Tuesday, December 17, 2013

கர்ம வீரர் காமராசர்


பவள சங்கரி

குட்டி ஜப்பான்என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்..  பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர் காற்றாய் வீச, உல்லாச உந்தின் கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள் தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்? மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன்அதுவரை வாய் மூடி மௌனமாக சாரதியாக வந்தவர், ஒரு மெல்லிய சிலிர்ப்புடன்,  ‘அட, விருதுநகர், நம்ம காமராசர் ஐயாவோட ஊரு.. புண்ணிய பூமிஎன்று சொல்லிவிட்டு அப்படியே நினைவில் ஆழ்ந்துவிட்டார். மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..  அதாங்க எங்க ஊட்டூக்காரவிக, திருநாவுக்கரசு அவிங்கதான்....




நான் : காமராசரை பார்த்திருக்கிறீர்களா நீங்கள்?

திருநாவுக்கரசு ; ஆகா, என்ன அப்படி கேட்டுட்டே, ஐயா பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கேனாக்கும்.. ஈரோடு வாசவி காலேஜ்ல படிச்சிக்கிட்டிருந்தப்ப, நான் மாணவர் காங்கிரசு தலைவனாக இருந்தேன்.

நான்; , அப்படீன்னா அவரைப் பற்றி நிறைய உங்களுக்கு தெரியும்னு சொல்லுங்க.

அரசு: ஆமாம், என்னை மிகவும் கவர்ந்த தலைவர் அல்லவா அவர். என்னை மட்டுமல்ல பல எதிர்கட்சித் தலைவருக்குக்கூட இவரை ரொம்ப பிடிக்குமாம். அப்படிப்பட்ட ஒரு சொக்கத் தங்கம்.

நான்: படிக்காத மேதை இல்லையா அவர்? சாதாரணமான குடும்பத்தில் பிறந்த மிக எளிமையான மனிதரும் கூட இல்லையா?


அரசு: ஆமாம், காமராஜரோட  இளமைக்காலம் பத்தி பேசறதுன்னா,  (நினைவுகள் பின்னோக்கிச் செல்ல, அமைதி காத்த மனது, மெல்ல திறக்க ஆரம்பித்தது). மகாத்மா காந்தியோட இளமைக் காலமும், காமராஜரோட இளமைக்காலமும் ஒன்றுபட்டு இருந்ததுன்னு  சொல்லலாம். இளமைக்காலங்களில் ஏற்பட்ட தாக்கங்கள் பின்னாட்களில் அவர்களை வழிநடத்தியது என்றால் அது மிகையாகாது. பெரும் தலைவர் காமராஜர் என்று எல்லோராலும் போற்றப்படுபவர் இளமையில் படிப்பதற்கு வசதியின்றி, அரைக்கால் கால்சட்டையும், மேல் சட்டையும் அணிந்து கொண்டு தங்கள் குடும்பத் தொழிலானபொட்டலம் கட்டும் மளிகை வியாபாரத்திற்குச் செல்ல வேண்டிய சூழநிலைக்கு ஆளானார். ‘தந்தையோடு கல்வி போம்என்பார்கள். தந்தை இறந்தவுடன் பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. ஏனைய பல தலைவர்கள் போல் பற்பல நூல்களை ஆழ்ந்து படிக்க முடியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இந்த நிகழ்வுகள் அவருக்கு வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத் தந்தன. தன்னுடைய அடி மனதில் ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாடாகவே தான் தமிழ் நாட்டை ஆண்ட போது மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இன்று பல மாநிலங்களில், மத்தியஅளவிலும், இந்த மதிய உணவுத் திட்டத்திற்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய கால கட்டங்களில் கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளை கல்வி கற்பதற்கு ஈர்ப்பதற்காகவே இத்திட்டம்  கொண்டுவரப்பட்டது என்று கூறலாம். மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையில் தாம் இளமையில் அரிச்சந்திரன் நாடகம் பார்த்ததன் தாக்கம்தான் சத்தியசோதனை எழுதத் தூண்டுகோலாக  அமைந்தது போல காமராசருக்கும் இந்த நிகழ்வுகள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு அச்சாரமாய் அமைந்தன.

நான்இலவச மதிய உணவு, இலவச சீருடைகள், இப்படிப் பலத் திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தியதோடு, தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகச் செய்த, கிராமங்கள் தோறும் ஓராசியர் பள்ளிகளும்  திறக்கப்பட்டன என்று அறிந்திருக்கிறேன்.

அரசு : ஆம். இந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாக மாற்றியது போல அவர் அனைத்திந்திய காங்கிரசின் அக்ராசனராக இருந்த போது (தலைவர்) அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இலவசப் பால் பொருட்கள் குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 2 முறை கொடுக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இருந்த வந்த பால் பவுடர் மிகவும் சுவையாகவும் சத்துள்ளதாகவும் இருக்கும். நான் கூட குடித்திருக்கிறேன் அந்தப் பால் பவுடரை. கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகர்ப்புறங்களில் நடந்த சில நிகழ்ச்சிகளும் சொல்கிறேன்

பெற்ற தாய்மார்கள் தன்னுடைய குழந்தைகளைப் பார்த்து, “மத்தியானம் அங்கே சோறு போட்றாங்க, பாலும் தறாங்க ஓடுங்கடா... இங்கே ஏண்டா சுத்திட்டுத் திரியறீங்கஎன்று சத்தம் போடுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படியாகத்தான் நம் இந்தியாவில் கல்வி ஆரம்பமானது. அன்றைய நாட்டின் நிலைமைக்கு ஏற்ப பள்ளிச் சீருடைத் திட்டத்தையும், 5ம் வகுப்பு வரை இலவசக் கல்வியையும் கொண்டு வந்தார். இன்றைய வளர்ச்சியைப் பார்க்கும் போது அன்றைய நடந்த நிகழ்வுகள் இவ்வாறு நம் கண் முன்னே நன்றிப் பெருக்குடன் விரிகின்றன.

நான்: காமராசருடைய அரசியல் வாழ்க்கை மிக நேர்மையான ஒன்று அல்லவா?

 அரசுஆம், அதிலென்ன சந்தேகம். உலகறிந்த உண்மையாச்சே இது! நாடு சுதந்திரம் பெறாமல் அடிமைப்பட்டுக் கிடந்த காலம் அது. 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார். 1957 ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமோக வெற்றிப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜரே மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.

1963ம் ஆண்டு வரை, ஒன்பது ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர், தான் கொண்டு வந்த கே. பிளான் மூலம் தானே முதலமைச்சர் பதவியைத் துறந்தார். அகில இந்திய காங்கிஸ் தலைவரானார். எத்துனைப் பேருக்கு வரும் இந்த மனசு? 1957-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காமராசர் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து தமிழ்நாட்டின் காங்கிரஸ் பேரியக்கத்திற்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்தார். காமராசர் என்ற தனி மனிதரின் அரசியல் என்று கூறுவதைவிட அன்றைய கால கட்டங்களில் அதாவது 47 முதல் 63 வரை தமிழக அரசியல் மற்றும் மத்திய அரசியல் எவ்வாறு இருந்ததுன்னு கேட்டிருந்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவருடைய வாழ்க்கை வரலாறு அரசியலோடு பின்னிப் பிணைந்திருந்தது.

தன்னலமற்ற, மிகச் சிறந்த தலைவர் ஐயா காமராசர் அவர்கள். அதற்கொரு சின்ன உதாரணம்அவர் மாநில முதல்வராக இருந்த போது, அவருடைய விருதுநகர் இல்லத்தில் மின் விசிறி இல்லாமல் அவருடைய தாய் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்ததைக் கண்ட  ஒரு தொண்டர், இரண்டு மின் விசிறிகளைக் கொண்டுவந்து மாட்டி விட்டுச் சென்றுவிட்டார். வீட்டிற்குத் திரும்பிய காமராசர் இதைக் கண்டு வெகுண்டு, “இப்படி உனக்கு சுகம்  கேட்குதா என்ன?, இதைக் கொண்டுபோய் உடனடியா திருப்பிக்கொடு..  இந்த மின்விசிறி போட்டவன் நாளைக்கு ஏதாவது என்னிடம் எதிர்பார்க்கலாமில்லையா?”, என்று திட்டிவிட்டு அதை விருதுநகர் காங்கிரசு அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டாரம். அவ்வாறு கறை படாமல் வாழ்ந்து காட்டியவர்தான் காமராசர்.

இவர் மட்டுமல்ல இவரோடு இருந்த கக்கன் போன்றவர்களும் இவருக்கு இணையாக தன்னலமற்ற, பொதுநலச் சேவையே தம் உயிராகக் கொண்டு வாழ்ந்து வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள். அமைச்சராக இருந்தபோதே, மாற்று உடை இல்லாமல்கூட இருந்தவர் கக்கன் அவர்கள்ஒரு முறை கக்கன் தன் மிதி வண்டியை மிதித்துச் சென்றதைப் பார்த்து மக்களே வேதனைப்பட்டனர். ஆனால் இன்று நாட்டில் நடப்பதைப் பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. அவர்கள் வாழ்ந்து காட்டிச் சென்றதைக் கூட கருத்தில் கொள்ளவில்லையே இன்றைய அரசியல்வாதிகள் என்று வேதனையாக இருக்கிறது.

நான் : “படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள்என்பதே அவருடைய அறிவுரை என்று படித்திருக்கிறேன்

அரசு : ஆம். படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனை.

நான் : சிறைக்குக்கூடச் சென்றிருக்கிறார் இல்லையா?

அரசு : ஆமாம். கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகள் பகிஷ்காரம், கொடிப் போராட்டம், உப்பு சத்தியாகிரகம், சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆகியவற்றில் காமராசர் ஐயா பங்கேற்றுச் சிறைத் தண்டனையும் பெற்றார். அது மட்டுமல்ல அடுத்தடுத்துப் போராட்டங்கள் அனைத்திலும் ஈடுபட்டு பலமுறை சிறை தண்டனைகளை அனுபவித்தவர் காமராசர் ஐயா அவர்கள்..

நான் : வேறு ஏதும் அவருடைய தனிப்பட்ட குணத்தை விளக்கக்கூடிய சம்பவங்கள் தெரியுமா?

அரசு : ஐயா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் பொறுமையாக சிந்தித்து முடிவெடுக்க வல்லவர். வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது என்ற எண்ணத்தைக் கடைபிடிப்பவர் அவர். ஒரு முறை, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரசின் தலைவராக இருந்த சமயம்கட்சியிலுள்ள மூத்தத் தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தராமல் பல்வேறு விதத்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்களாம். குமரி அனந்தன் அதனைச்  சமாளிக்க முடியாமல் பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டிருக்கிறார், முடிவில்  வேறு வழியின்றி பெருந்தலைவர் காமராசரிடம் சொல்லியிருக்கிறார்மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்என்று சொன்னால் காமராசர் அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார்  என நினைத்திருக்கிறார் குமரிஅனந்தன். ஆனால் ஐயாவோ, “நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன்என்று சொன்னாராம். வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிட வேண்டும்  என்பது கர்மவீரர் காமராசரின் அன்புக் கட்டளை ஆகும்.

நான் : ஆட்சி அமைப்பில் அவருடைய பங்கு  இன்றியமையாதது அல்லவா?

அரசு : ஆங்கிலத்தில்கிங் மேக்கர்என்று சொல்லுவார்கள். அது போல் நம் இந்தியாவை நிர்வகிக்கும் பொறுப்பில் அதாவது பாரதப் பிரதமராக ஒருவரை நியமிக்கும் பொறுப்பில் இருந்தார். அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவரே பிரதமர் ஆகும் வாய்ப்பு இருந்தது. அவர் கைகாட்டுதலில்தான் இந்திராகந்தி பிரதமரானார். அவ்வாறு மிக உயர்ந்த பொறுப்புகளில் காமராசர் இருந்தார். அபோது காங்கிரசில் பெரிய மாற்றம் கொண்டுவரக் கருதி ஒருவருக்கு ஒரு பதவி என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அதற்கு எடுத்துக்காட்டாக தன்னுடைய முதல்வர் பதவியை தானே விலகினார். இதுதான்கேபிளான் என்பது. இன்று இதுபோல யாரை நாம் பார்க்க முடியும். அரசியல் சதுரங்கத்தில் வெட்டப்பட்ட  மிகப்பெரும் தலைவர் காமராசர். ஒரு கல்லூரி மணாவரான பெ.சீனிவாசன் என்ற மாணவர் தலைவரை அவருக்கு எதிராக நிற்க வைத்து தோற்கடிக்கப்பட்டார். மக்கள் மீது மிக நம்பிக்கை வைத்திருந்த காமராசர் உடல் நலம் குன்றி தேர்தல் சமயத்தில் படுத்திருந்த போதும், மற்ற தலைவர்கள் வெற்றி பெறுவதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்த காமராசர் அவர்கள் தனது தொகுதியான விருதுநகர் தொகுதியிலும்எனது மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள்என்று மக்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டு கூறினார். ஆனால் தேர்தல் முடிவு மாறுபட்டிருந்தது.
காமராசருடைய தோல்வி கண்டு அண்ணாதுரையே வருந்தினார். எதிர் கட்சிக்காரர்களையும் பாராட்டும்  மனோபாவம் பெருந்தலைவர்களிடம்  அன்று இருந்தது. இன்று அதுவும் காணப்படவில்லை. தேர்தலில் தோற்ற பிறகும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கோடு காணப்பட்ட அவர் ஸ்தாபன காங்கிரசு தலைவராக இருந்தார். அப்போது நான் ஈரோடு மாணவர் காங்கிரசு தலைவராக இருந்தேன். ஈரோடு வாசவி கல்லூரி ஆண்டு விழாவிற்கு அவரை அழைத்து வந்து சிறப்படைந்தோம். மாணவர்கள் மத்தியில் காமராசருக்கு மிகப்பெரும் செல்வாக்கு இருந்தது. அதைச் சரியான வகையில் பயன்படுத்தத் தவறிவிட்டோம். இல்லாவிடால் இன்றைய காங்கிரசின் நிலை இந்த அளவிற்கு குறைந்திருக்காது, அன்று, காங்கிரசு தோற்ற சமயத்தில் கூட 37 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால் இன்று 10 சதவிகித வாக்கு பெற்றாலே மகிழ்ச்சியடையும் நிலையில் இருக்கிறோம். காமராசர், கக்கன், ,மன்றாடியார் போன்ற தலைவர்கள் மக்களுக்கு ஆற்றிய பணிகளை மக்களுக்குக் கொண்டு செல்லத்  தவறியதே இதற்குக் காரணம். மக்களுக்கு தன்னலமற்று பணியாற்றக்கூடிய தலைவர்கள்  இல்லை என்பதே இன்றைய நிலை. இன்று மக்கள் பெருந்தலைவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

நான் : காமராசர் போன்ற நல்ல தலைவர்கள் நாட்டிற்கு வேண்டும் என்ற ஏக்கம் இப்பொழுதெல்லாம் மக்களிடம் அதிகமாகிவிட்டது. என்ன செய்ய முடியும்....

அரசு : தமிழ் நாட்டைப் பொறுத்த வரை காங்கிரசு வேறு காமராசர் வேறு என்பதில்லை. பாராளுமன்றத் தேர்தலில் காமராசர் தோற்றாலும் மிகப் பெரும் தலைவராகத் திகழ்ந்தார். அன்றைய காலகட்டங்களில் ஸ்தாபன காங்கிரசின் தலைவராகத் திகழ்ந்தவருக்கு சென்ற இடமெல்லாம் மக்களுடைய பேராதரவும் மரியாதையும் இருந்தது.

நான்காமராசர் பற்றிய ஒரு சுவையான சம்பவம் நான் படித்தேன். முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராசர் அவர்கள்  சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்திருக்கிறார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தொண்டர், இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராசர் என்ன செய்யப் போகிறார், நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார், என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்காக வைத்துக்கொண்டிருக்கிறார். கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அந்த தொண்டரைக் காமராசர் அழைத்து,  “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடுஎன்றாராம். அந்தத் தொண்டர் ,ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே என மனம் வருந்தியிருக்கிறார். அதற்கு தலைவரோ,

தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்தத் துண்டை நாம் தொடக்கூடாது. ஏன்னா, இதெல்லாம் சென்னையில் இருக்கிற பாலமந்திர் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்க வேண்டியது. ஏழைகளுக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஏற்பாடுஎன்றிருக்கிறார் காமராசர்.

அரசு : இன்னொரு விசயம் கூட நினைவிற்கு வருகிறது. அரசாங்கத்தில், அந்தந்த திட்டத்தை அமுல்படுத்தும்போதும்அவைகளுக்குச் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக்  கலந்து ஆலோசிக்கத் தவறியதே இல்லை காமராசர் ஐயா. அவர்கள் அரசாங்க ஊழியர்களே என்றாலும் கூட அவர்களுக்குத் தக்க மரியாதைகளைக் கொடுத்து வந்திருக்கிறார். தன் கூடவே முதலமைச்சர் காரிலேயே அவர்களைப் பற்பல ஊர்களுக்கு உடன் அழைத்தும் செல்லுவார் அதிகாரிகளுக்கு இந்த நடவடிக்கை அதிசயமாக, ஆச்சர்யமாக, அதிர்ச்சியாகக்கூட இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரில் போகும்போது அவர்களை அந்தத் திட்டம் பற்றிய பல் வேறு பிரச்சினைகளையும், அவைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளையும் காமராசர் அவர்கள், சொல்லிக்கொண்டேச் செல்லுவாராம்.

நான் : சரி ஊர் நெருங்கிவிட்டது. காமராசர் ஐயா பற்றி பல்வேறு கவிஞர்கள், அருமையான பல கவி மாலைகள் புனைந்துள்ளார்கள். அவற்றில் கவிஞர் மு. மேத்தா அவர்கள் பாடிய ஒரு கவிதை என் மனதை விட்டு நீங்காத ஒன்றுஇதோ கேளுங்களேன்.. தலைப்பே அருமை பாருங்கள்!

கருப்புக் காந்தியும் நெருப்புக் கவிதையும்

-கவிஞர் மு. மேத்தா

ஒரு தீர்க்க தரிசியை
நேசிப்பதைப் போல்
உன்னை நேசிக்கிறேன்
உன்னால்தான் முடிந்தது
தாயையும் பார்க்காமல்
தாய்நாட்டைப் பார்ப்பதற்கு!

நீ நினைத்திருந்தால்
கரன்ஸி நோட்டுகளால்
விருதுநகரில்
இன்னொரு இமயமே
எழுந்திருக்கும்!

நீ
லட்சுமியை அனுப்பி
சரஸ்வதியை வரவழைத்தாய்.
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆமாம்நீ
கல்விக்கண் திறந்தாய்!
இவர்களோ
கல்விக் கடை திறந்தார்கள்!
என்னால்
கள்ளுக்கடை
வைத்திருப்பவர்களைக் கூட
மன்னிக்க முடிகிறது.
கல்விக் கடை வைத்திருப்பவர்களை
மன்னிக்க முடியவில்லை.
நிஜத்தைச் சொல்லுகிறேன்
நேரு குடும்பத்தின் மீது நீ
பாசம் வைத்திருத்திருந்தால்
இந்தியாவின் பாரிணாமமே வேறு!

கருப்புதான் நீயும்
கருப்புக் காந்தி!
மகாத்மா காந்தியோ
சிரிக்கும் நெருப்பு.

நீ
சிரிக்கத் தெரியாத
நெருப்பு.
அந்த நெருப்பு
திருநீறாகி விட்டது.
உன் சாம்பலுக்குள்ளும்
தணல் தகிக்கிறது.

பெரியாரின் பல்கலைக்கழகத்தில்
பச்சைத் தமிழன்எனும்
பட்டம் பெற்றவனே!

இன்று நீ இருந்திருந்தால்
இங்கிருக்கும்
காய்ந்த தமழர்களைக்
கண்டித்திருப்பாய்!

இன உணர்வு
தமிழனுக்கு இருந்திருந்தால்
இந்தியாவின் ஸ்டாலினாய்
இருந்திருக்க வேண்டியவன் நீ!

மணி முடி உன்முன்
வைக்கப்பட்டது.
ஆனால் நீ
காளிக்குத்
தலையை வெட்டித் தந்த
கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!

வாழ்க காந்தியம்

வாழ்க காமராசர்.

நன்றி : திண்ணை

1 comment:

  1. //நீ
    லட்சுமியை அனுப்பி
    சரஸ்வதியை வரவழைத்தாய்.
    இவர்களோ
    சரஸ்வதியையே
    லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!//


    இன்றைய கல்வித்தந்தைகள் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்..

    அருமையானதோர் கட்டுரை.

    ReplyDelete