Friday, December 20, 2013

பாட்டி சொன்ன கதைகள் 22


பவள சங்கரி


ஹாய் குட்டீஸ் நலமா?


கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணையை!


ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் என்பவர், நம் இந்தியாவின்,  தமிழ்நாட்டில் இருக்கும் மிகப்பழமையான,  திருச்சிக்கு அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள கல்லணை என்ற இந்த அணையை பலகாலம் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் நம் தமிழின மன்னனின் பெரும் சாதனையைப் போற்றி, பெரிதும் வியந்து அதனை,  ' பிரம்மாண்டமான அணைக்கட்டு '  என்று புகழ்ந்துள்ளார். இதன் பிறகு நம் கல்லணையின் புகழ் பாரெங்கும் பரவியது! இதைக் கட்டியது யார் என்று தெரியுமா?

Tuesday, December 17, 2013

கர்ம வீரர் காமராசர்


பவள சங்கரி

குட்டி ஜப்பான்என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்..  பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர் காற்றாய் வீச, உல்லாச உந்தின் கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள் தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்? மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன்அதுவரை வாய் மூடி மௌனமாக சாரதியாக வந்தவர், ஒரு மெல்லிய சிலிர்ப்புடன்,  ‘அட, விருதுநகர், நம்ம காமராசர் ஐயாவோட ஊரு.. புண்ணிய பூமிஎன்று சொல்லிவிட்டு அப்படியே நினைவில் ஆழ்ந்துவிட்டார். மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..  அதாங்க எங்க ஊட்டூக்காரவிக, திருநாவுக்கரசு அவிங்கதான்....

Monday, December 16, 2013

பாட்டி சொன்ன கதைகள் - 30
பவள சங்கரி

அங்கவை, சங்கவை

ஹாய் குட்டீஸ் நலமா?

முன் காலத்தில் நம் நாட்டை ஆண்ட அரசர்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனிப்பட்ட குணாதிசயம் உடையவர்களாக இருப்பார்கள் என்பதை நம் வரலாறுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது.  வீரம், தீரம், பராக்கிரமம், ஈகை, காதல், தன்னம்பிக்கை, நீதி தவறாமை, பரோபகாரம், வள்ளல்தன்மை இப்படி பலவிதமான தனித்திறன் கொண்டிருப்பவர்கள்தான் பெரும்பாலானவர்கள்.  தனக்கு மிஞ்சிதான் தான தர்மம் என்று நினைப்பதே மனித மனம். ஆனால் சில அரசர்கள் தங்களுடைய அத்தியாவசிய உடமைகளைக்கூட சற்றும் தயங்காமல், நிறைந்த மனதுடன் வாரி வழங்கும் அளவிற்கு தயாள குணம் உடையவர்களாக இருந்திருந்திருக்கிறார்கள்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பேகன் என்பவன், பழனிமலைப் பகுதியில் வாழும் ஆவியர் குடி என்ற இனத்தவரின் தலைவனாக இருந்தவன். கடை ஏழு வள்ளல்கள் என்று சொல்லக்கூடியவர்களில் பேகனும் ஒருவன். ஒரு முறை மழை காலத்தில் வழியில் சென்று கொண்டிருந்தவர், அழகிய ஆண் மயில் ஒன்று சாரல் நிறைந்த அந்த மலைப் பாதையில் கருமேகங்களைக் கண்டு மகிழ்ச்சியில் மனம் துள்ளி தோகை விரித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டார், உடனே அவர் அந்த மயில் குளிர் தாங்காமல்  நடுங்குவதாக நினைத்துக்கொண்டு, தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அந்த மயிலுக்குப் போர்த்திவிட்டுச் சென்றாராம். அவருக்கு இப்பொழுதும் சிலையெல்லாம் வைத்திருக்கிறார்கள்.


அதேபோல கடையேழு வள்ளல்களில் முதன்மையானவரான, பாரி என்பவர்.  பேகனாவது நான்கறிவுள்ள ஒரு பறவைக்குத் தன் போர்வையைக் கொடுத்தான். இந்த பாரி பாருங்கள் ஓரறிவு உயிரான ஒரு முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொடுத்தவன்.  இது நடந்தது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்.  இன்று சிவகங்கை மாவட்டத்தின் பிரான்மலை என்று அழைக்கப்படும், மிகச் செழிப்பான  நகரம். முன் காலத்தில் அது பறம்புமலை  என்று பெயர் பெற்ற முன்னூறு கிராமங்களைக் கொண்ட வேளிர்குல வழிவந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்த நாடாக இருந்தது. இவர்கள் பேரரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தனர்.  பாரி மன்னன் தம் குடிமக்களிடம் மிகவும் அன்பு கொண்டவனாக இருந்தான். பறம்பு மக்கள் உழைப்பிற்கு சற்றும் அஞ்சாதவர்கள். வீரமும் நிறைந்தவர்கள். பாரி மிகவும் தேகபலம் கொண்ட சிறந்த வீரனாக இருந்தான். தன்னைப்போலவே, தம் மக்களும்  பலசாலிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக தம் நாட்டின் ஊர்கள்தோறும் பல சிலம்புக் கூடங்களை நிறுவி, வாலிபர்களை எல்லாம் சிறந்த சிலம்பு வித்தைகளைப் பயிலச் செய்தான். பாரி, சிறந்த கொடை வள்ளலாகவும் இருந்தான். தம்மை நாடி வந்த புலவர்களுக்கும், கூத்தாடிகளுக்கும், ஏழைகளுக்கும், கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இதனால் பாரியின் புகழ் அண்டை நாடுகளிலெல்லாம் பெரிதும் பரவியது. பாரியின் வள்ளல் தன்மையைப் பற்றி அறிந்த கபிலர், அவரிடம் பாடிப் பரிசில் பெறலாம் என்று வந்தார். பாரிக்கு, கபிலரை மிகவும் பிடித்துப்போக, இருவரும் சிறந்த  நண்பர்களாகி  இருந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர். கபிலரின் சிறந்த புலமையைக் கண்டு வியந்த பாரி, கபிலரை  தன்னுடனேயே  தங்கவைத்துக் கொண்டார் .  தம் நாட்டு மக்களையும், தம் நாட்டு வளங்களையும், மக்களின் நிறை, குறைகளையும் கண்டறியவும், பாரி, அடிக்கடி நகர்வலம் செல்வது வழக்கம். அப்படி ஒரு முறை நகர்வலம் போனபோதுதான் வழியில் ஒரு முல்லைப் பூங்கொடி, கொழுக்கொம்பு இல்லாமல் வாடி, வதங்கி இருப்பதைக் கண்டு மனம் வருந்தியவர் சற்றும் சிந்திக்காமல் மளமளவென தன் தேரைவிட்டு இறங்கி, அதில் பூட்டியிருந்த இரண்டு குதிரைகளையும் அவிழ்த்து அப்பால் நகரச் செய்து, அந்த முல்லைக் கொடியைத் தம் தேரின் மீது தாராளமாகப் படரும்படி எடுத்துவிட்டான். பின் அந்தக் குதிரை மீது ஏறி தம் அரண்மனை வந்து சேர்ந்தான். 

பாரியின் புகழ் இப்படியெல்லாம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருந்ததை, மூவேந்தர்கள் விரும்பவில்லை. பாரியின் மீது பொறாமை கொண்டார்கள்.  அதன் காரணமாக அவன் மீது போர் தொடுத்து அவனை அடக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பலவாறாக முயன்றும், அவனுடைய கோட்டைக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. மிக அருமையாக அரண்கள் அமைத்து வைத்திருந்தான் பாரி. வீரதீரம் மிக்க அவனுடைய குடி மக்கள் அனைவரும் பாரிக்குக் கைகொடுத்து முழு மூச்சுடன் தங்கள் நாட்டைக் காக்கப் பாடுபட்டனர். பல நாட்கள் கடந்தும், மூவேந்தர்களால் பறம்புமலையினுள் நுழைய முடியாத அளவிற்கு அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தனர். எவ்வளவோ முயன்றும் பாரியின் கோட்டையைப் பிடிக்க முடியாத அந்த அரசர்கள், அவனை உறவாடிக் கெடுக்க முடிவு செய்தனர். பாரிக்கு அழகான இரண்டு மகள்கள் இருந்தனர்.  அங்கவை, சங்கவை என்ற அவர்கள் அழகு, அறிவு, அன்பு, பண்பு என அனைத்திலும் சிறந்து விளங்கினர். இதை அறிந்த மூவேந்தர்கள், தனித்தனியாக ஒவ்வொருவராக தங்களுக்குப் பெண் கொடுக்கும்படி தூது அனுப்பினார்கள்.  பாரி பெண் கொடுக்க மறுத்துவிட்டான். காரணம் ஒருவரை விட்டு மற்ற இருவருக்கும் பெண் கொடுத்தால் அது மற்றவருக்கு வேதனை அளிக்கும் என்பதாலேயே அதை மறுத்தார் பாரி. ஆனால் அவர்களுக்கு இந்த காரணம்  புரியவில்லை. 

ஒரு பௌர்ணமி நாள் வந்தது. பாரியை ஒரேயடியாக வீழ்த்துவதற்கு மற்றொரு திட்டத்துடன், மூவேந்தரும், புதிய புலவர்கள் போல வேடமணிந்து , கையில் யாழினை ஏந்திக்கொண்டு பாரியை வந்து சந்தித்தனர். பாரி அவர்களை அன்பாக வரவேற்று மரியாதையுடன் ஆசனங்களில் அமரச் செய்தான். அவர்கள் மூவரும் பாரியை வானளாவப் புகழ்ந்து பாடி அவனை பெரிதும் மகிழச் செய்தனர்.  அந்த நேரம் பார்த்து பாரி கொடுத்த எந்த பரிசிலையும் வாங்காமல் அவன் உயிரையே பரிசாகக் கேட்டான். ஐயோ அந்த மாபாவிகளால் இறுதியில் பாரி தன் இன்னுயிரை இழக்க நேரிட்டது. அந்த மூவேந்தர்களின் வஞ்சகம் பாரியின் உயிரையே பலிவாங்கிவிட்டது. 

பாரியின் மகளிர் இருவரும் அனாதையான வேதனையில் அலறித் துடித்தனர். செய்தி கேட்ட கபிலர் ஓடோடி வந்தார். அவரும் வேதனையில் துடி துடித்துப்போனார். பாரி மகளிரை நல்ல மணமகன்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காகப் பெரிதும் முயன்று, பலரையும் சந்தித்துக் கொண்டிருந்தார் கபிலர். தம் தந்தை இழந்த சோகத்தை அழகான கவிதை பாடி வெளிப்படுத்தினர் இருவரும். அதைக்கேட்டு ஊரே அழுதது. அங்கவை, சங்கவை இருவருக்கும் பாதுகாப்பான ஒரு நல்ல இடமான ஒரு அந்தணருடன் தங்க வைத்திருந்தார் கபிலர். இதையறிந்த ஔவைப்பிராட்டியார், அவர்களைத்  தேடிக்கண்டுபிடித்து, பார்க்கச் சென்றபோது ஔவைப் பிராட்டியாரைக் கண்டவுடன் மேலும் மனமுடைந்து அழுது புலம்பினர் இருவரும். மிகவும் ஏழ்மை நிலையில் அந்த அந்தணர் வீட்டில் இருந்தபோதும் அவர்கள் இருவரும் தங்களுக்கென்று  வைத்திருந்த ‘மொர, மொர’ வென புளித்த மோரையும் களைப்பாக வந்து சேர்ந்த ஔவைப் பிராட்டியாருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். இது ஒன்றே அவர்கள் பாரி வள்ளலின் வாரிசுகள் என்பதற்கு ஆதாரமாக இருந்தது. சில நாட்கள் அவர்களுடன் தங்கி ஆறுதல் அளித்ததோடு, அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சொல்லிச் சென்றார். 

மலையமான் என்னும் நாட்டை ஆண்டுகொண்டிருந்த  குறுநில மன்னனான தெய்வீகன் என்பவன் நல்ல பண்பாளன் என்பதை அறிந்து கொண்ட ஔவையார் அவனிடம் சென்று பாரி மகளிரை மணக்கும்படி வேண்டினார். அவனும் இருவரையும் மணந்துகொள்ள சம்மதித்தான். மிகவும் மகிழ்ந்துபோன ஔவைப் பிராட்டியார் , சேர, சோழ, பாண்டியர் உட்பட அனைத்து அரசர்களுக்கும் திருமண ஓலை அனுப்பி, அவர்கள் முன்னிலையில் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடித்தார்.  அங்கவையும், சங்கவையும் நல்ல இடத்தில் சேர்ந்துவிட்ட திருப்தியில் ஔவைப் பிராட்டியார் கிளம்பிச் சென்றார்.  செய்த தர்மம் தலை காத்தது. 

பாரியும், பேகனும் போன்ற அரசர்கள் மட்டுமே வள்ளலாக இருக்க முடியும் என்பதில்லை. நம்முடனும் அதுபோல வள்ளல்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், வெளியில் தெரியாமலே!   நம்ம கதைக்கு போவோமா...

குகன், காக்காபாளையம் என்னும் கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிப்பவன். அவனுடைய அப்பா, அந்த ஊரிலேயே தையல் வேலை பார்ப்பவர். அம்மா வீட்டு வேலையை முடித்துவிட்டு அப்பாவிற்கு உதவியாக சட்டைக்கு பட்டன் கட்டுவது, ஓரம் மடித்துத் தையல் போடுவது, போன்ற வேலைகளைச் செய்வார். குகன் எப்படியும் படித்து பெரிய அரசாங்க வேலைக்கு வரவேண்டும், ஊரிலேயே பெரிய அதிகாரியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் இருவருக்கும் ஆசை. அதனால் குகனை எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று இரவு, பகலாக உழைப்பவர்கள்.  முடிந்தவரை தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்து வசதிகளும் அவனுக்கு செய்துகொடுக்கத் தயங்காதவர்கள். குகன் மட்டுமே அவர்களின் உலகம் என்பது போலத்தான் வாழ்கிறார்கள் அவர்கள். 

”சாமி, குகா, நல்லா படிச்சு பெரிய அதிகாரியா வரோணுமப்பா நீ. நம்ம ஊருக்கு நிறைய நல்லதெல்லாம் பண்ணனும் நீ. நாங்க அதைப்பார்த்து பெருமைப்படோணும். இந்த ஊரே இதுதான் குகன் ஐயாவோட பெத்தவிங்கன்னு எங்களைப் பாராட்ட வேணுமப்பா....”

அந்தத் தாயின் உள்ளம் நெகிழ்ந்த கண்ணீரை அவனும் புரிந்து கொண்டு நல்ல பையனாக ஒழுக்கத்துடன், புத்திசாலியாகவும், தான் உண்டு, தன் படிப்பு உண்டு என இருப்பவன்.  

ஆறாம் வகுப்பில் நுழைந்ததிலிருந்து அவனுக்கு படிப்பு அதிகமாகியிருந்தது. எப்பொழுதும் முதல் மார்க் வாங்குவதோடு, ஒழுக்கமாகவும், மற்ற மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டும் இருப்பதால் ஆசிரியர்களுக்கெல்லாம் அவன் மீது தனி பாசம் இருக்கும். ஆனால் கொஞ்ச நாட்களாக அவன் பள்ளிக்குச் சில நாட்களில் தாமதமாக வருவது, சில நாட்கள் மதியம் வருவது என்று சில மாற்றங்கள் தெரிந்தது. படிப்பில் எந்த குறையும் இல்லாதலால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவர்கள். காரணம் கேட்கும் போதெல்லாம் , வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை என்பது போலவே சொல்லுவான். அதே போல அவனுடைய அப்பா, அம்மாவிற்கும் அவனிடம் ஏதோ மாற்றம் தெரியாமல் இல்லை. கொஞ்ச நாட்களாக, அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி காசு கேட்பது, வீட்டிற்குத் தாமதமாக வருவது, கேட்டால் பள்ளியில் தனி வகுப்பு வைத்தார்கள் என்று சொல்வது என்று இருந்தான். மகன் ஏதாவது கெட்ட வழிகளில் செல்கிறானோ என்ற சந்தேகம் கூட வர ஆரம்பித்திருந்தது அவர்களுக்கு. 

”ஏம்ப்பா, குகா, என்னப்பா செய்யுற நீ. நமக்கு படிப்பு எவ்வளவு முக்கியமோ அதைவிட ஒரு பங்கு அதிகமா ஒழுக்கம் இருக்கணும்ப்பா. ஒழுக்கம் கெட்டால், நம்மகிட்ட இருக்கிற சரசுவதியும் நம்மை விட்டு போயிடுவா. அப்பறம் படிப்பு எங்கிருந்து வரும்?  நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை. உனக்கு ஒவ்வொன்னா விளக்கமா சொல்றதுக்கு. அடுத்தவிங்க நம்ம முகத்தைப் பார்த்து விரலை நீட்டிப் பேசக்கூடாதுப்பா, நல்ல மகராசன்னு வாழ்த்தற மாதிரி நடந்துக்கணும் என் ராசா” என்று தந்தை உளம் நெகிழ்ந்து சொன்னபோது குகனுக்கும் கண்ணீர் பொங்கியது.

“அப்பா, அப்டீல்லாம் இல்லப்பா. நான் உங்க புள்ளப்பா. தப்பு தண்டாவுக்கெல்லாம் போவமாட்டேன். நீங்க கவலப்படாதீங்கப்பா” என்றான்.

இப்படி சொன்னாலும் அடுத்தடுத்த நாட்களிலும் அவன் போக்கில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. பள்ளியில் சென்று விசாரிக்கலாம் என்று நினைத்து சென்றபோது அவனுடைய ஆசிரியரும்,

 “ஏன் இப்போதெல்லாம் குகன் அதிகமாக விடுமுறை எடுக்கிறான். பல நேரங்களில்  பள்ளிக்கு தாமதமாகவும் வருகிறான். எப்பொழுது கேட்டாலும், உங்களுக்கு உடல் நலமில்லை, ஊருக்குப் போனோம் என்று ஏதேதோ காரணம் சொல்லிக் கொண்டிருக்கிறான். நன்றாகப் படிக்கிற பையன் என்பதால் அவனை அதிகம் மிரட்டாமல் இருக்கிறோம். அவனை ஒழுங்காக கவனித்துக்கொள்ளுங்கள்” 

என்று சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. அன்று மாலை குகன் வழக்கமாக வரும் நேரம் இல்லாமல் தாமதமாக வீட்டிற்கு வந்தவுடன் அவன் அம்மாவிற்கு சரியான கோபம். வழக்கம் போல ஸ்பெஷல் கிளாஸ் என்று வேறு சொன்னபோது வந்ததே கோபம் அம்மாவிற்கு. அவனை பட்டையாக வெளுத்துவிட்டார்கள்.  ’எங்கு போய் ஊரை சுத்திட்டு வரே ‘ என்று கேட்டு அடித்த அடி பாவம் அவன் உடலெல்லாம் அங்கங்கு வீங்கிவிட்டது.  

”பாவி, ஏண்டா இப்புடி பண்றே. எவ்ளோ சொன்னாலும் உனக்குப்புத்தியே வராதா? அப்புடி எங்கதாண்டா போய் தருதலையாட்டம் சுத்திட்டு வர நீ.. சொல்லித் தொலையேன். எவ்வளவு கேட்டாலும் கல்லுளிமங்கனாட்டம் நிக்கறயே. ஏண்டா இப்படி என்னை சாவடிக்கற?” என்று கத்தி கலாட்டா செய்தாள். 

அப்பொழுதும்கூட அவன் எதுவுமே சொல்லாமல் மௌனமாக இருந்தது மேலும் அம்மாவுடைய கோபத்தை அதிகமாக்கியது. அன்று இரவு அழுதுகொண்டே சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அவன் அம்மாவும், அப்பாவும், தங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒரே நம்பிக்கையான இந்த குகன் கூட நம்மைக் கைவிட்டுவிடுவான் போல இருக்கிறதே என்று புலம்பிக் கொண்டு இருவரும் தூங்கவே இல்லை. இரண்டு மூன்று நாட்கள் வீட்டில் இப்படியே ஒரே அமைதியாக ஒருவரும் ஒழுங்காக சாப்பிடாமல் கூட பொழுது போனது. ஆனால் குகன் மட்டும் எந்த கவலையும் இல்லாமல் சற்று அதிகமாகவே சாப்பாடை எடுத்துக்கொண்டு நேரமாக கிளம்பினான். வரவர காலை சாப்பாட்டையும் கையில் எடுத்துக்கொண்டு போகிறான். என்ன செய்வது என்றே தெரியவில்லை. பண்டிகை சமயம் என்பதால் துணியும் அதிகம் வந்திருக்கிறது. இந்த நேரத்தில் வேலையை விட்டுவிட்டு அவன் பின்னால் சென்று பார்க்கவும் முடியவில்லை. பொறுத்திருப்போம் என்று இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அன்று காலை குகன் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுவிட்டான். அவன் அம்மாவும், வீட்டு வேலையெல்லாம் முடித்து கடைக்குச் சென்று குகனின் அப்பாவிற்கு உதவியாக தைக்க ஆரம்பித்தபொழுதுதான், பள்ளியில் இருந்து பியூன் வந்து, அவர்கள் இருவரையும் உடனே தலைமை ஆசிரியர் அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னார். கடவுளே, குகன் என்ன வேலை செய்து வைத்திருக்கிறானோ தெரியவில்லையே, என்ற அச்சத்துடனேயே இரண்டு பேரும் கடையைப் பூட்டிவிட்டு, பள்ளிக்கு ஓடினார்கள். அன்று பள்ளியின் வாசலில் என்றும் இல்லாத திருநாளாக, மூன்று கார்கள், சில இரு சக்கர வாகனங்கள் என்று இருந்தன. தயங்கி வெளியே நின்றவர்களை ஒரு ஆசிரியை வந்து கையைப் பிடித்து உள்ளே கூட்டிச் சென்றார்கள். அங்கு அதிகாரிகளைப் போல ஒரு சிலர் உட்கார்ந்திருந்தார்கள். குகன் ஒரு ஓரமாக நின்றிருந்தான். ஒரு நாற்காலியில் ஒரு பெரியவர் மிகவும் சோர்ந்த நிலையில் உட்கார்ந்திருந்தார்.  அட, அவர் போர்த்தியிருந்தது, கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தங்கள் வீட்டில் காணாமல் போன அதே போர்வை. ஒன்றும் புரியாமல் இருவரும், திரு திரு வென விழித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து தலைமை ஆசிரியர், 

“பதட்டப்படாமல் இருங்கள், எல்லாம் நல்ல விசயம் தான். உங்கள் பையன் நம்ம பேரையெல்லாம் காப்பாத்தியிருக்கான். நல்லா வளர்த்திருக்கீங்க உங்க புள்ளைய. ஊருக்கு நாலு புள்ளைக இப்படி இருந்தா போதும், நம்ம நாடும் நல்லாயிருக்கும்”  என்றவுடன் தான் அவர்களுக்கு உயிரே வந்தது.  மேலும் அவர் சொன்ன விசயம் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. 

குகன் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு குப்பைத் தொட்டியின் அருகில் நடைமேடையின் மூலையில் ஒரு பெரியவர் சுருண்டு படுத்துக்கிடந்திருக்கிறார். மூன்று நாட்களாக அவர் அப்படிக்கிடப்பதை ஒருவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. அவருக்கு 65 வயது இருக்கலாம். சற்று மன நலம் குன்றியவராக இருந்திருக்கிறார். குகன் அவர் அருகில் சென்று மெல்ல அவரை விசாரித்திருக்கிறான். அவர் தன்னை மறந்த நிலையில் ஏதேதோ உளறியிருக்கிறார். காய்ச்சல் அதிகமாக வேறு இருந்ததால் அவரை மெதுவாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு, ஒரு ஆட்டோகாரரின் உதவியுடன் கூட்டிச் சென்றிருக்கிறான். அன்றிலிருந்து அவன் தான் அவருக்கு உறவாகவும், நண்பனாகவும், மகனாகவும் எல்லாமுமாக இருந்து கவனித்துக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவருக்கு உடல் நலம் சற்று தேறியதோடு மன நலமும் சரியாகியிருக்கிறது. அவருக்கு கொஞ்சம் நினைவு திரும்பியதால் மருத்துவமனையில் அவரைப் பற்றிய விவரம் கேட்டு அறிந்ததில், அவர் சேலம் மாவட்டக் கலெக்டரின் நெருங்கிய உறவினர் என்றும், மனநலம் குன்றியதால் வழி தவறி இங்கு வந்து சேர்ந்திருக்கிறார், திரும்பிப் போக வழியும் தெரியாததால் பசியில் மயங்கிக் கிடந்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் குகன் அவரை மருத்துவமனையில் சேர்த்து அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதனால் அவர் இன்று உடல் நலம் தேறியதோடு, தன்னுடைய பழைய நினைவுகளும் சற்று வந்தவுடன், முகவரியெல்லாம் சொல்லியிருக்கிறார். கலெக்டரின் உறவு என்பதால் உடனே அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் இன்று கிளம்பி நேரிலேயே வந்திருக்கிறார். குகனுக்கு அவர்கள் வழங்கிய பாராட்டு மழை பெற்றவர்களின் உள்ளம் குளிரச் செய்தது. பூரித்துப் போனார்கள் இருவரும்.

கலெக்டர் கண்கள் கலங்கியவாறு, குகனின் தந்தையை தோளில் கைபோட்டு அணைத்தவாறு, ”இந்தப் பெரியவரைக் காணாமல் அந்தக் குடும்பமே தவித்துப் போயிருக்கிறது. சத்தமில்லாமல் எவ்வளவு பெரிய சேவை செய்திருக்கிறான் உங்கள் மகன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதுபோல இந்த வயசுலயே எத்தனை சேவை உள்ளம் அவனுக்குப் பாருங்கள். அவனை எதிர்காலத்தில் ஒரு நல்ல பணியில் அமர்த்தி, அவனுடைய இந்த சேவையுள்ளத்தால் இந்த நாடே போற்றும்படி அவனை உருவாக்குவோம். தைரியமாக இருங்கள். நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்” 

என்று சொன்னபோது பெற்ற அந்த மனது எவ்வளவு மகிழ்ந்திருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ? அவர் மட்டுமல்லாமல் அவனுடைய தலைமை ஆசிரியர், மற்ற வகுப்பு ஆசிரியர்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். நல்ல குணமும், தர்ம சிந்தையும் நம்முள் இருந்தால் அது என்றுமே நம்மைக் காப்பதோடு, மன நிறைவையும், அமைதியான வாழ்க்கையையும் அருளும் என்பதே சத்தியம். இல்லையா குழந்தைகளே!!  

வாழ்க வளமுடன்!!

Sunday, December 15, 2013

சொந்தச் சிறை


பவள சங்கரி

இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க!
“இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே.. எத்தன பாடுபடுத்திச்சு என்னய.. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி.. கை குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும் போது தான தெரியும் இந்த ராசுவோட அருமை. நல்லா இருக்கும்போது என்னைய கண்டுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்துறதுக்கு மூச்சு முட்ட உசிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறியே.. உனக்கு எம்மேல பாசம் இல்லாமயா இப்புடி ஒரு காரியத்தை பன்னற.. நீ நெம்ப நல்லவிகதான் மாமா.. ஆனா.. “
உடலெல்லாம் உணர்வற்று மரத்துப்போன நிலையில் மனம் மட்டும் அரை மயக்கத்தில் விழித்த நிலையில் எதை எதையோ பிதற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ராசுமணிக்கு. கழிப்பறை, மின்சார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கேத் திண்டாடும் இந்த குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று போராடி சாதித்து, அதற்காகத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன் வீரய்யன். ஆசை, ஆசையாக மாமன் மகளை மணந்துகொண்டு அவளையும் சீமாட்டியாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறான். எல்லாம் என்ன சினிமா கதையா.. ஒரே பாடலில் நினைத்ததெல்லாம் நடந்து முடிந்து ஊரே சுவர்க்கபுரியாக மாறுவதற்கு. இந்த ஆரம்பப் பள்ளியை ஊரில் தொடங்குவதற்குள் அவன் பட்டபாடு சொல்லி முடியாது. பதினான்கு கிலோமீட்டர் அன்றாடம் நடந்து சென்று தான் படித்துவிட்டு வந்து பட்டபாடெல்லாம் இப்போதைய குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது, அவர்களும் நாலெழுத்துப் படித்து நன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக இல்லாமல் இருக்கச் சொல்லி, காலில் விழுந்து கும்பிட்டுக்கூட கேட்டாகிவிட்டது. ராசுவும் புரிஞ்சிக்கிற வழியைக் காணோம். அன்றாடம் சண்டை, சந்தேகம், குதர்க்கமான பேச்சு.. சே.. வாழ்க்கையே சலிப்பாகத்தான் போகிறது, வீராவிற்கு. வயிற்றில் குழந்தையை சுமக்கும் ஒரு தாய் போலவா நடந்துகொள்கிறாள். இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தொட்டதெற்கெல்லாம் அடம் பிடித்துக்கொண்டு, சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால் ஒரு மனிதன் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். இதோ, வயிற்றில் எட்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் இப்படி ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டு இன்று கீழே விழுந்து படாத இடத்தில் ஏதும் அடிபட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை. திடீரென்று இரத்தப் போக்கு ஆரம்பித்துவிட்டது. மயங்கி விழுந்த ராசுவிற்கு தண்ணீர் தெளித்தும் தெளியவே இல்லை. பதறியடித்துக்கொண்டு ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு குதிரை வண்டியும் , மாட்டு வண்டிகளும், பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுவிட்டது. மினி பஸ் காலையில் 11 மணிக்கு மட்டுமே ஒரே ஒரு முறை வரும். இரவு 8 மணிதான் ஆகிறது, தெருவே மயான அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த நேரத்தில் செய்வதறியாது, யோசிக்கவும் நேரமில்லாமல், அன்பு மனைவியை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு 14 கி.மீ. தள்ளி இருக்கிற மகப்பேறு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறான் இந்த வீரா, கூடவே மனப்பாரத்தையும் சுமந்தபடி.பாட்டி சொன்ன கதைகள் - 29

பவள சங்கரி

உயிரா? மானமா?

ஹாய் குட்டீஸ் நலமா?

முன் காலத்தில் நம் தமிழ் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா?  மானமும், வீரமும் தம் இரு கண்களாகக் கொண்டுதான் வாழ்ந்தார்கள். 

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

என்பது வள்ளுவரின் குறள். அதாவது,  கடுங்குளிரிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள  உதவும் மயிற்கற்றையை  கவரிமா இழக்க நேர்ந்தால், எப்படி அவற்றால் வாழமுடியாதோ, அதேபோன்று  சான்றோர்கள் ஏதேனும் இழிவான காரியங்களால் தங்களுக்கு  அவமானம் நேர்ந்தால் உயிர்விடத் தயங்க மாட்டார்கள் என்பதே இதன் கருத்து. 

இப்படி உயிரை விட மானம்தான் பெரிது என்று வாழ்ந்த மாவீரர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் நம் நாட்டில். அப்படி ஒரு மாவீரன் பற்றிய கதைதான் இது!

சேர மன்னர்களில் இரும்பொறை மரபினர் என்ற  ஒரு சாரார் இருந்தனர்.  இந்த மரபில் கணைக்கால் இரும்பொறை என்ற ஒரு அரசர்  தம் குடிமக்களை கண் போல காத்து வந்தார். அந்த அரசர்,நல்ல அறிவும், இரக்க குணமும், துணிச்சலும், உதவும் மனமும், தன்னம்பிக்கையும்  ஆகிய அரசருக்குரிய நல்ல குணங்கள் அனைத்தும்  பெற்றிருந்தார். நல்ல தமிழ் பற்றும், அழகாகக் கவிபாடும் திறமும், கவிபாடி பரிசில் பெற விரும்பும் புலவர்களுக்கு, நிறைய பரிசில்கள் வழங்கும் வள்ளலாகவும் இருந்தார். பெறும் பேரும், புகழும் பெற்று விளங்கிய கணைக்கால் இரும்பொறை இவை அனைத்திற்கும் மேலாக தம் மானமே பெரிது என்றே வாழ்ந்து வந்தவர். அந்த காலகட்டத்தில் சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னன் கோச்செங்கணான் என்பவன்.   மிகப்பெரிய வீரனும், சிவபக்தனுமான இவனுக்கும் கணைக்கால் இரும்பொறைக்கும் உள்ளூரப் பகைமை இருந்தது. தமிழ் மொழியினிடத்தும், தமிழ்ப் புலவர்களிடத்தும் தணியாத அன்பு கொண்டவன் இவன். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பகையுணர்ச்சி நாளடைவில் மெல்ல, மெல்ல வளர்ந்து பெருந்தீயாக மாறி இறுதியாக   பெரும் போராகவும் மூண்டது. இந்தப் போர் கழுமலம் என்னும் ஊரில் நடந்தது. இப்போரில் சேரன் தோல்வியடைந்தான்.  சோழன் வெற்றி பெற்றான். அதாவது கணைக்கால் இரும்பொறை தோற்று விட்டதால், சோழ மன்னனால் சிறைப் பிடிக்கப்பட்டான். பகைவனின்  சிறையில் அடைபட்டு இருக்க நேரிட்டதை மிகப் பெரிய அவமானமாகக் கருதிய கணைக்கால் இரும்பொறை, அதை எண்ணி எண்ணி மனம் புழுங்கிக் கிடந்தான். இந்நிலையில் ஒருநாள் அவனுக்குத் திடீரென தண்ணீர் தாகம் எடுத்தது. சிறைக் காவலாளர்களை அழைத்து  தண்ணீர் வேண்டும் எனக் கேட்டான்.  தவித்த வாய்க்குத் தண்ணீர் வேண்டும் என்று ஒருவர் கேட்டால் முதல் வேலையாக அதைச் செய்வதுதான் தமிழர்களின் பண்பாடு. ஆனால் அந்த காவலர்கள் அந்த அடிப்படை அறம் கூட அறியாதவர்கள், அவ்வளவு பெரிய மன்னன் என்றுகூட பாராமல், கேட்டவுடன் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்காமல் அந்த அரசரை கேலியும், கிண்டலுமாகப் பேசி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல, மிகவும் புண்படச் செய்துவிட்டனர். அதன் பின்னர் வெகு நேரம் கழித்து,  ஒரு பாத்திரத்தில் சிறிது நீரைக் கொண்டு வந்து இடக்கையால் அலட்சியமாக வைத்துச் சென்றான் ஒரு காவலன். ஏற்கனவே சிறைப்பட்டுக் கிடப்பதில்  மானம் அழிந்த செயலாகக் கருதி வருந்தும் சேரனுக்கு, காவலாளியின் இந்த கேவலமானச் செயல் அந்த மன்னரை மேலும் வேதனைப்படுத்தியது. இத்துனை அதிகமான தண்ணீர் தாகம் இருப்பினும் கூட, தன்னை அந்தக் காவலர்கள், அவமானப்படுத்தியதால், இத்தகையப் பகைவர்களிடம் கேட்டு வாங்கிய தண்ணீரைக் குடிக்க மானமுள்ள அந்த அரசனுக்கு மனம் வரவில்லை.

இப்படி ஒரு வேதனையான நேரத்தில் அவனுடைய கவி உள்ளம் உருகி  அது பாடலாகப் பிறந்து, இன்றும் வரலாறாக ஆகிவிட்டது. அந்தப் பாடலின் கருத்தைக் கேளுங்கள்:

குறைப் பிரசவமாகப் பிறந்த குழந்தையைக்கூட, போரில் இறவாமல் இப்படி  இறத்தல் அவமானம் என்று கருதி,  இறந்த அந்த குழந்தையையும், குறையாகப் பிறந்த தசைப் பிண்டத்தையும் கூட வாளால் வெட்டித்தான் புதைப்பார்கள். பகைவன் சிறையில் அகப்பட்டு சங்கிலியால் கட்டுண்ட நாயைப் போல, அப்பகைவனின் காவலாளரிடம் பிச்சை கேட்டு தண்ணீர் பெற்று அதைக் குடித்து உயிர் வாழ விரும்பும் என் போன்றவர்களை இனி இவ்வுலகத்தார் பெறாமல் இருக்கட்டும்” என்பதுதான் அது.  தம் அவல நிலையை கவிதை மொழிகளால் உள்ளம் உருக வடித்து வைத்திருக்கிறான் சேரமான் கணைக்கால் இரும்பொறை.இப்படி ஒரு பாடலைப் பாடி முடித்த அந்த அரசன்,  அவர்கள் கொடுத்த அந்தத் தண்ணீரைக் குடிக்காமலேயே உயிரை விட்டு விட்டான். பின் புலவர் பொய்கையார் என்ற இரும்பொறையின் ஆசிரியர்  மூலம், அரசன் கணைக்கால் இரும்பொறையின், தமிழ் பற்று மற்றும் வள்ளல் தன்மை ஆகியவற்றைப் பற்றி அறிந்து, இத்தகைய ஒரு சான்றோனைச் சிறைப்பிடித்து பெரும் பாவம் செய்துவிட்டோமே என்று மிகவும் வேதனைப்பட்ட, மன்னன் கோச்செங்கணான் இரும்பொறையை உடனே விடுவிக்கச்சொன்ன போது, அவனுடைய உயிரற்ற உடலையே அங்குக் காண முடிந்தது அரசனால்.  இங்ஙனம் பகைவனும் விரும்பிக் கண்ணீர் விடுமாறு உயிர்விட்டு தம் மானத்தைக் காத்துக்கொண்ட இரும்பொறையின் புகழ் இவ்வுலகில் தமிழ் உள்ளளவும் அழியாமல் நிலைத்து நிற்குமல்லவா?


மானம் மரியாதையெல்லாம் அரசர்களுக்கோ, சாமான்ய மனிதர்களுக்கோ மட்டுமல்ல, நம் வீட்டில் செல்லமாக நம்மோடு வளர்ந்து கொண்டிருக்கும் உயிரினங்களுக்கு இல்லையா, என்ன? கேளுங்கள் இதையும்..

மணி, ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் பள்ளி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான்.  தெருவோரம் இருந்த நடைமேடையின் ஒரு மூலையில், வெள்ளை உடம்பில் அங்கங்கே கருப்புத் திட்டுகளுடன், தாயை எங்கோ தொலைத்துவிட்டு, கியா.. கியா என்று கத்திக்கொண்டே அங்கும், இங்கும் ஓடி, ஓடி தாயைத் தேடிக்கொண்டிருந்தது அந்தக் குட்டி. பிறந்து 5 நாட்கள் ஆகியிருக்குமோ என்னவோ, அதற்குள் பாவம் தாயைப் பிரிந்து துடித்துக்கொண்டிருந்தது. பால் வைக்கவோ, தொட்டுத் தடவி சமாதானம் செய்யவோ ஆளில்லை. அவரவர் அவசரம் அவரவர்களுக்கு. அந்த நாய்க் குட்டிக்குப் போக்கிடமும் இல்லை. அந்த வழியாக வந்த மணி இதைப் பார்த்தவுடன் பரிதாபப்பட்டு வீட்டிற்குத் தூக்கி வந்துவிட்டான். அம்மாவும், அப்பாவும் முதலில் திட்டினாலும், அவர்களுடன் வாக்குவாதம் செய்து எப்படியோ மெல்ல, மெல்ல அதைத் தக்க வைத்துக்கொண்டான்.  முதலில் வீட்டிற்குள் வரக்கூடாது, வெளியில்தான் இருக்க வேண்டும் என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்த அப்பாகூட போகப் போக அதனுடன் சகஜமாக வீட்டில் ஒருவர்போல பழக ஆரம்பித்துவிட்டார். சிட்டு என்று அழகாகப் பெயர் வைத்திருந்தான் மணி.  சிட்டு ஆரம்பத்தில் குழந்தைபோல அதிகமாகக் குறும்பு செய்து கொண்டிருந்தாலும், போகப்போக, சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு, வீட்டிற்குள் எந்த அசிங்கமும் செய்யாமல், மணி சொல்லிக்கொடுப்பதை சமத்தாகக் கேட்டுக்கொண்டு, சுத்தமாக இருக்கவும் பழகிக் கொண்டது. அன்றாடம் ஒழுங்காகக் குளிக்க வைப்பது, அப்பாவின் பூஜை நேரத்திற்கு உள்ளே வந்து தொந்திரவு செய்யாமல் இருப்பது, அனாவசியமாக சத்தம் செய்யாமல் பதவிசாக தன் இடத்தில் இருப்பது, விருந்தாளிகள் வந்தால் அவர்களாகக் கூப்பிடும் வரை அவர்கள் முகத்தைப் பார்த்துக்கொண்டே  அமைதியாக இருப்பது என்று இப்படி வெகு சீக்கிரமே நல்ல பெயரும் வாங்கிவிட்டது.  

“டேய் சிட்டு, என்னடா பண்றே, வாடா இங்கே.. பார் நான் வேளியே போறேன். வீட்டை பார்த்துக்கோ. தட்டில சாப்பாடு போட்டு வச்சிருக்கேன் பாரு. ஒழுங்கா சாப்பிடு. நான் வருகிற வரைக்கும் முன்னாடியே இரு” என்று அப்பா கூப்பிட்டு சொல்லிவிட்டுப்போகும் அளவிற்கு வீட்டில் எல்லோரும் சிட்டுவிடம் ஒன்றிவிட்டது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. பள்ளிவிட்டு வந்தவுடன் சிட்டுவிடம் கொஞ்ச நேரம் பொழுதைப்போக்குவது வாடிக்கையாக இருந்தாலும், போகப்போக படிப்பு அதிகமாக, சிட்டுவிடம் விளையாடுவது குறைந்து போனது. ஆனாலும், அதனுடன் இருந்த நெருக்கம் மட்டும் அதிகமாகிக் கொண்டுதான் போனது. 

பள்ளி முடித்து மணி, பொறியியல்  கல்லூரியில் சேருவதற்காக மேட்டூரிலிருந்து சென்னை செல்ல வேண்டிய சமயத்தில் அவனுக்கு பெற்றவர்களுடன், சிட்டுவைப் பிரிந்து செல்வதும் பெரும்பாடாக இருந்தது. சிட்டு என்ன புரிந்து கொண்டதோ பெட்டியெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவுடன் ஹாஸ்டலுக்குக் கிளம்பும்போது, முகத்தைப் பாவமாக, சோர்வாக வைத்துக்கொண்டிருந்தது கண்ணை விட்டு மறையவே முடியாத காட்சி மணிக்கு. ஹாஸ்டலிலிருந்து போன் செய்யும் போதெல்லாம், சிட்டுவைப் பற்றியும் அதிகமாக விசாரிக்காமல் இருக்கமாட்டான் மணி. சிட்டுவும் அதைப் புரிந்துகொண்டு செல்லமாக ஒரு சத்தம் கொடுப்பது காதில் கேட்டால்தான் மணிக்கு மகிழ்ச்சியாக இருக்கும். விடுமுறைக்கு வரும்பொழுதெல்லாம், சிட்டுவிற்குப் பிடித்த மேரி பிஸ்கட் வாங்கி வருவதும் வழக்கமாக இருந்தது. இப்படியே சில, பல ஆண்டுகள் ஓடிவிட்டது. 

படித்து முடித்து மணிக்கு சென்னையிலேயே வேலை கிடைத்து, ஆறு மாதத்திலேயே அமெரிக்கா போகும் வாய்ப்பும்  கிடைத்ததில் குடும்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். சிட்டுவும் வளர்ந்து ரொம்பவும் பெரியவனாகிவிட்டதால், அவனைப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை ஒருவரும். அவனுக்கும் பொழுது சரியாகத்தான் கழிந்து கொண்டிருந்தது.  மணி அமெரிக்கா சென்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகாலம், மேட்டூர் பக்கமே வரவே இல்லை. போனில் கூட வாரம் ஒரு முறைதான் பேச முடிந்தது. அதுவும் சிட்டுவைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கேட்டக் கூடிய நிலைதான் இருந்தது. அவ்வப்போது அப்பாவும் சிட்டுவிற்கு ஏதோ உடல் நலக்குறைவு என்பார். ஒரு முறை காலில் அடிபட்டு லேசான எலும்பு முறிவு ஏற்பட்டபோது கூட டாக்டரிடம்  காண்பித்து வைத்தியம் பார்த்து சரி செய்ததாகக் கூறியபோது, சிட்டு நலமாக இருப்பதில் அவனுக்கு திருப்தியாகவே இருந்தது.  ஆனால் இவையனைத்தும் மணி அடுத்த முறை இந்தியாவிற்கு வந்து வீட்டின் நிலையைக் காணும்வரைதான் நீடித்தது. 

ஒன்றரை ஆண்டிற்குப் பிறகு அம்மா, அப்பாவையும் சிட்டுவையும் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் நிலைகொள்ளாமல் துடித்துக்கொண்டு வந்தான் மணி. மறக்காமல் மற்ற பொருட்களுடன் சிட்டுவிற்கென்று மேரி பிஸ்கெட்டுடன், குளிருக்கு இதமாக சிறிய கம்பளி ஒன்றும் வாங்கி வந்திருந்தான். அம்மா, அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கள் சிட்டுவைத் தேடிக்கொண்டிருந்தது. இந்நேரம் தன் குரல் கேட்டால் ஓடி வந்துவிடுமே, எங்கே போயிருக்கும் என்று மனமும் அலை பாய்ந்தது அவனுக்கு. அவனுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டவராக அவனுடைய அப்பா, 

“என்னப்பா, சிட்டுவைத் தேடறியா. அவனுக்கு வயாசாயிடிச்சில்லையா? அவனால் சட்டுனு எழுந்து வர முடியாது. பின்னால இருக்கான். நீயே போய் பாரு” என்றார் சர்வசாதாரணமாக.

‘என்னது, பின்னாலயா...’ என்று ஏதோ சொல்லியபடி கொல்லைப்புறம் ஓடினான். அங்கு, சிட்டு ஒரு மூலையில் மண் தரையில் மேலே ஈ மொய்ப்பது கூடத் தெரியாமல், பக்கத்தில் வைக்கப்படிருந்த வட்டிலில் இருந்த சாப்பாடு காய்ந்துபோய்க் கிடக்க, வாயில் நீர் வடிவது கூடத் தெரியாமல் அப்படியே படுத்துக் கிடந்தது. மணிக்கு அதைப் பார்த்தவுடனே நெஞ்சு அடைப்பது போல ஆகிவிட்டது.  தான் வந்து அருகில் நிற்பது கூட சிட்டுவிற்குத் தெரியவில்லை என்பதுதான் அவனுடைய வேதனையின் உச்சமாக இருந்தது.  அருகில் உட்கார்ந்து சிட்டுவைத் தொட்டு, ‘டேய்.. சிட்டு’ என்றதுதான் தாமதம், சட்டென்று அதன் உடலில் ஒரு குலுங்கல், மெல்ல எழுந்து நிற்க முயன்றது. மணி தன் கையோடு கொண்டு வந்த மேரி பிஸ்கட்டை எடுத்து ஊட்டிவிட முயன்றான். அதுவும் முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும் கொஞ்சம் , கொஞ்சமாக சாப்பிட முயன்றதால், லேசாக கண்களில் ஒளி வந்தது. உடனடியாக அந்த சாப்பாட்டுத் தட்டை எடுத்து சுத்தமாகக் கழுவி, உள்ளே போய் அம்மாவிடம் கேட்டு ஒரு டம்ளர் பால் வாங்கிக் கொண்டு வந்து அந்தத் தட்டில் ஊற்றி அந்த பிஸ்கட்டை அதில் நனைத்து ஊட்டிவிட்டான். சிட்டுவும் கண்ணீர் வழிய ஒரு அரை பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டு முடித்தது. சிட்டுவிற்கு என்ன பிரச்சனை என்று மணிக்கு நன்கு புரிந்தது. 

“அப்பா, அம்மா, உங்களுக்கே இது நியாயமா இருக்கா. சிட்டுவை ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான் மணி வேதனையுடன்.

“என்னப்பா பண்ணச் சொல்ற. அதுக்கு வயசாயிடிச்சில்ல. வீட்டுக்குள்ள விட முடியுமா. அதை குளிக்க வக்கக்கூட முடியல.  அதான் அது மேலெல்லாம் ஒரே வாடை அடிக்குது. அதனாலதான் வீட்டிற்குள்ள வர வேண்டாம்னு சொல்லிட்டேன். அதுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்துடுது. ஒழுங்கா சாப்பிடாம அடம் பிடிக்குது. கடக்கட்டும்னு விட்டுட்டேன். நாம என்ன பண்ண முடியும் அதுக்கு..” என்றார் அப்பா சர்வ சாதாரணமாக.

மணிக்கு தன் அப்பாவா இப்படிப் பேசுவது என்று அதிர்ச்சியாக இருந்தது. 

“அப்பா, உங்களுக்கே இது நியாயமா இருக்கா அப்பா? வயசானா, வீட்டிற்குள் வரக்கூடாதுங்கறது சரியாப்பா.. முதுமை என்ன ஒதுக்க வேண்டிய ஒன்றா? அந்த இயலாமையை புரிஞ்சிக்கிட்டு  அதைச் சமாளிக்க நாம உதவியா இருக்க வேண்டாமா? இப்படி வெளியே தனியா ஒதுக்கி வைக்க எப்படி மனசு வந்தது உங்களுக்கு? இத்தனை வருசமா, நம்ம வீட்டுக்கு காவலா, நமக்கெல்லாம் ஒரு நல்ல துணையா இருந்த ஒரு ஜீவனின் கடைசி காலத்தை இப்படி கொடுமையா கழிக்க விடலாமா அப்பா..? தாத்தாவும் , பாட்டியும் நம்மகூட இறுதிகாலத்தில் தங்காமல் கிராமத்தில் இருந்ததும் இதற்குத்தானா? ”

போர்க்காலத்தில் மக்களுக்குச் சேவை செய்யும் செஞ்சிலுவைச் சங்கம் போல வாயில்லாத இந்த பாவப்பட்ட ஜீவன்களுக்காக புளு கிராஸ் அப்படீன்னு ஒன்னு இருக்கே அதைக்கூட மறந்துட்டீங்களா. நாம போய் அங்க சேவை செய்யாட்டியும் போகுது. நம் கண் முன்னால் இப்படி வதை படுகிற ஜீவன்களை அவர்களிடம் சொன்னாலாவது காப்பாற்றக் கூடும் இல்லையா?

மணி , சிட்டுவின் மீது செலுத்திய தனிப்பட்ட கவனத்தின் காரணமாக அவன் ஊருக்குக் கிளம்புவதற்குள் சிட்டு ஓரளவிற்கு நன்றாகவே உடல் தேறிவிட்டது. புளூ கிராஸ் நண்பர்கள் மூலமாக சிட்டுவிற்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தெரிந்து கொண்டு அதைப் பராமரிப்பதற்கான பணத்தையும் கொடுத்து அதை நல்ல ஒரு இடத்தில் சேர்த்துவிட்ட திருப்தியில் நிம்மதியாக ஊருக்குக் கிளம்பினான் மணி. 

அமெரிக்க வாசிங்டன் தமிழ் சங்கத்தில் என் நூல் வெளியீடு!

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். வருகிற ஞாயிறன்று (17 /06/2018) அமெரிக்காவின் முதல் தமிழ் சங்கமான, தலைநகர் வாசிங்டனின் தமிழ்...