அன்பு நண்பர்களே,
இந்த நூலை வெளியிட்டுள்ள பழனியப்பா பதிப்பகத்தாருக்கு மனமார்ந்த நன்றி.
என்னுரை
இந்த
வாழ்க்கையில் நாம் அறிந்திராத ஏதேதோ
இருக்கிறது. தேடுதலும் இருந்துகொண்டேதான் இருக்கிறது . அனைத்திலும் முதன்மையாக இருப்பது ‘அன்பு’ என்பதாகவே இருக்கிறது.
இந்த நவீன அவசர உலகத்தில்
அந்த அன்பை வெளிப்படுத்தவோ அல்லது
ஏற்றுக்கொள்ளவோகூட நேரமில்லாமல் போகிறது. அப்படியிருக்கும்போது, நல்ல ஆக்கங்களை ஆழ்ந்து
படிப்பது என்பது ஆகாத காரியமாக
இருக்கிறது. ஆனாலும் இன்றைய நவீன
வாழ்க்கைச் சூழலை சேதமில்லாமல் எதிர்கொள்வதற்கு
சிலவற்றை அறிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஆசையைக்
கட்டுப்படுத்தினால்தான் நிம்மதியாக வாழ முடியும் என்கிறார்
புத்தர் . அனைத்திற்கும் ஆசைப்படு என்கிறார்கள் சிலர். இதில் எதைக்கொள்வது,
எதை விடுவது? மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. தன்னம்பிக்கை
மட்டுமே நல்ல பாதையை அமைத்து
கொடுக்கக்கூடியது. இந்த நம்பிக்கையைப் பெறக்கூடிய
பல வழிகளில் ஒன்று இது போன்ற
ஆக்கங்களை வாசிப்பது. நம்முடைய முன்னோர்கள் இந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு
பல உதாரணங்களை வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பீர்பால்
கதைகள். ஆக்கமும் ஊக்கமும் நிறைந்த படைப்புகள் அவை.
ஒருமுறை
முகலாயச் சக்கரவர்த்தி அக்பரின் அரசவையில், முகலாய மதகுருமார்கள் பலர்
யாத்திரை செல்லும் வழியில் பேரரசரைச் சந்தித்து
ஆசி வழங்கிச்சென்றனர். மன்னருக்கு இவ்வாசிகளினாலேயே தான்
இன்று பேரும், புகழும் பெற்று
விளங்குவதாக பெரும் நம்பிக்கை . பெரியோர்களின்
ஆசிகளின் மீது நம்பிக்கை வைப்பதில்
தவறொன்றும் இல்லையெனினும், தன் உழைப்பின் மீது
நம்பிக்கையில்லாமல், ஆசிகள் மட்டுமே தன்
வெற்றிக்குக் காரணம் என்று எண்ணுவது
மூட நம்பிக்கை என்று நினைத்தார் மதியூக
மந்திரி பீர்பால். அதுவும் ஒரு அரசனாக
இருப்பவருக்கு இப்படிப்பட்ட எண்ணம் தோன்றுவது சரியல்ல
என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் மன்னர்
அதை ஏற்க மறுத்துவிட்டார்.
அன்று
மன்னர் பீர்பாலுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தபோது, தான் அணிந்திருந்த விலையுயர்ந்த
செருப்பைக் கழட்டி வைத்தார். சற்று
நேரம் பொறுத்து வந்து பார்த்தபோது ஒற்றைச்
செருப்பு தொலைந்திருந்தது. தேடியலைந்தும் காணக்கிடைக்கவில்லை. சில நாட்கள் சென்றபின்,
மீண்டும் குருமார்களின் ஆசிகள் பெற வேண்டிய
ஆவலை மன்னர் தெரிவிக்க, பீர்பால்
உடனே, தனக்குத் தெரிந்த ஒரு மகானின்
சமாதி அடுத்த ஊரில் இருப்பதாகவும்,
அவர் ஒரு சித்தர் என்றும்
பலவிதமான சக்திகள் பெற்றவர்
என்றும் அவரிடம் வைக்கும் பிரார்த்தனைகள்
உடனே நிறைவேறுகிறது என்றும் சொன்னார். அதைப்பற்றி ஊரே பேச ஆரம்பித்துவிட்டது.
அக்பரும் முழுமையான நம்பிக்கைகொண்டு அரசாங்க அலுவல்களையெல்லாம் விட்டு, அடிக்கடி
அந்த ஆலயம் நோக்கி வரலானார்.
ஒரு நாள் பீர்பால், ‘அரசே,
தங்கள் அனுமதியுடன் இந்த சமாதியை இடிக்கவுள்ளேன். தாங்கள்
பொறுத்தருள வேண்டும் ' என்றார். அரசர்
பதறியபடி, வேண்டாம் என்று தடுத்தார். ஆனாலும்
பீர்பால் அரசரை கட்டாயப்படுத்தி அவரை
ஒப்புக்கொள்ளச்செய்து,
பட்டுத் துணியால் போர்த்தப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்ட
அந்த சமாதியை இடித்துவிட்டு, உள்ளிருந்து
எதையோ எடுத்துக்கொண்டிருந்தார். அரசர் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்த
பீர்பாலின் கையில் எடுத்த பொருள்
அரசரின் காணாமல்போன அந்த ஒற்றைச் செருப்பு. இவ்வளவு
நாட்கள் இதையா மலர் தூவி
வழிபட்டு வந்தோம் என்று ஆச்சரியத்தில்
வாயடைத்துப்போன அரசரையும், மக்களையும் பார்த்து பீர்பால், ‘இவ்வளவு நாட்கள் உங்கள்
அனைவரையும் வெற்றி வாகை சூடவைத்தது
இது அல்ல, உங்களால் முடியும்
என்ற உங்கள் நம்பிக்கையே.
அதற்கு இந்த சமாதி போன்ற
தோற்றம் ஒரு தூண்டுகோலாக மட்டுமே
இருந்திருக்கிறது’ என்றார். அரசர் தம் தவறை
உணர்ந்து அதனை தெளிய வைத்த
பீர்பாலை பாராட்டினார். அறிவில்
தெளிவு இருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை
அடைந்து வெற்றிபெற முடியும். இப்படித்தான் நாம் தெளிவில்லாமல் எதையோ
செய்துவிட்டு பின் வெற்றி நம்
கைநழுவிவிட்டதே என்று வேதனைப்படுகிறோம்.
தான்
பெரிய அறிவாளி என்று காட்டிக்கொள்பவர்கள்கூட
சில நேரங்களில் முக்கியமான
முடிவு எடுக்கவேண்டிய தருணங்களில் கோட்டைவிட்டு விடுவதை நம் அன்றாட
வாழ்க்கையில் சந்திக்கிறோம். வாழ்க்கையை ஒரு சூதாட்டம் என்ற
கண்ணோட்டத்தில் பலர் பார்க்கிறார்கள். வெற்றியும்,
தோல்வியும் அவரவர் கால நேரத்தைப்
பொறுத்தே அமைவதாக தப்புக்கணக்கும் போடுகிறார்கள்.
வாழ்க்கையில் தெளிவான இலட்சியமும் அதற்கான
சரியான முயற்சியும் இருந்தால் , அது எத்தனை பெரிய
விசயமானாலும் , அமெரிக்க ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற கனவாக இருந்தாலும்
அதை சாதிக்க முடியும் என்பதற்கு
ஒரு நல்ல உதாரணம், பில்
கிளிண்டன். ஆம், ஒரு முறை
பில் கிளிண்டன் மாணவனாக இருக்கும் போது
ஜனாதிபதி ஜான் கென்னடியை சந்திக்கச்
சென்றார். அன்றாடம் இளைஞர்களையும், மாணவர்களையும் தம் வெள்ளை மாளிகையில்
சந்தித்து அவர்களுக்காக ஒரு சில நிமிடங்கள்
ஒதுக்குவது அவருக்கு வழக்கம். அன்று அப்படி ஒரு
கூட்டத்தில் பளிச்சென்று வெள்ளைச் சிரிப்புடன், தன்னம்பிக்கை மலர்ந்த தோற்றத்துடன் நிற்கும்
ஒரு மாணவனின் கன்னத்தில் செல்லமாகத்தட்டி, ‘வாழ்க்கையில் உன் எதிர்காலத் திட்டம்
என்ன?’ என்றார். சற்றும் தயங்காமல் அந்த
மாணவன் உடனே, ‘நான் உங்கள்
இடத்திற்கு வரவேண்டும். அதுவே என் இலட்சியம்’
என்றானாம். கென்னடியும், ‘குட்’ என்று சொல்லி
பாராட்டிவிட்டுச் சென்றாராம். இதை வெறும் வார்த்தைக்குச்
சொல்லவில்லை அவன் என்பது பின்னாளில்
ஜனாதிபதியான பில்கிளிண்டன் என்ற அந்த மாணவன்
நிரூபித்தான்.
நாம்
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் முக்கியமாக நம்
மனதிலிருந்து அகற்றியாக வேணடியதில் முதன்மையானது எதிர்மறை சிந்தனை. எந்த
ஒரு காரியத்திலும் முதலில் நாம் எதிர்மறையான
விசயங்களைப் பற்றி சிந்திக்காது நேர்மறையான
விசயங்களையே கருத்தில் கொள்ளவேண்டும். ஆண்டவனே நேரில் வந்தால்கூட
இது போன்ற எதிர்மறை எண்ணங்கள்
கொண்டவர்களால் அதை உணர்ந்து கொள்ள
முடியாது. இதற்கு ஒரு குட்டிக்கதை
இருக்கிறது பாருங்களேன். ஒரு
முறை கடவுள் தம் பக்தர்களை
நேரில் காண பூமிக்கு வருகிறார்.
வழியில் சந்திக்கும் ஒரு நடுத்தர வயது
மனிதனைப் பார்த்து, ‘நான் தான் கடவுள்
வந்திருக்கிறேனப்பா.. அடிக்கடி என்னை கூப்பிடுவாயே..’ என்றார்.
உடனே அந்த மனிதன் கடவுளை
மேலும், கீழுமாகப் பார்த்துவிட்டு, ‘இன்னும் எத்தனை பேர்
இப்படி கிளம்பி வந்திருக்கீங்க.. போப்பா.
போய் வேற ஆளப்பாரு!’ என்று
சொல்லிவிட்டு நகர்ந்தான். புன்சிரிப்புடன் இறைவன் ஒரு பெண்ணைச்
சந்தித்து, தன்னைப் பற்றி கூறியவுடன்
அடுத்த நொடி பயத்தில் அவள்
கண்கள் சுருங்கி அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டாள்.
அடுத்து இறைவன் ஒரு செல்வந்தரின்
இல்லம் நோக்கி சென்றார். பூசை
அறையில் ஊதுவத்தியின் மணம் கமழ சுலோகங்கள்
அழகாக ஒலித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு மனம் மகிழ்ந்த
கடவுள் நேரே பூசை அறைக்கே சென்று காட்சி
கொடுத்தார். உடனே அந்த செல்வந்தரோ,
‘டேய் யாரடா நீ.. நாடக அரங்கிலிருந்து நேரே
இங்க வந்துட்டியா? அடேய் செக்யூரிட்டி என்ன
பண்றே நீ, உள்ளே வரைக்கும்
ஒருத்தன் வந்ததுகூட தெரியாமல் தூங்கிட்டிருக்கியா’ என்று சத்தம் போட்டு,
ஆண்டவனை வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
இறுதியாக கடவுள் ஒரு உழைப்பாளியின்
வீடு தேடி சென்றார். அப்போதுதான்
வேலையிலிருந்து களைத்துப்போய் வந்து சோறு பொங்கி
சாப்பிட உட்கார்ந்தார்கள், அந்த கணவனும், மனைவியும்.
கடவுளைப் பார்த்தவுடன் விருந்தினரை உபசரிப்பதுபோல் உட்காரவைத்து அவருக்கும் கொஞ்சம் உணவு பரிமாறினார்கள்.
இறைவனும் மகிழ்ச்சியுடன் உண்டு ஆசிர்வதித்துக் கிளம்பினார்.
ஒரு உழைப்பாளி மட்டுமே விழிப்புணர்வுடன் செயல்பட்டதற்கு
ஒரு நல்ல உதாரணம் இந்த
கதை அல்லவா.. எதிர்மறை எண்ணங்களை சுத்தமாக விலக்க வேண்டும். மனம்
இயல்பாக பழகிப்போன பாதையிலிருந்து அவ்வளவு சுலபமாக மாறாது.
ஆரம்பம் முதலே நாம் நேர்மறையாகச்
செல்ல மனதைப் பழக்கிவிட்டால் எளிதாக
இதிலிருந்து மீண்டுவரலாம். எதிர்மறை
எண்ணங்களை நீக்கிவிட்டு புதிய நேர்மறை சிந்தனைகளைப்
பதிக்க ஆரம்பித்துவிட்டால் மனமே நம் வெற்றிக்கு
வழிகாட்ட ஆரம்பித்துவிடும்.
எந்த
ஒரு படைப்பும் எழுதியவரை மீறி ஏதோ ஒன்றை
சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும்! அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட
கருத்தையும் கடந்து தங்கள் எண்ண
ஓட்டங்களை விரிவாக்க வழி செய்வதோடு எழுதியவரின்
கடமை முடிந்து விடுகிறது. அந்த வகையில் இந்த
நூல் வாசகரை பலவகையிலும் சிந்திக்க
வைக்கக்கூடியது. அன்றாட வாழ்வியலில் ஒரு
கையேடு போல பயன்படுத்தக்கூடியது. அன்றன்றைக்கு சந்திக்கக்கூடிய
ஒவ்வொரு பிரச்சனைக்கும் இதில் எங்கேனும் ஒரு
தீர்வு கட்டாயம் இருக்கும். இதிலுள்ள
கருத்துகள் பல, ஆழமும் கனமும்
கொண்டவை. அதனைச் சரியாக உள்வாங்கி
உணர்ந்து செயல்பட்டால் வெற்றிக் கனியை எட்டிப் பறிப்பது
நிச்சயம்!
அன்புடன்
பவள
சங்கரி
//எதிர்மறை சிந்தனை என்பதே இருக்கக் கூடாது...// உண்மை... சிறிதாக துளிர் விட்டாலும் வளர்வதில் ஒரு தினத்திற்கு 2.5" வளரும் மூங்கிலை விட வேகம் அதிகம்...
ReplyDeleteஇணைத்த படங்கள் இரண்டும் வரவில்லை... கவனியுங்கள்... (img016.jpg, img015.jpg - என்று தான் தெரிகிறது)
பழனியப்பா பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி திரு தனபாலன்.
ReplyDelete