதன்முதலில்
முன்னெடுக்கப்பட்டது என்ற ஐயம் எழுவது இயல்பான ஒன்றுதான். சுமேரிய
நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்று. உலகிலேயே
முதன் முதலில் மெசபதோமியாவில் (தற்போதைய ஈரான், ஈராக்) தங்கம் ஓர் புனிதமானப் பொருளாக
மட்டுமன்றி ஆடம்பரம், அலங்காரம் என அனைத்துக்குமானதாகப் பயன்படுத்தப்பட்டது.
அதன்பின் அதே காலகட்டத்தில், எகிப்தியர்களும் தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர்.
தங்கத்தை ஆபரணமாகப் பயன்படுத்தினர். 4 -5ஆம் நூற்றாண்டுகளைச்
சேர்ந்த மன்னர்கள் சிலர் தங்க நாணயங்களை வெளியிட்டனர். பொ.ச.மு.
560 – பொ.ச.மு. 546இல் லிடியா என்ற தற்போதைய மேற்கு துருக்கி
மன்னர் கிரீசசு முதன் முதலில் மீப்பெரும் அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தினார்.
உலகிலேயே முதன் முறையாக வர்த்தகப் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்ட சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட அரச
முத்திரை பதிக்கப்பட்டிருந்த நாணயம் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை
சங்ககாலந்தொட்டு, பல்வேறு அரச மரபினர்களால் அக்கம், மாடை, கழஞ்சு,
அன்றாடு நற்காசு, கருங்காசு, ஈழக்காசு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு
புழக்கத்தில் இருந்த நாணயங்கள் பொன்னாலும், வெள்ளியாலும், செம்பாலும்
செய்யப்பட்டிருந்தன. மீப்பெரும் கொள்முதல், இராணுவம், அரச
நடவடிக்கைகள் போன்றவைகளுக்கான கட்டணங்களுக்காகத்
தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. புலவர்களும், பாணர்களும் அரசனை
வாழ்த்திப்பாடி பரிசுப்பொருள்களுடன்
பொற்காசுகளும் பெற்றுச் சென்றுள்ளதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.
சோழர் காலக் கல்வெட்டுகள் குறிக்கும் காசு, பழங்காசு, மாடை முதலிய
தங்க நாணயங்களில் 127 நாணயங்கள் தவளேச்சுரத்தில் அகழாய்வில் கிடைத்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
சேரநாட்டின்
மிளகு, பாண்டிய நாட்டின் முத்து, சோழநாட்டின் துணிவகைகள் போன்றவைகள் உரோமானிய
மக்களை மிகவும் கவர்ந்ததால் பொன், வெள்ளி ஆகியவற்றால் செய்த காசுகளை பண்டமாற்றாகக்
கொடுத்து அவைகளை வாங்கியுள்ளனர். இதற்குச் சான்றாக அகழாய்வில் பல உரோமானியக்
காசுகள் தமிழகத்தில் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம்.
தங்கம் மற்றும்
வெள்ளியின் விலை எவ்வாறு நம் நாட்டில் நிர்ணயிக்கப்படுகிறது? அன்றாடம் இதன் விலையில் மாற்றம் ஏற்படுவது ஏன்?
தங்கமும் வெள்ளியும்
உலகின் பொதுச் சொத்தாகக் கருதப்படுவதால் அவற்றின் விலையும் உலகம் முழுவதும் ஒரே சீராக
இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அந்தந்த நாட்டின் பண மதிப்பின் அடிப்படையிலேயே தங்கம், வெள்ளியின் விலை மாறுபடுகிறது.
நம்மூர் பங்குச்
சந்தைகள் போன்று பிரித்தானியத் தலைநகர் இலண்டனில், புல்லியன் எக்சேஞ்ச் என்று ஒன்று
உள்ளது. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை
இது தான். உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்தும் இந்த புல்லியன்
எக்சேஞ்சில் 14 வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச்
சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்து, உற்பத்தி அளவுக்கேற்ப சந்தை
விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவது
இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். அங்கத்தினர்களான வங்கிகள் ஒன்றுகூடி, அறிவிக்கும் விலையே,
உலகம் முழுவதும் அன்றைய விலையாக, தீர்மானிக்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு
வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை
குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும், அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. TROY-OUNCE என்பது தங்கத்தின் எடையினை அளக்கப்
பயன்படும் அடிப்படை அலகு.
பொதுவாக இணைய வழி
வர்த்தகம் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதன் முக்கிய காரணியாகச் செயல்படுகின்றது. இந்த
இணைய வழி வர்த்தகத்தின் முக்கியமான அம்சம் என்றால் அது, நேரடியாகப்
பணம் எதுவும் செலுத்தாமலே, வெறும் வாய் வார்த்தைகள் அல்லது இணைய
மடல் மூலம் கூட தங்களுக்குத் தேவையான அளவில், இத்தனை கிலோ தங்கம்
ஒதுக்கிவைக்க வேண்டி பதிவு செய்துவிட்டால், அவர்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும்.
அதாவது ஒட்டுமொத்தமாக ஓரிருவரே இந்தியாவிற்குத் தேவையான தங்கத்தை, அயல் நாட்டிலிருந்தும்
பதிவு செய்துவிடலாம். இந்த வகையில் தங்கத்தின்
தேவை செயற்கையாக அதிகரிக்கப்படும் அபாயம் நேர்ந்துவிடுகிறது. ஆக, தங்கம் விலையை பெரும்பாலும் இணைய வர்த்தகமும், மிகச் சொற்பமான அளவில் மட்டுமே
தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கின்றது.
2014 ஆம்
ஆண்டில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையாக சீனாவும் அதனைத்
தொடர்ந்து ஆசுத்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும்
விளங்கின.
2014 ஆம் ஆண்டில்
உலக அளவிலான தங்க உற்பத்தி 2860 டன். நம்
இந்தியா இதே ஆண்டில் 1.56 டன் தங்கத்தை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதோடு
843 டன் தங்கத்தை நுகர்வு செய்து உலகளவில் இரண்டாம் இடத்தில்
இருந்துள்ளது. கடந்த 2015 -16 ஆம் நிதியாண்டில்
ரூ.1.80 இலட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை நம் இந்தியா இறக்குமதி
செய்துள்ளது.
உலக தங்க கவுன்சில்
வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி இந்தியாவுக்கான தங்கம் பயன்பாடு , சென்ற ஆண்டில்
771 டன்னாக இருந்ததாகவும், இந்த ஆண்டில் சற்றுக் குறைந்து 700 டன்னாக மட்டுமே இருக்கும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாகத் தங்கத்துக்கான தேவை 700 டன் முதல் 800 டன் வரையில்
இருக்கும் என்று உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே, 480 டன் தங்கத்தை பல்வேறு அரசாங்கங்களின் ரிசர்வ் வங்கிகள் வாங்கியுள்ளன என்ற தகவலையும்
அறிய முடிகின்றது. நம் நாட்டின் ரிசர்வ் வங்கி 40 டன் தங்கத்தை வாங்கியதன் மூலம் மொத்த இருப்பு 592 டன்னாக
அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை ஏறிக்கொண்டிருக்கிறது
என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இறக்குமதி செய்யப்படும்
பொருட்களுக்கு அமெரிக்க டாலரிலேயே பணம் கொடுக்க வேண்டும். அந்த
வகையில் இந்திய உரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு கூடும்போதும் நம் நாட்டில்
தங்கம் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க இயலாது. இதோடு முக்கிய நாடுகளில்
அரசியல் மாற்றங்கள், நிலையற்ற தன்மை, போர்
மூளும் அபாயம், போன்ற பல்வேறு சர்வதேச காரணங்களும் தங்கம் விலை
ஏற்றத்தை நிர்ணயித்துவிடுகின்றன.
பொதுவாக, தங்கத்தின்
மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான
தங்கம், 24 காரட் மதிப்புடையது. 100 சதவீதம் தூய்மையானதாக இருந்தாலும் நகை செய்ய உகந்ததாக
இருப்பதில்லை. நகைக்கு பயன்படுத்தப்படும் 91.67 சதவீதம் சுத்தமான தங்கம் 22 காரட் கொண்டது
என்று கூறப்படுகிறது. இருப்பினும் 75 சதவீதம் சுத்தத் தங்கமான 18 காரட்டையே நகை செய்வதற்குப்
பயன்படுத்தினாலே அது அரிதான விசயம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
உலகமயமாக்கத்தின்
பின்னர், உள்நாட்டுப் பொருளாதார அம்சங்களோடு, சர்வதேச அம்சங்களும் சேர்ந்து தங்கத்தின்
விலையைப் பாதிக்கின்றன. சமீபத்தில் நம் இந்திய மைய அரசால் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை
அறிக்கையில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை அன்னியச்
செலாவணிகளுக்கு ஈடாக சேமித்து வைக்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது, உலகின் பொருளாதார வளமிக்க நாடான அமெரிக்கா ஆகும்.
சமீபத்திய புள்ளிவிவரப்படி அமெரிக்க நாட்டு அரசிடம் 8,132 டன், அதாவது 8,13,2000 கிலோ தங்கம்
சேமிப்பில் உள்ளது. அந்நாட்டின் மொத்த செலாவணி கையிருப்பில் 73%
என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் இந்திய நாடு 10-வது இடத்தில் 557.70 டன் தங்கம் இருப்பு கொண்டுள்ளது.
நிலத்தடியில் தனி
நிலையில், சுரங்கத்தில் புதைந்திருக்கும் தங்கம் பாறைகளின்
மீது ரேகை போன்று படர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தப் பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்த பின்பு இரசாயன (வேதியியல்) முறையில் தங்கத்தைப்
பிரித்தெடுக்கிறார்கள். அதனை மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்து பின் பயன்படுத்துகிறார்கள்.
உலகில் மொத்தமாகக்
கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி அளவிற்கு தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கின்றது.
கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆசுத்திரேலியா, கொரியா , தென் அமெரிக்கா , இந்தியா
ஆகிய நாடுகளில் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் கோலார்
தங்க வயல் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆனாலும் தற்போது இந்த
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதால் தங்கத்தின் உற்பத்தி வெகுவாகக்
குறைந்துள்ளது. அண்மைக் காலமாக இலங்கையிலும் மிகச் சொற்ப அளவில்
தங்கம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
நாணயம் (Currency) என்பது பொருட்களையும் சேவைகளையும்
பரிமாறிக் கொள்வதற்கான ஒரு "பரிமாற்ற அலகு" என்பார்கள். ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுவதில் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது.
அதாவது ஒரு நாடு எந்த அளவிற்கு அவர்களின் நாணயம் அல்லது பணத்தை அச்சடிப்பது என்பதை
நிர்ணயிக்கும் சக்தி இந்த தங்கம் மட்டுமே. ஒவ்வொரு நாடும் தங்கள்
மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். அவரவர்கள்
இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றவாறு மட்டுமே அந்த நாட்டு
அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுவருகிறது.
அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள்.
தங்கம் மென்மையான உலோகம் என்பதால் தூய்மையான தங்கத்தில் மட்டும்
செய்யப்படும் நகைகள், நாணயம், உறுதியாக இருக்காது என்பதால் தங்கத்துடன் ஒரு
குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி போன்ற உறுதியான உலோகங்களைக் கலந்து
அணிகலனும் பண்டம், பாத்திரங்களும் செய்கின்றனர். பேனா முள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால்
செய்யப்படுகின்றன. தங்கத்தை மிக மெல்லிய தகடாகவோ அல்லது கம்பியாகவோ அடிக்கலாம் என்பதால்
வேண்டிய வடிவில் ஆபரணங்கள் செய்யலாம்.
மது அல்லது சாராயத்தில் தங்கத் துகள்களை
சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவர் .
தங்கபஸ்பம் பருகினால் மேனி பொன் போன்று பொலிவடையும் என்று பலரும் நம்புகிறார்கள்.
வரலாற்று காலந்தொட்டு
நச்சுத்தன்மையற்ற தூய தங்கம் அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. 24 காரட் சுத்தத் தங்கம் என்றாலும் இதில் ஆபரணங்கள்
செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன.
22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற
மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது
58.5 சதவிகிதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும்.
சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கின்றது.
பழங்காலந்தொட்டு
நம் நாட்டின் ஆலயங்கள், ஆன்மீக மடங்கள் போன்றவைகள் தங்கக் கருவூலங்களாகவும் செயல்பட்டுள்ளதை அறிய
முடிகின்றது. ஒரிசாவின் ஒரு சைவ மடத்தில் கோவில் கருவறை
முழுவதும் தங்கத்திலான செங்கல்லால் கட்டியுள்ளனர். அந்தக்
கோவிலின் பரம்பரைப் பூசாரி ஒருவர் ஒவ்வொரு கல்லாக எடுத்து விற்கும்போது மாட்டிக்
கொண்டதால் இந்த விசயம் வெளியே தெரிய வந்தது. அதுபோல
திருவனந்தபுரம் பத்மநாபர் கோவிலில் பாதாள அறையில் தங்க ஆபரணங்கள் குவிந்து கிடந்த
செய்தியும் நாம் அறிவோம்.
கொள்முதல்
செய்யப்படும் தங்கத்தில் 37% மட்டும் அணிகலன்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. 30% எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறையிலும், 30% மருத்துவம்,
மின்துறையிலும், 3% இதர செயல்பாடுகளுக்கும்
பயன்படுத்தப்படுகின்றன. தங்கம் எளிதில் மின்கடத்தி என்பதும்
குறிப்பிடத்தக்கது. அணிகலன் செய்வதற்காக மட்டும் ஒவ்வொரு
ஆண்டும் 3 முதல் 4 டன்கள் தங்கம்
இறக்குமதி செய்யப்படுகிறது என்றால் மீதக்கணக்கைப் போட்டுக்கொள்ளலாம்.
தங்கத்தின்
விலையைப் பொருத்து, சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலைகள் வேறு, வணிகர்கள்
அவரவர்கள் திறமைக்கேற்றவாரு வாங்கும் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும்
சொல்லப்படுகிறது.
நாம் நகையை
வாங்கும்போதும் அதில் கலந்திருக்கும் செம்பிற்கும் சேர்த்தே பணம் கொடுக்கிறோம். தங்கத்திலாவது
செம்பு இவ்வளவு சதவிகிதம் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனால்
வெள்ளியில் சேர்க்கப்படும் 20% அலுமினியத்திற்கும் சேர்த்துதான் வெள்ளியின் விலை தருகிறோம்.
சில
மாதங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்த ஆச்சரியமான நிகழ்வு ஒன்று
நினைவிற்கு வருகிறது. வெளிநாட்டுக்காரர் ஒருவர் தாம் வாங்கிய நகைகளுக்கு தங்கத்திற்கு உரிய விலை
மட்டுமே கொடுக்க முடியும், அதில் கலந்திருக்கும் செம்பிற்கு
அதற்குரிய விலையும், பௌதீக விதிப்படி எந்தவொரு பொருளும்
மறைந்து விடாது என்ற வகையில் சேதாரம் என்பதையும் தன்னிடமே திருப்பிக் கொடுக்க
வேண்டும் என்றும் விவாதம் செய்து பெற்றிருக்கிறார் .. இப்படித்தான் நகைக்கடைகள்
செழிப்படைகின்றன என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின்
ஏமாற்றம் நகைக்கடைக்காரர்களின் ஏற்றம் (இலாபம்) என்பதே நிதர்சனம்!
சேதாரக் கதை!
ஒரு அரசருக்கு
வெகு நாட்களாக (தங்கபஸ்பம்
சாப்பிடுபவர் போல) ஒரு சந்தேகம். சேதாரக்
கணக்கில் இவ்வளவு தங்கம் வீணாகிறதே, அதெல்லாம் என்ன ஆகும்,
எங்கே போகும் என்பதுதான் அது. அதனைப்
போக்கிக்கொள்வதற்காக ஒரு முறை ஒரு பொற்கொல்லரை அழைத்து அவருக்குத் தமது அரண்மனையிலேயே ஒரு தொழிற்கூடம் அமைத்து,
தகுந்த பாதுகாப்புடன் 2 கிலோ தங்கத்தில்
ஆபரணம் செய்யப் பணித்தார். இறுதியில் நகை செய்து
முடித்தபின்பு ஒன்றரை கிலோ தங்கத்திற்குரிய ஆபரணங்கள் மட்டுமே கணக்குக்
கொடுத்திருக்கிறார் அந்தப் பொற்கொல்லர். மீதமெல்லாம்
சிந்திச் சிதறிய சேதாரக் கணக்காக்கிவிட்டு கிளம்பிவிட்டார். அரசருக்கோ
பெரும் ஆச்சரியம். இத்தனை பாதுகாப்பையும் மீறி அந்த சேதாரம்
எப்படி காணாமல் போனது என்பதுதான். அரசர் அந்த பொற்கொல்லரைத்
தனியே அழைத்து மிரட்டி, உண்மையைச் சொன்னால்
சிரைச்சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்று கூறியவுடன் அந்த பொற்கொல்லரும் உண்மையை
எடுத்துரைத்தார். அதாவது அன்றாடம் வேலை முடிந்தவுடன் கை,
கால்கள் அலம்பும் இடத்திலிருந்து தண்ணீர் செல்லும் சாக்கடையின் நேரே
அவருடைய மகன் ஒரு சல்லடையுடன் நிற்பாராம். அங்கு அடித்து
வரும் தங்கத்தை அந்த சல்லடை மூலம் அரித்து எடுத்துச் சென்று விடுவாராம் ... இப்படியே அரை கிலோ தங்கம்
அடித்துச் சென்றிருக்கிறது சேதாரமாக என்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்து
போனாராம் அரசர்!
வெப்பத்
தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகள் போன்றவற்றிலும் தங்கம்
பயன்படுத்தப்படுகின்றது. வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும் இந்த உலோகம் காற்றில் தன்
நிறம் மங்குவதோ அன்றி துரு பிடிப்பதோ கிடையாது என்பதால், எப்போதும் பளபளப்பாகவே
இருக்கும். 100 ° செல்சியசு வெப்பநிலை வரை ஓசோன்
தாக்குதலையும் எதிர்க்கும் சக்தி வாயந்தது. அந்த வகையில் உலகில்
தங்கம் கொள்முதல் செய்யாத நாடுகள் என்பது ஏதுமில்லை என்பதும் முக்கிய செய்தி!
நன்றி - கோகுலம் கதிர்
Subscribe to:
Posts (Atom)
பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36
63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார் தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...
-
தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், சித்தா வேதா மையம், நியூ ஜெர்சி, அமெரிக்கா, சாந்தம் உலக...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...









