பவள சங்கரி
சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சித்தர்’ என்றே குறிப்பிடப்பட்டார். ஆரம்பத்தில் நாத்திகராக இருந்து பின் ஆத்திகராக மாறியவர் இவர். வேதியர் குலத்தில் பிறந்த சிவவாக்கியர் காசி யாத்திரை செல்கிறார். சென்ற இடத்தில் இவருக்கு இல்லறத்தில் நாட்டம் செல்ல, ‘சக்கிலி’ வகுப்பைச் சார்ந்த ஒரு ஞானியரிடம் சென்று தம் விருப்பத்தை வெளியிடுகிறார். அந்த ஞானியும் சிவவாக்கியருக்கு, காசும், பேய்ச்சுரைக்காயும் கொடுத்து, “எந்தப் பெண் உனக்கு மணலும், இந்த பேய்ச்சுரைக்காயும் கொண்டு நல்ல உணவு சமைத்துப் போடுகிறாளோ அவளே உன் மனைவி”, என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். அவரும் இந்த ஆணையைச் சிரமேற்கொண்டு, தேடியலைந்து, ஒரு குறப்பெண்ணைக் கண்டு அவளையே மணந்து இல்லறத்தில் ஈடுபடுகிறார். ஒரு நாள், பிழைப்பிற்காக மூங்கில் வெட்டும்போது, அது பொன்மாரி பொழிய அதை நீத்து, அங்கிருக்கும் ஒரு கீரையைப் பிடுங்குகிறார். அப்போது தன்னிலைப் பெற்று கொங்கணரால் உள்ளம் திருந்துகிறார். பின் சைவராக மாறி தம் பெயரில் தமிழில், ‘சிவவாக்கியம்’ என்ற நூலை எழுதுகிறார். இவர் பிறக்கும் போதே, ‘சிவ’ என்று சொல்லிக்கொண்டே பிறந்ததனால் இவருக்கு சிவவாக்கியர் என்று பெயரிட்டுள்ளனர். பின் வைணவராக மாறி, திருமழிசை ஆழ்வார் என்ற பெயர் பெற்றார். சிவவாக்கியர் உருவ வழிபாட்டை முற்றிலும் மறுத்தார். கடவுளின் பெயரால் சிலை உருவங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், நைவேத்தியங்கள், திருவிழாக்கள் செய்வதும் என்று தொன்று தொட்டு நடந்து வரும் வழமைகளை மூடப்பழக்கங்கள் என்று சாடுகிறார்.