Tuesday, December 10, 2013

பாரதி கண்ட கனவும் மக்கள் தீர்ப்பும்


பவள சங்கரி

மகாகவி பாரதியாரின் 132வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு சுதந்திரம் பெறும் முன்னரே ஆனந்தமாக சுதந்திரப்பள்ளு பாடி கனவுலகில் குளிர்ந்தவன் பாரதி!! சுதந்திர இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று பாரதி கண்ட கனவும் அந்த ஆசையை அவர் பலவிதங்களில் வடிவமைத்துக் காட்டிய விதமும் ஒவ்வொரு இந்தியனின் உணர்விலும் ஊடுறுவிக் கிடக்கும் ஒன்றுதான் என்றாலும் அவைகள் அனைத்தும் இன்று செயல்படாமல் ஏட்டளவிலேயே நின்று போய்க்கிடப்பதற்கான ஆதாரங்களும் பல. பாரதி கண்ட கனவுகளில் பல இன்றும் கனவுகளாகவே உள்ளதுதான் வேதனைக்குரிய விசயம். பாரதி கண்ட யுகப் புரட்சியும், உருசியப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி பற்றி பாடிவைத்துப்போன அனைத்தும் இன்றும் நினைவுகூரத்தக்கது!

மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற்கடைக்கண் வைத்தாள். அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்களெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
வையகத்தீர், புதுமை காணீர்!

உருசிய நாட்டில் கடைக்கண் பார்வை வைத்த மாகாளி நம் நாட்டிலும் வைக்க வேண்டும் என்ற பாரதியின் கனவு நனவாகும் காலம், மக்கள் நல்லாட்சி பெறும் காலம். இன்று ஐந்து மாநிலங்களின் தேர்தல் நடந்து முடிந்து வெற்றி தோல்விகளைப் பற்றி அறிவித்து யார் பதவிக்கு வரப்போகிறார்கள் என்பதை அறியும் சூழலில் இருக்கிறோம். இதில் நம் கவனத்தை ஈர்ப்பது, எங்கெல்லாம் நல்ல ஆட்சி நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் மக்கள் தங்கள் வாக்குகள் என்னும் புரட்சிகள் மூலம் அவர்களுக்கு மீண்டும் பதவியைக் கொடுத்து புரட்சி ஏற்படுத்தியுள்ளார்கள். ஐந்து மாநிலங்களிலும் நடந்த தேர்தலில் மிஜோரம் மாநில முதல்வர் லால் தன்ஹாவ்லா ஐந்தாவது முறையாக அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றிக்கான காரணமாக அவர் குறிப்பிடுவது கடந்த 5 ஆண்டுகளாக தாம் வழங்கிய ஊழலற்ற ஆட்சி என்பதுதான். அது போலவே டெல்லி சட்ட சபைக்கு நடைபெற்ற தேர்தலிலும் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் இன்று மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிர்ப்பாக பிரச்சாரம் செய்த கட்சியான, ஆம் ஆத்மி என்ற கட்சி அறிமுக நிலையிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் 27 இடங்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது! ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை ஆண்ட ஆளும் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நல்ல ஆட்சியை வழங்கியதாலேயே அவரை மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான விழிப்புணர்வு பெறும் காலமாகவே உள்ளது இது.
பாரதி கண்ட மற்றொரு கனவு பெண் விடுதலை!
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!
இன்று நிமிர்ந்த நன்னடையால் அமில வீச்சும், பாலியல் வன்கொடுமைகளும் பரிசாகக் கிடைக்குமோ என்று அஞ்சி, அஞ்சி முக்காடிட்டு குனிந்த தளர்நடை நடக்க வேண்டிய சூழலுக்குப் பல பெண்கள் தள்ளப்பட்டிருக்கும் கொடுமையை அந்த பாரதி ஒருவேளை கண்டிருந்தால் இன்னும் என்னவெல்லாம் பாடிவைத்திருப்பானோ?
“காலனி ஆதிக்கத்திலிருந்து புதிதாக விடுதலைப் பெற்ற நாடுகள் தன் சொந்த காலில் நிற்க வேண்டும், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டுமென்றால் அந்த நாடு மின்சாரத்திலேயும், இரும்புக் கனி வளத்திலேயும், பெட்ரோலியத்திலும் தன்னிறைவுப் பெற்றிருந்தால்தான் ஒரு நாடு வேற்று நாடுகளுக்கு அடிமையாகாமல் தம் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்” என்று லெனின் சொன்ன இந்த வார்த்தைகள் இன்று இந்தியாவிற்கு எப்படிப் பொருந்துகிறது என்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றிற்காக அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை எதிர்பார்க்க வேண்டிய மோசமான சூழலில் நாடு இருப்பது வேதனையான விசயம்.
பெண் அடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்த கவிஞன் பாரதி, தமிழுக்கும் தமிழினத்திற்கும் செய்த தொண்டு பாராட்டிற்குரியது. புலவர்கள் மத்தியில் முடங்கிக் கிடந்த தமிழை பாரதி தன் எளிய நடை மூலம் அதனைக் கையைப் பிடித்துப் பொதுமக்களிடம் கூட்டி வந்து சேர்த்துள்ளான் என்றால் அது மிகையல்ல. தமிழ் மொழியின் இனிமையை முழுமையாக உணர விரும்புபவர்களுக்கு இன்றும் அவன் பாடல்களுக்கே முதல் வாய்ப்பு . வெளிநாடுகளில் அடியுதைபட்ட தமிழச் சாதிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குரல் கொடுத்தவன் பாரதி.
சாத்திரங்கள் பல தேடினேன் – அங்கு
சங்கையில்லாதன சங்கையாம் – பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ?
என்று பாடிய மனிதாபிமானி!
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
என்ற பாரதியின் வரிகள் சத்தியமானவைகள். வெறும் புகழ்ச்சி இல்லை. பாரதியின் கவிதை வீச்சை வெல்லத்தக்க கவிஞர் வேறு எவரும் இன்னும் பிறக்கவில்லை என்பதே உண்மை.பாரதிதாசன் பாரதியை உச்சி மீது வைத்து மெச்சுவதொன்றே போதும் அவன் புகழுக்கு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய’ இந்த மண்ணில் சாதி மத வேறுபாடு அகன்றிட, அறியாமை இருள் நீங்கிட ,சமுதாயம் சீர் பெற்றிட, வறுமையை வெளியேற்ற ‘எல்லோரும் ஓர் நிலை எல்லோரும் ஓர் நிறை’ ஆகவேண்டும் என்று கனவு கண்ட பாரதியின் கவிதையில் ஷெல்லியின் கற்பனை, பிரௌனிங்கின் வாழ்வு நோக்கு, வோர்ட்ஸ்வொர்த்தின் கடவுள் கொள்கை, , டென்னிசனின் கவிதையின் எளிமை போன்றவற்றைக் காணலாம். மகாகவிஞன் பாரதி, புதிய சுதந்திரப் போர்ப் படையைப் படைத்திட்ட கவித்தளபதி என்றால் அது மிகையாகாது. பெரும் கவிப்பரம்பரையையே படைத்திட்ட படைப்பாளி என்பதே உண்மை. உன்னதமான சிந்தனையாளன். பாரதியின் பாடல்களால் விழிப்புணர்வு பெறுவோர் எண்ணிக்கை இன்றும் குறைந்தபாடில்லை என்பதே நிதர்சனம்! வாழ்க பாரதி புகழ்!
நன்றி : வல்லமை தலையங்கம்

2 comments:

  1. சிறப்பான பகிர்வு... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான பகிர்வுக்கு நன்றிகள். வாழ்க பாரதி புகழ்!

    ReplyDelete