சுக்கா, மிளகா சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்? [பாகம் - 4 ]
அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு. அதன் போக்கை சரியாகக் கணிக்க முடியாது என்பதோடு, அதன் எல்லைகளை வரையறுப்பதும் கடினம். முரட்டுத் தனமும், மூர்க்கமும் கொண்டவர்கள், குறிப்பாக ஆண்கள் மட்டுமே அரசியலில் பங்கு பெற முடியும். மென் மணம் கொண்ட பெண்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது, என்பதே பொதுவான கருத்தாக இருந்த காலகட்டத்தில் அருணா ஆசிஃப் அலி இதற்கு விதி விலக்கான, மற்றும் துணிச்சலான ஒரு சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்தார்.
அருணா ஆசிஃப் அலி சிறு வயதிலிருந்தே, மிகச் சுதந்திரமான எண்ணம் கொண்ட இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தலை சிறந்த நாயகி. இவர் காந்தியடிகள் தொடங்கிய 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தினை வெற்றிகரமாக நடத்திய முன்னனித் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர். தில்லியின் முதல் மாநகரத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவரும் இவரே. 1964ம் வருடம், அமைதிக்கான லெனின் பரிசு இவரை தேடி வந்தது. இது மட்டுமல்லாமல், 1992ம் ஆண்டிற்கான ஜவஹர்லால் நேரு பரிசும், 1998ல் பாரத ரத்னா பட்டமும் இவரின் பெருமையை,தியாகத்தை உலக்குக்குப் பறைசாற்றியது.
அருணா கங்குலி, ஆசாரமான ஒரு வங்காள பிராமணக் குடும்பத்தில், 1906ம் ஆண்டு பிறந்த மூத்த குழந்தை. இவரும், இவருடைய சகோதரி பூர்ணிமாவும், லாகூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வெண்ட்டில், பள்ளிப் படிப்பை முடித்தனர். சிறு வயதிலிருந்தே இவர் ஒரு சுதந்திரப் பறவையாக இருப்பதையே அதிகம் விரும்பக் கூடியவராக இருந்தார். இவரைப் பொறுத்தவரை மதம் என்பது ஒரு மாயையாகவே இருந்தது..........
நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து 'மொண மொண' என்று
சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ!!!
என்ற சிவவாக்கியர் அருளிய பாடலைப் போன்று,
கண்ணிற்குப் புலப்படாத ஒரு விடயத்திற்கு, படையல் வைப்பதும், பிரார்த்தனை செலுத்துவதும் ஒரு வேடிக்கையான அனுபவமாகவே கருதினார்.
அருணா பள்ளியின் முதல் மாணவியாக திகழ்ந்ததால், வெகு எளிதாக பள்ளி தலைமை அன்னையின் கருத்தைக் கவர்ந்துவிட்டார். கிருத்துவ மதத்தின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் பெண் துறவியாகும் விருப்பம் கொண்டார்.
மிக வைதீகமான பிராமணக் குடும்பத்தில் பிறந்த அருணாவின் இந்த முடிவு, பெரும் அதிர்ச்சியை, குறிப்பாக அவருடைய அன்னைக்கு ஏற்படுத்தியதன் விளைவு, அவர் லாகூர் பள்ளியிலிருந்து , நைனிதாலில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபை சாராத பள்ளியில் [Prostestant convent] சேர்க்கப் பட்டார். அருணா தன் பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்து, இங்கிலாந்தில் மேற்படிப்பு படிக்க பணம் சேமிக்கும் வகையில் கல்கத்தாவில் உள்ள கோகலே நினைவுப் பள்ளியில் பணியில் அமர்ந்தார்.
அருணா ஆங்கில இலக்கியத்தில் பெரு விருப்பு கொண்டவராக இருந்தார். இயற்கையிலேயே பெரும் உவகை கொண்டிருக்கிற, கபடமற்ற, துணிச்சலான குணம் கொண்ட அருணா, நல்ல ஆலிவ் நிறத் தோற்றமும், ஆழ்ந்த, அடர்ந்த நிறம் கொண்ட கண்களும் உடைய ஒரு அழகான இளம் பெண்ணாக இருந்தார். அவருடைய மேற்கத்தியக் கல்வி, அவருக்கு நாகரீகமான, அழகான உடை உடுத்தும் பழக்கத்தையும் ஏற்படுத்தியது.
அருணாவின் சகோதரி, பூர்ணிமா பேனர்ஜி அலகாபாத் நகரில் தன் கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்தார். அருணா கோடை விடுமுறைக்கு அங்கு சென்று தங்குவது வழமை. பூர்ணிமாவின் குடும்ப நண்பர், சிறந்த சட்ட வல்லுநர் மற்றும் காங்கிரசு கட்சி உறுப்பினருமான ஆசிஃப் அலியைச் சந்தித்தார். ஆங்கில இலக்கியத்தில் இருவரும் கொண்டிருந்த ஈடுபாடு, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இணைவதற்கான பாலமாக அமைந்தது.
ஆசிஃப் அலி தன்னுடைய விருப்பத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே வெளியிட்டார். அருணாவிற்கும் ஒரு வகையில் விருப்பமிருந்தாலும், அவருடைய பெற்றோரின், ஒப்புதலை நாட வேண்டிய தேவையும் இருந்தது. ஆனாலும் இவருடைய தந்தை, கோபமுற்றதோடு இதற்கு ஒப்புக் கொள்ளவும் மறுத்து விட்டார். மத வேறுபாடு மட்டுமே காரணமாக இராமல், ஆசிஃப் அலி அருணாவைவிட 22 வயது மூத்தவராக இருந்ததும் மற்றுமொரு காரண்மானது. ஆசிஃப் அலிக்கு அப்பொழுது, 41 வயது, ஆனால் அருணாவிற்கோ 19 வயதுதான். இவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது, டிசம்பர் மாதம் 1927ம் ஆண்டில்தான். அருணாவின் தந்தை உபேந்திரநாத் கங்குலி இறந்ததோ மார்ச் மாதம் 1928ம் ஆண்டு நைனிதாலில். ஆசிஃப் அலி தன்னுடைய இரங்கலைத் தெரிவிப்பதற்காக திரும்பவும் இவரின் இல்லத்திற்கு வந்தார். பிறகு கடிதம் மூலம் இவர்களின் தொடர்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. முடிவாக இருவரும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அருணா குல்சும் ஜமானி என்று பெயரிடப்பட்டார்.
இந்தத் திருமணம் அருணாவின் குடும்பத்தில் பெரும் புயலையே கிளப்பிவிட்டது.அருணாவின் மாமனும் மற்றும் அவரின் உறவினர்களும் கடுமையாக எதிர்த்ததோடு, பிடிவாத குணமுடைய தங்களின் மகளையும் இழக்கத் துணிந்தனர். ஆனால் அருணா அதற்காக துளியும் விசனப்படவோ, அசரவோ இல்லை. அந்த அளவிற்கு ஆசிஃப் அலியின் அன்பினால் கட்டுண்டு இருந்தார். பிற்காலத்தில் அருணா அவரைப் பற்றிக் கூறும் போது, பெருந்தன்மையும், தாராள மனதும் கொண்ட தன் கணவருக்கு ஈடாக உலகில் எந்தப் பெண்ணின் கணவனும் இருக்கவே முடியாது என்று பெருமை பொங்க உறுதி படக் கூறியிருந்தார்.
ஆசிஃப் அலி தன்னுடைய காதல் மனைவிக்கு எழுதிய உருது கவிதைகள் அனைத்தும், கருத்தாழம் மிக்கதாகவே இருந்தது. ஆனால் அருணாவிற்கு மொழி தெரியாததால், அவரால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. அதனால் அவர் உருது மொழியை வெகு சரளமாக பேசக் கூடிய வகையில் முழு மூச்சாகக் கற்று முடித்தார். ஆசிஃப் அலி அப்பொழுது காங்கிரசில் முழு ஈடுபாட்டுடன் இருந்தாலும், அருணா ஒரு சில உரையாடல்களில் மட்டுமே கலந்து கொண்டிருந்தார்.
அருணாவின் முதன் முதல் முழுமையான அரசியல் பிரவேசம் என்பது, உப்பு சத்தியாகிரகத்தில், தன் கணவர் கைது செய்யப் பட்ட போதுதான். இந்த சமயத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறையில் 1 வருடம் அடைக்கப் பட்டார். திரும்பவும், 1932ம் ஆண்டு, மற்றொரு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக தில்லி மாவட்டச் சிறையில் அடைக்கப் பட்டார். அங்குதான் அவர், பெண் அரசியல் கைதிகளின் உணர்வுகளை மதிக்காத சிறை அதிகாரிகளின் போக்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் பொருட்டு, போராட்டத்திற்கு முயற்சித்தார். இதன் தொடர்ச்சியாக அருணா ஆண்கள் சிறையான அம்பாலாவிற்கு அனுப்பப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார்.
அம்பாலாவிலிருந்து விடுதலை அடைந்தவுடன், அருணா திரும்பவும் தலைநகரின் சமூக வாழ்வில் நுழைந்தார். அவருடைய இல்லம் சிறந்த விருந்தோம்பலுக்கும், அறிவார்ந்த வல்லுனர்களுக்கு வாழ்வாதாரமாகவே இருந்தது எனலாம். இதற்குப் பிறகு இவருடைய பொதுச் சேவை செயல்பாடுகள், அகில இந்திய பெண்கள் நல முன்னேற்றச் சங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்பதுடன் மட்டறுக்கப் பட்டது.
பிற்பாடு அவர் அரசியலில் திரும்ப நுழைந்த போதும், அவருடைய நிலைப்பாடு, காங்கிரசின் கொள்கைகளைவிட பொதுவுடமைக் கொள்கைகளை நோக்கியே இருந்தது. அவர் பொருளாதார ஏற்றத் தாழ்வு, சாதிபேதம், அல்லது , பாலியல் பாகுபாடு போன்ற காரணங்களுக்கான நலிவுகளைனைத்தையும் சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவர், ஜெய் பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, அச்சுத பட்டவர்தன் மற்றும் யூசுப் மெஹரலி போன்ற இளம் தலைவர்களின் அணியில் இணைந்தார்.
அருணாவின் பார்வையில் இந்தியர்களின் நாட்டுப்பற்று என்பது சமயம் சார்ந்த ஒன்றாக இருப்பதன் காரணத்தினாலேயே அதனை புனிதமான ஒரு காரியமாகக் கொண்டு தங்களுடைய நாட்டுப் பற்றுணர்வை, மதச் சின்னங்கள் மூலமே உணர்த்துகின்றனர். இந்துக்கள், 'ராம ராஜ்யம்' என்று குறிப்பிடுவதோடு, சிறைக்குச் செல்வதைக்கூட யாத்திரைக்குச் செல்வது போல உணரும் அத் தன்மையைக் குறித்து ஆச்சரியப்பட்டு பேசுவார். அவர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இஸ்லாமிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டதன் விளைவு, இஸ்லாமிய மதப்பற்றுணர்வு மேலோங்கி இருந்தது. இதன் காரணமாகவே ராம ராஜ்யம் என்பதைவிட அக்பர் ஆட்சிக் காலத்தையே இலக்காகவும், வழிகாட்டுதலாகவும் கொண்டிருக்க வேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது.
ஆகஸ்ட், 1942ல், காங்கிரசின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக ஆசிஃப் அலி பொறுப்பேற்றிருந்த போது, அவர் மும்பாயில் நடந்த 45வது, காங்கிரசு கூட்டத்திற்குத் தன் மனைவியையும் உடன் அழைத்துச் சென்றார். அந்தப் பொதுக்கூட்டப் பந்தலில் , அழகான, இளமையான, அந்த பெண்ணே அனைவரின் கருத்தைக் கவருபவராகவே இருந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்,காந்தியடிகளின் கொள்கைக்கிணங்க மக்கள் 'செய் அல்லது செத்துமடி' என்று ஆவேசமாக இருந்தனர். ஆகஸ்ட் 9ம் நாள் விடியற்காலை , பிரிட்டானிய ஆட்சியாளர்கள், முக்கியமான காங்கிரசு தலைவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதன் மூலம் மக்களை எளிதாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமென நம்பினர்.
இந்த கைது விவகாரத்தைக் கேள்விப்பட்ட அருணா தலைவர்களை ஏற்றிச் செல்வதற்காக விடப்பட்ட பிரத்யேக இரயில் காத்திருந்த புகை வண்டி நிலையத்திற்குச் சென்றார். அவருக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும், அவர் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தார். அனைத்துத் தலைவர்களையும் சுமந்து கொண்டு வண்டி புறப்படத் தயாரானது. அதனைச் செல்ல அனுமதித்தால் புரட்சிச் சுடர் அணைந்து விடக்கூடுமே என்று துடித்துப் போனார் அருணா! அதை தடுத்து நிறுத்த வழி அறியாமல் தவித்தார்.
அருணா காங்கிரசு கூட்டம் நடக்கக்கூடிய கோவாலியா டேங்க் மைதானத்திற்கு, விரைந்து சென்று, சிலரின் தயக்கத்தினூடேயும், குறிப்பிட்ட நேரத்தில் காங்கிரசு கொடியை ஏற்றினார். காவலர்கள் உடனே வந்து கூட்டத்தைக் கலைக்கும் பொருட்டு, கண்ணீர் புகையை வீசினர். அதுமட்டுமல்லாமல் லத்தியால் பலமாகத் தாக்கவும் செய்தனர். இந்த நிகழ்வு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். அந்தக் கூட்டம் ஒரு ஊர்வலமாக காங்கிரசு இல்லம் நோக்கி நகரத் தொடங்கியது. அருணா தலைமை தாங்கிச் சென்ற போது, பிரிட்டானிய காவல் துறை அதிகாரி காங்கிரசு கொடியை இறக்கும்படி ஆணையிட்டார். அவர் சுதாரிப்பதற்குள் வெள்ளை சிப்பாயி முரட்டுத்தனமாக மிதித்து, அநாகரீகமாக நடந்ததைக் கண்டு வேதனையுற்றவர், ஆங்கில ஆட்சியிலிருந்து தம் நாடு சுதந்திரம் அடையும் வரை தாம் ஓய்வதில்லை என்று உறுதி பூண்டார்.
காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாளரின் போக்கும், அதனால் மக்களின் அவதியும் அருணாவை வெறுப்படையச் செய்ததோடு, மேலும் உறுதியான முடிவுகள் எடுக்கச் செய்தது. அவர் சிறைக்கு வெளியே இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் காங்கிரசு உறுப்பினர்களை நெறிப்படுத்துவதில் சுறுசுறுப்பானார். இதற்காக மும்பாயிலிருந்து தில்லிக்கு வந்த அருணாவை காவல் துறையினர், கலவரத்தை உண்டுபண்ணிய காரணத்திற்காக கைது செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் அருணா, இயக்கத்தை உயிரோட்டமுடன் வைப்பதன் பொருட்டு, தான் வெளியே இருந்து செய்ய வேண்டிய பணிகளின் அவசியம் உணர்ந்தவராக, தன்னுடைய போக்கிடம் அறியாத நிலையிலேயே, தில்லியை விட்டு வெளியேறினார். தன்னைப் பிடிக்க முடியாத வகையில் தலைமறைவானார். அவரைப் பிடிப்பதற்கு 5000/- ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மிக சாமார்த்தியமாக முன்பின் அறியாதவர்கள் மற்றும் நண்பர்களுடன் தங்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். ஒரு முறை ஒரு ஆங்கிலப் பெண்மணியின் பணம் செலுத்தி விருந்தினராகக்கூடத் தங்கியிருந்தார். நல்ல நண்பர்கள் வீட்டிலும், மூத்த அரசு நிர்வாக அலுவலர்கள் வீட்டிலும், பிரச்சனை வரும்வரை மாறி, மாறி தங்கிக் கொண்டிருந் தார். இலட்சக்கணக்கான மக்கள் அவரைப் பாதுகாக்க துணிந்திருந்த வேளையில், கையளவேயான காவல் துறையினரால் என்ன செய்ய முடியும்?
1946ல் அவர் இருக்கும் இடம் அறியப்பட்டாலும், அவருக்கு எதிரான கைது அதிகாரம் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. பல ஆண்டுகள் வீடு வாசல் துறந்து, சரியான வசதிகள் இன்றி, அலைந்து திரிந்து கொண்டிருந்த காரணத்தினால் இவருடைய ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதே சமயத்தில் கணவர் ஆசிஃப் அலியும், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானார். மேலும் அருணாவின் தாயார், பூர்ணிமா பேனர்ஜியின் இல்லத்தில், மரணப் படுக்கையில் இருந்தார்.
தலைமறைவு வாழ்க்கை பூர்த்தியானவுடன், முதன் முதலில், பட்டுக்கம்பள வரவேற்பளித்தது, கல்கத்தா நகரம்தான். அவர் இலட்சக்கணக்கான மக்களை ஒருசேர சந்திக்கும் வண்ணம் தேசபந்து பூங்காவில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. தில்லி மாநகரத்திற்கு அவர் திரும்பிய போது, குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் முன்பை விட மிக அதிகமான மகிழ்ச்சியுடன் உறவாட முடிந்தது, அவரால்.
அருணா வெளிப்படையாக, காந்தியடிகள், நேரு மற்றும் மௌலானா ஆசாத் போன்ற பெருந் தலைவர்களின் கருத்துக்களில் வேறுபாடு கொண்டிருந்தாலும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பும், மதிப்பும் அவர்களுக்குள் பெரும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை.
அருணா வெளிப்படையாக, காந்தியடிகள், நேரு மற்றும் மௌலானா ஆசாத் போன்ற பெருந் தலைவர்களின் கருத்துக்களில் வேறுபாடு கொண்டிருந்தாலும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த அன்பும், மதிப்பும் அவர்களுக்குள் பெரும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை.
அருணா, இடைக்கால அரசாங்கம் என்பதை கொள்கையளவில் விரும்பவில்லை. முன்மொழியப்பட்ட தேசிய இடைக்கால அரசாங்கம் என்பது, தேசியமானதாகவும் இல்லாமல், அரசாங்கமாகவும் இல்லாமல், இடைக்காலமாக இருப்பதற்கான ஆதாரமும் இருப்பதில்லை, என்பது அவருடைய கணிப்பாக இருந்தது. செப்டம்பர் மாதம் 1946ல், ஆசிஃப் அலி தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டது, அருணாவிற்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு ஆசிஃப் அலி, வாஷிங்டனுக்கு, இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். ஆனால் அருணா அவருடன் செல்லத் தயாராக இல்லை. இந்தியா ஒரு ஆரோக்கியமற்றத் தாயாக இருந்த நிலையில், அவளைக் குணப்படுத்த வேண்டிய கடமை தனக்கிருப்பதாக அவர் நம்பினார். தனக்கு விடுமுறை தேவைப்படும் வேளையில் அமெரிக்காவிற்குச் சென்று வரலாம் என்றிருந்தவர், காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த வேதனையானத் தருணத்தில் அமெரிக்காவில் இருந்தார்.
அருணாவின் பார்வையில் இரு களர் நிலங்கள் என்றால் அது, பெண்கள் மற்றும் மாணவர்கள் குறித்ததாகவே இருந்தது. இவர்கள்தான் ஒரு நாட்டின் எதிர்காலம் என்பதில் உறுதியாக இருந்தார். இளைஞர்களைப் பற்றிக் கூறும் போதெல்லாம், அவர்களிடமிருந்தே தனக்கு, அகத்தூண்டுதலும், ஊக்கச் சக்தியும் கிடைப்பதாகவே குறிப்பிடுவார்.
ஆசிஃப் அலி இறந்த 1953ம் வருடத்தில் அருணா சமூகத்தில் நலிவுற்ற பிரிவினர், குறிப்பாக பெண்களுக்காகப் பணிபுரியும், பல தரப்பினரின், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தலைவியாகவே இருந்தார். பெண்களின் துயர் தீர்க்கும் வண்ணம் பல்வேறு துறைகளிலும் தன் தடம் பதித்து, உயரிய பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். அவர் தேசிய ஒருங்கிணைந்த இந்தியப் பெண்களின் நிறுவனத்தின் தலைவியாகவும், பாதுகாவலராகவும் இருந்தார். மேலும், அகில இந்திய பெண்கள் மகாநாட்டின் இணையான'தில்லி பெண்கள் லீக்'கின், செயலாளராகவும் இருந்தார்.
அருணா, பெண்கள் கூட்டங்களில் உரையாற்றுகிற சமயங்களிலெல்லாம், பெண்கள் தயக்கமின்றி, ஆண்களுடன் சேர்ந்து, நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உழைக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைப்பார். உதாரணமாக, ஆயிரக் கணக்கானப் பெண்கள் இரசியப் புரட்சியின்போது , முன்னிலையில் நின்று போராடிய சம்பவம், சீனாவில் பெண்கள் கொரில்லாக்களுடன் சேர்ந்து களமிறங்கிய சம்பவம் போன்றவற்றை விளக்குவார்.
அவர்,"ஏன் இந்தியாவில் மட்டும் என் சகோதரிகள் தன் கணவன்மார்களின், காலுறைகளைச் செப்பனிடும் பணியையே சிரமேற்கொள்வதோடு, கணவர் இல்லாத வேளைகளில், தேவையில்லாத புறளி பேசுவதிலும் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள்", என்று வேதனைப்படுவார்.
அவர்,"ஏன் இந்தியாவில் மட்டும் என் சகோதரிகள் தன் கணவன்மார்களின், காலுறைகளைச் செப்பனிடும் பணியையே சிரமேற்கொள்வதோடு, கணவர் இல்லாத வேளைகளில், தேவையில்லாத புறளி பேசுவதிலும் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள்", என்று வேதனைப்படுவார்.
அருணா, அறிவொளியைப் பரப்பக் கூடிய ஒரு பிரத்யேகப் பதிப்பகத்தை நிறுவும் பேராவல் கொண்டிருந்தார். அதன் விளைவாக 'லிங்க' [Link] என்கிற வாராந்தரியும் மற்றும் பிற்காலத்தில் 'பேட்ரியாட்' [Patriot] என்கிற தினசரி செய்தித்தாளையும் ஆரம்பித்தார். எம்.சலபதி ராவ், கே.எம்.பணிக்கர், வி.கே.கிருஷ்ண மேனன், போத்தன், ஜோசப், எஸ்.வைத்தியநாதன் மற்றும் பலரும் அவருக்கு ஆதரவாக இருந்தனர். மும்பாயிலிருந்த, அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எ.வி.பாலிகா என்பவர் லிங்க் பதிப்பகத்தை நிறுவ பொருளாதார உதவிகள் செய்தார். லிங்க் பதிப்பகத்தை உருவாக்குவதிலும் ஆதரவளிப்பதிலும், பெரும்பாலும் அருணாவின் முழு நேர வேலையாக ஆனது.
1989 மற்றும் 90களில் அருணாவின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட ஆரம்பித்தது. அவருடைய மனநிலையில் உறுதியும், தெளிவும் இருந்த போதிலும் அவருடைய உடல் நிலை ஒத்துழைக்காதக் காரணத்தினால் அவர் பொதுக் காரியங்களில் பங்கெடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. சிறிது, சிறிதாக எல்லாவற்றிலுமிருந்து, விலகி தனிமைப்பட்டு இறுதியாக ஜீலை மாதம் 1996ல் இயற்கை எய்தினார்.
அருணா ஆசிஃப் அலி பொறுமைக்கு இலக்கணமாகவும், 'சுயம்' என்பதன் முழு விளக்கமாகவுமே வாழ்ந்தார் என்றால் அது மிகையாகாது.
அவர் தன்னுடைய நேர்மை மற்றும் இரக்க குணம் காரணமாக தன்னை நெருங்கிய அனைவராலும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்தப் பட்டார். தேசிய அளவிலும், உலக அளவிலும், கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னலமற்ற சேவை, தேசியவாதம், நாட்டுப்பற்று, இவையனைத்திற்கும் ஒரு முன்னுதாரணமாகவே வாழ்ந்து, இந்திய வரலாற்றில் ஒரு நிலையான இடம் பெற்றிருப்பவர் அருணா ஆசிஃப் அலி அவர்கள்!!
அவர் தன்னுடைய நேர்மை மற்றும் இரக்க குணம் காரணமாக தன்னை நெருங்கிய அனைவராலும் அன்பாகவும், மரியாதையாகவும் நடத்தப் பட்டார். தேசிய அளவிலும், உலக அளவிலும், கௌரவிக்கப்பட்டுள்ளார். தன்னலமற்ற சேவை, தேசியவாதம், நாட்டுப்பற்று, இவையனைத்திற்கும் ஒரு முன்னுதாரணமாகவே வாழ்ந்து, இந்திய வரலாற்றில் ஒரு நிலையான இடம் பெற்றிருப்பவர் அருணா ஆசிஃப் அலி அவர்கள்!!