Sunday, October 7, 2018

கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)



கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? - ADHD (Attention deficit hyperactivity disorder)
21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கியிருப்பதை யாரும் மறுக்கவியலாது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் வெகு இயல்பாகிவிட்டதைக் காண முடிகின்றது. இதனால் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மீது திணிக்கப்படும் சுமைகள் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. விடுமுறைகளைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் அவர்களின் ஓட்டம் அந்த குழந்தைத் தன்மையையே பறித்து விடுவதையும் காணமுடிகின்றது. தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற பேராவல் பல பெற்றோர்களுக்கு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. இதன் விளைவாக தாயின் வயிற்றில் கரு உருவாக ஆரம்பித்த உடனே குழந்தையின் மூளை வளர்ச்சிக்காகவும் சேர்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் பழக்கம் இன்று பரவலாகிக் கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறான இது போன்ற செயல்பாடுகளால் தற்போது வருகிற நோய்களும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே இருக்கின்றன. 



குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற கவனப் பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த ஆயிரக்கணக்கான அதி நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இன்று வரை இது குறித்து பொது மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வு இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி. இத்தகைய நீண்ட ஆராய்ச்சி வரலாறு இருந்த போதினும், ADHD குறித்து பல முரண்பாடுகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ADHD ஒரு பொதுவான குழந்தை பருவ உளவியல் மன நோய் அறிகுறியாகவும், வலுவான மரபணு, நரம்பியல்-உயிரியல், மற்றும் நரம்பியல் அடிப்படையிலான குறைபாடாகவும் உள்ளது . இது கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றின் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) hyperkinetic நோய் (HD) என்ற பெயரில், இந்த நோய்க்கான ஒத்த செயல்பாடு அளவுகோல்களை பட்டியலிடுகின்றது.
ADHD என்ற குறைபாடு பற்றி எப்படி கண்டறியப்பட்டது என்றும் இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் உலவுவதன் காரணம் குறித்தும் அறியும் முன்பு இதன் வரலாற்று பின்புலம் குறித்து சற்றேனும் அறிதல் அவசியம். வெகு சமீப காலமான 1987 களில் தான் இந்த குறைபாடு அதிகமாகக் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் 3%  அமெரிக்கக் குழந்தைகள் இந்த கவனச் சிதறல், அதீத செயல்பாட்டுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2000த்தில் இந்த எண்ணிக்கை 7% ஆக எகிறியது. இதுவே 2014 களில் 11% ஆக எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த குறைபாடுகளின் அறிகுறிகளுடன் போராடுவதற்காக, பாதிக்கப்பட்ட  3/2 குழந்தைகளுக்கு மிக சக்தி வாய்ந்த மருந்துகளான Ritalin மற்றும் Adderall போன்ற மருந்துகள் மிகக் குறைந்த பருவமான மூன்று வயதிற்குள்ளாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டங்களில் பிரான்சு, பின்லாந்து, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தது ஆச்சரியமேற்படுத்தியது. மற்ற மேலை நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கக் குழந்தைகளை மட்டும் அதிகமாகப் பீடித்திருக்கும் காரணங்களையும் மற்றும் மூளையில் இயற்கையாகவே பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் இந்த குறைபாடு மரபு வழியில் வருவதா அல்லது குழந்தைகளிடம் இயற்கையாகத் தோன்றும் பழக்க வழக்கங்களா அல்லது அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்வினையா போன்ற வினாக்கள் பெரும் சவாலாக இருந்துள்ளன. இதைவிட முக்கியமான சவாலாக இருந்தது, அதிக சக்தி வாய்ந்த மருந்துகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி, குறைபாடுகளையும் சரி செய்வதற்கு மாற்று உபாயங்கள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுதான். இந்த வினாக்களுக்கான விடையாக, மெரிலைன் வெட்ஜ் என்ற ஆய்வாளர், ‘இன்றைய உளவியல்’ என்ற சஞ்சிகையில்  வெளியிட்ட, “பிரான்சு நாட்டு குழந்தைகள் மட்டும் ஏன் ADHD யால் பாதிக்கப்படவில்லை” என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், சிகிச்சை முறைமைகள், வளர்ப்பு முறை, உணவுப்பழக்கம், கல்வி முறை போன்ற ஆக்கபூர்வமானவற்றை விவாதித்துள்ளார். இந்த ஆய்வுகள் பிரான்சு நாட்டிற்கு மட்டுமன்றி இந்தியா போன்ற நாடுகளிலும் இது போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக மிக அரிதாக இருந்த காலகட்டம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதய காலகட்டங்களில் இது போன்ற குறைபாடுகள் இந்தியக் குழந்தைகளுக்கும் மிக அதிகமாகப் பரவி வருவது அதிர்ச்சியேற்படுத்துவதாகவே உள்ளது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைப்பாடு மட்டுமே இன்றும் உள்ளதையும் மறுக்க இயலவில்லை. 
ADHD குறைபாடு என்பதன் அறிகுறிகள் என்ன?
கவனமின்மை
1. பெரும்பாலும் கூர்ந்து கவனம் செலுத்தத் தவறுதல் அல்லது பள்ளிப் பாடங்களில் கவனமின்மையால் தவறு செய்வது அல்லது அன்றாட கடமைகள், மற்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது.
2. பெரும்பாலும் பணிகள் செய்யும் நேரங்களில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலோ அல்லது விளையாட்டு செயல்பாடுகளிலோ சிரமம் மேற்கொள்வது.
3. பெரும்பாலான நேரங்களில் நேரடியாகப் பேசும்போது கவனம் செலுத்தாதது போன்ற தோற்றம்.
4. பெரும்பாலும் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தாமலும், வீட்டுப் பாடங்களை முடிக்காமலோ அல்லது பணி செய்யும் இடத்தில் கவனமில்லாமல் கடமை தவறுவது (எதிர்ப்பு நடவடிக்கையாக இல்லையென்றாலும், அறிவுறுத்தல்களையோ, ஆணைகளையோ சரிவரப் புரிந்து கொள்ள இயலாமையால்)
5. பெரும்பாலும் பணிகள் அல்லது செயல்பாடுகளை நிறுவுதலில் சிரமம் ஏற்படுவது.
6. பெரும்பாலும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்பாடுகளைத் தவிர்ப்பது, விருப்பமில்லாமல் இருப்பது அல்லது பள்ளிப்பாடங்கள், வீட்டுப் பாடங்களில் கவனம் செலுத்தாமல் செய்ய மறுப்பது.
7. பெரும்பாலும் விளையாட்டு சாமான்கள் அல்லது பென்சில், பேனா, புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை தொலைத்து விடுவது.
8. சுற்று வட்டாரத் தடைகளால் எளிதில் கவனச் சிதறல் உண்டாவது.
9. அன்றாட பழக்கங்களையும் மறந்து விடுவது.

Hyperactivity - ஹைபர்ஆக்டிவிட்டி - அதீத செயல் திறன்
1. பெரும்பாலும் படபடப்பாக கை, கால்களைச் சொடுக்குவது அல்லது இருக்கையில் நெளிந்து கொண்டிருப்பது.
2. வகுப்பறையில் இருக்கையை விட்டு எழுந்து செல்வது.
3. பெரும்பாலும் தேவையில்லாமல் வேகமாக ஓடுவது அல்லது மேலே ஏறுவது.
4. பெரும்பாலும் அமைதியாக விளையாடத் தயக்கம்.
5. பெரும்பாலும் யாரோ விரட்டுவது போன்ற ஒரு அவசரகதியிலேயே செயல்படுவது.
6. பெரும்பாலும் அளவிற்கு அதிகமாகப் பேசுவது.

Impulsivity - உணர்ச்சிவசப்படுதல்
7. பெரும்பாலும் வினாக்கள் முடிக்கும் முன்னரே ஏதோ ஒரு விடையை உளறுவது.
8. பெரும்பாலும் தனது முறை வரும்வரை பொறுமை காக்க இயலாமை.
9. பெரும்பாலும் அடுத்தவருக்கு தடை ஏற்படுத்துவது அல்லது தேவையில்லாமல் உள்நுழைவது.
ஏழு வயதிற்குள் மேற்கண்ட அறிகுறிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து 6 மாதமாக இருந்தால் மட்டுமே இது ADHD குறைப்பாடு எனலாம்.

போட்டிகள் வெகு விரைவாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் உயர் கல்விக்காக இளமைப் பருவத்திலிருந்தே அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இது போன்ற தருணங்களில் இந்த விதமான மருந்து மாத்திரைகள் பயன்பட்டால் அதனைத் தொடர்வதில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. நல்ல கல்லூரியில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழி செய்யும் வகையில் இதனைத் தங்கள் கடமையாகக் கருதும் பெற்றோரே அதிகம் உள்ளனர் என்கிறார் இவர். விளையாட்டு மைதானமாக இருக்க வேண்டிய பள்ளிப் பருவம் இந்தக் குழந்தைகளுக்கு பெரிய பந்தய மைதானமாகக் காட்சியளித்துவிடுகின்றது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணித் திட்டமிடும் பெற்றோரை தவறு சொல்ல முடியாது என்றாலும், மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதும் நல்லதல்ல... குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சியும், வெற்றியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களின் உடல் நலமும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் என்றே இதைப் பார்க்க முடிகின்றது. முழுவதும் மருந்துகளையே நம்பி இருப்பதைக்காட்டிலும் உளவியல் சிகிச்சை முறையை அதிகமாகத் தொடருவதே சாலச்சிறந்தது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதிகமான மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் மிகவும் மந்த நிலையை வெகு விரைவில் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதனால் அவர்களின் கல்வி பிற்காலங்களில் கேள்விக் குறியாகவும் வாய்ப்புள்ளதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். 
மன அழுத்தம், மனச்சோர்வு, அதிக எதிர்பார்ப்பினால் ஏற்படும் மன உளைச்சல், தற்கொலை எண்ணம் போன்ற குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் உணர்வுரீதியான பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் மருந்துகளைவிட குடும்ப உளவியல் சிகிச்சை முறையே (family therapy techniques) பாதுகாப்பானது என்பதே இந்த ஆய்வுகளின் முடிவான கருத்தாக உள்ளது. இதற்கான பல குழந்தைகளின் எடுத்துக்காட்டுகளும் இந்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ளன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ADHD பாதிப்பினால் அல்லலுற்ற ஒரு கலிபோர்னிய குழந்தையின் தாய் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வீட்டில் கல்வி கற்க ஏற்பாடு செய்தபோது இந்தப் பிரச்சனை பெருமளவில் கட்டுப்பட்டது என்கிறார். செருமனியைச் சேர்ந்த ஒரு தாய், தம் குழந்தை ADHD பாதிப்பினால் மருத்துவமனைக்குச் சென்றபோது மருந்துகள் கொடுத்தபோது, “நாங்கள் அந்த மருந்திற்குப் பதிலாக அவளுக்கு ஒரு பியானோ வாங்கிக் கொடுத்தோம் - ஆச்சரியமான வகையில் நல்ல முடிவுகளைக் காண முடிந்தது” என்றார். 
ஆக, மருந்துகளைவிட குழந்தைகளின் உணவு முறையில் சிறு மாற்றங்கள், அவர்களுடைய சக்தியை வெளிக்கொணர ஒரு உபாயமும், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதும் இந்த குறைபாட்டிற்கான சிறந்த மாற்று மருத்துவம் என்பது தெளிவாக விளங்குகிறது. இந்த ஆய்வின் முடிவின்படி ADHD என்ற குறைபாடு குழந்தைகளின் இயற்கைக்கு மாறான ஒரு நிலைப்பாடோ அல்லது மருந்தினால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயோ அல்ல என்பதுதான். பல நேரங்களில் குழந்தைகள் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்ட பெற்றோர் இயல்பான குணநலனுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாமல் மருத்துவ உதவியை நாடுவதும், அவர்கள் ADHD குறைபாடு என்ற ஐயத்தால் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுப்பதும் நிகழ்ந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் ADHD குறைபாடு என்று பட்டயம் கட்டி மருந்துக்கு பரிந்துரை செய்வது அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகள்தான் என்பதே நிதர்சனம். கடுமையான சூழல்களால் பாதிக்கப்பட்டு எதிர்வினையாற்றும் சில குழந்தைகளை பொறுப்பாக, பொறுமையாகக் கையாளத் தெரிந்த பெற்றோரே சிறப்பான பெற்றோரின் வளர்ப்பு முறையாகக் கருத முடியும். 
இந்த ADHD குறைபாடு பரவுவதற்கான காரணம் அமெரிக்கக் கலாச்சாரம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய விசயம் அல்ல என்றாலும் உலகின் பெரும் பகுதிகளின் நவீன கலாச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பெரும்பாலான நவீனவாதிகளின் செயல்பாடுகளாகவும் அமைந்துவிடுவது என்றும் இந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார். 
இயல்பாகவோ அல்லது இயல்புக்கு மாறான குழந்தைகளின் நடத்தையோ என எதுவாக இருப்பினும் அது நாம் வாழும் சமூகத்தின் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதே சத்தியம். இதை உணராத பெற்றோரே பெருங்குழப்பத்திற்கு ஆளாகி, குழந்தை வளர்ப்பை பெரும் சுமையாகக் கருதி நிம்மதி இழக்கின்றனர். ஆம், ADHD என்ற குறைபாடு பற்றி பேசும்போது நாம் முதலில் கூர்ந்து கவனம் கொள்ள வேண்டியது மருந்தில் மட்டுமல்லாமல், நாம் வாழும் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரம் போன்றவைகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மருந்துகளையும் தவிர்த்து சூழ்நிலை மாற்றங்கள், படைப்பாற்றலை பெருக்குவது, உளவியல் சிகிச்சை முறை போன்ற பலவகை பரந்த வெளிகள் குறித்த கருத்துகளையும் அறிந்துகொள்ளும் உரிமைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிச்சயம் உண்டு. இதில் குழந்தைகளின் உணவு முறையில் மாற்றம், குழந்தைகளுக்குத் தோதான பாடசாலைச் சூழல், ஊடகங்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெற்றோரின் பயிற்சி மற்றும் குடும்ப சிகிச்சை  போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதும் அடங்கும்.
இந்த பிரச்சனை வெகு விரைவாக வளர ஆரம்பித்தன. 1990 களில் 3 மில்லியன் அமெரிக்கக் குழந்தைகளுக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துகள் 2010 காலகட்டங்களில் 10 மில்லியன்  குழந்தைகளாக உயர்ந்துவிட்டன. அவர்களை பள்ளியில் படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருந்ததால் உளவியல் சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகி இருக்கிறது. மேற்கண்ட அந்த மருந்துகள் மருத்துவ உலகிற்கு புதிதும் அல்ல. 1930 களில் மூக்கடைப்பு, அதிக பருமன் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டவைதான் என்கிறார். அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காரணியாக இந்த மருந்துகள் செயல்பட்டிருக்கின்றன. 
பின் அதனைத் தொடர்ந்து பல்வேறு பெயர்களில், கருத்துகளில்  இந்த குறைபாடு பற்றிய விளக்கங்கள் பல விதமாகப் பரவி வரலாயிற்று. 1968 இல் DSM II என்ற உளவியல் கையேடு வெளியிட்டபோது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, குழந்தைகளிடம் காணப்பட்ட அதீத இயக்க எதிர்வினை குறித்த கண்டறிதல் மூலமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், கவனமின்மை, அமைதியின்மை, கவனச்சிதறல், அதீத செயல்பாடு போன்ற குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் இதில் குழந்தைகளுக்கு பருவ வயது வரும்போது இந்த முதிர்ச்சியின்மை மறைந்துவிடக் கூடும் என்றனர். 
பின் அடுத்த கட்டத்தில் இந்த குறைபாடுகளை, மூளையில் ஏற்படும் மெல்லிய ஒழுங்கின்மை அல்லது கரிம மூளை நோய்க்குறி என்றும் குறிப்பிட்டனர். மூளையழற்சி அல்லது மூளையில் ஏற்படும் வீக்கம் காரணமாகலாம் எனப்பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே இந்த அறிகுறிகள் இருந்திருக்கும் என்று எண்ணினார்கள். 

பாதிக்கப்பட்ட குழந்தை பின் விளைவுகள் இன்றி மீண்டு வர  திட்டமிடுவது எப்படி?

ADHD குறைபாடு என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை வேறு ஏதும் பின் விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாக எப்படி திட்டமிடலாம் என்று அக்குழந்தையின் தாயும், மருத்துவ ஆய்வாளரும் இணைந்து செயல்படும் முறையைக் காணலாம் ..  
பொதுவாக ஒரு குழந்தையின் நடத்தையில் வித்தியாசம் தென்பட்டால், அதாவது சம வயது உள்ள மற்ற குழந்தைகளுடன் வித்தியாசப்பட்டால் அந்த பெற்றோர் அந்தக் குழந்தை ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், குழந்தையை வேதனைப்படுத்தும் அந்த ஏதோ ஒன்றை கண்டறிய வேண்டும்  என்ற எண்ணத்தில் மருத்துவரை அணுகுகிறார்கள். கோபம், மரியாதையின்மை, கவனமின்மை, அதீத செயல்பாடு போன்ற குணநலன்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி முழுமையடையாத சூழலில், வறுமை, வன்கொடுமை போன்ற பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் ஏற்படும் மாறுபட்ட சூழல் குழந்தையின் மனநிலையை பாதிப்படையச் செய்து அது அதன் நடத்தையில் வெளிப்படுவது இயற்கை. அதாவது குழந்தைகள் கடுமையானச் சூழலில் தங்களுடைய எதிர்ப்புகளை முழுமையாக வெளிப்படுத்தும் சக்தி இல்லாதபோது இது போன்ற மாறுபட்ட நடத்தைகள் இயல்பாகிவிடுவதுமுண்டு. இதனாலேயே மருத்துவர்கள் சிகிச்சை முறையை குழந்தையின் ஆணி வேரான குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகள் மத்தியில் வித்தியாசமான நடவடிக்கை உள்ள இது போன்ற குழந்தைகளை எளிதாகக் கண்டறிய முடிவதால் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவே பெற்றோருக்கு இது தெரிய வருகிறது. பெற்றோர் இது போன்ற சூழலை அமைதியாகக் கையாள்வதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை எளிதாக அணுகுவதோடு அதற்கான சரியான தீர்வையும் காண முடிகின்றது. சில காலங்கள் முன்பு குழந்தைகளின் இது போன்ற நடத்தைகளை அவர்களின் இயல்பாக எடுத்துக்கொண்ட சூழல் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை. அபரிமிதமான எதிர்பார்ப்புகளோடு வளர்க்கப்படும் குழந்தைகளின் இயல்பு நிலை பெரும்பாலான பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போவதும் அந்த குழந்தைகளின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றது. 
பொதுவாக அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் மருந்துவம் பெரும் பங்கு வகிப்பதைக் காணமுடிகின்றது. கடுமையான போட்டிகள் நிறைந்த இந்த உலகில் குழந்தைகள் அதிக உழைப்பைப் போடாமல் பகல் கனவு கண்டுகொண்டு எதையும் சாதிக்க இயலாது என்று உறுதியாக எண்ணுகிறார்கள். இந்த கலாச்சாரம் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று தீயென பரவிக் கொண்டிருப்பதும் வேதனையான விசயம். மாணவர்கள் மத்தியிலேயே கல்வி என்ற அடிப்படையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் இடைவெளிகள் உருவாகி வருவதையும் காணமுடிகின்றது. ஒரு குழந்தை தன் மூன்று அல்லது நான்கு வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதே ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்களுக்கு அடிகோலிவிடுகின்றது என்பதே நிதர்சனம். மேல் படிப்பிற்காக குழந்தைகள் ஆரம்பக் கட்டத்திலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான பெற்றோர் அந்த போட்டிகளை எதிர்கொள்ளத் தோதாக மருத்துவ உதவியையும் நாடுவது தங்கள் கடமை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீனத்துவம் இந்த வகையில் குழந்தைகள் வளர்ப்பில் பல எதிர்மறையான கலாச்சாரங்களையும் ஊக்குவித்துக்கொண்டு வருவதை உணர முடிகின்றது. இதில் முக்கியமாகக் காண வேண்டியது இதைப்பற்றிய முழுமையான தெளிவு இல்லாத பெற்றோர் கூட பல தவறான முன் உதாரணங்கள் மூலமாக தவறான முடிவை எடுக்கவும் துணிகிறார்கள் என்பதுதான். இதனால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவது தங்கள் குழந்தைகள்தான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆம் விளையாட்டு மைதானமாக குதூகலிக்க வேண்டிய குழந்தைப்பருவம் பந்தய மைதானமாக விரட்டப்படுவது துரதிருட்டவசமானது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு பெறுவதில் எத்துணை சிரமத்தை தம் குழந்தை மேற்கொள்ளப் போகிறதோ என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாகிக் கொண்டுவருவதும் முக்கிய காரணமாகிவிடுகின்றது. கல்வி மட்டுமே எதிர்கால வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க முடியும் என்ற தீவிர எண்ணம் பெரும்பாலான பெற்றோரின் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. இந்த மனநிலையில் வரும் பெற்றோர்களுக்கு மருத்துவர்களும் தங்கள் பங்கிற்கு பல புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை. ஆனால் பல நேரங்களில் அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 
டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்றோரின் ஒரே செல்ல மகன். தங்கள் குழந்தைக்கு ADHD குறைபாடு உள்ளது என்று அறிய வந்தபோது ஏனைய மற்ற பெற்றோரைப் போலவே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது உண்மைதான். என்றாலும் சில நாட்களில் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் இந்த குறைபாடு பற்றி ஆதியோடு அந்தமாக தகவல் திரட்ட ஆரம்பித்தவர்கள் இதற்கான தீர்வைக் கண்டறிய முற்பட்டார்கள். பல்வேறு மருத்துவர்களை அணுகி இது பற்றி பல தகவல்களை சேகரித்துக்கொண்டார்கள். இந்த குறைபாட்டிற்காக கொடுக்கப்படும் மருந்தின் வீரியம் மிக அதிகம் என்பதால் குழந்தை பல பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பிற்காலத்தில் குழந்தை மேலும் மந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்பதையும் உணருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரான மருத்துவர் மெரிலைன் வெட்ஜிடம் வருகிறார்கள். இந்த குறைபாட்டிற்காக பெரும்பாலும் கொடுக்கப்படும் மருந்தின் பெயரைச் சொல்லி அதைக் கொடுப்பதால் தங்கள் குழந்தைக்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கிறார்கள். 
அந்த மருத்துவரின் பதிலும் பெரும்பாலும் ஆம் என்பதுதான். பெரும்பாலான குழந்தைகளை இது போன்ற மருந்துகள் அமைதியாக்கி, அவர்களின் கவனத்தை மீட்டுக்கொடுக்கின்றது. பல குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்தே பலன் தெரிய ஆரம்பிக்கின்றது. ஆனாலும் இந்தப் பெற்றோர் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இந்தக் குழந்தையை வழிநடத்த தாமும் உறுதுணையாக இருக்கமுடியும் என்று விருப்பம் தெரிவித்தபோது அவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர். இதற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் பின் விளைவுகள் குறித்து தெளிவான விளக்கமளித்துள்ளார். உளவியல் மருத்துவர்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகளை பயன்படுத்துவது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில், அதாவது தேவையென்றால் பயன்படுத்தலாம் என்பதுதான். இந்த மருந்துகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையில் செயல்படுவதும் கண்கூடு. சிலருக்கு உடனே பலன் தெரியும் இதே மருந்து பலருக்கு நாள்பட எடுத்துக்கொண்டும் பலனளிப்பதில் மந்தமாக செயல்படலாம். அவரவர் உடல்வாகின் அடிப்படையிலேயே மருந்துகள் செயல்படுவதும் இயற்கை. பல நேரங்களில் முன் காலத்தில் குறும்புக்கார குழந்தை என்று வகைப்படுத்தப்பட்டு அதை இயல்பாக எடுத்துக்கொண்டு பெற்றோரும், ஆசிரியருமே அக்குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது போக இன்று நவீனக் கலாச்சாரம் என்ற போர்வையில் அதே குறும்புக்கார குழந்தைகள் கூட குறைபாடுள்ள குழந்தைகளாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவது வேதனையான செய்தியாகத்தான் பார்க்க முடிகின்றது. 
குழந்தைகள் உளவியல் மருத்துவம் சார்ந்து 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவரும், ஆய்வாளருமான மெரிலின்  ஒரு சாதாரணமான குழந்தைத்தனம் என்ற இயல்பியலை நம் சமுதாயம் முற்றிலும் மாறுபட்ட வேறு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது இன்றைய பெற்றோர் சமூகம் கூர்ந்து கவனம் கொள்ளத்தக்கது என்பதில் ஐயமில்லை. 
ஒரு திரைப்பட தயாரிப்பாளரான டேவிட்டின் தந்தை  படைப்பாற்றல் உள்ள ஒரு குழந்தை இது போன்ற சூழல்களை எளிதில் கடந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்திருந்தார். இளம் வயதில் தனக்கும் இது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும் அது தன் பெற்றோரால் பெரிதுபடுத்தப்படாமல் இயல்பாக கையாளப்பட்டதால் தான் இன்று ஒரு சாதாரண மனிதனாக வலம் வரமுடிகிறது என்பதையும் எண்ணிப்பார்த்ததோடு, தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் இதே குறைபாடுகளுடன் பள்ளி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அறிந்துகொண்டார்கள்.  மெக்கார்ட்னே போன்ற இசைக்கலைஞர் பகல் கனவு கண்டவாறு பள்ளிப்படிப்பில் கோட்டை விட்டவர், ஒரு கட்டத்தில் தீவிரமாக கிட்டார் இசையைக் கற்க ஆரம்பித்தார். வீட்டுப்பாடங்களைக்கூட கிட்டார் வாசித்துக்கொண்டே ஒழுங்காகச் செய்து முடிக்கும் வழமையும் கொண்டுவிட்டார் என்பது போன்ற பல தகவல்களை வாசித்து அறிந்தவர் தம் மகனுக்கும் மருந்து இல்லாமலே இயல்பு நிலைக்குக் கொண்டுவர வழிவகை செய்ய முடியும் என்பதையும் நம்பியதோடு அதற்கான சிறந்த திட்டமும் தீட்ட ஆரம்பித்தபோதுதான் இந்த மருத்துவர் குறித்த தகவல் அறிந்து அவரோடு சேர்ந்து தாமும் திட்டமிட, பெற்றோரின் ஒத்துழைப்புடன்  டேவிட்க்கு மருந்து இல்லாமலே மருத்துவம் பார்க்க முடிவு செய்தார். 
முதலில் அதிக அளவிலான உடற்பயிற்சியுடன் கூடியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விளையாட்டுக் குழுவில் சேர்த்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இது போன்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் குழந்தை மெல்ல மெல்ல தேறிக்கொண்டு வந்ததைக் கண்ட பெற்றோர் முழுமையாக இதே முறையை கையாளத் தொடங்கி, வெற்றியும் கண்டதாகக் கூறுகிறார் மருத்துவர்.
ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற மனநலக் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்தம்  பெற்றோர்களின் வாழ்க்கையையும் சேர்த்தே புரட்டிப்போடும் இது இன்று பெரும்பாலும் அனைத்து நாடுகளின் மருத்துவத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. மருத்துவமும், தொழில்நுட்பமும் பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளபோதும், இந்த குறைபாடு உலக அளவில் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கப்போகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதே உண்மை. இத்தகைய குறைபாடுகளுக்கு அனைத்து நாட்டு வல்லுநர்களும் இணைந்து, நம்முடைய அனைத்து பழம்பெரும் வைத்திய முறைகளையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டிய காலகட்டம் இது..  :-(
பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் டாக்டர் மெரிலைன் வெட்ஜ்.  அமெரிக்கக் குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். 13.2 % ஆண் குழந்தைகளும், 5.6 % பெண் குழந்தைகளும் அமெரிக்காவில் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ....
கவனமின்மை குறைபாடு (ADHD) ஒரு குழந்தையின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கக்கூடியதாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட  குழந்தைக்கு மட்டுமா வேதனை ... உண்மையில், அது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும், குடும்பத்திற்கும் அன்றாட வாழ்வியல் செயல்பாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ADHD இன் பாதிப்புகள் பால பருவத்திலிருந்து ஆரம்பித்து இளமைப் பருவத்திற்கும் தொடருகின்றன, கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிகரித்த செலவினங்களுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
 தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் குறைபாட்டில் கல்வியியல் சிக்கல்கள், சமூக திறன்கள் சிக்கல்கள், பலவீனமான பெற்றோர் -குழந்தை உறவுகள் போன்றவை அடங்கும். சமீபத்திய ஆய்வுகள் மூலம் 30 - 60%, பாதிக்கப்பட்டவர்கள் முதுகெலும்புக்குள் சீர்குலைவுக்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உள்ளவர்களாக இருப்பதைச் சுட்டுகின்றன. இந்த குழந்தைகள் நீண்ட கால எதிர்மறை விளைவுகளுக்கு ஆட்படும் நிலையில் உள்ளனர். அதாவது  கல்வி கற்க இயலாமையால் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படுவது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது.  ADHD இன் சிறந்த சிகிச்சை முறை என்றால் அது பள்ளி நேரங்களில் ஏற்படும் அறிகுறிகளை மட்டும் கவனம் கொள்ளாமல், குழந்தைகளோ அல்லது இளைஞர்களோ யாராக இருந்தாலும் அவர்களது குடும்பங்களின் தினசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்துவதேயாகும். ஆம், இந்த நோய்க்கான முழுமையான தீர்வுக்கான ஆய்வு என்றால் அது மொத்த குடும்பத்தின் செயல்பாடு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.
ADHD உடைய குழந்தைகளுக்கு வயது ஏறிக்கொண்டிருக்கும்போது அவர்களின் குறைபாடுகளும், அவர்களது குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், செயல்திறன் செயல்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்,  அவர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகளைப்பொருத்து இடர்பாடுகள் விளைகின்றன. குடும்பம், பள்ளி வளங்கள், வயது, அறிவாற்றல், குழந்தை அல்லது இளம் நபரின் நுண்ணறிவின் அடிப்படையில் வேறுபடும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணர்திறன் கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்ளும் திறனும் அவசியம். உகந்த மருத்துவ உதவியும், நடத்தை மேலாண்மையும்  ADHD யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் அளித்து சமுதாயத்தின் மீதான எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதோடு அவர்களது முழு திறனையும் அடைவதற்கும்  வழிவகை செய்கிறது.
 செறிவற்ற தன்மை, அதீத செயல்பாடு, மன இறுக்கம் போன்றவைகள் வழக்கமாக இக்குழந்தைகளின் பொதுவான பண்புகள் ஆகும். வளர வளர நாடகத்தன்மையுடனான செயற்பாடுகளும், அமைதியற்ற தன்மையும் வளர்ந்துவிடுகிறது.
இதுமட்டுமல்லாமல் இந்தக் குறைபாடுகளின் தொடர்புடைய மற்ற பெரும் பிரச்சனைகளும் அதிகம். இதில் பெற்றோர், உறவினர், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கன. பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவது முக்கியம். ஒரு சாதாரண பெற்றோரின் கோரிக்கைகள் மற்றும் நடத்தை தொடர்பான ஆலோசனையுடன் பதிலளிக்காதபோது ஆரம்ப கட்டத்தில் அந்த பெற்றோர் மன அழுத்தத்திற்கு ஆளாகநேரலாம். பெற்றோர் குழந்தைகளுடன் மற்றும் அவர்களது கவனிப்பாளர்களோடு குழந்தை தொடர்புடைய செயல்பாடுகளில் கவனம் கொள்வதோ அல்லது உதவி புரிவதோ மேற்கொண்டால் அவை பெற்றோரின் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளவையாக உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஆரம்பப் பள்ளி ஆண்டுகள்
இயல்பான வகுப்புத் தோழர்கள் பள்ளியில் வெற்றிகரமாக கற்றுக் கொள்ளும் திறன் மற்றும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ளத் துவங்குவதால் ADHD குறைபாடுகளுடன் உள்ள குழந்தை வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும் குழந்தைக்கு கல்வியில் பின்தங்கும் நிலை, அனுபவங்களை நிராகரிப்பது, குறைந்த சுயமதிப்பீடு,  குறிப்பிட்ட கற்றல் சிரமங்கள் போன்ற பிரச்சினைகள், குழந்தையின் மன நிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு கல்வி உளவியலாளரின் மதிப்பீடு, அந்தக் குழந்தைக்கான கற்றல் திறன் மற்றும் சிரமங்களை வெளிப்படுத்த உதவும் என்பதால் அவர்கள் வகுப்பறையில் தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கச் செய்யலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஒதுக்கி வைப்பதையும் தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகளுடன் மாற்ற முயற்சி எடுக்கவேண்டும்.
 பல குழந்தைகள் மிகவும் குறைவாகத் தூங்கும் வழக்கங்களைக் கொண்டுள்ளனர். இதனால் தூக்கம் மோசமாகப் பாதிக்கப்படும்போது இவர்களின் பகல் நேர நடத்தைகளும் கூட மோசமாகிவிடுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்கள்களுக்கு சிறிதளவேனும் ஓய்வற்ற சூழல் உருவாகிவிடுகிறது; குழந்தையின் மீது முழுநேர கவனம் செலுத்தவேண்டியதாகிறது. இதனால் பல நேரங்களில் குடும்ப உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சமூக மற்றும் நிதி சிக்கல்களையும் கொண்டு வருவதில் ஆச்சரியம் இல்லை.  இதையெல்லாம் தாங்கினாலும் குழந்தைகளின் சோகமான உணர்வையோ அல்லது கோபமான நடத்தையையோ தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறார்கள்.
ADHD பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவது எளிதன்று. இது போன்ற குழந்தைகளின் நடத்தை மதிப்பீடுகள் வழக்கமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது சுகாதார வல்லுநர்களால் செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆரோக்கியமான குழந்தை எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் என்பதை ஊகிக்க முடிவது போன்று ADHD குறைபாடு உடைய குழந்தைகளின் மன நிலையை ஊகிப்பது இயலாத காரியமாகலாம். காரணம் அவர்களின்  சுய மதிப்பீடு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளால் குடும்பத்தின் அமைதிக்கு ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடன்பிறந்தவர்களுக்கும் அந்த கவலையும் சோகமும் தொற்றிக்கொள்கின்றன. 

ADHD சகோதரர்களிடமிருந்து கடுமையான உடல்நலம் வன்முறை, வாய்மொழி ஆக்கிரமிப்பு மற்றும் கையாளுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பு செயல்களால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் உடன்படிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, ADHD உடன் தொடர்புடைய சமூக மற்றும் உணர்ச்சியற்ற தன்மை காரணமாக அவர்களின் ADHD சகோதரர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தன. மேலும், ADHD அறிகுறிகளின் விளைவாக மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பல உடன்பிறந்தவர்கள் கவலை, கவலை மற்றும் சோகமாக உணர்கின்றனர்.
எவ்வாறாயினும், சமூகம் மற்றும் குடும்ப செயல்பாட்டில் வெளிப்படையான முன்னேற்றம், குழந்தை மற்றும் அவர்தம் குடும்பத்தின் தொடர்ச்சியான வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான மேலும் பல ஆராய்ச்சிகள் தற்போதய அவசரத் தேவையாகிறது. இதற்கான முழுமையான ஆய்வுகளை அனைத்துத் தளங்களிலும் மேற்கொண்டு இந்த குறைபாடுகளினால் ஏற்படும் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண்பது சவாலான காரியமாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை. அரசு மற்றும் பொது நல சேவை அமைப்புகளும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு விரைவில் செயல்படுவது அவசியமாகிறது.