பவள சங்கரி
தாயகம் கடந்த தமிழ்
சென்ற
வாரம் (ஜனவரி 20 - 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’
என்ற அரசு மற்றும் அரசியல்
அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள்
மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட
‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பின்
மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர்
கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியது. புலம்பெயர்
தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக்
காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள்
உரை மற்றும் கட்டுரைகளை முன்
வைத்தார்கள். தொன்மையும், செழுமையும் நிறைந்த நம்
தமிழ் மொழி காக்கப்பட வேண்டிய
சூழ்நிலையில் இருக்கிறதே என்ற துக்கம் எழாமல்
இல்லை. 12 நாடுகளிலிருந்து,
35 எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வல்லுநர்களைக் கொண்டு,
அரசு அல்லது அரசியல் அமைப்புகளைச்
சாராத எழுத்தாளர்களால் இந்தக் கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது. கவிஞர் முனைவர், மொழிபெயர்ப்புக்காகவும்,
படைப்பிலக்கியத்துக்காகவும்
இருமுறை சாகித்ய அகாதமி விருது
பெற்றவர், தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு
ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம்
விருதுகள் அளித்து வருபவருமான திரு
சிற்பி பாலசுப்பிரமணியம் மற்றும் முனைவர் ப.க. பொன்னுசாமி ஆகியோர்
அறங்காவலர்களாகவும் இப்பணியை முன்னெடுத்துள்ளனர். மாண்பமை நீதியரசர் திரு
வி. ராமசுப்ரமணியன் அவர்கள் (சென்னை உயர்நீதி மன்றம்)
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதன்மை
உரை நிகழ்த்தினார். முனைவர் சிலம்பொலி சு.
செல்லப்பன் வாழ்த்துரை வழங்கினார்.
இன்றைய
நிலையில் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் மொழிப்பற்று உடையவர்கள்
என்று பார்த்தால், இளம் சிறார்களின் பெற்றோர்களில்
ஒரு பகுதியினர் மற்றும் ஓய்வு பெறும்
நிலையில் இருக்கும் மத்திய வயதைக் கடந்தவர்கள்
மட்டுமே என்பதே உண்மை. இந்நிலையில் அடுத்த தலைமுறை குழந்தைகளை
ஓரளவிற்கு இழுத்துப்பிடித்து தமிழ் கற்க வைக்கலாம்
என்றாலும், அதற்கு அடுத்த தலைமுறையினரின்
நிலை குறித்த கவலை எழாமல்
இல்லை. கருத்தரங்கில்
கலந்து கொண்ட அனைவருக்கும் இப்படி
ஒரு அச்சம் இருப்பது புரிந்துகொள்ள
முடிந்தது. நான் கருத்தரங்கின் மூன்றாம்
நாள் மட்டுமே கலந்து கொள்ள
முடிந்ததால் அன்று உரையாற்றியவர்களான முனைவர்
ப.க. பொன்னுசாமி
அவர்கள், பேராசிரியர் உல்ரிக்கே நிகோலஸ் (ஜெர்மனி) திருமதி. வெற்றிச்செல்வி, (அமெரிக்கா), பேராசிரியர் வீரமணி, (ஜப்பான்), திரு.அன்பு ஜெயா
(ஆஸ்திரேலியா), டாக்டர் ந.சுப்ரமணியம்
, (அமெரிக்கா) ஆகியோரின்
உரைகளை மட்டுமே கேட்க முடிந்தது.
பெரும்பாலும் தாங்கள் சமர்ப்பித்த கட்டுரையின்
சாரமே உரையாக அமைந்ததால், ஏனையோரின்
கட்டுரைகளின் சாராம்சம் கொண்டு அவர்களின் கருத்துகளையும்
உணரும் வகையில் நம் தமிழ்
மொழியின் வருங்கால நிலை குறித்து அறிய
முற்பட்டேன்.
நிறைவு நாள் நிகழ்வுகள் குறித்த பதிவு இதோ இங்கே
இக்கட்டுரைத்
தொகுப்பின் முதல் கட்டுரையே, திரு
சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ‘பெண்ணெழுத்து’ என்ற
நீண்ட நாளைய விவாதத்தில் சிக்குண்டிருக்கும்
செவ்வி. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உலகம் முழுவதும், ஆண்
மைய அதிகாரத்தின் கொடூர நிழலில் சுயம்
இழந்து, இருப்பிழந்து, குரலிழந்து சுணங்கிக்கிடந்த பெண் எழுத்து, கடந்த
இருபத்தைந்தாண்டு கால இடைவெளியில் வரலாற்றின்
பெரு வெடிப்பில் தன்னையும், தன் இருப்பையும், இடத்தையும்
மீட்டெடுத்துக்கொண்டது என்கிறார். அருமையான பலப்பல வித்தியாசமான எடுத்துக்காட்டுகளும்
அதில் அடக்கம்.
திரு
மாலன் அவர்களின், ‘கயல் பருகிய கடல்’,
முன்னெப்போதையும் விட, இன்று தமிழ்
எழுத்துலகம், ஒரு முக்கியமான கட்டத்தில்
இருப்பதையும், பெரும் சாதனைகளும், சவால்களும்
அதன் முன் விரிந்து கிடப்பதையும்,
இன்று அவற்றை எதிர்கொள்ளும் தன்மையைக்
கொண்டே அதன் நாளைய வரலாறு
இருக்கப் போகிறது என்பதை மிகத்
தெளிவாகவே விளக்குகிறார். தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம்
தங்கள் மொழியையும், இலக்கியத்தையும் எடுத்துச் சென்றதன் காரணம், மொழி தமிழர்களுக்கு
வெறும் தகவல் தொடர்புக் கருவி
மட்டுமல்ல. அது அவர்களது கலாச்சார
அடையாளம் என்று தெளிவாகக் கூறினாலும்,
அடுத்த தலைமுறை தமிழர்கள், குறிப்பாக
புலம்பெயர் இளைஞர்கள் தங்கள் சந்ததியினருக்கு,
நம் சங்க இலக்கியங்களையும், நவீன
இலக்கியங்களையும் எந்த அளவிற்கு கொண்டுசெல்லப் போகிறார்கள்
என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
உலகளாவிய
தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில், முனைவர்
ரெ.கார்த்திகேசு அவர்கள், “இன்றைய அறிவியல் தொழில்
நுணுக்கச் சூழ்நிலையில் தமிழின் புழக்கம் மிகத்
தீவிரமாக அதிகரித்திருக்கிறது என்பது கண்கூடு” என்று
ஆரம்பிக்கிறார்.
மேலும்,
“உலகத் தமிழ் இலக்கியம் பற்றியும்
அயலகத் தமிழ் இலக்கியம் பற்றியும்
மீண்டும் சிந்திக்கும் வாய்ப்பை சிங்கப்பூரில் நடந்த மாநாடும், இப்போது
கோவையில் நடைபெறும் மாநாடும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. ஆகவே உலகத் தமிழ்
இலக்கியத்தை ஒருங்கிணைத்து இலக்கியவாதிகளுக்கும் ஆர்வலர்களுக்கும் அளிக்கும் ஐயரின் முன்னோடி முயற்சியை
மேலும் முழுமைப்படுத்துவது பற்றிச் சிந்தித்துப் பார்க்கலாம்:
திரு
ரெ.கா, அவர்களின் சிந்தனைகள்:
1. ஆண்டுக்கு
ஒரு முறை அயலகத் தமிழ்
இலக்கியப் படைப்புகளை தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும்.
2. இதில்
இந்தியாவுக்கு வெளியே நாடுதோறும் உள்ள
தமிழ்ப் படைப்பாளர்களுக்கு வாய்ப்புத் தரப்படவேண்டும்.
3. பதிப்புக்
குழு நியமிக்கப்பட வேண்டும். தொகுப்பாசிரியரும் படைப்புகள் தேர்வு செய்யும் குழுவும்
நியமிக்கப்பட வேண்டும்.
4. இந்தத்
தொகுப்பை தமிழ் இலக்கியச் சங்கங்களுக்கும்
நிறுவனங்களுக்கும் இலவசமாகவே வழங்கலாம்.
5. இதற்கான
நிரந்தர நிதி ஆதாரம் ஏற்படுத்திக்
கொடுக்கவேண்டும்.
’ஐரோப்பிய
அமெரிக்க தமிழ் இலக்கியம்’ என்ற
தலைப்பில், பிரான்சு எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், “வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் தமிழிலக்கிய வெளியில் பெரும்பாய்ச்சலைக் காண்கிறோம். அப்பாய்ச்சலுக்கு இருவகையான காரணங்களை முன்வைக்கலாம்.
முதலாவதாக
இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம். பாதிக்கப்பட்டவர்கள்
புகலிடம் தேடியபொழுது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் அகதிகளுக்கான கொள்கை மற்றும் மேம்பாடான
வாழ்க்கை அவர்களை உலகின் பிற்பகுதிகளைக்
காட்டிலும் அதிகம் ஈர்த்தது. எனவே
பெரும் எண்ணிக்கையில் இந்நாடுகளுக்குப் புலம் பெயர முடிந்தது.
இன்றளவும் அது தொடர்கிறது. விளைவுகள்
தமிழ் மொழிக்குப் பெரிதும் சாதகமாக அமைந்ததெனில் மிகையில்லை.
தமிழ்த்தேசிய உணர்வுடன் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தமிழையும்,
தமிழ் இலக்கியத்தையும் இந்நாடுகளில் கொண்டுவந்தார்கள்.
இரண்டாவதாகக்
கணினித் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி,
ஊடகமும், இதழ்களும் விரல்முனைக்கு வந்திருக்கின்றன. எண்ணற்ற வலைத் தலங்கள்,
வலைப்பூக்கள், அவற்றில் பல்வேறுவகையான வகைமைகள் எனப் பெருகியுள்ளன. உலகமெங்கும்
பரவி வாழ்கிற தமிழர்களை ஒன்றிணைக்கவும்,
அவர்கள் உணர்வுகளை ஒருமுகப்படுத்தவும் கணினி காரணமானது. இன்றைக்கு
எழுதும் ஆர்வத்தை இளைஞர்களிடம் ஊக்குவித்திருப்பதே இக் கணினி அறிவுதான்.
ஐரோப்பிய மொழிகளுக்கு ஈடாக இன்றைக்கு கணினியில்
தமிழ் இடம் பெற்றிருக்கிறது. இதில்
வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தமிழர்களின்
பங்கு கணிசமானது. கவிஞர் கோ.இராஜாராமை
பொறுப்பாசிரியராகக் கொண்ட தமிழின் முதல்
இணைய இதழ் ‘திண்ணை’ இன்றளவும்
தீவிர இலக்கிய பங்களிப்பினை அளித்து
வருகிறது. நன்கு அறியப்பட்ட மூத்த
தமிழ் எழுத்தாளர்கள் தொடங்கி, புதிய எழுத்தாளர்கள் வரை
எழுதுகிறார்கள். ஜெயமோகன், பாவண்ணன், வே.சபாநாயகம், எஸ்.ஷங்கரநாராயணன், வெங்கட் சாமிநாதன், ஜோதிர்லதாகிரிஜா
ஆகியோர் தொடர்ந்து இவ்விணைய இதழில் பங்களிப்பு செய்கிறார்கள்”.
மலேசியத்
தமிழ் இலக்கியப் படைப்புலகம் குறித்து தம் கருத்துகளைப்
பகிர்ந்துள்ள , டாக்டர்.கிருஷ்ணன் மணியம்,
“ தமிழ்த் தொழிலாளர்கள் தங்களுடைய இரப்பர் தோட்டங்களில் தொடர்ந்து
வேலை செய்யவேண்டும் என்பதால் தோட்ட முதலாளிகள் தமிழ்ப்பள்ளிகளை
தங்கள் தோட்டங்களில் அமைக்க சம்மதம் தெரிவித்தனர்.
அத்துடன் இந்தியாவில் அப்பொழுது அமைந்த சுயராஜ்ய பரீட்சார்த்த
அரசு மலாயாவில் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற
புகாரைப் பெற்ற பிறகு உண்மையைக்
கண்டறிய ஆய்வுக்குழு ஒன்றினை அனுப்பி வைத்தது.
அக்குழுவினரின் பரிந்துரையின் பேரில் உருவான தமிழ்ப்பள்ளிகளின்
பற்றிய குறிப்புகள் 1923 ஆம் தொடக்கம் தொழிலாளர்
சட்டவிதியில் ஒரு தோட்டத்தில் பத்து
அல்லது அதற்கு மேற்பட்டப் பிள்ளைகள்
இருப்பார்களேயானால் தமிழ்ப்பள்ளியை அந்தத் தோட்ட நிர்வாகம்
அமைக்க வேண்டும் என வற்புறுத்தின. தோட்ட
நிர்வாகிகள் பலர் சட்டத்திற்குப் பயந்து
தமிழ்ப்பள்ளியை ஆரம்பித்தனர். அப்பள்ளிகளுக்கு கல்வியியல் பயிற்சி பெறாதாவர்களையும், தோட்டத்தில்
வேலை செய்யும் கிராணியர்களும், கோயில் பூசாரிகளும், தமிழாசியர்களாக
நியமனம் பெற்றனர். அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பள்ளிகள் பெரும்பாலும் நகர்ப்புறப் பகுதிகளில் அமைந்தன.
தொண்ணூறுகளின்
பிற்பகுதி தொடங்கி மலேசியாவில் ஒரு
புதிய இலக்கியப் போக்கினைக் காண முடிகிறது. சண்முகசிவாவின்
நுழைவும், ரெ.கார்த்திகேசு, சை.பீர்முகமது, சாமிமூர்த்தி, அருசு. ஜீவானந்தன், அன்புச்
செல்வன் போன்றோரின் உக்கிரமான மறுபிரவேசமும் எழுத்துப் போக்கிலே புதிய வரவுகளைக் கொணர்ந்தன.
இவர்கள் தமிழகத்தில் அறிமுகமான காத்திரமான எழுத்துக்களைத் தங்களுடைய வாசிப்புகளுக்கு கொண்டு வந்தனர்” என்கிறார்.
’சிங்கப்பூர்
தமிழ் இலக்கியம் ஓர் அறிமுகம்’ என்ற
தலைப்பில் தம் கருத்துக்களைப் பதிவிட்டிருக்கும்
முனைவர் சீதா லட்சுமி அவர்கள்,
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் இன்னும்
50 ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது
என்று கணித்திருப்பது சிந்திக்கத் தக்கது.
“இங்கு
மட்டுமன்றி தமிழர்கள் வாழும் இடங்களிலும் தமிழ்
இலக்கியம் இருக்கும். ஆனால் அது தொடர்ந்து
தன்னைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்பது
சந்தேகம். இப்போது யாரும் எழுதலாம்,
யாரும் பதிப்பிக்கலாம் என்ற நிலை உள்ளது.
நல்ல எழுத்தாளராக ஒருவர் வரவேண்டுமென்றால் அவர்
நிறைய எழுத வேண்டும், நிறையப்
படிக்க வேண்டும். எழுதுவதற்கு அயராத முயற்சி வேண்டும்;
அற்புதமான ஆற்றல் வேண்டும். ஒரு
புத்தகம் எழுதினாலும் போதும், ப.சிங்காரம்
எழுதிய நாவல் போல் எழுத
வேண்டும். இப்போது வரும் படைப்புகளில்
ஆழம் இலை, திடம் இல்லை”
என்ற லதாவின் கருத்தை முன்வைக்கிறார்.
தாம்
ஒரு தமிழாசிரியர், படைப்பாளர் என்ற முறையில் நம்பிக்கையுடன்(?)
பதில் தர விரும்புவதாகத் தெரிவிக்கும்
கண்ணபிரான் , “எதிர்காலத்தில் தமிழ் இலக்கியம், தமிழ்
மொழி இரண்டும் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில்
சொல்வதென்றால், The glass
is half full of water and half empty. இதை
நான் நம்பிக்கையுடன் பார்க்கும்போது பாதி முழுமையாக உள்ளது
என்றுதான் கூறுவேன்” என்கிறார்.
‘வாழ்வும்,
வலியும்’ என்ற தலைப்பில் திரு
அ.முத்துலிங்கம் (கனடா)
அவரகள், “தமிழர்கள் எட்டு கோடி பேர்
உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம்
தமிழர்கள் என்று கணக்கெடுப்பு சொல்கிறது.
என்னுடைய
கிராமம் கொக்குவில். அங்கே காகம் இருந்தது.
அதற்கு இரண்டு செட்டை . ஆறு
மணிக்குருவியும் இருந்தது. அதற்கும் இரண்டு செட்டை. சரியாக
காலை ஆறு மணிக்கு இந்தக்
குருவி ‘கீஈஈஈய்க், கீஈஈஈய்க்’ என்று சத்தமிடும். காகத்துக்கு
பறக்கும் எல்லை இரண்டு மைல்
தூரம். ஆறுமணிக்குருவிக்கு எல்லையே கிடையாது. இமயமலைக்குப்
பறந்துபோய் மீண்டும் திரும்பும், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் இந்த
ஆறுமணிக்குருவி போல. அவர்களுக்கு எல்லையே
கிடையாது. அவர்கள் உலகம் பனியும்
பனி சார்ந்த நிலமும். ஆறாம்
திணை” என்கிறார் நம்பிக்கை பட்டொளி வீச!
தாயகம்
பெயர்தலில் வாழ்வும், வலியும் சமமாக உள்ளதை
மிக உணர்வுப்பூர்வமாக குருதி வழியும் பார்வையுடன்
வாசிக்கச் செய்யும் கட்டுரையின் நாயகரான, எஸ்.பொ. என்று
அனைவராலும் அறியப்படும் , இலங்கையின் முக்கிய எழுத்தாளர்களின் ஒருவரான
ச.பொன்னுத்துரை அவர்கள்,
“கருமேகத்தில்
மின்னல் சொடுக்குவது போன்று, சில சமயங்களிலே
ஒளிப்பிழம்பு தெரியுமல்லவா? அதன் பிரகாசம் சில
நொடிகளிலே மறைந்தாலும், அந்தப் பளிச்சிடல் மகா
பரவசமானது. சீழைப் பிதுக்கி எடுத்து,
முள்ளை வெளியே எடுத்துச் சுகம்
பெறும் வித்தையை தான் வசப்படுத்திக் கொண்டதினால்,
இழப்புகளிலே மூழ்கிடாது, அர்த்தமுள்ளதான வாழ்வினைத் தொடருகின்றேன். அந்த வித்தையின் பிள்ளையார்
சுழியாக, ‘நனவிடை தோய்தல்’ என்கிற
படைப்புக் கட்டுரைகள் கொண்ட தொகுதியை வெளியிட்டேன்.
தாயகம்
பெயர்தலின் வலிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கும், வாழ்வைத்
தொடர்வதற்கும் தமிழ் படைப்பாளிகளுக்குக் கிடைத்துள்ள
அற்புத மருந்து, புதிய புறநானூறுகளையும், அகநானூறுகளையும்
படைத்துத் தமிழை என்றென்றும் இளமைப்படுத்தி
வாழவைப்பதே”, என்பதின் யதார்த்தம் வெகுவாகச் சிந்திக்கச் செய்கிறது.
மலேசியா
நாட்டின் டாக்டர். சண்முக சிவா அவர்கள்,
தாயகம் பெயர்தலில் தங்களின் வாழ்வும், வலியும் குறித்து எழுதுகையில், ‘இடம்பெயர்வு’
என்பது பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பொதுவானதாக இருந்தபோதிலும் கூட பறவைகளுக்கு இருக்கும்
சுதந்திரம் மனிதருக்கு இல்லை என்கிறார்.
“தோட்டப்புற தமிழ்ச் சமுதாயத்தை அடித்துப்
போட்டு புரட்டி எடுக்க அடுத்து
வந்த அலைகளில் ஒன்று அவர்களின் ‘குடியுரிமை’
பிரச்சனை மலாயாவில் பிறந்திருந்தாலுமே குடியுரிமை இல்லாதத் தமிழர்களாய் தோட்டப்புறங்களில் சுமார் 60,000 பேருக்கு மேல் இருந்தனர். குடியுரிமைக்கு
விண்ணப்பிக்கத் தெரியாத அறியாமையில் மூழ்கிக்
கிடந்த இவர்கள் பிறப்புப் பத்திரம்
இல்லாதவர்கள். எப்படி குடியுரிமையைப் பெறுவது
என்று அறியாதவர்கள்”
மேலும்
அவர், ”ஆறாம் ஆண்டுவரை மட்டுமேதான்
தமிழ்க்கல்விக்கான வசதிகள் இருக்கின்ற இந்தச்
சூழலில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் முன்னெடுத்துச்
சென்ற இலக்கிய முயற்சிகள் தமிழுக்கும்
தமிழ்ச் சார்ந்த வாழ்வுக்கும் அதன்
பங்கை நேர்மையாகவும், நேர்த்தியாகவும் செய்து வருகின்றன. துன்பமும் துயரமுமே தமிழர்களின் வாழ்வாக இருந்து வந்திருக்கின்றபோதும்,
தமிழர்கள் குடியேறிய எந்த நாட்டிலும் இல்லாத
அளவுக்கு இன்றுவரை 523 தமிழ் ஆரம்பப் பள்ளிகளை
கட்டிக் காப்பாற்றி வருகின்றோம். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் அதில் பயின்று வருகிறார்கள்
கல்வி அமைப்பில் தமிழைத் தக்க வைத்துக்கொள்ள
நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி
அந்தப் பள்ளிகளின் இருத்தலுக்கான அவசியத்தையும், அதற்கான அரசு மானியத்தையும்
தொடர்ந்து பெற்று வருகிறோம். அரசு
சாரா தமிழ் இயக்கங்கள் பல
மொழிக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் உழைத்து
வருகின்றன” என்பதை ஒரு கட்டுரையின்
சாரம் கொண்டு விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும்
இந்த மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு
குறித்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது.
அமுத
சுரபி மாத இதழின் ஆசிரியர்
முனைவர். திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் ’தமிழ் கூறும் ஊடக
உலகம்’ என்ற
தலைப்பிட்ட தம் கட்டுரையில், இணையத்தில்
இருக்கும் சிக்கல்கள் பற்றி குறிப்பிடும்போது, “ தங்களின்
அதிக முதிர்ச்சியற்ற கருத்துக்களால் தங்களுக்கென்று ஓர் உலகை நிர்மாணித்துக்கொண்டு
உலவுகிறார்கள். இவர்கள் இந்த உலகைத்
தாண்டி வெளியே வருவதே இல்லை.
பெரும்பாலான இணைய தள எழுத்தாளர்களுக்கும்,
பெரும்பாலான இணைய தள வாசகர்களுக்கும்
அவரவர் எல்லையே போதுமானதாய்
இருக்கிறது. அதுதாண்டி அவர்கள் வளர்வதில்லை” என்ற
ஆதங்கத்தையும் முன்வைக்கிறார்.
நிறைவு
விழாவில் நன்றி கூறும் வரை,
நம் தமிழ் மொழி காலங்கடந்து,
தொய்வில்லாமல், நிலைத்து
நிற்பதற்கான தீர்வுகள் ஏதேனும் கூறுவார்கள் என்று
எதிர்பார்த்தேன். ஆனால் எந்தவிதமான தீர்வும்
கூறாமலேயே நிகழ்ச்சி நிறைவடைந்தது . நம்முடைய தாய்த் தமிழானது ஈழத்தமிழர்கள்,
மலாய்த் தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள். அமெரிக்கத் தமிழர்கள் இவர்களால் மட்டும்தான் வாழ
வேண்டுமா? இங்கு தமிழ் நாட்டில்
வாழக்கூடியவர்கள் தங்களுடைய மக்களையும் பேரர்களையும் பெரும்பாலும் மாற்று மொழியில்தான் படிக்க
வைக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இதற்கும் ஒரு தீர்வு காண
வேண்டிய முக்கியமான நேரம் இது.
1. நம்
இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டும்
வைப்பது. அதாவது நம் தமிழ்
மொழியைக் காத்தவர்களின் பெயர்களை வைப்பது.
2. புதிய
கண்டுபிடிப்புகளை தமிழில் மொழிபெயர்த்து நடைமுறைப்படுத்துவது.
3. மின்னஞ்சல்,
பணப் பரிமாற்றங்கள் ஆகிய அனைத்திற்கும் தமிழைப்
பயன்படுத்துவது.
4. தமிழ்
படித்தால் வாழ முடியும் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்துவது.
5. தாயகம்
கடந்த தமிழர் மத்தியில் அவர்களுடைய
குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய எழுத்து மற்றும் ஒலி
வடிவங்களையும் , மற்றும் அவர்கள் சூழலுக்குக்
தகுந்தவாறான கதைகள், பாடல்கள் போன்றவற்றையும் கிடைக்கச் செய்வது.
6. நம்முடைய
தமிழ் மொழி அழியாமல் இருக்க
வேண்டுமென்றால் பழம்பெருமைகளை மட்டும் பேசிக்கொண்டிராமல் புதிய
ஆக்கங்களை சுவையாக உருவாக்கி நம்
தமிழர்களின் பெருமையை நிலைநாட்டுவது
அரங்கில்
பேசியது போல தற்போது, மின்னிதழகள்
அல்லது அச்சு ஊடகங்கள் அனைத்திலும்
எழுதிக் கொண்டிருப்பவர்கள், பெரும்பாலும் மத்திய வயதைக் கடந்தவர்களகாவே
இருக்கிறார்கள். இளைஞர்கள் எழுத வரும்போதும், மேடைப்பேச்சு
பேசுவோரையும், ஊக்கப்ப்டுத்தி, ஆற்றுப்படுத்தினால் மொழி வளர்ச்சிக்கு ஏதுவாக
இருக்கும் என்பதும் சத்தியம்.
தேர்ந்த
வழிப்போக்கன் ஒருவன் தன் பயணத்
திட்டங்களைத் தீட்டுவதுமில்லை,
திரும்பிவருவதைப்
பற்றி சிந்திப்பதுமில்லை! - அறிஞர்
லாவோட்சு.
தொகுத்து பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிங்க...
ReplyDelete