Monday, December 20, 2010

கனவு தேசம்.

அன்று சனிக்கிழமை. மாலை நேரம். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் என் அன்புத் தோழி மித்ராவை வீட்டின் வெளியே தோட்டத்தில் காண முடிந்தது. வார இறுதி நாட்களில் மட்டும்தான் அவளைக் காண இயலும்.

“ மித்ரா, இந்த கோடை விடுமுறைக்கு எங்கே போகப் போகிறீர்கள்?”, என்று கேட்டபோது, என் குரலில் சற்றே பொறாமை தலை தூக்கியதை மறைக்க முடியவில்லை.

“ ஓ, அதைக் கேட்கிறாயா. இன்னும் இதுவரை முடிவு செய்யவில்லை. எனக்கும், சந்துருவிற்கும் [ கணவனை பெயர் சொல்லி அழைக்கும் உயர்ந்த நாகரீகம் !] எத்தனை நாட்கள் ஆபிஸில் லீவ் கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் முடிவு பண்ண வேண்டும் !”

“ ரித்திக்காவிற்கு அடுத்த வாரத்திலிருந்து லீவ் ஆரம்பித்துவிடும் இல்லையா ?” என்றேன்.

”ஆமாம், ஆனால் அவள் பள்ளியில் இந்த முறை அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்குக் கூட்டிச் செல்கிறார்கள். அவளும் செல்கிறாள்”.

“ சரி, சரி, இந்த முறை நீங்க இரண்டு பேரும் தனியா இரண்டாம் முறையா ஹனிமூன் போகப்போறீங்க”, என்றேன் பெருமூச்சுடன்.

அவள் ஒரு குறும்புப் பார்வையுடன், “அதற்கெல்லாம் வயசு தாண்டிவிட்டது. அதுமட்டுமில்லை, நாங்கள் இருவரும் ஓடி ஓடி அலுத்துப் போய்விட்டோம். ஒரு நாளாவது வீட்டில் அமைதியாக ஓய்வெடுத்தால் போதும் என்றிருக்கிறது”, என்று அலுத்துக் கொண்டாள்.

“என்னைப் போலவா? அந்த விஷப் பரீட்சையெல்லாம் வேண்டாம் மித்ரா, அது ரொம்ப சிரமமான காரியம்.நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்துக் கிடப்பது சாமான்ய காரியமில்லை “, என்றேன்.

“சும்மா, விளையாட்டிற்குச் சொன்னேன். நாங்கள் இருவரும் வேலையை விடுவது பற்றி கனவிலும் நினைக்க முடியாது. எங்களுடைய செலவு அப்படி.குழந்தையையும் அப்படியே கேட்பதெல்லாம் கொடுத்து வளர்த்து விட்டோம். அதனால் இருவரும் சம்பாதிக்காவிட்டால் கட்டுபடியாகாது “, என்றாள்.

“சரி, அதைவிடு, இந்த முறை எங்கே போகப் போகிறீர்கள். நீங்கள் இன்னும் ஜெர்மனி போகவில்லை என்று நினைக்கிறேன். !’, விடாப்பிடியாக.

“இல்லையே, 2007 லேயே, ஜெர்மனி சென்று வந்துவிட்டோமே “.

“அப்போ ஸ்டேட்ஸ் போகப் போகிறீர்களோ?”,

‘இல்லம்மா’ என்ற போது அவளுடைய சலிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

“ வெளிப்படையா சொல்லனும்னா, நாங்க எங்க புரோகிராமை பற்றி வெளியே சொல்வதே இல்லை.காரணம், அத வாங்கிகிட்டு வா, இதை வாங்கிட்டு வா, என்று சொந்தக்காரர்களின் தொல்லைதான்”,

என் முக வாட்டத்தைக் கவனித்தவளாக, ‘நான் உன்னைப் பத்தி சொல்லவில்லை மாலா, தவறாக எடுத்துக் கொள்ளாதே’, என்றாள் ஆதரவாக என் கையைப் பற்றியபடியே.

‘ஒண்ணு மட்டும் என்னால இப்ப சொல்ல முடியும் மாலா, இந்து முறை சந்திரு என் சாய்ஸ்ஸீக்கே விட்டு விட்டார். நான் தான் முடிவு பண்ணப் போகிறேன் எங்கு செல்வதென்று ‘, என்றாள் பெருமை பொங்க.

‘ஆஹா, வெரி குட், எப்பவும் அவர்தான் முடிவு பண்ணுவார், இந்த முறை உன் சாய்ஸ், ஜமாய், மித்ரா. உன் கனவுத் தேசம் எதுன்னு எனக்கு மட்டும் சொல்லுவியா?”, என்றேன் ஆர்வத்துடன்.

‘கனவுத் தேசம்’ என்று திரும்பக் கூறிய மித்ரா, ஒரு கணம் கண்ணில் ஆர்வம் பொங்க, ஏக்கத்துடன், ‘கனவுத் தேசம்’ என்று திரும்பக் கூறினாள்.

அவள் கற்பனையை கலைக்கும் விதமாக, ‘உன் சான்ஸை முழுமையாக பயன்படுத்திக் கொள் மித்ரா. அவர் விருப்பத்தை உன் மேல் திணிப்பதை அனுமதிக்காதே’ என்று அறிவுறுத்தினேன்.

‘கட்டாயமாக, எப்படி இருந்தாலும் நான் முடிவு பண்ணியவுடன் முதலில் உன்னிடம் கூறுகிறேன்’ என்றாள் நம்பிக்கையாக.

நானும், ‘ஓகே, ஓகே, எப்பவும் போல இந்த முறையும் நாங்கள் எங்கேயும் போகவில்லை. நீ விரும்பினால், வழக்கம்போல சாவியை எங்களிடம் கொடுத்துச் செல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’, என்றேன் அக்கரையாக.

ஏக்கமான என்னுடைய இந்தப் பேச்சிற்கு காரணம் இல்லாமல் இல்லை. என் கணவர் பக்கத்திலிருக்கும் பழனி மலைக்கு கூட்டிச் செல்வதற்குக் கூட கணக்குப் பார்ப்பவர். அம்மா வீட்டைத் தவிர எந்த ஊருக்கும் போவது என்பது எனக்கு கனவில் மட்டும்தான். பாவம் அவர்தான் என்ன செய்வார், வியாபாரத்தில் முட்டி மோதி எவ்வளவுதான் உழைத்தாலும் சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது.நாம் பிறந்த நேரம் அப்படி! குழந்தைகள் படிப்புச் செலவு, கரண்ட் பில், போன் பில் என்று பட்ஜெட் போட்டு, போட்டு செலவு செய்ததால்தான், இந்த சிறிய வீடாவது கட்ட முடிந்தது. அதற்கே அந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்..........

மித்ரா வீடு என்பதைவிட பங்களா என்றுதான் சொல்ல வேண்டும். 8000 சதுர அடியில், சுற்றி தோட்டம் மற்றும் போர்டிகோ என்று சகல வசதியும் கொண்ட அந்த பங்களாவின் பக்கத்தில் எங்களின் சாதாரண வீடு மட்டும்தான். 1 கிமீ தூரத்திற்கு வேறு காலனியோ, வீடோ எதுவும் கிடையாது. முள் காடும், காட்டுப் பூச்செடிகளும் நிறைந்த அந்த இடத்தில் எங்கள் இரண்டு வீடு மட்டும்தான்.

நான் எப்பொழுதுமே மித்ராவின் வாழ்க்கை முறையைப் பார்த்து பொறாமைப் படுவேன். மித்ராவின் கணவர் சந்திரு ஒரு பெரிய அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி. ஒரு கணிணி வல்லுநர். மித்ராவும் அவருக்குச் சளைத்தவள் அல்ல. எலக்ட்ரானிக் பொறியியல் துறையில், ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவள். வீடு முழுக்க பல நாட்டுப் பொருட்கள் அலங்காரமாக வீற்றிருக்கும். தினந்தோறும் வீட்டில் மாலை நேரத்தில் நண்பர்கள், தொழில் முறை நபர்கள், உறவினர்கள் என்று இரவு வெகு நேரம் வரை வீட்டில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. இரவு வேகு நேரத்திற்குப் பிறகு தான் கார் கிளம்பும் ஓசையும் மகிழ்ச்சியான பிரிவு உபசார மொழிகளும் கேட்கும். வீடு அமைதியாக இருக்கிறதென்றால் அவர்கள் ஏதோ பார்ட்டிக்குச் சென்று விட்டார்கள் என்று அர்த்தம். அவர்கள் வீட்டில் இல்லாத நேரமெல்லாம் என் மனம் கிடந்து அடித்துக் கொள்ளும். ஐயோ, எத்தனை அழகான வீடும், தோட்டமும் அனுபவிப்பாரற்றுக் கிடக்கிறதே....என்று. அதுசரி வீட்டை தலையில் தூக்கிக் கொண்டா போக முடியும்?

மித்ரா சரியான புத்தகப் பிரியை. அவள் அறை முழுவதும் புத்தம் புதிய புத்தகங்கள் பல கேட்பாரற்றுக் கிடக்கும். சந்திருவோ பாட்டுப் பிரியர். சிடிக்கள், டிவிடிக்கள் என்று பிரிக்காமல் கூட இறைந்துக் கிடக்கும். இருவரும் என்றாவது ஒரு நாள் தங்களுக்கு இத்யெல்லாம் அனுபவிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் வீட்டில் போட்டிருக்கும் விலையுயர்ந்த சோபாக்கள் , கார்பெட்டுகள், ஓவியங்கள் போன்றவற்றை வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அனுபவிக்கும் அளவிற்குக் கூட இவர்கள் அனுபவித்திருக்க வாய்ப்பில்லை. தோட்டத்திலிருக்கும் அந்த விளையாட்டு மைதானத்தையாவது, ரித்திகா தன் நண்பர்களுடன் விளையாட பயன்படுத்துவாள்.

ஆனால், தோட்டக்காரனால், ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு அங்கு மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மனோரஞ்சித மரம், அழகழகான ரோஜா மற்றும் குரோடன்ஸ் செடிகள், மெத்தென்ற பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற அந்த புல்வெளிகள் இவையெல்லாம் கேட்பாரற்றுக் கிடப்பதைப் பார்க்க மனது சங்கடப்படத்தான் செய்கிறது.

மித்ரா குடும்பத்தின் பிசியான வாழ்க்கையில் ஓய்வு என்பது, இவர்கள் வெளிநாட்டிற்கு கோடை விடுமுறைக்குச் செல்வது மட்டும்தான். ஊரைச் சுற்றிவிட்டு அலுத்துப் போய் ஏகப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நினைவுப் பொருட்களுடன் திரும்பி வருவார்கள். நான் பலமுறை மித்ராவிடம் அவளுடைய இந்த அதிர்ஷ்டமான வாழ்க்கைப் பற்றி பெருமாயாகப் பேசும்போது அவளும், சந்திரு ஒரு சுற்றுலாப் பிரியர் என்று கூறுவாள்.

அன்று மாலை நான் என் கணவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். மித்ரா எங்கு போகப் போகிறாள் என்பதை இரகசியமாகவே வைத்திருக்கிறாள் என்று.

‘நீ ரொம்பவும் அவர்கள் விசயத்தில் மூக்கை நுழைக்கிறாய். இது நல்லதில்லை,’ என்றார் கோபமாக.

இந்த ஏரியாவில் என்னைத்தவிர அவளுக்கு வேறு நட்பும் கிடையாது, உதவுபவரும் கிடையாது என்று சொல்லும் போதே, இதைத் தொடருவதற்கு விரும்பாத என்னவர் ஒரு முறை என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு தினசரியில் தலையை நுழைத்துக் கொண்டார்.

பல வருடங்களாக கோபால்தான் அவர்கள் வீட்டையும், குழந்தையையும் கவனித்துக் கொள்கிறான்.

நான்கு நாட்கள் கழித்து மித்ராவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது மறக்காமல் திரும்பவும் அவளிடம் இது பற்றிக் கேட்டேன்.

அவளும், ஒரு வழியாக நாளை கிளம்புவதாக முடிவெடுத்து விட்டோம் , ஆனால் 15 நாள் ட்ரிப் தான் என்றாள்.

எந்த இடம் என்று கேட்க ஆரம்பிப்பதற்குள், மித்ரா ஆதரவாக என் தோளைப் பற்றி அதை மட்டும் கேட்க வேண்டாம் என்றும் தன் கணவரிடம் இந்த ரகசியத்தைக் காப்பற்றப் போவதாக சவால் விட்டிருப்பதையும் கூறினாள். 10,000 ரூபாய் பந்தயம் என்றாள் அவள்.

நானும் அவளிடம் மேற்கொண்டு அதைப் பற்றிக் கேட்காமல், அவளே பந்தயத்தில் செயிக்க வேண்டுமென வாழ்த்தினேன்.

மித்ராவும், “ரித்தி இன்று அந்தமான், கிளம்பி விட்டாள். அவள் வருவதற்கு 20நாட்கள் ஆகும். அதற்குள் நாங்கள் திரும்பி விடுவேம். கோபால் தன் கிராமத்திற்குப் போய்வர விரும்புகிறான். அவனும் நாளைக்குச் சென்றுவிட்டு நாங்கள் வருவதற்குள் திரும்பிவிடுவான் . உங்களிடம்தான் சாவியை கொடுத்துச் செல்லப் போகிறோம் என்றாள்.

நானும் ‘ஓ, யெஸ், கட்டாயம் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாமல் போய் வாருங்கள்’ என்றேன்.

அவளும் ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் உங்களுக்குத்தான் தொந்திரவு கொடுக்கிறோம் என்று பார்மலாக சொன்னாள்.

நானும் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாதானம் சொல்லிவிட்டேன். அவளும் பந்தயத்தில் ஜெயித்த பணத்தில் நான் உனக்கு ஏதாவது நல்ல பரிசாக வாங்கி வருகிறேன் , என்றாள் சிரித்துக் கொண்டே.

அடுத்த நாள் சந்திரு கேட் மற்றும் வீட்டுக் கதவு ஆகிய 2 சாவிகளையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் சென்றார்.நானும் அதை வாங்கி பத்திரமாக டிராயரில் போட்டு வைத்தேன்.

அடுத்த சில நாட்கள் அமைதியாகக் கழிந்தது. ஒரு நாள், மாலை என் கணவர் தன் அலுவலகத்திலிருந்து வரும் பொழுது, மித்ரா வீட்டு மாடி சன்னல் வழியாக பளிச்சென்ற ஒளி வீசியதாகக் கூறினார்.

இதைக் கேட்டவுடன், ஐயோ, ஒரு வேளை திருடனாக இருக்குமோ என்று மனது படப்படப்பானது. சென்ற முறை அவர்கள் மலேசியா சென்றிருந்தபோது கூட மாடியில் ஒரு பல்ப் எறிய விட்டுத்தான் சென்றார்கள். அது போல இந்த முறையும் செய்திருக்கலாம் என்றேன். அவரும் அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி விட்டுவிட்டார்.

அடுத்த ஆபிஸில் இருந்து வரும போதே மிகவும் பரபரப்பாக வந்தார். இன்று அவர்கள் வீட்டு மாடியில் லைட் எரியவில்லை என்றார் ஆச்சரியமாக. நேற்று எரிந்து கொண்டிருந்த லைட் இன்று எப்படி எரியாமல் இருக்கும் என்ற சந்தேகத்தையும் கிளப்பினார்.

உடனே என் மகன் அரவிந்த் ஒரு வேளை பல்ப் பியூஸ் போய் இருக்கலாம் என்றான்.

என் மகள் கீர்த்தியோ, ‘ அப்பா, நீங்க தெரு விளக்கு வெளிச்சம் அவர்கள் வீட்டு கண்ணாடியில் பட்ட பிரதிபிம்பத்தைத்தான் பார்த்திருப்பீர்கள். சரியாக கவனிக்காமல் சொல்லிவிட்டீர்கள்’, என்றாள்.

ஒரு வேளை தெருவில் கடந்து போகும் காரின் ஹெட்லைட் வெளிச்சம் கூட அதில் பட்டிருக்கலாம் என்று எண்ணிப் பார்த்தபோது அது சரியாக இருப்பது போல் தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என்று அவர்கள் வீட்டு கேட் பூட்டு ஒழுங்காக பூட்டப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்து விட்டார் என்னவர். அடுத்த 2 நாட்கள் அமைதியாகக் கழிந்தது.

இருந்தாலும் என் கணவருக்கு மட்டும் மனதில் ஏதோ உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. எதற்கும் உள்ளே போய் ஒரு முறை சோதித்துப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று கேட்க ஆரம்பித்தார். அவர்கள் வீடு முழுவதும் மிக உயர்ந்த பொருட்கள் நிறைய வைத்திருப்பதால், திருடன் வருவதற்கும் வாய்ப்புள்ளதே என்று சந்தேகம் வேறு கிளப்பி விட்டு விட்டார்.

ஐயோ திருடன் இருப்பது போல் இருந்தால் நாம் தனியாக செல்வது ஆபத்தாகுமே என்றேன் பதட்டத்துடன்.

அவரும், ‘ வேறென்ன செய்வது, நீதானே, நாங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்கிறோம் ‘ என்று ஒத்துக் கொண்டாய்”, என்றார்.

இருந்தாலும் அந்த இரவு வேளையில் போய் வீட்டை திறந்து பார்க்கும் அளவிற்கு தைரியம் வரவில்லை. திருடனாக இருந்தாலும் இந்நேரம் வேண்டுவதெல்லாம் எடுத்துக் கொண்டு கம்பி நீட்டியிருப்பான். எதுவாக இருந்தாலும், அடுத்த வீட்டுக்காரர் என்பதற்காக நம் உயிரை பணயம் வைத்து, இந்த இரவு நேரத்தில் போக வேண்டாம், காலையில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால் பிள்ளைகளோ, போலீசில் தகவல் கொடுத்துவிடலாம் என்று கட்டாயப் படுத்தினர்.

என் கணவரோ இது போல சின்ன சந்தேகங்களுக்கெல்லாம் போலீசை வரவழைக்க முடியாது. அவர்கள் தொந்தரவு பெரிதாகிவிடும் என்றார் யோசனையுடன்.

சரி, எது எப்படியோ நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து படுக்கச் சென்றோம். நிம்மதியான உறக்கம் இல்லைதான், ஆனாலும் வேறு வழி தெரியவில்லை.

அடுத்த நாள் அவர் அவசரமாக வெளியே கிளம்பியவுடன், நான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு மித்ரா வீட்டிற்குச் சென்றேன். இரும்பு கேட் கிரீச் என்ற சத்தத்துடன் திறந்ததைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லாமல் இயல்பாகவே இருந்தது.

அரவிந்த் காலிங் பெல்லை விடாமல் அடித்தான். உள்ளே பெல் அடிக்கும் சத்தம் வெளியே கேட்டது. கீர்த்தியோ, ஏண்டா திருடன் வந்து கதவைத் திறப்பானோ என்று கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தாள்.

அவனும், சீ, போடி, என்று அவள் சடையைப் பிடித்து இழுக்க இரண்டு பேரும் சண்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.இருவரையும் மிரட்டி அடக்கி விட்டு, கதவை திறந்து உள்ளே போய் பார்ப்பதா வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் குழந்தைகள் ஏகமனதாக திறந்து பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தனர். பட்டபகலில் என்னதான் நடந்து விடப் போகிறது என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வீட்டைத் திறக்க முடிவெடுத்து விட்டோம்.

2, 3 நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததனால், புல் வெளியில் நடக்கும் போதே சிலீரென குளிராக இருந்தது. நனைந்த மனோரஞ்சிதம் கபடமில்லாமல் மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

‘அட ஆண்ட்டி சேரை உள்ளே எடுத்து வைக்க மறந்துவிட்டார்கள் என்றாள் கீர்த்தி., அங்கிருந்த இரு பிரம்பு நாற்காலிகளைக் காட்டி. அவள் காட்டிய திசையில் நான் கண்ட காட்சி மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. அங்கிருந்த டேபிளில் இரு காக்கைகள் எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தது. யாரோ சமீபத்தில் அந்த டேபிளில் அமர்ந்து எதையோ சாப்பிட்டிருக்கிறார்கள் என்பதையே அது உறுதி செய்தது. மித்ரா குடும்பம் ஊருக்குச் சென்று வாரம் ஒன்றாகிறது. ஒரு வேளை திருடனின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் அச்சமூட்டியது. இனிமேல் அங்கிருப்பதோ, உள்ளே செல்வதோ சரியாக இருக்காது என்று திரும்பி போய் விடலாம், முதலில் போலீசுக்கு தகவல் சொல்லலாம் என்று கூறினேன்.

அரவிந்தோ வந்ததே வந்துவிட்டோம், கொஞ்ச நேரமாவது ஊஞ்சல் ஆடிவிட்டுத்தான் வருவேன் என்று அடம் பிடித்தான். அவனை வேண்டாம் போகலாம் என இழுத்து வருவதற்குள், கீர்த்தி ஓடிவந்து, வீட்டிற்குள் இருந்து அப்பம் வாசனை கமகமவென வருவதாகக் கூறினாள்.

‘ என்னடி சொல்கிறாய். பூட்டிய வீட்டிற்குள் இருந்து எப்படி அப்பம் வாசம் வரும், பக்கத்திலும் வீடு ஏதும் இல்லை ‘, என்றேன்.

அரவிந்தோ, திருடந்தான் உள்ளே அப்பம் சுட்டு சாப்பிடுகிறான் என்றான் கிண்டலாக.நானும், அப்பா கூட இல்லாமல் தனியாக இங்கே இருப்பது சரியல்ல என்று அவர்களை கிளம்பலாம் என்று கூப்பிட்டேன்.

அப்பம் வாசனை காற்றிலே மிதந்து வந்து என் மூக்கையும் நிறைத்தது. கீர்த்தி, அம்மா சன்னல் ஒன்று லேசாக திறந்திருக்கிறது நான் போய் அதன் வழியாக பார்க்கிறேன் என்று ஓடினாள், அம்மா வேண்டாம் என்று கத்துவதையும் பொருட்படுத்தாது, காம்பவுண்டு மேல் ஏற முயற்சித்தாள்.

எனக்கு பயத்தில் கை,கால் எல்லாம் வெடவெடத்தது. கொடியில் உலர்த்தப்பட்டிருந்த கருப்பு உள்பாவாடை மற்றும் தோட்டத்தில் இருந்த காலடித் தடங்கள் இவையனைத்தும் மேலும் அச்சத்தை உண்டாக்கியது.

கீர்த்தி, வந்துவிடு போயிடலாம், என்றேன் ஈனஸ்வரத்தில்.

சுவர் மிகவும் உயரமாக இருந்ததால் எனக்கு ஏறுவது சிரமம் என்று முன்னால் சென்று கதவைத் திறக்கலாம் என்று ஓடினேன். கீர்த்தியை தனியாக உள்ளே செல்லவிடுவதைவிட எது நடந்தாலும் பரவாயில்லை என வீட்டைத் திறந்துவிடுவது என்ற முடிவிற்கே வந்துவிட்டேன்.

அரவிந்த் அம்மா என்று ஓடி வரவும், இரு பார்க்கலாம் என, கதவின் துவாரத்தில் சாவியை நுழைப்பதற்காக முயன்ற போது, அடுத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. ஆம் கதவு உட்புறமாக தாள் திறக்கப்பட்டு படாரென திறந்தது...........

ஒரு குரல், ‘ஹலோ மாலா, இன்ப அதிர்ச்சியாக இருக்கிறதே, வா உள்ளே ‘ என்றது.

அங்கே, மித்ரா, ஒரு வெளுத்துப் போன நைட்டியுடன், மேக் அப் இல்லாத எளிய தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவள் பின்னே, பர்மூடாசுடன், ஷேவிங் செய்யாத முகத்துடன், அவள் கணவன் சந்திரு. அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள் கீர்த்தி.

ஒரு வினாடி என் கண்களையே நம்ப முடியாதவளாக பின்னால் நகர யத்தனித்த போது, மித்ரா ஆதரவுடன் என் கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றாள்.

சந்திரு, ’மேடம் உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்பது புரிகிறது. உள்ளே வந்து உட்காருங்கள் முதலில்’ , என்றான்.

மித்ரா, என்னை அணைத்தபடி ‘ சாரி மாலா, இதுதான் என்னுடைய விருப்பமான கனவு தேசம் , அமைதியான விடுமுறை’ என்றாள்.

‘அட, என்ன சொல்கிறாய், நீங்கள் எங்கேயுமே போகவே இல்லையா?’ என்றேன் மேலும் ஆச்சரியமாக.

‘ஆமாம், 10 நாட்களாக இதே வீட்டிற்குள், நிம்மதியாக அமைதியாக விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நினைத்ததை உடுத்திக் கொண்டு, விரும்பிய பாட்டை கேட்டுக் கொண்டு, ஆசைப்பட்டதெல்லாம் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு, நிறைய புத்தகம் படித்துக் கொண்டு, வாவ்........ரியலி ஃபெண்டாஸ்டிக் ஹாலிடே ‘! என்றாள் சிலிர்த்துக் கொண்டே.

ஓ, இன்றைய ஸ்பெசல் அப்பமா என்றேன் சிரித்துக் கொண்டே....

‘ஆம், 15 நாட்களுக்குத் தேவையான பழங்கள், காய்கறிகள், இன்ஸ்டண்ட் ஐட்டம்ஸ் எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டோம். எங்கள் வீட்டின் மொத்த சந்தோசமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.’ என்றான் சந்திரு.

மித்ரா முகத்தில் முன்னெப்போதும் இல்லாத வெட்கம் கலந்த அந்த மகிழ்ச்சி மிகவும் புதுமையாக இருந்தது.

‘ எங்களுடைய தேனீ போன்ற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பலவகையில் தொலைத்திருக்கிறோம்’, என்றாள் நீண்ட பெருமூச்சுடன்.

‘ ஆனால் எங்களுடைய உண்மையான சந்தோசத்தையும், புரிதலையும் எங்களுடைய இந்த வீட்டுச் சொர்கத்திலேயே கண்டுபிடித்து விட்டோம்’ என்று சந்திரு ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் கூறினான்...........

அதிக நேரம் அங்கிருந்து அவர்களின் நிம்மதியை கெடுக்க விரும்பாமல் குழந்தைகளை கூட்டிக் கொண்டு கிளம்பப் போனேன். மித்ரா அதற்குள் சுடச்சுட அப்பத்துடன் வந்தாள். அதையும் சாப்பிட்டுவிட்டு, மகிழ்ச்சியாகக் கிளம்பினோம், இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற முடிவுடன்.......

--