Sunday, December 15, 2013

சொந்தச் சிறை


பவள சங்கரி

இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க!
“இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே.. எத்தன பாடுபடுத்திச்சு என்னய.. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி.. கை குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும் போது தான தெரியும் இந்த ராசுவோட அருமை. நல்லா இருக்கும்போது என்னைய கண்டுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்துறதுக்கு மூச்சு முட்ட உசிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறியே.. உனக்கு எம்மேல பாசம் இல்லாமயா இப்புடி ஒரு காரியத்தை பன்னற.. நீ நெம்ப நல்லவிகதான் மாமா.. ஆனா.. “
உடலெல்லாம் உணர்வற்று மரத்துப்போன நிலையில் மனம் மட்டும் அரை மயக்கத்தில் விழித்த நிலையில் எதை எதையோ பிதற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ராசுமணிக்கு. கழிப்பறை, மின்சார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கேத் திண்டாடும் இந்த குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று போராடி சாதித்து, அதற்காகத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன் வீரய்யன். ஆசை, ஆசையாக மாமன் மகளை மணந்துகொண்டு அவளையும் சீமாட்டியாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறான். எல்லாம் என்ன சினிமா கதையா.. ஒரே பாடலில் நினைத்ததெல்லாம் நடந்து முடிந்து ஊரே சுவர்க்கபுரியாக மாறுவதற்கு. இந்த ஆரம்பப் பள்ளியை ஊரில் தொடங்குவதற்குள் அவன் பட்டபாடு சொல்லி முடியாது. பதினான்கு கிலோமீட்டர் அன்றாடம் நடந்து சென்று தான் படித்துவிட்டு வந்து பட்டபாடெல்லாம் இப்போதைய குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது, அவர்களும் நாலெழுத்துப் படித்து நன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக இல்லாமல் இருக்கச் சொல்லி, காலில் விழுந்து கும்பிட்டுக்கூட கேட்டாகிவிட்டது. ராசுவும் புரிஞ்சிக்கிற வழியைக் காணோம். அன்றாடம் சண்டை, சந்தேகம், குதர்க்கமான பேச்சு.. சே.. வாழ்க்கையே சலிப்பாகத்தான் போகிறது, வீராவிற்கு. வயிற்றில் குழந்தையை சுமக்கும் ஒரு தாய் போலவா நடந்துகொள்கிறாள். இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தொட்டதெற்கெல்லாம் அடம் பிடித்துக்கொண்டு, சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால் ஒரு மனிதன் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். இதோ, வயிற்றில் எட்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் இப்படி ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டு இன்று கீழே விழுந்து படாத இடத்தில் ஏதும் அடிபட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை. திடீரென்று இரத்தப் போக்கு ஆரம்பித்துவிட்டது. மயங்கி விழுந்த ராசுவிற்கு தண்ணீர் தெளித்தும் தெளியவே இல்லை. பதறியடித்துக்கொண்டு ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு குதிரை வண்டியும் , மாட்டு வண்டிகளும், பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுவிட்டது. மினி பஸ் காலையில் 11 மணிக்கு மட்டுமே ஒரே ஒரு முறை வரும். இரவு 8 மணிதான் ஆகிறது, தெருவே மயான அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த நேரத்தில் செய்வதறியாது, யோசிக்கவும் நேரமில்லாமல், அன்பு மனைவியை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு 14 கி.மீ. தள்ளி இருக்கிற மகப்பேறு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறான் இந்த வீரா, கூடவே மனப்பாரத்தையும் சுமந்தபடி.

“ஏ மாமா நீயே நினச்சிப்பாரு.. விவரம் தெரிஞ்சு, நானே பாவாடை கட்டுன நாளுலயிருந்து உன்னையத்தான அந்த நாடாவுல முடிஞ்சு வச்சுக்கிட்டு இருக்கேன், உனக்கு ஏன் அது புரிய மாட்டீங்கிது.. எப்பப் பார்த்தாலும் ஊருக்காக, பள்ளிக்கூடப் பிரச்சனையின்னு சுத்திக்கிட்டே திரியறயே, என்ர மாமன் எனக்கு மட்டும்தான் சொந்தம்னு இருக்கோனுமின்னு நான் நினச்சது தப்பா.. நீ வெறுங்கால்ல கஷ்டப்பட்டு அத்தனை தூரம் நடந்து பள்ளிக்கூடம் போறது மனசு பொறுக்காமத்தானே என்ர சிலுவாட்டுக்காசெல்லாம் போட்டு, சாமியண்ணகிட்ட சொல்லி உனக்கு செருப்பு தச்சுக் கொடுத்தேன். அன்னாடம் களியே தின்னு வாய் செத்துப்போய்க் கடக்கறியேன்னுதானே நான் மச்சு ஊட்டுக்கு வேலைக்குப்போய் உனக்கு நல்லஞ்சோறும், கறி குழம்பும் வாங்கியாந்து கொடுதேன். இதெல்லாம் சின்ன வயசிலருந்து பாத்துப் பாத்து பண்ணுனதெல்லாம் சொல்லிக்கிட்டா இருக்க முடியும் சொல்லு….”
அந்த குக்கிராமத்தில் சிப்பம் போடவும், துண்டு முடியவும் இப்படி சின்ன சின்ன கூலி வேலைக்குப் போகிறதை தவிர வேற என்ன செய்ய முடியும். கூலியாகக் கிடைக்கிற அந்த கொஞ்ச பணத்துல மேல் செலவும், கேப்பைக் களியும்தான் செய்து சாப்பிட முடியும். இதில் படிப்பதற்கு ஆசைப்படுவது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், அவனை எப்படியாவது ஒரு வாத்தியார் வேலைக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பது அந்த அப்பாவின் ஆசையாக இருந்தது.
”ஏஞ்சாமி, ஒழுங்கா படிச்சுப்போட்டு, எப்படியாச்சும் ஒரு வாத்தியார் வேலய வாங்கி, நம்ம ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் வரதுக்கு வழி பண்ணு ராசா.. இந்த ஊரு பேருதா பிள்ளை நிலா, ஆனா இங்க இருக்குற புள்ளைகளெல்லாம், வெய்யில்லயும், முள்ளுக்காட்டுக்குள்ளாறயும் அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்தும் நொந்து போய் கிடக்குதுக.. கால் வவுறு கஞ்சிக்கு பாவம் கால்கடுக்க நின்னுகிட்டு கிடக்குதுக. கூலி வேலயத் தவுர வேற ஒன்னும் தெரியாம நாங்கதேன் இதா.. இம்புட்டுப் பாடுபட்டுகிடக்கறோம். . இனிமேப்பட்டாவது நம்ம புள்ளைக கஷ்டம் படாம இருக்கோணும். இளமைல கொடியது வறுமையப்பா.. இனிமேப்பட்டு வர தலைமுறைனாச்சும், ஏதொவொரு நல்ல, வருமானம் வர தொழிலுக்குப் போவணும். வவுறார சோறாவது நேரத்துக்குக் கிடைக்கோணும் என்னப்பெத்த ராசா, நீதான் அதுக்கு வழி பண்ணோனும் சாமி” என்று அப்பா கண் கலங்கி பேசுறது நெஞ்சே பொளக்குற மாதிரி இருக்கும்..
அதற்குத் தகுந்தாற்போல வீராவும் சிரத்தையாக 15 மைல் தினமும் முதலில் நடந்து போயும், பின்னால் அப்பா மிகவும் சிரமப்பட்டு வாங்கிக் கொடுத்த ஒரு பழைய சைக்கிள் மூலமும் படித்துவிட்டு வந்தான். எப்படியோ பத்தாம் வகுப்பு முடித்தவுடன், நல்ல மார்க்கு வாங்கி பாஸ் பண்ணியிருந்ததால் அவன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரே அவனை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். வீட்டு நிலைமை தெரிந்து கர்ம சிரத்தையாக படித்து சாதி அடிப்படையில் மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவு என்பதால் உடனே வேலையும் கிடைத்துவிட அந்த ஊருக்கே நல்ல காலம் பிறந்தது அவனால். ஒரு நான்கு ஆண்டுகால போராட்டத்தின் பலனாக அந்த ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளி வந்துவிட்டது. பிள்ளைநிலா என்று பெயர் கொண்ட அந்த ஊர் அன்றுதான் பிள்ளைகளுக்காக வாழும் ஊரானது. அந்த ஊரிலேயே நாலெழுத்து படித்தவன் என்ற பெருமையில் யாருக்கும், பெட்டிசன் எழுதுவது, ரேஷன் கார்டு விண்ணப்பப் படிவம், முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொடுப்பது போன்ற வேலைகளும் செய்து கொண்டிருந்தான். இன்று கழிவறை கட்டுவதற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி நல்ல பலனும் கிடைத்திருந்தது. இதிலெல்லாம் ராசுவிற்கு மாமன் செய்யும் காரியத்தால் ரொம்ப பெருமைதான். ஆனால் அவ்வப்போது கிறுக்கு பிடித்ததுபோல நடந்துகொள்வாள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மச்சு வீட்டிற்கு வேலைக்குப் போய்க்கொண்டுதான் இருந்தாள். ஆறு மாதம் ஆனவுடன் வீராதான் அவளைக் கட்டாயப்படுத்தி வேலைக்குப் போவதை நிறுத்தச் சொன்னான். அதற்குப் பிறகுதான் அவள் போக்கு ரொம்ப மோசமாகிவிட்டது. வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை அவளால். அக்கம் பக்கத்தில் வேலை செய்பவர்களிடம் போய் உட்கார்ந்துகொண்டு எதையாவது பிரச்சனையை கிளப்பிக்கொண்டு இருக்க ஆரம்பித்தாள்.
“மாமா, பள்ளியூடத்துல, எவளோ புதுசா வேலைக்கு வந்திருக்காளாமே.. ஏம் மாமா உனக்கு ஆம்பள வாத்தியானே கிடக்கலியாக்கும்.. இல்ல.. நீயே தேடிப்புடிச்சு இப்புடி வெள்ளத்தோலு தொரசாணிய கொண்டாந்தியாக்கும்..”
நரம்பில்லாத நாக்கு இப்படி பச்சை, பச்சையாக பலதும் பேச, எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அடங்காமல் இன்னும் மோசமாக பேசிக்கொண்டிருக்க, பொறுக்காதவனாக ஓங்கி ஒரு அறை விட்டான் வீரா.. அவ்வளவுதான், அடுத்த மூனு நாள் அவ செய்த ரகளை இவ்வளவுதான்னு இல்லை. ஊரைக்கூட்டி வைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுது, பெற்றவர்களையும் வரவழைத்து நியாயம் கேட்கச் சொல்லி ஏகப்பட்ட ரகளை செய்துவிட்டாள். இவனுடைய பேச்சு அங்கு துளியும் எடுபடவில்லை. எல்லோரும் அவளுக்கே ஒத்து ஊதிக்கிட்டு இருக்க, வெறுத்துப்போய் அந்த இடத்தைவிட்டு தள்ளிப்போனான். வயிற்றில் குழந்தை வேறு உண்டானவுடன் அவளுடைய பிடிவாதமும், வாய்ப்பேச்சும் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாகப் போனது. என்னதான் மாமன் மகளாக இருந்தாலும், தன் மீது அளவிற்கதிகமாக அன்பு வைத்திருப்பவள் என்றாலும், தன்மானத்தைத் தீண்டும் அளவிற்கு பேசினால் எந்த ஒரு கணவனால் தாங்கிக்கொள்ள முடியும்.
கழிப்பறை வசதிகூட ஒழுங்காக இல்லாத ஒரு கிராமத்திற்கு டவுனில் படித்து, சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள் வேலைக்கு வரவேண்டும் என்று வேண்டுதலா வைத்துக்கொள்கிறார்கள். ஒற்றை ஆசிரியர் மட்டும் இருக்கும் பள்ளியையெல்லாம் அடுத்த ஊர் பள்ளியோடு இணைக்க வேண்டும் என்று எளிதாக சட்டம் போடுபவர்களுக்கு, மதிய உணவிற்காகவாவது உள்ளூர் பள்ளியில் ஒதுங்கும் நிலை பற்றி யோசிக்க முடியவில்லை. வர வாத்தியாருங்க எல்லாம் மூனு மாசம் கூட நிலைச்சு நிக்கிறதில்ல. எங்க பள்ளிக்கூடம் போயிடுமோன்னு மனசு கிடந்து தவிக்கறப்பல்லாம் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதுக்கு குறுக்கால நிற்கிறவங்களை தட்டிக் கேட்பதிலும் தவறில்லை என்றே இருந்தது வீராவிற்கு. இந்தப் பள்ளிக்கூடத்தை எப்படியும் கட்டிக்காத்துவிட வேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவனுக்கு. நேரங்கழித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சாப்பாடு கிடைப்பதும்கூட அரிதானது. பல நாட்கள் வயிறு முட்ட தண்ணீர் குடித்துவிட்டு சுருண்டு கிடக்க வேண்டியிருந்தது அவனுக்கு. எந்த நேரத்தில் அவளுக்குக் கோபம் வரும் எதைத் தூக்கி அடிப்பாள் என்று தெரியாத இந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை. அந்தக் குழந்தையை சேதாரம் இல்லாமல் பெற்றெடுக்க வேண்டுமே என்று கோவிலில் வேண்டுதலோடு, தன் அத்தையையும் கெஞ்சிக்கேட்டு கூட வந்து தங்கச் செய்ததால் பயம் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. இப்படி ஒரு வெறி பிடித்த அன்பா ஒருத்தி கணவன் மீது வைப்பாள். தன்னையும் துன்புறுத்திக்கொண்டு , மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.
“என்ர மாமன் எப்பவுமே இவ்ளோ கோபமா இருந்ததே இல்ல.. இப்பவெல்லாம் என்னக் கண்டாலே அதுக்குப் புடிக்காமப் போச்சு. அதுக்கெல்லாம் காரணம், அந்த வெள்ளத் தோலுக்காரிதான். அவளாலதான் மாமன் என்னயவே இப்புடி போட்டு அடிக்குது.. இனிமே நாம யாருக்காக பொழச்சிக் கடக்கணும்.. உசிருக்குசிரான மாமனே என்னை வெறுத்து ஒதுக்குனப்பறம் இனிமே நான் இருந்தா என்ன, செத்தா என்ன.. மாமா… என்ன இப்புடியே உட்டுப்போடு மாமா.. இன்னும் ஏன் தூக்கிட்டு சொமக்குற.. மாமா.. மாமா.. வாயில் வார்த்தை ஏதும் வரவில்லையே.. என்ன ஆச்சு எனக்கு.. நான் பேசறது யாருக்கும் கேக்கலையா.. உடம்பும் காத்தாட்டமா இருக்கு. ஒன்னியும் பிரியலியே.. மாமா.. மாமா..”
வேகமாக ஓடுகிற ஓட்டத்தில் இருதயம் துடித்த துடிப்பு, ஒரு வேளை எகிறி வாய் வழியாக வெளியே வந்தே விழுந்துடுமோ என்று பயம் வந்தாலும், எப்படியும் மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தே ஆகவேண்டும் என்ற வெறியில் எதைப் பற்றியும் நினைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறான் வீரா.. சுய நினைவு சுத்தமாக இல்லை ராசுக்கு. துவண்டு போய் கிடப்பது தெரிகிறது. ஏற்கனவே ஒல்லிப் பிச்சானாக இருப்பவள், அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு ஒழுங்காகச் சாப்பிடவில்லையோ என்னவோ, இன்னும் இளைத்துப்போய் இருக்கிறாள். ஒரு வழியாக ராசிபுரம் மகப்பேறு மருத்துவமனை அருகில் வந்து சேர்ந்துவிட்டான். எல்லைச்சாமி, முனிதான் என் தங்கத்தைக் காக்க வேண்டும் ஐயனே, என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே வந்து சேர்ந்துவிட்டான். நல்ல வேளையாக டியூட்டி டாக்டர் இருந்ததால் ராசுவை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, பெஞ்சியில் அப்படியே சாய்ந்தவன், இனி நடக்கப்போவது எல்லாம் அவன் கையில் என்று மேலே மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தான். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ராசுவைப் பார்க்க உள்ளம் பொறுக்கவில்லை.
நர்சு வந்து டாக்டர் உள்ளே கூப்பிடுவதாகக் கூறியபோது, வீராவின் கால்கள் நடுக்கம் எடுத்துவிட்டது. பிரசவ அறைக்குள் நான் எப்படி.. என்று இழுத்துக்கொண்டு வர மறுத்த வீராவை கட்டாயப்படுத்தித்தான் அந்த நர்சு உள்ளே கூட்டிச் செல்ல வேண்டியிருந்தது.
“என்னப்பா.. என்ன ஆச்சு, எப்படி அடிபட்டுச்சு. உன் மனைவி இப்ப உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா தெரியுதா உனக்கு.. என்ன நடந்திச்சின்னு சொல்லு.. கிட்டத்தட்ட 14 கிலோ மீட்டர் உன் மனைவியையும் தூக்கிட்டு ஓடியே வந்திருக்கே. அதுலயே தெரியுது உன் மனைவி மேல நீ எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு. அப்படியிருக்கும்போது ஒரு நிறைமாத கர்பிணியை எப்படி இப்படி கேர்லஸ்ஸா விட்டீங்க. “
“சார், என்னை வெளிய விட்டுருங்க சார். என்னால இதெல்லாம் பாக்க முடியல.. வெளியே வாங்க சார் சொல்றேன்.. எல்லாம் என் நேரம், விதி சார்”
“இல்லையில்லை, நீங்கள் இங்கே இருக்கலாம். வெளிநாட்டிலெல்லாம் இது சர்வ சாதாரணமா நடக்கிற ஒரு விசயம். நாங்க இங்கே கட்டாயப்படுத்துவதில்லை என்றாலும், இப்ப உங்க மனைவி இருக்கிற நிலையில் நீங்கள் இங்கு இருப்பது நல்லது. அவங்க எங்களோட ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க.. உயிர் பிழைக்கிற ஆசையே இல்லை அவங்களுக்கு. அவங்களோட ஒத்துழைப்பு இருந்தா மட்டும்தான், இரண்டு உயிரையும் காப்பாற்ற முடியும்.. ஏதாவது பேசுங்க, அவங்ககிட்ட நீங்க எப்படி அன்பா பேசுவீங்களோ அப்படி பேசுங்க.. என்ன நடந்ததுன்னு அவங்க கோவிச்சிக்கிட்டாங்களோ அதைப்பத்தின உங்க சமாதானத்தைச் சொல்லுங்க.. “
“சார், என்னோட சமாதானத்தைச் சொல்ல என்ன இருக்கு.. எல்லாம் என் விதி. நான் உசுரா நினைக்கிற என் ராசாத்தியே என்னைப் புரிஞ்சிக்கலைங்கறதுதான் என் கெட்ட நேரம்.. ” சொன்னவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
மருத்துவர் அவனை சமாதானம் செய்துவிட்டு, தைரியமாக இருக்கச் சொன்னார். தண்ணீர் கொஞ்சம் கொடுத்து குடிக்கச் சொல்லி தட்டிக் கொடுத்தார் . வீரா ஓரளவிற்குத் தெளிவாக இருந்தாலும், மனைவி நல்லபடியாக பிழைத்து வரவேண்டுமே என்ற கவலையும் அதிகமாகவே இருந்தது. மனம் திறந்து பேச ஆரம்பித்தான்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க எவ்வளவு சிரமம் இருந்ததுன்னு யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. மூனு வருஷ போராட்டம்ங்க. அதுக்கப்பறம் ஆசிரியர் இங்க யாரும் நிலைச்சு நிக்கலீங்க. நானும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்துட்டேன். வரவங்கெல்லாம் கொஞ்ச நாள் இருந்துட்டு மாற்றல் வாங்கிட்டோ , இல்லேனா வேலையையே ராஜினாமா பண்ணிட்டுக்கூட போயிடறாங்க. ஒற்றை ஆசிரியர் பள்ளி என்பதால் இதையும் மூடிட்டாங்கன்னா, அதுக்கப்பறம் எங்க ஊர் குழந்தைகள் கட்டாயம் அவ்வளவு தூரம் பக்கத்து ஊருக்குப் போயெல்லாம் படிக்க மாட்டாங்க. ரொம்ப கவலையா இருந்தப்பதான், நம்ம ஊர்க்காரர் ஒருவர் முனியப்ப சாமி கோவிலுக்கு வந்திருந்தார். நம்ம இந்திய இராணுவத்தில வேலை பார்ப்பவர். ஏதோ வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக வந்திருந்தார். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எனக்கு சீனியர் அவர். 10 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஊரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நம் பள்ளியில் ஆசிரியர் பிரச்சனை பற்றி சொன்னேன். அவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அருகில் இருந்த மனைவியிடம், அவர் டீச்சர் டிரெய்னிங் எடுத்தவர் என்பதால், தான் வரும்வரை தன் ஊர் பள்ளியில் ஆசிரியை பணியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னபோது கொஞ்சம் யோசித்தவர், கணவன் சொல்லை தட்டாததோடு, உண்மையான நிலைமையைப் புரிந்துகொண்டு, தான் இந்த ஊரிலேயே தங்கி பணியாற்றுவதாக ஒப்புக் கொண்டார். இங்கு வந்த நேரம் ஏற்கனவே போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் குழந்தைக்கு அடிக்கடி உடம்புக்கு தொந்திரவு வந்ததால், மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது, குழந்தையை பார்த்துக்கொள்வது போன்ற சில உதவிகள் செய்ய வேண்டியிருந்தது. உடன் பிறவா ஒரு சகோதரி நம் கண் முன்னால் சிரமப்படும் போது, அதுவும் ஒரு நல்ல காரியத்திற்காக என் பேச்சை நம்பி வந்து இந்த கிராமத்தில் இப்படி ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அல்லல்படும்போது உதவாமல் இருக்க நான் அத்தனை கல் நெஞ்சக்காரன் இல்லை சார். அதுவும், நாம் இங்கு நிம்மதியாக சாப்பிட்டு, நிம்மதியாத் தூங்கி எழுந்திரிக்க வேண்டி, அங்கு மழையிலும், பனியிலும் நம் நாட்டிற்காக, எல்லையில் காத்து நிற்க, இங்கு அந்த மவராசனோட குடும்பம் துன்பப்படுவதை சும்மா வேடிக்கைப் பார்க்க முடியுங்களா.. அந்த குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டியது அவசியம் இல்லீங்களா? அந்த ஒரு குறைந்தபட்ச மனசாட்சி கூட இல்லாமல் எப்படிங்கய்யா இருக்க முடியும், நீங்களே சொல்லுங்க.
நானும் ராசுவிடம் விவரமாக சொல்ல முயன்ற போதெல்லாம் அவள் என் பேச்சை காது கொடுத்து கேட்கத் தயாராகவே இல்லை. தானே ஒரு விசயத்தை கற்பனை செய்து மனதில் உறுதியாக வைத்துக்கொண்டு, வேறு எதையும் உள்வாங்காமல் இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டாள். இவ்வளவு தூரம் ஆன பிறகு, அந்த அமலா டீச்சரும், ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டார்கள். அவர்கள் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஊரைவிட்டுப் போய்விடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். இனி இந்தப் பள்ளியை ஆண்டவன் தான் காக்க வேண்டும். நான், இப்போது உயிருக்குப் போராடும் மூன்றாவது உயிரான எங்கள் பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கவலைப்படுவேனா, அல்லது என் உயிரே இங்கே போகத் துடிப்பதை வேடிக்கைப் பார்க்கப் போறேனா.. இது இரண்டையும் என்னால தாங்க முடியாது சார். விதிப்படி நடப்பது நடக்கட்டும்” என்று விரக்தியாகச் சொல்லி அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியவனை மருத்துவர் ஒரு ஓரமாக இருந்த சேரில் போய் உட்காரச் சொன்னார்.
திடீரென்று ராசுவின் இருதயத் துடிப்பு சீராகக் காட்டும் மானிட்டரைப் பார்த்து டாக்டரின் முகத்தில் நிம்மதி பிறந்தது.. எப்படியும் அமலா டீச்சரை ஊரை விட்டுபோகாமல் நிறுத்தி, பள்ளியை நல்லபடியாக நடக்கச் செய்ய வேண்டும் என்று ராசு துடித்த துடிப்பை அந்த மானிட்டர் துல்லியமாகக் காட்டியது!
முற்றும்

நன்றி : வல்லமை

2 comments:

  1. அருமையான முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அருமையான் கதை.
    நெகிழ்வாய் இருந்தது.
    ராசு நலம் பெற்று அமலாவும் , வீராவும் பள்ளியை நல்ல முறையில் நடத்தி செல்வார்கள் எனற நம்பிக்கை வந்து விட்டது.

    ReplyDelete