Monday, February 10, 2014

மன அமைதிக்கு வித்து! – வேறுபாடற்ற மனித தத்துவம்



பவள சங்கரி
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சிக் கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடும் காணீர்!
- பாரதியார்
இந்தக் கட்டுரையில் எங்கேனும் ஆணாதிக்கம், அல்லது பெண்ணியம் என்பதன் சாயல் துளியும் தென்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டி, போராட்டங்கள் நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருந்தாலும், இன்று பெண்கள் தடம் பதிக்காதத் துறையே இல்லை என்னும் நிலை இருக்கும் ஒரு காலகட்டத்திலும் பெண்களின் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இங்கு பெண்களின் போராட்டம் என்று நான் குறிப்பிடும்போது சில வேளைகளில் பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும், தமக்குத்தாமே தேவையற்ற ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக்கொள்பவளாக இருப்பதையும் சேர்த்தே குறிப்பிட வேண்டியுள்ளது. இந்த எல்லைக்கோடு என்று நான் குறிப்பிடுவது நம்முடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கக்கூடிய எல்லைக்கோடுகளைத்தான்!

இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண் என்றால் அவளை இரண்டு எல்லைகளுக்குட்பட்ட நிலையிலேயே பார்க்கத் தோன்றுகிறது அனைவருக்கும். ஒன்று ‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்பது. மற்றொன்று ‘பெண் எனும் மாய வலை’ என்பது. இந்த இரண்டின் இடைப்பட்ட யதார்த்த நிலையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஏன் இந்த சமுதாயம் மறுக்கிறது என்பதே இன்றைய பிரச்சனையாக உள்ளது. ஒன்று உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் அல்லது ‘மாயப்பிசாசு’ என்று அஞ்சி ஒதுக்க வேண்டும் என்ற மோசமான நிலைதான் பெண்களுக்கு இன்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஒரு சராசரி உயிராக, சக மனுசியாக நடத்தப்படுவதையே ஒரு தெளிவான பெண் விரும்பக்கூடும். அதுவே அவர்களை வாழ்க்கையின் மேன்மை நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்கும். இப்படிச் சொல்லும்போது தற்போது மேன்மை நிலையில் பெண்கள் இல்லையா என்ற கேள்வியும் எழலாம். இன்னும் அந்தப் போராட்டம் ஓய்ந்தபாடில்லை என்பதே சத்தியம். சாண் ஏறினால் முழம் சரியத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம்? கற்கால மனிதன் தோன்றிய ஆதி காலந்தொட்டு இன்றுவரை விதி விலக்கில்லாமல் ஒன்று மட்டும் தெளிவாக நடந்து கொண்டிருக்கிறது. அது பெண்ணினத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ஆணினத்தின் தீராத தாகம்! ஒரு பெண்ணை இரண்டே கோணங்களில் மட்டும் இவர்களால் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஒன்று மாதவம் செய்து மகளிராய்ப் பிறந்தவள், மற்றொன்று மாய வலையாய் சிக்க வைப்பவள்.
‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டும்’ என்று முடக்கி வைத்து அவளை ஒரு தேவதையாக, மலராக, தெய்வமாக, இறுதியாக கற்சிலையாக, பேசா மடந்தையாக, கைப்பாவையாக, வைத்திருந்தால் வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். ஆனால் இங்கு வளர்ச்சி என்பதற்கு இடமில்லாமலே போய்விடுகிறது. அன்றாடம் அவளுடைய வாழ்க்கை முறையே தியாகம் மட்டும் என்பதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. அதுதான் சுகம், அது மட்டுமேதான் வாழ்க்கை என்று வாழ்ந்து பழகியவர்கள், தம் சந்ததியையும் அப்படியே வாழப் பழக்குவதிலும் ஆச்சரியமில்லை. ஆனால் அதெல்லாம் சென்ற நூற்றாண்டு வரையிலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலகட்டம் வரை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று எந்த ஒரு துறையும் ஆண்களுக்கானது என்று தனியாக ஒதுக்கப்படவில்லை. இன்றைய வாழ்க்கை ‘SURVIVAL OF THE FITTEST’ என்ற அடிப்படையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன்னை மிஞ்சி விடுவாளோ என்ற பதட்டமும், சுயபச்சாதாபமும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதாலேயே பல பிரச்சனைகள் எழுகிறது. எந்த வகையில் அவளை முடக்கினால் தனக்கு போட்டி இல்லாமல் இருக்கும், போராட்டம் இல்லாத வெற்றியாக அமையும் என்பதில் குறியாக இருக்கும் நிலையே இன்று அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு பெண்ணை எந்த வகையிலும் சக மனுசியாக வைத்துப் பார்க்க முடியாத நிலையே. எதையாவது சொல்லி, அவளை எப்படி முடக்க வேண்டும் என்று திட்டம் போட்டு செய்யும் செயலாகவே பல நேரங்களில் வெளிப்படுகிறது. இதற்கு பெண்ணை தெய்வமாகப் போற்றுகிறேன், அவள் பாதுகாப்பிற்காக அவளை வழிபட்டு, மிகச் சிறப்பானதொரு இடத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்லியே முடக்கி வைக்கும் ஒரு வகை. இப்படி ஒரு சூழலில்தான் பெண்கள் வேதம் கற்கக் கூடாது எனும் நிலை இருந்ததைக் கண்டு பொங்கி எழுந்த பாரதி அன்று,
“வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி” என்றும்,
“சாத்திரங்கள் பலபல கற்பராம்,
சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்,
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவுளர்க்கினிதாகச் சமைப்பராம்”
என்று முழக்கமிட்டதோடு,
“பெண் விடுதலை நீரில்லை என்றால் 
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை,
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவி லோங்கி இவ்வையகம் தழைக்குமாம்”
என்றும் பாடிவைத்துச் சென்றான், பெண் விடுதலை பற்றி ஓயாது பேசியவன்! ஆனால் இவையனைத்தும் இன்று மேடைப் பேச்சுக்கும், திண்ணையில் உட்கார்ந்து சுகமாக அசை போடவும் மட்டுமே பயன்படுவதாகத் தெரிகிறது. பெண்ணை வெறும் போகப் பொருளாகவும், வேலை செய்யும் இயந்திரமாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் பார்க்கும் வழமையில் சற்றும் மாற்றம் இல்லை என்பதே கசப்பான உண்மை. ‘பாரதியே என் உயிர் மூச்சு’, என முழக்கமிடும் கவிச்சக்கரவர்த்திகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘படிப்பது இராமாயணம், இடிப்பது இராமர் கோயில்’ என்பதே வழமையாகிவிடுகிறது.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.
தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ
என்றும் சொல்லிச் சென்றவனை வணங்கி உள்ளத்தில் ஏற்றி உய்ய வேண்டிய காலகட்டமிது.
படைப்பாளர்களில் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் எல்லைக்கோடுகள் நிர்ணயம் செய்யப்படுவதும் நிதர்சனமாகிறது. கற்பனைச் சிறகை விறிப்பதற்கும் எல்லைக்கோடுகள் தேவைப்படுகிறது. சுயகட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் உள்ள ஒரு பெண் தன் கண்முன் நடக்கும் சில விசயங்களை கௌரவமான மொழியில் எழுதுவதற்கு என்ன தடை வேண்டியிருக்கிறது. இதைவிட மோசமாக, வெளிப்படையாக எழுதும் ஆண் படைப்பாளர்கள் பற்றிய எந்தவொரு விமர்சனமும் எழாதபோது, வெகு நேர்த்தியாக, விரசமில்லாத ஒரு கட்டுப்பாட்டிற்குள் எழுதும் பெண் படைப்பாளிகளை குறி வைத்துத் தாக்கும் நோக்கம் இன்னும் பெண்களுக்கான சுதந்திரம் மறுதலிக்கப்படுவதே வெள்ளிடைமலை. ஒரு படைப்பில் ஆண் படைப்பு, பெண் படைப்பு என்ற பேதம் தேவைதானா? ஆணோ, பெண்ணோ அவரவர் எண்ணத்தில் உதிக்கும் வண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வரைவதுதானே இலக்கியமாகிறது. இதற்கு நம் புராணங்கள், இதிகாசங்கள் என்று எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும். இப்படி விமர்சனத்திற்கு உள்ளாகக் கூடிய படைப்புகளே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. அது அந்த படைப்பின் வெற்றி அல்லவா?
ஒரு பெண் சமுதாயத்தின் இப்படிப்பட்ட தளைகளைக் கடந்து ஒரு நிலைக்கு முன்னுக்கு வருகிறாள் என்றால் அதற்கு அவள் எந்த அளவிற்குப் போராட வேண்டியுள்ளது. குடும்பத்தையும் , குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, பணியிடங்களிலும் எந்த விசேச சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாமல் ஆண்களுக்குச் சரியாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். அத்துனைப் போராட்டத்திற்குப் பிறகும் அவளுக்குக் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதையும் எந்த அளவிற்கு சிறுமைப்படுத்தி அவளை சின்னாபின்னமாக்கலாம் என்று துடிப்பவர்கள்தான் அதிகம். இதில் பல நேரங்களில் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கூட இல்லாமல் போய்விடுகிறது என்பதும் வேதனையான விசயம். மாறிவரும் காலப்போக்கிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டி ஒரு சராசரி இந்தியப் பெண், தன் தகுதியை உயர்த்திக்கொள்ள எத்துனை விதமான போராட்டங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது என்று சற்றே அவர்கள் நிலையில் நின்று சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே. ஒரு ஆணுக்கு நிகராக ஒரு பெண் உழைக்க வேண்டுமானால் அவள் எத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று பார்க்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, இலக்கியம், கலை என்று எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும், உயர்ந்த நிலையில் இன்று பெண்களும் இருக்கின்றனர். வெளியில் சென்று பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இன்றைய சூழலில் அவளுக்கு எந்த அளவில் பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்துப்பார்க்க வேண்டும். பாதுகாப்பு என்பது சொல்லும் அளவிற்கு ஏதும் இல்லை என்பதே சத்தியம். குடும்பத் தேவைகளையும் கவனித்துக்கொண்டு, சுய முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு இரட்டிப்பு உழைப்பை வழங்கவும் தயாராக இருப்பவளின் ஆற்றலுக்கு உரிய ஆங்கீகாரம் வழங்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. அவள் முன்னேற்றத்திற்குத் தடையாக இல்லாமலாவது இருக்கலாமே. எத்துனை காழ்ப்புணர்ச்சி, கரிப்பு, கசப்பு என்று சேற்றை வாரிப் பூசுவதில் என்ன இலாபம் நம் நாட்டிற்கோ அல்லது சமுதாயத்திற்கோ? அந்தக் காலத்திலேயே வணிகம், விவசாயம் என அனைத்துத் துறைகளிலும், குடும்பத்து ஆண்களுக்கு இணையாக பெண்களும் பாடுபட்டுக்கொண்டுதானே இருந்திருக்கிறார்கள்.
குடும்பமாகட்டும் அல்லது சமூகமாகட்டும், எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பெண்ணைக் குறித்த பிற்போக்குச் சிந்தனைகள் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். முறையான சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமான முறையில் வழிநடத்துதலும் வழங்கப்பட வேண்டும். அத்தோடு ஒரு பெண் தனக்கு இருக்கும் உரிமைகளின் எல்லைக்கோட்டை அறிந்து, எந்த வகையிலும் அது மற்றொருவரின் முன்னேற்றத்தையோ அல்லது சுய மரியாதையையோ பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டு, நல்ல வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு, முன்னேற முயலவேண்டும். அதற்கானத் திட்டங்களை உருவாக்கிக்கொடுப்பதில், ஒரு பெண்ணின் தந்தை, சகோதரன், கணவர் என அனைவரின் ஒத்துழைப்பும் இருக்கும்பட்சத்தில் அவளின் வெற்றிக்கு உத்திரவாதம் நிச்சயம் அல்லவா? பெண்கள் சுயமாகப் பலம் பெற வேண்டுமானால், அதற்குப் பின்புலமாக ஆண்கள் இருந்து கொண்டு அவர்களை நல்ல முறையில் வழிநடத்த முயன்றால் மட்டுமே, அதாவது ஒரு கூட்டு முயற்சியின் மூலமாக மட்டுமே பெண்களின் பாதுகாப்பையும், அவள்தம் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய இயலும்.
பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட வர்களில் குறிப்பிடத்தக்கவர்களான, இராஜாராம் மோகன் ராய், அண்ணல் மகாத்மா காந்தி அடிகள், , ஈ.வே.ரா. பெரியார், திரு வி.க. அவர்கள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் வரை அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். . சுய உதவிக் குழுக்கள் மூலம் இன்று கல்வியறிவு குறைவாகப் பெற்ற பெண்கள்கூட சிறு தொழில் முதலீட்டாளர்களாகவும், சாதனை படைத்து சிகரத்தைத் தொட கடுமையாக உழைக்கின்றனர். அரசியல், அறிவியல், சமூகவியல் என அனைத்திலும் தங்கள் பங்களிப்பை செலுத்தி, வரலாற்று நாயகிகளாகவும், சாதனைப் பெண்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மன உறுதியில் ஒரு பெண்ணிற்கு நிகராக ஒரு ஆண் இருக்க முடியாது. ஒரு சிறந்த இல்லாள் இருந்தால் மட்டுமே இல்லறம், நல்லறமாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. பதினெட்டாம் நூறாண்டுகளில் வாழ்ந்த வள்ளலார் பெருமான், பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது என்கிறார். மேலும், ஆண் பெண் என்ற பேதமில்லாமல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். யோகம், ஆன்மீகச் சாதகம் என அனைத்தையும் பாகுபாடு இன்றி இருபாலருக்கும் கற்பிக்கப்பட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்கிறார். கணவன் இறந்த பின்பு மதத்தின் பெயரால், ஒரு மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் இன்றளவிலும் காட்டுமிராண்டித்தனமான அந்தக் கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
வள்ளலாருக்குப் பின் வந்த முண்டாசுக் கவி பாரதியோ ‘
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய் கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
என்கிறார். நம் நாட்டின் பண்பாட்டின்படி, பெண் பிறப்பே தியாகம் என்ற அந்த ஒன்றின்மீதுதான் கட்டமைக்கப்படுகிறது எனலாம். திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டிற்கு வரும் ஒரு பெண், தன் தாய், தந்தை, உடன்பிறப்புகள், தாம் வளர்ந்த சூழல், சுற்றம் என அனைத்தையும் துறந்த பின்புதான் புகுந்த வீட்டிற்குள் வலது காலடி எடுத்து வைக்கிறாள். அப்படி ஒரு தியாகத்தின் அடிப்படையில் , அன்பு நாடி புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் பெண்ணிற்கு அன்பும், ஆதரவும் அளிக்க வேண்டியது அக்குடும்பத்தினரின் முக்கிய கடமை. அந்தக் கடமையிலிருந்து ஒரு குடும்பம் தவறும் போது மட்டுமே அங்கு எண்ணிலடங்கா பிரச்சனைகள் தோன்றிவிடுகின்றன.
ஆன்மாவிற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. வெளித்தோற்றத்தில் மட்டுமே அந்த பேதங்களெல்லாம் இல்லையா? ஒவ்வொரு பெண்ணும் பேதமற்ற ஒரு சக மனிதம் மட்டுமே எதிர்பார்க்கிறாள் என்பதே சத்தியம்.
நன்றி : வல்லமை

7 comments:

  1. பெண்களின் சிறப்பை உணர்ந்தவர்களின் உதாரணங்களோடு ஒவ்வொரு வரியும் சிறப்பு...

    வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  2. நிறைய எழுதியிருக்கிறீர்கள். பாரதி கவிதைகளைத் தவிர்த்துப் படித்தாலும் நிறைய விஷயங்கள்!

    பெண்ணைப் போகப்பொருளாகப் பார்ப்பது இன்றைக்கு நேற்றல்ல வருடக்கணக்கில்.. ஆயிரக்கணக்கான வருடங்கள்.. இருந்து வரும் பழக்கம். நம் மதம் புராணம் எல்லாமே இப்படித்தான் செய்தி தருகின்றன. பெண் எனும் மாயப்பிசாசிடமிருந்து விடுவித்தாய் சிவனே என்று தான் பாடியிருக்கிறார்கள். அதையே சந்ததிக்குப் பிறகு சந்ததியாக நாமும் படித்து வந்து (கும்பிட்டு) வாழ்கிறோம். நம் நாட்டின் பண்பாடு பெண் பிறப்பு தியாகமானது என்று நினைப்பதெல்லாம் சமீபத்தில் தான். எனக்கென்னவோ புராணங்களையும் மதங்களையும் கடவுள் நம்பிக்கையையும் ஒழித்தாலே பெண்ணை இழிவுபடுத்தும் செயல் நின்றுவிடும் என்று தோன்றுகிறது :).

    ReplyDelete
  3. மோகன்ராய் தவிர மற்றவர்கள் மகளிர் மாண்புயர என்ன செய்தார்கள்? பெரியார் தன் வயதுக்கொவ்வாத ஒரு சிறுமியை மணந்தார். திருவிகவும் காந்தியடிகளும் பெண் விடுதலைக்காக என்ன செய்தார்கள் தெரியவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். பெரியார் இளவயது மங்கையை (சிறுமி இல்லை) மணந்ததற்கு முக்கியமான காரணங்களாக அவர் கூறியிருப்பது கட்சிக்காக. சொத்துகளை நிர்வாகம் செய்ய மனைவி என்ற உரிமை இருந்தால் மட்டுமே சட்டப் பிரச்சனை இருக்காது. இறுதி காலத்தில் தன்னை கவனித்துக்கொள்ள ஒரு துணை வேண்டுவது நியாயம். நாகம்மையார் மனம் விரும்பி பெரியாரை ஏற்றுக்கொண்டார். யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அவர் ஒரு மேஜர்!

      Delete
    2. திரு.வி.க.வும், பால்ய விவாகம், விதவை மறுமணம் வரதட்சணை கொடுமை ஆகியவற்றிற்கு பிரச்சாரம் செய்திருக்கிறார். காந்தியடிகள் பெண்விடுதலை, சுதந்திரம் பற்றி தம் அழுத்தமான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.

      Delete
  4. அன்பின் திரு அப்பாதுரை சார்,

    இதோ காந்தியமும், பெண்ணியமும் என்ற கட்டுரை. http://coralsri.blogspot.in/2010/10/blog-post.html. நன்றி.

    ReplyDelete