Thursday, January 30, 2014

பதின்மப் பருவத்தின் வாசலிலே

மதுமிதா அவர்கள் தொகுத்து வழங்கி, சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள, ‘பருவம்’ என்ற நூலில் 25 எழுத்தாளர்களின் கட்டுரைத் தொகுப்புகள், ’உள்நின்று ஒளிரும் நுண்ணிய உணர்வுக் கண்ணிகள்’ என்ற தலைப்பிட்ட அழகான முன்னுரையுடன் வெளிவந்திருக்கிறது. இதில் இரண்டாவதாக வெளியாகியிருக்கும் என் கட்டுரை இது. தொகுப்பில் தேர்ந்தெடுத்த அன்புத் தோழி மதுமிதாவிற்கும், வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தாருக்கும் நன்றி. 




பதின்மப் பருவத்தின் வாசலில்!

பவள சங்கரி

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூச் சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)


பெண்மையின் இலக்கணத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் அற்புதமான பாடல் இது. பெண் என்பவளே சக்தியின் வடிவம் அல்லவா. அறிவைப் போலவே அழகிலும் எநத வகையிலும் குறைந்தவளில்லை. குழந்தையாகட்டும், பருவ மங்கையாகட்டும் அன்றி முதுமையின் வாசலில் நிற்பவராகட்டும், பெண் என்றாலே தனிப்பட்ட ஒரு அழகும், முன்னெச்சரிக்கை உணர்வும், உடன் பிறந்தவைகளாகவே இருக்கின்றது. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான மிருகங்களுக்கும் கூடப் பொருந்தக் கூடியது.

பெரும்பாலான நாடுகளில் பெண்களுக்கான தனிப்பட்ட, கலாச்சார சடங்குகள் வழமையாக நடந்து வருகின்றன.  இதில் மிக முக்கியமானது பூப்பு நன்னீராட்டு விழா. பெண் பூப்படையும் பருவம் அவளுடைய வாழ்க்கையில் ஒரு இன்றியமையாப் பருவம்.

பெண் என்பவள் ஒரு புதிர் என பல நூற்றாண்டுகளாக பல மொழிகளிலும் வர்ணிக்கப்பட்டு வருகிறாள்.  ஒரு உயிரைத் தாங்கிப் பெற்றெடுக்கும் வல்லமையை அளிக்கும் பொருட்டு இயற்கை கொடுத்த வரமாக பெண்களின் வளர்ச்சியில் பல்வேறு மாற்ற நிலைகள் ஏற்படுகிறது. குறிப்பாக அவள் பருவம் அடையும் காலம் அதில் பெரும் பங்கு வகிக்கிறது. சாத்திரங்கள் சொல்லும் சான்றுகள் பல இருப்பினும், பௌதிக மாற்றங்கள் பெண்களுக்கு பெருமளவில் வெளிப்படுகின்றன. இதில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு, பூப்பெய்தும் பருவம். 9 - 10 வயதிற்குள் பருவ வயதிற்கு கட்டியங்கூறும் முகமாக ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பித்து, மெதுவாக வளர்ச்சியை ஊக்குவித்து, பதின்மப் பருவத்தில் அது முழுமையடைகிறது.

சிட்டாகப் பறந்து, சுகமாகச் சுற்றித் திரிந்து மகிழ்ந்த பருவத்திலிருந்து குமரிப் பெண்ணாக உருவாகும் நாளையே பூப்பெய்தும் நாள் என்கிறோம். அதாவது ஒரு பெண் தாய்மைக்குத் தயாராக ஆரம்பிக்கும் தருணம்.  இதற்கானச் சடங்குகள் பல நாடுகளிலும், பல்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது. இலங்கையிலும் நம் தமிழ் நாட்டைப்போன்றே  பலவிதமான சடங்குகள் செய்கிறார்கள்.

நம் தமிழ்நாட்டுக் கிராமங்களில் பெண் பூப்படைந்து, சடங்குகள் செய்யும்போது குலவை ஒலியெழுப்பி ஊருக்கெல்லாம் அறிவிப்பார்கள். யப்பானியர்கள் பெண்ணின் பருவ வயதை அறிவிக்கும் முகமாக அவளுடைய பதினைந்தாம் வயதில் கிமோனோ உடை அணிவித்து விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆப்பிரிக்க நாட்டிலும் பெண் பூப்படையும் நேரத்தில்  பல வித்தியாசமான சடங்குகளை நடத்துகின்றனர். ஆப்பிரிக்காவின் கிராமங்களில் வாழும் பெண்கள்  வயதுக்கு வந்தவுடன்  அப்பெண்ணுக்கு அவளின் தாய் பல பொருட்கள் பரிசளிக்கும் வழக்கம் உள்ளது. அதில் அகப்பையும் ஒரு முக்கியமான பரிசுப் பொருளாக இருக்குமாம் அதற்கான காரணம் வயது வந்த அந்த பெண் அந்த வீட்டின் குடும்பத் தலைவியாகும் தகைமையைப் பெற்று விட்டாள் என்பதற்கான அத்தாட்சியாம். அமெரிக்காவின் ஹிஸ்பானிக் என்றொரு சமூகத்தில், பெண்களின் பதினைந்தாவது வயதில் அவர்களுக்கு அழகிய உடைகள் அணிவித்து அழகாக மெழுகுவர்த்திகள் ஏற்றி, சமயப் பிரார்த்தனையுடன் பெண்கள் பருவத்திற்கு வரும் அந்த நிகழ்ச்சியைக் கொணடாடுவார்கள்.

மனித வரலாற்றின் நிகழ்வுகளின்படிகாடுகளில் வேட்டையாடித் திரிந்த நம் மூதாதையர்கள். அக்கால கட்டத்தில் கல்வியறிவில்லாத அவர்கள் மாதவிடாய் வந்த பெண்களால் தங்களுக்கு ஏதோ அபாயம் நேரப்போவதாக  நினைத்து அச்சம் கொண்டார்கள். காரணம்,பெண்களின் தீட்டு இரத்த வாடையை மோப்பம் பிடித்த மிருகங்கள், அந்தக் கூட்டத்தையே தாக்க முற்பட்டதுதான். பின்பு மெல்ல, மெல்ல இதன் காரணத்தை உணர்ந்து கொண்டவர்கள்,. பெண் பருவமடைந்தவுடன்  தீட்டு முடியுமட்டும் பெண்களை ஒரு இடத்தில் தனிமைப்படுத்தி, பாதுகாப்பாக வைத்தார்கள். மொழியறிவில்லாத காரணத்தால் இதனை அறிவிப்பதற்காக, ஒரு தனிப்பட்ட குலவை ஒலியை எழுப்பி விளங்கச் செய்தனர். சங்க இலக்கியங்களிலும் குலவை ஒலி பற்றிய குறிப்பைப் காண முடிகிறது.

நம் இந்தியாவிலும் கிட்டத்தட்ட இதே முறையே பின்பற்றப்படுகிறது. பூப்படைந்த உடன் முதன் முதலில் அத்தைமார்களிடம் மட்டுமே சொல்ல வேண்டும் என்று பூப்படையும் பருவம் வரும் முன்னமே அறிவுறுத்தி வைத்திருப்பார்கள். பெண் பூப்படையப் போகிறாள் என்பதற்கு அடையாளமாக முகத்தில் பருக்கள், உடலில் ஒரு மதமதர்ப்பு, நடையில் ஒரு மாற்றம், முகத்தில் ஒரு பொலிவு என்று பல அறிகுறிகள் தோன்றுவதை பெரியவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்த காலகட்டங்களில் இது சாத்தியமானது. அத்தை முதலில் வந்து மஞ்சள் பூசி குளிப்பாட்டி, உடலும், உள்ளமும் பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுவதையே முக்கியத்துவமாகக் கொண்டு அடுத்து சடங்குகள் தொடரும். இந்தப் பூப்புனித நீராட்டு விழா சமூக ஆய்வாளர்கள் ஆழ்ந்து நோக்கவேண்டிய ஒரு விசயமாகவே இருக்கிறது. நெருங்கிய உறவினர் வந்து குளிப்பாட்டி, ஏழு அல்லது ஒன்பது நாட்கள் தனியாக உட்கார வைத்து, மஞ்சள் பூசி குளிக்கச்செய்து (மஞ்சள் சிறந்த கிருமிநாசினி) சைவ உணவும், இனிப்பு தின்பண்டங்களும் மட்டுமே தருவார்கள். சமுதாயத்தின் உறவின் மாற்றங்களுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் நாளதுவாக இந்த பூப்படையும் நாளின் சடங்குகள் உள்ளது.

11 முதல் 13 வயதிற்குள் பெண்களுக்கான ருதுவாகும் காலம் எனலாம். பெண்ணின் கருப்பையிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை வெளிப்படுகிறது. ஒரு வருடத்தில் பதிமூன்று முட்டைகள் வரலாம். மெனோபாஸ் காலம்வரை இது தொடருகிறது. புரொஜெஸ்டிரான் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களே இன்றியமையாத இந்த பெண்மையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. ஈஸ்ட்ரோஜன் சுரப்பி பெண்ணின் மார்பக வளர்ச்சிக்கும், சினை முட்டைகளை உருவாக்குவதற்கும் குழந்தைப் பேறு காலத்தில் தாய்ப்பால் சுரப்பதற்கும் பெரிதும் பயனளிக்கிறது.

மாதவிடாய்க் காலங்களில், ஒவ்வொரு மாதமும் பெண்முட்டையும் ஆணின் விந்துவும் சேர்ந்தவுடன் உருவாகும் அந்த உயிரைத் தாங்கும் சக்தியுடன், இந்த கர்ப்பப்பையின் சுவர், சற்றே தடித்துக் காணப்படும்..சூல் கொள்ளாத காலத்தில்  இத்தடிப்பு தளர்ந்து, பின்பு உதிரத்துடன் உதிர்ந்து விழும். பெண்ணுறுப்பு வழியாக வெளியேறும் இந்த உதிரம்தான் மாதவிடாய். சுரப்பிகளில் ஏதும் பிரச்சனை இல்லாத பட்சத்தில் இருபத்தியெட்டு நாட்களுக்கு ஒரு முறை வரும் இது, முதல் மூன்று நாட்களுக்கு அதிகமான இரத்தப்போக்கும், பின்பு கொஞ்சம்,கொஞ்சமாகக் குறைந்து 5 நாட்களுக்குள் நின்று போகும். அப்போது, வயிற்று வலி, தலை வலி, மன உளைச்சல் சோர்வு போன்ற பின் விளைவுகளும் வேதனையை ஏற்படுத்தும். வெளியில் சொல்லொணாத ஒரு அருவருப்பு உணர்ச்சியும் அலைக்கழிக்கும். அழுகை முட்டிக்கொண்டு ஏனிந்த பெண் பிறவி என்று வெறுப்பு தோன்றும். இது அனைத்தும் உடலும், மனதும் பழகும் வரையிலான அந்தச் சிலகாலங்களே.

இந்த பூப்படையும் தருணத்தையே அவரவர் பிறந்த குல வழக்கப்படி சடங்குகள் செய்து கொண்டாடுகிறார்கள். நம் தமிழ் நாட்டில் பெரும்பாலும் அடிப்படையில் அனைத்து சமூகத்திலும் இந்தச் சடங்குகளில் ஒரு ஒற்றுமையைக் காணலாம்.

பொதுவாகப் பெண்களின் பருவங்களை, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது.

பெண் பூப்படையும் பருவம் என்பது மன உணர்வுகள் முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு பருவமே. பெதும்பைப் பருவத்திலிருந்து சுரப்பிகளின் ஆதிக்கத்தினால் மங்கைப் பருவத்திற்கு அடி எடுத்து வைத்தாலும், பூப்படைந்த பின்பு ஓராண்டிற்குப் பிறகுதான் அந்த சுரப்பிகள் முழுமையாகத் தன் பணியைத் துவங்குகின்றது. அதனால் அந்தப் பருவத்தில் மன நிலை இரண்டுங்கெட்டான் நிலையிலேயே இருக்கும். ஆனால் பல குடும்பங்களில் அக்குழந்தையின் மீது அளவிற்கதிகமான பொறுப்புகளைத் திணித்து பெரியவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்று  எதிர்பார்ப்பது சில சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியது.

மேற்கண்ட இந்த விசயங்களெல்லாம் வயது முதிர்ச்சியில், கல்வியறிவும், அனுபவ அறிவும் பெற்றபோது நான் பெற்றது. ஆனால் அந்தப் பருவத்தைக் கடந்த தருணம் மிக வித்தியாசமாக உணர்ந்த தருணம். பின் வரப்போகும் காலங்களில் சுகமும், துக்கமும் இணைந்த வாழ்க்கையையே வாழப்போகிறோம் என்பதற்கான அறிகுறியாகவோ என்னவோ, உடலளவிலும், அதனால் மன அளவிலும் பெரும் வேதனையையும், உறவுகள் கொடுக்கும் உற்சாகத்தினால் மகிழ்ச்சியும் பெற்றதை வாழ்நாளில் மறக்க முடியாத பருவம். ஆனால் அதற்குப் பிறகு பொதி மூட்டையைச் சுமக்கும் வாழ்க்கையாகத்தான் பெரும்பாலும் நினைவில் நிற்கிறது.

ஊரில் பெயர் சொல்லும் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் பெரும் மரியாதையும் இருந்தது. கூட்டுக் குடும்பத்தின் சுகத்தை மொத்தமாக அனுபவித்த காலம். ஆறு மகன்கள், மூன்று மகள்கள் என்று நிறைவான குடும்பத்துடன் தாத்தா, பாட்டி என்று ஒரே பெரிய வீட்டில் வாழ்ந்த பொற்காலம். மூத்த மகனின், மூத்த குழந்தை, குடும்பத்தின் முதல் வாரிசாகப் பிறந்ததால் குடும்பத்தார் அனைவருக்கும் செல்லக் குழந்தையாக, தாய், தந்தைக்கும், சித்தப்பா, சித்திக்கும் வேறுபாடே தெரியாமல் வளர்ந்த இனிய காலம். தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய உறவுகள்! குழந்தைப் பருவம் முடியும் காலத்தில் குமரிப் பருவம் தொடங்கும் தருணத்தில் மாற்றங்கள் பல மனதிலும், உடலிலும், உறவிலும், என ஒரு குழப்பமான காலகட்டமானது.

அறிவுடன் சேர்ந்து உடலும் வளர்ச்சியடைந்த போது, தூக்கிக் கொண்டாடிய உறவுகள் எட்டி நின்று அன்பு செலுத்திய மாற்றம் புரியாத பருவம் அந்தப் பதின்மத்தின் தலைவாசல். ஓடிச் சென்று சித்தப்பா, மாமா என்று மடியில் உட்கார விரையும் போது, “அட, என்னம்மா நீ இன்னும் சின்னக் குழந்தையாட்டம் மடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். நீ பெரிய பெண்ணாகப் போறல்ல.. இனிமேல்ப்படீல்லாம் குழந்தையாட்டம் நடந்து கொள்ளக் கூடாதுஎன்றபோது ஆரம்பித்த குழப்பம், மெல்ல மெல்ல விசுவரூபம் எடுத்தது. நினைத்த நேரம், எல்லோருடனும் ஊர் சுற்றியது, தெருவில் சென்று சில்லு விளையாடியது, ஓட்டப்பந்தயம் ஓடியது, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது என அனைத்திற்கும் தடை உத்திரவு வந்தது. வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டிற்கு மட்டுமே அனுமதி உண்டு. அதுவும் ஒத்த வயதுடைய பெண் குழந்தைகளுடன் மட்டுமே. அத்தை பிள்ளைகளும் கிட்டத்தட்ட ஒரே வயதில் இருந்ததால் விடுமுறை சமயம் அவர்கள் வரும் நேரம் மட்டுமே நல்ல பொழுது போக்கும் நேரமாக அமையும். மெலிதாக சலிப்பு தட்ட ஆரம்பித்தது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பூப்படைந்த அந்த தருணம்!

சில நாட்களாகவே மனதில் சொல்ல முடியாத ஒரு குழப்பம். காரணம் உடலில் ஏற்பட்ட  ஏதோ மாற்றங்கள். என்னவென்று, யாரிடம் சொல்வது? எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? ஏதும் புரியவில்லை. ஆனால் கோபமும், எரிச்சலும், பாரபட்சமின்றி அனைவரிடமும் வருகிறது. திடீரென என்னுடைய உணவு விசயத்தில் தாய் தனிப்பட்ட அக்கறை செலுத்தும் மாற்றம் கூட சங்கடத்தை ஏற்படுத்தியது. இயல்பாக இல்லாதது போன்றொரு தோற்றம். காரம் அதிகம் வேண்டாம், இனிப்பும் மிதமாக இருக்கட்டும், கொழுப்புச் சத்து குறைவாக இருக்கட்டும், பால், தயிர் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும், பருப்பு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும், சூடு அதிகமாகக் கிளப்பும் தக்காளி, பச்சை மிளகாய், கொள்ளு, சில மசாலாப் பொருட்கள் போன்ற சில உணவு வகைகளை அளவிற்கு அதிகமாக உண்பதை தவிர்க்கவும் என்று இப்படி பலப்பல சட்ட திட்டங்கள் என் பாட்டியின் மூலமாக நிறைவேற்றப்பட, தாயும் அதனை சிரமேற் கொண்டு தவறாமல் நிறைவேற்றினார். அடிக்கடி முருங்கைக் கீரை சூப், முருங்கைக் கீரை பொறியல் என சாப்பிட வைத்தார்கள். முருங்கைக்கீரை இரும்புச் சத்து நிறைந்த உணவு அல்லவா.

அன்று புதன் கிழமை. விடியலிலேயே முழிப்பு தட்டியது. முதல் நாள் இரவெல்லாம் அமைதியான தூக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு குறுகுறுப்பு உடல் முழுவதும் பரவியது போன்ற ஒரு உணர்வு.  ஹார்மோன்களின் வேலை போல அது. உடலெல்லாம் ஒரே கசகசப்பாகவும், வலியாகவும் இருந்தது. உடம்பு முடியவில்லையோ, காய்ச்சலாக இருக்குமா, சளியும் இல்லையே என்று யோசனை. அம்மாவை சென்று எழுப்பவும் மனம் இல்லை. பக்கத்தில் தங்கை படுத்திருக்கிறாள். எப்படியோ அம்மா எழுந்துவிட்ட சலசலப்பு வெளியில் கேட்டது. நானும் என் அறையை விட்டு எழுந்து போய் அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டே சமயலறை நோக்கிச் சென்ற போது, அம்மா என்னடி இவ்ளோ சீக்கிரம் எழுந்திரிச்சிட்டியே, ஆச்சரியமா இருக்கு..என்றபோது, மென்று முழுங்கிய நான் அம்மா.. வந்து.. வந்து என்றபோது, அம்மாவிற்கு ஏதோ பொறி தட்டிவிட்டது. இங்கே வா என்று, புழக்கடைப்பக்கம் கூட்டிச் சென்று நிற்க வைத்துவிட்டு, போய் அத்தையை எழுப்பி கூட்டி வந்தார்கள். அத்தை வந்து பார்த்தவுடன், “என்னம்மா.. குட் நியுஸ்ஸா... பெரிய பொண்ணாயிட்டியா....என்றார். ஏனோ அந்த வார்த்தை எனக்கு அப்போது பிடிக்கவேயில்லை... குழந்தையாக இருப்பதையே மனம் விரும்பியிருந்தது!

அத்தை வந்து, மஞ்சள் பூசி, நீராட்டுவிக்கும் போதுதான் பல விசயங்களைச் சொன்னபோது குண்டைப் போட்டது போன்று அதிர்ச்சியாக இருந்தது. மாதாமாதம் இதேப் பிரச்சனை வரும் என்று அவர் எளிதாக சொன்னபோது ஏற்பட்ட அந்த அதிர்ச்சி இன்றும் உணர முடிகிறது. காரணம் இந்த காலம் போன்று அப்போதெல்லாம் தொலைக்காட்சியில் சேனிடரி நாப்கின்களின் வெளிப்படையான விளம்பரம் எல்லாம் கிடையாது. ஏதோ ஒரு முறை வருகிற நோய் போன்ற விசயம் என்றே எண்ணியிருந்தேன். மெல்ல மெல்ல சமாதானம் செய்து சாதாரண நிலைக்குக் கொண்டுவர உடனிருந்து உதவி செய்த அத்தையின் பாசம் அளவிட முடியாதது. சுகாதாரம் பற்றி அத்தை சொல்லிக் கொடுத்த பல விசயங்கள் இன்றும் மனதில் பதிந்தவை.

பருப்பு சாதமும், இனிப்பும் வழங்கிய பின்பு, தாய் மாமனுக்கு செய்தி அனுப்பினார்கள். அவர் வந்து குடிசை கட்ட வேண்டும். தென்னை ஓலையை தட்டியாகப் பின்னி, அதை நாற்புறமும் வைத்து ஒரு குடிசை போன்று அமைத்து, அதன் உள்ளே என்னை உட்கார வைத்து சந்தனம் பூசி நலங்கு வைத்தார்கள். நன்கு குளுகுளுவென இருந்தது. இதற்கெல்லாம் கட்டாயம் அறிவியல் காரணங்களும் இருக்கும். முதலில் மஞ்சள்  கிருமிநாசினி என்பதால் அதை உடல் முழுவதும் பூசுகிறார்கள். தென்னை ஓலைக் குடிசையும், சந்தனமும் உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடியவை. பருப்பு சாதம் புரதச் சத்து நிறைந்த உணவு. தினமும் விடியலில் எழுப்பி பச்சை முட்டையை அப்படியே உடைத்து வாயில் ஊற்றுவார்கள். பிறகு பகலில்  உளுத்தங்களியோ அல்லது உளுத்தங்கஞ்சியோ கட்டாயம் உண்ணக் கொடுப்பார்கள்.

ஒன்பது நாட்கள் அந்தக் குடிசையினுள் வாசம். உலக்கை ஒன்று வாசலில் அரணாக இருந்தது. அந்த ஒன்பது நாட்களும் கொண்டாட்டத்திற்கு அளவில்லை. உடல் வேதனை அத்துனையும் போக்கச் செய்யும் அளவில் இருந்தது அது. ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம். ஆண்டாள், சரசுவதி, பாரத மாதா, நரிக்குறத்தி, என்று இப்படி பலப்பல வேடங்கள் போட்டு அலங்காரம் செய்தார்கள். வீடு முழுவதும் உறவுகளும், விருந்தும் என்று பொழுது கண் மூடித் திறக்கும் நேரத்தில் கரைந்து கொண்டிருந்தது. ஒன்பதாம் நாள் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி, மஞ்சள் பூசி, நலங்கு வைத்து, மாமன் வீட்டு சீராக வந்த பட்டுச் சேலையுடுத்தி வந்த போது,

காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டும் வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்தத் திருமகளும் உன்னழகைப் பெறவேண்டும்.

என்று பெண்கள் பாட்டும், கேலியுமாக உடன்வர அன்னப்பட்சி அலங்காரத் தேரில் ஊர்வலமாகக் கூட்டிவந்து மண்டபத்தில், மேடையில் உட்கார வைத்தார்கள். மாமன் வீட்டு மாலையும், வகை வகையாய் இனிப்புகளும், தங்க நகை சீதனமும், பழங்களும் என, தட்டுகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. இன்றும் மனதில் காட்சியாக விரிகின்றது.  புட்டு சுற்றும் சடங்கு ஆரம்பமானது. இருக்கையில் சலவைத் தொழிலாளியின் மாற்று துணி போட்டு அதில் உட்கார வைத்து, சுமங்கலிகள் வந்து சந்தனம் பூசி நலங்கு வைத்து, தண்ணீர் சொம்பு, புட்டு, ஆலம் என்று ஒவ்வொன்றாக, ஒற்றைப்படையில் முடியுமாறு 9, 11 அல்லது 21 என்று சுமங்கலிப் பெண்கள் சுற்றுவார்கள். இறுதியாக அனைத்தையும் சுற்றி தீப்பந்தம் பிடிக்கும் சலவைத் தொழிலாளிப் பெண்ணிடம் கொடுத்து விடுவார்கள். சுற்றிய சுமங்கலிகள் அனைவருக்கும் மங்கலப் பொருட்கள் வைத்து தாம்பூலம் கொடுப்பார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகும் நெஞ்சை விட்டு அகலாமல் நிறைந்திருக்கும் நிகழ்வுகள் இவை. ஆனாலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதனை அதிகமாக விரும்புவதில்லை. அதனால் சிலர் திருமணத்தின் போது இரண்டு நாட்களுக்கு முன்பாகக்கூட  இச்சடங்குகளைச் செய்து விடுகின்றனர். இந்தச் சடங்குகளைச் செய்து முடிக்காமல் திருமண மேடையில் உட்கார வைத்தால் தீட்டு கழியாது, அதனால் தெய்வ குத்தம் ஆகலாம் என்ற நம்பிக்கையும் பரவலாக இருக்கிறது.

இதுபோன்ற சடங்குகள் செய்யும் போது என் பெண் இன்னும் குழந்தையில்லை. பெரிய மனுசியாக வளர்ந்து திருமணத்திற்குத் தயாராகி நிற்கிறாள் என்று மேடை போட்டு, ஊரைக்கூட்டி பறை சாற்றுவது போல் உள்ளது 13 அல்லது 14 வயதில் பூப்படைந்து, 15 வயதில் திருமணம் முடித்து, 16 வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகும் நிலை இன்றைய காலகட்டத்தில் நடக்க முடியாத ஒன்று. கல்வியின் மீது ஆர்வமும் மற்றும் அதற்கான விழிப்புணர்வும் நிறைய இருந்தாலும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் ஆதிக்கத்தினால் மனநிலை பாதிப்பும் ஏற்படத்தான் செய்கிறது. தேவையில்லாத கற்பனைகளும், எதிர்பார்ப்புகளும், உணர்வுத் தூண்டலும் தவறான வழிநடத்தலாவதும் நிதர்சனம்.

தாய் மற்றும் ஆசிரியர்களின் பங்கு இங்கு இன்றியமையாததாகிறது. இளமைப் பருவம் என்பது உடல் மற்றும் மன வளர்ச்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாதலால் இது வாழ்க்கையின் முக்கியமான காலமாகக் கருதப்படுகிறது. நற்சிந்தனைகள், நல்லொழுக்கம், நல்ல குறிக்கோள் என பலவற்றையும் சமுதாயம் இப்பருவத்தினரிடம் எதிர்நோக்கும் காலமிது என்பதால் பொறுப்புகளும் கூடித்தான் போகிறது. அதுவரை இருந்த வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயமும் சில நேரங்களில் மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். இப்பருவத்தில் உணர்ச்சிகளின் உறுதியின்மை ஏற்படுவது இயற்கை. அதாவது திடீரென்று சிரிப்பிலிருந்து அழுகைக்கும், ஆர்வத்திலிருந்து அலட்சியத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கும் நிலை ஏற்படுகிறது. தம்முடைய விருப்பு, வெறுப்பு குறித்த விழிப்புணர்வு கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வளர் இளமைப் பருவத்தின் இந்த நிலை பெற்றோர் மற்றும் நல்ல ஆசிரியர்களின் துணையால் பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது. உடலியலில் ஹார்மோன்களின் சுரப்பு செயல்பாட்டில் அனைத்துக் குழந்தைகளும் கடந்தாக வேண்டிய தவிர்க்க முடியாத நிலை இது.

குழந்தையும் அல்லாத, முழுமையான பெண்ணாகவும் அல்லாத இந்த இரண்டுங்கெட்டான் பருவத்தில், குழப்பமான மனோநிலையுடன், தெளிவற்ற சிந்தனை உடையவர்களாகவே இருக்கின்றனர். சில பெற்றோர்களின் அறியாமையால், முரண்பாடான வழிநடத்துதல்கள் இப்பருவத்தினரை மேலும் குழப்பமடையச் செய்கிறது. அளவிற்கதிகமான எதிர்பார்ப்பும் பெற்றோரின் தவறாகிவிடுகிறது. இதன் காரணமாகவே பல குழந்தைகள் இப்பருவத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் போதும் பெற்றோரையோ அல்லது ஆசிரியரையோ அணுகத் தயங்குகிறார்கள்.

முதலில் பெற்றோர் தங்கள் காலத்தின் வாழ்க்கை முறைமைகளுக்கும், தற்காலக் குழந்தைகளின் வாழ்க்கை முறைமைகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். தந்தையும், தாயும் தங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லாமல் ஒன்றுபட்டு செயல்படும் வழமையுடையவர்களாக இருந்தால் இருவரும் சேர்ந்து குழந்தைகளின் குழப்ப மனநிலையை எளிதில் மாற்ற வழிவகுக்கும். இருவரும் மாறுபட்ட கருத்துடையவர்களாக இருக்கும் பட்சத்தில் இருவரில் யாரைப் பின்பற்றுவது என்று குழந்தைகளின் மனோநிலையில் மேலும் குழப்பமே அதிகரிக்கிறது. அவர்கள் பழையபடி அனைத்திற்கும் தங்களையேச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் சுயமாகச் சிந்திக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.

அடுத்து மிக முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது தொடுதலில் உள்ள வேறுபாடுகள். அதாவது பாச உணர்வின் தொடுதலுக்கும், தரமிழந்த மனிதர்களின் வக்கிரமான உணர்வுகளின் வெளிப்பாடுகளின் தொடுதலுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவாக உணர்த்த வேண்டியது அவசியம். அதாவது பாசத் தீண்டலுக்கும், பாலியல் தீண்டலுக்கும் உள்ள வேற்றுமையை உணரச் செய்ய வேண்டும். அந்தரங்க விசயங்கள் பற்றிப் பேசுவதும், சங்கடப்படும்படி கண்ட இடங்களைப் பார்ப்பதும் கூட பாலியல் வன்முறையின் துவக்கம் என்பதையும் விளங்கச் செய்ய வேண்டும்.

உடல் சார்ந்த கேள்விகளோ அல்லது வேறு உணர்வுகள் சார்ந்த ஐயங்களோ அவர்கள் எழுப்பும் பட்சத்தில் அதனைத் தவிர்க்காமல் அவர்கள் நிலைக்குப் பொருந்திய விளக்கங்களை அளிக்கத் தயங்கக் கூடாது. குழந்தைகளின் மனதில் நம்பிக்கையும், தைரியமும், பாதுகாப்பு உணர்வும் ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை. அப்படி பெற்றோர் இருக்கத் தவறும்போதுதான் குழந்தைக்கு மூன்றாம் நபரின் அருகாமையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது. அந்த மூன்றாம் நபர் பிரச்சனைக்குரியவராக இருந்துவிட்டால் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. அனைத்திற்கும் மேலாக குழந்தைகளுக்கு சரியான தொடுதல் எது என்பதைச் சொல்லித் தருவதில் தயக்கமோ, வெட்கமோ கொள்ளக்கூடாது. அவர்கள் ஏதும் புகார் அளித்தால் அதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தக் கூடாது. அவர்கள் வயது ஒத்தக் குழந்தைகளின் குழுவுடன் இருப்பதையே ஊக்குவிக்க வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் எட்டி நின்று பழகும் விதத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். அற்பத் தேவைகளுக்கும், சபலங்களுக்கும் பொன்னான தங்கள் வாழ்வைப் பலியிடாமலும், நாணம், கூச்சம் மற்றும் அச்சம் காரணமாக மௌனமாக இருந்துவிடாமலும், குற்ற உணர்வால் குமைந்து போகாமலும், தவறு என்று தெரிந்தவுடன் அதனைத் தடுத்து நிறுத்த உரக்கக்கூவி எச்சரிக்கவும், துணிந்து நின்று எதிர்த்து விரட்டவும் சொல்லித்தர வேண்டியது அவசியம்!

பட்டாம்பூச்சியாக சிறகடித்துத் திரியும் இந்த சௌந்தர்யமானப் பருவம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பருவமும்கூட!



5 comments:

  1. சிறப்பான கட்டுரை சகோதரி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. தனபாலன். ஊக்கமான வார்த்தைகள்!

      Delete
  2. எத்தனை விஷயங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்! ஓகே.. அந்த அறிவியல் காரணங்கள் நிச்சயம் இருக்கும் என்ற ஒரு வரி தவிர.. எல்லாமே பிரமாதம். உலக்கை வைப்பதரற்கு நிச்சயம் அறிவியல் காரணம் கிடையாது.. என்ன சொல்றீங்க..?
    சமகால பெற்றோர்கள் சற்று அரண்டு போயிருக்கலாம்.. அது கூட்டுக் குடும்பம் கொடுத்த ஆதரவு தனி வாழ்வில் இல்லாது போனதால்.. என்று எண்ணத் தோன்றுகிறது.
    கடைசி பத்திகளின் அறிவுரை.. புரியாத இளம் வ்யதுப் பெண்களுக்கு மட்டுமல்ல.. இளம் ஆண்களுக்கும் ஒத்து வரும்
    அருமையான கட்டுரை. புத்தகத்தில் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சி.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றிங்க. உலக்கை வைப்பது மூட நம்பிக்கை என்று தோன்றினாலும், உளவியல் முறையிலான ஒரு பாதுகாப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக பெற்றோர், உடன் பிறந்தோர் என்று சேர்ந்தே இருந்த காலத்தில் திடீரென ஒரு ஓலைக்குடிசையில் தனிமைப்படுத்தப்பட்டால் அந்த இளம் மனது அச்சப்படும் இல்லையா? வெளியில் அனைவரும் இருந்தாலும் அந்த குச்சு வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு உணர்வு இருக்கும். அப்போது இந்த உலக்கை பெரிய அரண். இன்னொன்று தீய சக்திகள் இந்த உலக்கையைத் தாண்டி உள்ளே வராது என்பதும் ஆழமான நம்பிக்கை.

      இன்று அதுபோல சடங்குகளெல்லாம் மறைந்து கொண்டு வருகிறது. நம் நினைவுகளையாவது பதிந்து வைப்போமே.

      அன்புடன்
      பவள சங்கரி

      Delete
    2. உண்மைங்க. கூட்டுக்குடும்பம் கொடுக்கும் அந்த சுகமே அலாதி. குறிப்பாக குழந்தைகளுக்கு அது ஒரு வரப்பிரசாதம். இன்றைய குழந்தைகளின் மாபெரும் இழப்பு அது. என்ன செய்வது.. காலத்தின் கட்டாயம்.

      Delete