Monday, February 3, 2014

இதுதானா ஆப்புங்கறது..?


பவள சங்கரி


காட்சி - 1

ஹலோ, ஹலோ.. ஏனுங்க எவ்ளோ நேரமா போன் அடிக்குதே. அப்புடி என்னதான் செய்வீங்க. போன் அடிச்சா உடனே எடுக்கணும்கறது குட் மேனர்ஸ் . இதுகூட தெரியாதாக்கும்..

ஆமாம்மா எங்களுக்கு வேற பொழப்பே இல்லை பாரு.  போனையே பாத்துக்கிட்டு எப்ப அடிக்கும்னு உக்கார்ந்திருக்கோமாக்கும்.  மனுசன் காலையிலருந்து, பேல் போட்றதுக்கு மாடா உழைச்சுக்கிட்டிருந்தா உனக்கு கிண்டலா இருக்குது. பேசமாட்ட பின்ன. சுகமா வீட்டுல ஃபேனுக்கடிய உக்காந்துக்கிட்டு, ஹாயா வேலைக்காரிகிட்ட அதிகாரம் பண்ணிக்கிட்டு, நேரத்துக்கு ஜூஸ் குடிச்சு உடம்பையும் பாத்துக்கிட்டு மேடம் சுகமா இருக்கணும்னா நாங்க இங்க இப்புடி கடந்து உழைச்சாத்தானே ஆச்சு. சரி வேலை கடக்குது. என்னத்துக்கு போன் பண்ணின அதச்சொல்லு.


ஏனுங்க என்ன இப்படி சொல்றீங்க. நானும்தானே பிசினஸ் பன்றேன். சும்மாவா இருக்கேன்.  சூரத் மில்ஸ் புடவை வியாபாரம் வீட்டில் வச்சே எப்படி விவரமா பன்றேன்னு போய் நம்ம அக்கம் பக்கத்து தெருவுல வச்சிக் கேட்டுப்பாருங்க.  எதோ எனக்கு உண்டானதை நான் சம்பாரிச்சுட்டுதானே இருக்கேன்.

ஆமா, லட்சம், லட்சமா சம்பாதிக்கிறீங்களாக்கும். ஆர்டர் போடற புடவைல பாதி உனக்கு புடிச்சிப்போவுது. மீதி உங்க அக்கா தங்கச்சிக எடுத்தது போக பத்துப் புடவை விப்பியா , அதுல எத்தனை லட்சம் சம்பாதிப்பீங்களாம். என்னைக்காச்சும் என் பாக்கெட்டுக்கு வேட்டு வக்காம இருந்தா சரிதான் தாயீ.. அதுசரி போன் பில்லு ஓடிக்கிட்டிருக்கு, சீக்கிரம் மேட்டருக்கு வா.

ஆமா நீங்கதான் ரேட் கட்டர் போட்டிருக்கீங்களே அப்புறம் என்னவாம்? சரி, சரி, நானும் மேட்டரை சொல்லத்தான அவசரமா உடனே போன் பண்ணினேன். அதுக்குள்ள உங்க பிரதாபத்தைச் சொல்லி என்னை டைவர்ட் பண்ணிப்புட்டீங்க. ஒரு ஆச்சரியமான விசயம். சொன்னா நீங்க அசந்து போயிடுவீங்க. நம்ம வீட்டுக்கு இப்ப ஒரு வி.ஐ.பி வரப் போறாங்களாம். எனக்கு போன் வந்துது.

என்னது, வி.ஐ.பி.யா நம்ம ஊட்டுக்கா? அட அது யாரு? யாரு போன் பண்ணது உனக்கு?

அதாங்க, அன்னைக்கு நாம ஹோட்டலுக்கு போனப்ப ஒருத்தர் வந்து நீங்கதான சூரத் சாரீஸ் கடை ஓனரான்னு கேட்டாரே, தன்னைக்கூட ஒரு ஜவுளிக் கடைகாரருன்னு அறிமுகப்படுத்திக்கிட்டாரே. அவருதான் போன் பண்ணினார்.

என்னவாம். எதுக்கு போன் பண்ணினார் ?

அதொன்னுமில்லீங்க, யாரோ ஒரு பெரிய ஜவுளிக் கடை முதலாளியாம்.  மல்டி மில்லியனராம், நம்ம வீட்டிற்கு பிசினஸ் பற்றி பேச வரப்போறாராம். என் பிசினஸ் டெக்னிக் ரொம்ப பிடிச்சிருக்காம் அவருக்கு, அதனால என்னோட பேச வேண்டுமாம்.  அவரு ரொம்ப பெரிய ஆளாம். பெரிய பெரிய அரசியல் தலைவரெல்லாம் கூட அவுங்க வீட்டில் வந்து தங்குவார்களாம். அவங்க வீடுகூட அவ்ளோ பெரிசாம்.

அதுசரி. அவுங்களுக்கு நம்ம ஊட்டுல என்ன வேலையாம்?

அதாங்க பிசினஸ் விசயமா பேசணுமாம். சொன்னேனே. சரி நீங்க சீக்கிரமா வீட்டுக்கு வந்துடறீங்களா. எனக்கு ஒரே டென்சனா இருக்குப்பா...

அட ஏம்மா நீ வேற. எனக்கே இன்னைக்கு வேலை நிறைய இருக்குன்னு மதியம் சாப்பாட்டுக்கே வர முடியாதுன்னு கடக்கறேன். இன்னைக்கு ராத்திரிக்குள்ள பேல் போட்டு சரக்கை அனுப்பணும். இரண்டு ஆளுங்க வேற லீவு. நானே இங்க வேலை செய்துட்டிருக்கேன்.  சரி போனை வைக்கிறேன்.


காட்சி  2

ஐயா, வாங்க வணக்கமுங்க.  நீங்க வரப்போறதா அண்ணாச்சி போன் பண்ணினார். ரொம்ப மகிழ்ச்சிங்க.  காபி சாப்பிடலாங்களா?
இல்லம்மா, நான் வெளியே எங்கேயும் எதுவும் சாப்பிடறதில்ல. எங்க வீட்டம்மாவோட ஸ்டிரிக்ட் ரூல் அது. என் ஆரோக்கியத்துல அவங்களுக்கு அவ்வளவு அக்கறை. மதியம் சாப்பாடு வீட்டிலருந்துதான் வரும். சாரிம்மா. உங்களையும் வருத்தப்பட வைக்க முடியல. மோர் மட்டும் கொஞ்சம் போல கொடுங்க.

சரிங்க ஐயா. இதோ எடுத்துட்டு வறேன்.

இப்ப நான் வந்த விசயமே, இந்த ஊரில நீங்கதான் சூரத் மில்ஸ் புடவைகள் ஏஜென்சி எடுத்திருக்கிறீங்க இல்லையா?  இவ்வளவு நாள் இந்த ஊரிலேயே இருந்துகிட்டு உங்களைப்பற்றி தெரியாமையே இருந்திருக்கிறேன்.  ரொம்ப சந்தோஷமம்மா. குடும்பத்தையும் கவனிச்சிக்கிட்டு வியாபாரத்தையும் நல்லபடியா செய்யுறதுன்னா அதுக்கு ரொம்ப சாமர்த்தியம் வேண்டும்.  ரொம்ப சர்வ சாதாரணமா போகிற போக்கில் நீங்கள்லாம் வீட்டில இருந்துகிட்டே அருமையா பிசினஸ் பண்ணுறீங்க. இன்றைய பெண்கள் குடும்ப பாரத்தை சுமப்பதிலும் பங்கெடுத்துக் கொள்வது பாராட்டப்பட வேண்டிய விசயம். வாழ்த்துகள் அம்மா.


[அதற்குள் 4 முறை அந்த அதிபருக்குப் போன் வந்துவிட, அவர் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு நம்ம கதை நாயகி தாரணியிடம் பேசுவதில் முக்கியத்துவம் கொடுத்தது அவளுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது. தன்னம்பிக்கை பன்மடங்கு உயர்ந்துவிட்டது. சே, இவரல்லவோ பெரிய மனிதர் என்று அவரை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துவிட்டாள்]
சரிம்மா ரொம்ப அவசரமா போக வேண்டியதிருக்கிறது. நீங்க உங்க சரக்கையெல்லாம் நம்ம கடைக்கே கொடுத்துடலாம். உங்களுக்கும் வியாபாரம் பெருகுவதோடு, எளிதாகவும் இருக்கும் இல்லையா. எங்க கடையில ஒரு பக்கம் இருந்துட்டுப்போவுது. உங்களுக்குரிய கமிஷன் வந்துடும். சரியா. நீங்களும் எங்களோட பார்ட்னர் ஆயிடுவீங்க. கொஞ்ச நாள்ல நீங்களும் எங்க கடை மாதிரியே ஒரு கடை ஆரம்பிச்சுடலாம். எல்லாரும் நல்லா இருக்கோணும் அதான் நம்ம ஆசையே. என் பொண்ணாட்டம் இருக்குற உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிப்போச்சிம்மா. நீங்களும் சீக்கிரம் முன்னுக்கு வரணும். சரிம்மா நல்லதும்மா. நான் கிளம்பறேன். மத்த விசயங்களெல்லாம், இதோ இவரு என்னோட பி.ஏ. அவர் பார்த்துக்குவார். நான் வரட்டுமாம்மா.


காட்சி  3

அம்மா, வணக்கங்க. இதோ இந்த பங்குதாரர் ஒப்பந்தம் இருக்கு இதுல இருக்குறதை படிச்சுப் பார்த்து கையெழுத்து போட்டால் நல்லாயிருக்கும்மா.
ஏனுங்க இது என்னங்க இவ்வளவு பெரிய தொகை பங்குப் பணமா எழுதியிருக்கீங்க. நாங்க இவ்வளவு பணமெல்லாம் போட முடியாதுங்களே.  அதனால எனக்கு இது ஒத்து வராதுங்களே. சாரிங்க.

அம்மா, ஐயாவும் இதை யோசிச்சாங்க. அதான் இன்னொரு டீல் கூட சொல்லியிருக்காங்க. அதாவது நீங்க பணமே தர வேண்டாம், ஒர்க்கிங் பார்ட்னரா சேர்ந்துக்கலாம்.  முதலே போடாமல் பார்ட்னர் ஆகலாம். தினமும் சில மணி நேரம் கடையில் வந்து இருந்தால் போதும். வேற ஒன்னும் நீங்க செய்ய வேண்டியதில்லை.

அப்படீங்களா.. எங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டுக்கிட்டு உங்களுக்குப் போன் செய்யறேனுங்க..


காட்சி  4

ஏனுங்க, என்னங்க நான் நடந்ததெல்லாம் சொன்னேனே. இங்க பாருங்க இந்த பார்ட்னர்ஷிப் டீட்.

ஏம்மா, இது எங்கயோ உதைக்குதே. அவ்ளோ பெரிய பிசினஸ்மேன் நம்மகிட்ட டீல் வச்சுகிறதுக்கு என்ன காரணம்னு புரியலியே.  கொஞ்சம் யோசிக்கலாம்மா. அவசரப்படாதே,

அட ஏனுங்க நீங்க வேற எதுக்கெடுத்தாலும் சந்தேகம்தான் உங்களுக்கு. ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. அதைப்போய் நாம் மிஸ் பன்றது எனக்கு நல்லதா படலை.

நான் கொஞ்சம் நிதானமா யோசிச்சு முடிவெடுக்கலாம்னுதான் சொல்றேன்.  அவசரப்பட்டு, புது வெள்ளம் வந்து பழைய செல்வத்தையெல்லாம் அடிச்சிக்கிட்டுப் போயிடக்கூடாது. அவசரப்படாதே, அவ்ளோதான் நான் சொல்ல முடியும். அப்பறம் உன் இஷ்டம்.

ஏனுங்க, அவ்ளோ பெரிய பிசினஸ்காரங்க நமக்காக எவ்ளோ நாளைக்கு வெயிட் பண்ணுவாங்க. இது ஒரு சாதாரண டீல் அவங்களுக்கு. விட்டா நமக்குத்தான் நட்டம். அவ்ளோ பெரிய மனுஷர் அவர், நம்ம வீட்டை தேடிக்கிட்டு வறார். நாம அதுக்குரிய மரியாதையை கொடுக்கணுமில்லையா. நான் கையெழுத்து போடலாம்னுதான் இருக்கேன்.

அப்பறம் உன் இஷ்டம்.  இந்த சூரத் மில்ஸ் டீலர்ஷிப் உனக்கு ரொம்ப முக்கியம். உங்க பரம்பரையா வந்துட்டிருக்கு. உங்க அப்பாவுக்காக உனக்குக் குடுத்திருக்காங்க. இந்த ஊருக்கு உனக்கு மட்டுமே கொடுத்திருக்காங்க. பார்த்து நடந்துக்க. அதுக்கு ஏதும் பிரச்சனை வந்துடப் போறது.
இல்லைங்க நான் முடிவு பண்ணிட்டேன். ரிஸ்க் எடுக்காம வெற்றி பெற முடியாது.


காட்சி  5

ஏனுங்க, ஏனுங்க, நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டீங்களே.  எனக்கு மனசே சரியில்லைங்க. அவிங்க கடைக்குப் போகவே எனக்கு புடிக்கலை. அங்க மரியாதையே இல்லைங்க எனக்கு. என்னையும் அங்க வேலை செய்யிற சேல்ஸ் கேர்ள்ஸ் மாதிரி நடத்துறாங்க. தப்பு பண்ணிட்டோம்னு தோணுதுப்பா. பேசாம வெளீல வந்துடலாம்னு தோணுது. ஒரே டென்சனா இருக்கு.

இதைத்தான் நான் முதல்லியே சொன்னேன். அவசரப்படாதேன்னு. என் பேச்சைக் கேட்டியா நீ. நாளைக்குப் போய் அந்த பெரியவர்கிட்ட பேசிப்பாரு. என்ன சொல்றார்னு பார்க்கலாம்.

அவரைப் பார்க்கவே முடியலைங்க.  பிசியா இருக்கார்னு சொல்றாங்க. இல்லேனா வெளிநாடு போயிருக்கறதா சொல்றாங்க. ஒன்னுமே புரியலைங்க.

சரி, அமைதியா இரு. விசாரிச்சுப் பார்க்கலாம். எதை எடுத்தாலும் எடுத்தோம், கவுத்தோம்னு செய்யிறதே உனக்கு வாடிக்கையாப்போச்சு.

தாரணியின் கணவன் மனது கேட்காமல் அந்தக் கடை முதலாளி பற்றியும், கடை நிலவரம் பற்றியும் தன் நண்பர்களிடம் விசாரித்தபோதுதான் தெரிந்தது. சூரத் மில்ஸின் ஓனரின் மகனுக்குத்தான் இந்தப் பெரியவரின் மகளை சமீபத்தில் திருமணம் முடித்திருக்கிறார்கள் என்றும் பரம்பரையாக நல்ல நட்பின் அடிப்படையில் தாரணிக்குக் கொடுத்திருக்கும் டீலர்ஷிப்பை தங்களுக்கு மாற்றிக்கொள்ளவே இப்படி சாணக்கியத்தனம் செய்திருக்கும் அந்தப் பெரிய மனிதரின் திட்டம் புரிந்து போனது.  தாரணியிடம் இதைச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும் என்று நொந்தபடி வீடு வந்தான் அவள் கணவன்.

ஏனுங்க இதுக்குப்பேர்தான் ஆப்பு வக்கிறதா?  தெரியாமப் போச்சே எனக்கு. அடக்கடவுளே. உள்ளதும் போச்சே..
முற்றும்.

Thanks - Vallamai

4 comments:

  1. ஆப்பா என்னானு தெரியாதுங்க.. கையில வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்யுக்கு அலஞ்சு வெண்ணை பாழான கதை..யும் இது தானுங்க.
    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை சார்.. தங்களுடைய வாசிப்பிற்கு நன்றி.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
  2. Replies
    1. ஹ..ஹா.... அதுதானுங்க பெரிய மனுசங்க..

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...