Saturday, February 25, 2012
உண்மை நெறி சொல்ல முனைந்தவர்
Tuesday, February 21, 2012
நாங்களும் மாணவர்கள்தான்!
நேர்காணல் – சித்தார்த்தா பள்ளி மாணவர்கள்
உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.! – காந்தியடிகளின் இந்த சத்தியமான வார்த்தைகள் எக்காலத்திற்கும், மனிதராய்ப் பிறந்த எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியது.
ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்களுக்குத் தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளும், கற்பனைகளும் உடன் தோன்றுவதும் இயற்கை. அதனை நன்முறையில் செயல்படுத்தும் வகையில் அவர்கள் மனதில் தோன்றக்கூடிய அடுத்த விசயம் குழந்தையின் கல்வி. தம் குழந்தையை, ஒரு பிரபலமான பள்ளியில் சிறந்த மாணவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. அவரவர் குடும்பச் சூழலுக்கேற்றவாரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிரம்மாண்ட கட்டிடங்களுடன், அதிகக் கட்டணமும் வசூலித்து, அதிக மதிப்பெண்கள் வாங்க வைத்து, நூறு சதவிகித தேர்வு முடிவுகள் காட்டும் வல்லமை பெற்ற பள்ளிகளே சிறந்த பள்ளிகளாகவும் முடிவு செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்து பயிலச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு, பிரம்மப் பிரயத்தனப்பட்டு அது போன்ற பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோரே அதிக அளவில் உள்ளனர்.
அண்ணல் காந்தியடிகள் தம்முடைய, ‘நயீ தலீம்’ என்ற கல்வி முறையின் மூலம் இந்தியாவில் தொழில் மூலம் கல்வி கற்கும் முறையை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தார். குழந்தைகள், தங்கள் கைகளினாலேயே பொருட்கள் தயாரிப்பதை, மிகவும் விரும்பி வரவேற்றனர். அனைத்துக் கல்வியும், ஏதாவது, கைவினைப் பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார். உதாரணமாக, குழந்தைகளை, பஞ்சு பொறுக்கிப் போடுவதற்கு, அழைத்துச் சென்று, அது எப்படி விளைகிறது என்கிற விளக்கங்களையும் கற்பிக்கலாம். பஞ்சு விளையக் கூடிய நாடுகள், பலதரப்பட்ட பஞ்சு வகைகள், அதனைப் பயிரிடும் முறைகள் மற்றும், அதன் வளர்ச்சி குறித்த தகவல்கள் போன்றவற்றையும் கற்பிக்கலாம்.
இந்த முறையில் குழந்தைகளின் கற்கும் ஆவல் கட்டமைக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் அளிப்பதன் மூலம் மண் எப்படி நீரை உரிஞ்சுக் கொள்ளுமோ அது போல அவர்களுடைய ஆழ்மனதில் அனைத்தும் பதிந்துவிடும். எதையும் சிரமப்பட்டு மனப்பாடம் பண்ண வேண்டியத் தேவையுமில்லை. படிப்பும்,
எழுத்தும், பின்னாளில் வந்து விடும். ஆனால் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாரு சில மாற்றங்களுடன், படிப்பும், எழுத்தும் சேர்த்துக் கூட இது போன்ற கல்வி முறைகளை முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு கல்வி கற்பது ஒரு சுமையாக இல்லாமல் அது வாழ்க்கைக்குத் தேவையான, வகையில் அமையலாம். உடல் உழைப்பும் சேர்ந்த தாய் மொழி வழி – தொழில் சார்ந்த கல்வி என்பது நமக்கு கனவாகவே இருக்கப் போகிறதா? என்பதும் நம் கல்வியாளர்களின் கவலையாகவும் உள்ளது
Hong Kong Institute of Educational Research, The Chinese university of Hong Kong பல்கலைக்கழகங்கள் இளம் சிறார்கள் முதல் பதின்மப் பருவத்தினரின் (6 முதல் 18 வயது பருவத்தினர்) கல்வி முறைமைகளின் மூலம் கல்வித் தகுதியில் முன்னேற்றம் இருப்பது போன்று சமூக வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த ஆய்வுகள் உலகளாவிய முறையில் 2006, ஜூன் 3ஆம் தேதியில் மேற்கொள்ளப்ப்பட்டது.
OST (out-of-school-time services.என்ற பள்ளிக்கு வேளியேயான செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் மூலம், உலகளவில் பள்ளி மாணவர்களுக்கான ஐந்து பொதுவான, பரிமாணங்கள குறிப்பிடப்பட்டுள்ளன.
1. குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும் – நான் மிகச்சிறந்து விளங்குவதற்கு உதவி புரிபவரான எம் ஆசிரியர் இருக்கும் இடமே எம் பள்ளி என்ற எண்ணம்.
2. சமூக ஒருங்கிணைப்பு: மாணவர்களின் சக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பழகும் தன்மை. என் பள்ளி என்பது நான் நானாக அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் இடம் என்ற எண்ணம்.
3.வாய்ப்பு: பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் தொடர்புடைய அவர்தம் கருத்துகள்- என் வாழ்க்கைக்கு மிக முக்கியமான விசயங்களைக் கற்கக் கூடிய இடமே எம் பள்ளியென்பது…..
4. சாதனை: பள்ளிக் காரியங்களில் வெற்றியாளராக இருக்கக் கூடிய தன்மை – ஒரு மாணவனாக நான் வெற்றியடைந்திருக்கக் கூடிய ஓர் இடமே எம் பள்ளியென்பது.
5. சாகசம் : கல்வி கற்பதற்கான சுய ஊக்கம் மற்றும் கற்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று என்ற தெளிவு – நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என்னை உற்சாகமடையச் செய்ய்க்கூடிய இடம் எம் பள்ளியென்பது.
உலகளவில், பள்ளிக் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களாக குறிப்பிடப்படுவன,
1. பொதுவான மன நிறைவு: தம் பள்ளியைப் பற்றிய ஆக்கப்பூர்வமான எண்ணங்கள். கொண்டிருப்பது. அதாவது, நான் தினமும் விரும்பிச் செல்லும் இடம் எம் பள்ளி என்ற என்ணம் மேலோங்கியிருப்பது.
2. எதிர்மறையான பாதிப்பு: பள்ளியைப் பற்றிய எதிரான எணணங்களைத் தோற்றுவிப்பது. அதாவது, பள்ளி என் மனநிலையைப் பாதித்து வருத்தமேற்படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது என்ற எண்ணம் கொண்டிருப்பது.
ஒரு நூற்றாண்டாக, பள்ளிக்கு வெளியே ஆற்றும் செயல் திட்டங்களின் மீதான ஆர்வம் அமெரிக்க மக்களிடமும் வெகுவாகக் குறைந்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற திட்டங்களில், பள்ளிப் பருவக் குழந்தைகளின் பயிற்சியாளர்கள், இளைஞர் மேம்பாட்டு வல்லுநர்கள், கல்வியாளர்கள், குற்றவியல் மற்றும் சிறார் நீதித்துறை வல்லுநர்கள், வறுமை ஒழிப்பு வல்லுநர்கள் போன்றவர்கள் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடிய ஓர் உபாயம் இத்திட்டம் என்பதனை வாதிட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய இந்த பிரம்மாண்ட ஆய்வுகளின் முடிவில், கிடைத்த மதிப்பீடுகளின்படி, கல்வி கற்றலில் நல்ல ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும், சாதனைகளும் தென்பட்டதோடு, போதைப் பழக்கம், பெண் குழந்தைகளின் இளவயது கர்ப்பம், சிறார்களின், சிறு குற்றங்கள், போன்றவைகள் கணிசமாகக் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சங்கடமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் பக்குவமும், பள்ளியில் கல்வி கற்பதில் மட்டுமே முழு நேரமும் ஈடுபட்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு பேருதவி புரிவதாகவும், இதனால் மன உளைச்சலிலிருந்து விடுபடுவதால், தேர்வில் மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றமும் கிடைப்பதாகவும் , குறிக்கோள்களை நிர்ணயிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடும் ஏற்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் சூழலுக்கு இத்தகைய ஆய்வுகள் எந்த வகையில் பயன்படுகின்றன, குழந்தைகள் இதனால் பயனடைகிறார்களா என்று அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், கல்வி கற்றலைத் தாண்டி ஒரு சில கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஏதோ ஓரிரு முறைகள் உல்லாசப் பயணங்கள் செல்வது போன்றவைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வி சார்ந்த பிராஜக்ட் மட்டுமே வழ்மையாக் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் குழந்தைகளின் மனநிலையில் அழுத்தம் ஏற்படுவதோடு, தொடர்ந்து கல்வி கற்றலில் ஈடுபடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் அத்தகைய இறுக்கமான மனநிலையே அவர்களை தவறிழைக்கவும் தூண்டுகிறது. பள்ளிப்பாடத் திட்டங்களைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கே கால அவகாசம் இருப்பதில்லை. இதில் இது போன்ற சமூக வளர்ச்சித் திட்டங்கள் செயல்பாடுகள் என்பதெல்லாம் சாத்தியமாவது கடினம் என்பதே பல பள்ளிகளின் நிலைப்பாடாக உள்ளது.
அந்த வகையில் ஈரோடு சித்தார்த்தா மேல்நிலைப்பள்ளியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இது போன்று திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1989-90இல் பவானியில் சாயக்கழிவு நீர் மூலம் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் ஈரோட்டிலிருந்து, மிதிவண்டி பயணம் சென்று பாதுகாப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அது போன்று ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒரு திட்டம், அதாவது சமூக நலம் தொடர்பாகவும், அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் மற்றும் நம் நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும், குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்க்கைத் தரம் பற்றி அறிந்து கொள்ள்வும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான தீர்வுகளையும் ஆய்ந்து அறிக்கை வெளியிடுகின்றனர். சென்ற ஆண்டில் தெருவோரங்கள் மற்றும் நடைமேடை போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் மாணவர்கள் எடுத்த முயற்சியும் அதற்கான அவர்களின் பரிந்துரையும், அத்துறை மேலாளர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள், சவரத் தொழில் செய்பவர்கள், சலவைத் தொழில், தையற்கலைஞர்கள், கட்டிடம் கட்டுமானத் தொழிலாளர்கள் ,காய்கறி விற்பவர்கள் என அனைத்து சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், அவர்களின் தொழில் மற்றும் வியாபாரம் குறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான ஆய்வேடுகளும் சமர்ப்பித்துள்ளனர். ஆசிரியர்களின் ஆலோசனையுடன், வெகு நேர்த்தியாக அவர்கள் திட்ட அறிக்கை தாயரித்திருந்தது பாராட்டுதலுக்குரியது.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் சவரத் தொழிலாளர்களின் கணக்கெடுப்பைச் செய்தனர். மாண்வர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து, நகர எல்லைக்குள் ஒவ்வொரு குழுவும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு உள்ள ஒவ்வொரு சவரத் தொழிலாளர்கள், அதாவது பெட்டி தூக்கிக்கொண்டு மரத்தடியில் சவரம் செய்யும் மிகச் சாதாரண கடைநிலை சவரத் தொழிலாளி முதல், ஆண்களுக்கான அழகு நிலையம் வரையிலான அனைத்துத் தரப்பு தொழிலாளர்களான சராசரியாக 80 பேரிடம், அவர்களுடைய வாழ்க்கைத்தரம், தொழில், அவர்தம் குடும்பச் சூழல், அவர்தம் மக்களின் கல்வி, எதிர்காலத் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டியதோடு, அவர்தம் வாழ்க்கை உயரவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரை அனைத்துத் தரப்பு ஆய்வுகளையும் மிக நேர்த்தியாக செய்திருந்தனர். சவரத் தொழில் செய்யும் நபர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் முன்னிலையில் தாங்கள் அறிந்து கொண்ட கலைகளை செயல் முறை விளக்கமாகவும் நடித்தும் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் அந்தக் கழிவுகள் சரியாக அப்புறத்தப்படுத்தப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் நோய்த் தொற்று வராமல் இருக்கும் வகையில் சுத்தமான கைத்துண்டுகள் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளேடுகளை பயன்படுத்தலாம் என்பதற்கான விழிப்புணர்வை சிறிய சவரத் தொழிலாளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர, தம் தொழிலில் முன்னேறக் கூடிய வழிகள், , வங்கிக் கடன் பெறும் வழி முறைகள் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும் அளித்துள்ளனர். ஆசிரியர்கள் இதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இறுதியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றிருந்த சவரத் தொழிலாளி நண்பர், கண்கள் கலங்கி, உள்ளம் நிறைந்து, இக்குழந்தைகளை வாழ்த்தியதோடு, அந்தத் தெளிவான ஆய்வறிக்கையை தங்கள் சங்கத்தில் வைப்பதற்காக ஒரு கோப்பு வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். உள்ளம் நெகிழ்ந்து அவர் நன்றி சொன்னதும், அவர் தன்னம்பிக்கையுடன் மேடையிலிருந்து கீழிறங்கிச் செல்வதையும் காண முடிந்தது.
அடுத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சலவைத் தொழிலாளர்களை இதே முறையிலும், அவர்தம் வாழ்க்கை முறைகளைக் கேட்டறிந்து கொண்டதோடு, அவர்களுக்கான முன்னேற்றத்திற்காக , இன்று வெகுவாக குறைந்துவிட்ட வெள்ளாவி வைத்து துணியை வேகவைத்து சுத்தம் செய்யும் முறையை சற்றே நவீனமாக, பெரிய மின்சாரத் தானியங்கி இயந்திரங்கள், முக்கியமாக, அதிக அளவிலான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில், வெளிநாடுகளில் உள்ளது போன்று ,வைத்து மக்கள் கட்டணம் செலுத்தி தாங்களே வெளுத்துக் கொள்ளும்படி வைக்கலாம். அதற்கு அரசாங்கம் மற்றும் வங்கிக் கடன் உதவியும் பெறலாம். சலவைத் தொழிலாளகள் குழுக்களாக இணைந்து கூட இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் சுற்றுப் புறமும், படித்துறைகளும். நீர்நிலைகளும் மாசுபடுவதைச் சுத்தமாகத் தவிர்க்க இயலும் என்பதையும் இந்தக் குழந்தைகள் தங்கள் ஆய்வேட்டில் குறித்துள்ளதோடு அதனை அம்மக்களிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் இது போன்ற கருத்துகள் மெல்ல மெல்ல நடைமுறைபடுத்தப்படும் வாய்ப்பும் உருவாகும் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் வரலாற்றை சிறு நாடகமாக ஆக்கி, ஆண்டவனே அவ்வடியாருக்குக் காட்சி கொடுத்த வகையில், அவர்தம் தொழில் எத்துனை சாலச்சிறந்தது என்பதை எளிதாக விளக்கியும் காட்டி , சிறப்பு விருந்தினராக வந்த அந்த சலவைத் தொழிலாளியை நெகிழ வைத்தனர்.
அடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், காய்கறி வியாபாரிகளைச் சந்தித்து அவர்தம் தொழிற்முறைகள், வாழ்க்கை முறைகள், குழந்தைகள் கல்வித் தகுதி போன்ற பல வகையான விளக்கங்களை அலசி ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான செயல்முறை விள்க்கங்களும் செய்து காட்டினர். காய்கறி சந்தை போன்றும், தள்ளு வண்டியில் காய்கறிகள் விற்பது போன்றும் மிக நேர்த்தியாக நடித்துக் காட்டியது, அவர்கள் அத்தொழிலை ஆழமாக புரிந்து கொண்ட விதத்தை தெளிவாகக் காட்டியது. தராசில் நிறுக்கக் கூடிய முறைகள், அதைச் சரியாகப் பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார்கள் அவர்கள். அதுமட்டுமல்லாமல் அக்காய்கறிகளின் சத்துகள், அவைகள் விளையக்கூடிய இடங்கள் , அதற்கான தட்பவெட்ப நிலைகள், போன்ற அனைத்துச் செய்திகளையும் மிக நேர்த்தியாக சேகரித்து அறிக்கையாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அழுகிய காய்கறிகளை உரமாக மாற்றக்கூடிய முறையையும் அதனால் வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தியதோடு, அப்பள்ளித் தாளாளர், திருமதி ஜெயபாரதி அவர்கள், மண்புழு உரம் தயாரிக்க இது போன்று அழுகிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் அதற்கான இடம் ஒதுக்குவது மற்றும் அதற்கான செலவுகளுக்கான வங்கிக் கடன் பெறுவதற்கோ வழியமைத்துக் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதும் பாராட்டிற்குரியது. அக்குழந்தைகள் ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து பெட்ரோல் தயாரிக்க இயலும் என்ற சமீபத்திய ஆய்வையும் எடுத்துரைத்ததும் அவர்களுடைய சமுதாய விழிப்புணர்வைப் பறை சாற்றுவதாக அமைந்திருந்தது. காய்கறிக் கழிவுகளை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் அப்புறப்படுத்தும் ஆய்வையும் அழகாக மேற்கொண்டு அதற்கான அறிக்கையும் அளித்திருந்தனர். அனைத்திற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டித் தேசிய பசுமைப்படை இயக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மன்றம் மூலம் தம் பள்ளியில் தயாரித்த துணிப்பைகளை அங்காடியில் வழங்கி அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த அங்காடியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஓர் பெண்மணி இக்குழந்தைகளின் திறமை மற்றும் பொறுமை போன்ற விசயங்கள் குறித்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து கட்டிடக் கலைத் தொழிளாளர்களின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த எட்டாம் வகுப்பு மாணவர்களின் திறமை வெளிப்படையாகத் தெரிந்தது அவர்கள் வடிவமைத்திருந்த சிறு மாதிரிக் குடில் மூலம். ஆம். அத்துனை அழகாக தாங்களே ஒரு கட்டிடத் தொழிலாளியின் ஆலோசனையுடன் மிக நேர்த்தியாக கட்டியிருந்தனர். உறுதியான கட்டிடம் எழுப்புவதற்கு எந்த அளவிலான கலவை இருக்க வேண்டியது அவசியம் என்பது முதற்கொண்டு மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்ணீர் வரும் குழாய்களைக் கூடத் தங்களின் கற்பனைத் திறனுடன், ஒரு சிறு புட்டியுடன் சேர்த்து இணைத்து, அதற்கான வால்வுகளையும் பொறுத்தி தண்ணீர் வரும்படி செய்து வைத்திருந்ததும் ஆச்சரியப்பட வைத்தது. அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்தம் குழந்தைகளின் கல்வித் திறம் குறித்த தகவல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் மிக அழகாக அறிக்கையாக்கியிருந்தனர். கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும், கற்கள், ஓடுகள், மார்பிள், டைல்ஸ், வர்ணங்கள், மரப்பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் மிக நேர்த்தியாக காட்சியாக்கியிருந்தனர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து தையற்கலைஞர்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருந்தனர் 11ஆம் வகுப்பு மாணவர்கள். அவர்களும் அதற்கான தெளிவான அறிக்கை சமர்ப்பிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை. வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சிறு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மற்றும் அசையாச் சிலையாக அழகாக நின்று ஆச்சரியப்பட வைத்த மாணவர் மற்றும் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது போன்று துணிகளைப் பற்றியும், தையல்கலை பற்றியும் அழகாக விளக்கமளித்த மாணவர் மற்றும் நவீன முறை தையலகம் வடிவமைப்பு போன்ற பல விசயங்களில் தெளிவான விளக்கம் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண் தையற்கலை வல்லுநர்கள் இருபாலருக்கும் ஆடைகள் தைக்கும் வல்லமை பெற்ற அளவிற்கு பெண் தையற் கலைஞர்கள், பெண்களுக்குரிய ஆடைகளை மட்டுமே தைக்கும் வழக்கமே பெரும்பாலானவர்கள் கொண்டிருப்பதாக அவர்கள் சமர்பித்த அறிக்கையில் இருந்ததும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.
அனைத்து மாணவர்களையும் இறுதியாக வாய்மொழித் தேர்வாக எழுப்பப்பட்ட வினாக்கள் மூலம் அவர்கள் அறிந்து கொண்டதாகக் கூறிய விசயங்கள்தான் சித்தார்த்தா பள்ளியின் உன்னதமான இம்முயற்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். ஆம், அக்குழந்தைகள் அனைவரும் ஒன்று போல சொன்ன விசயங்கள்:
எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. நாம் செய்யும் தொழிலே நமக்கு தெய்வம்.
செய்யும் தொழிலை வைத்து அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கொள்வது முறையல்ல.
கைத்தொழில் சிறு வயது முதலே கற்றுக் கொள்வது பிற்காலத்தில் கட்டாயம் பயன்படும்.
நவீன முறைமைகளை பின்பற்றுவது மூலமாக தனி மனித வாழ்க்கை உயர்வடைவது போன்றே சமுதாயமும் உயர்வடைந்து நம் நாடும் நல்ல முன்னேற்றம் காணும் வாய்ப்பும் அதிகம்.
ஓய்வு நேரங்களை இது போன்று ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட பயன்படுத்தும் போது, மன இறுக்கமும் குறைந்து, சமுதாயத்திற்காக தம் பங்களிப்பையும் வழங்கியுள்ள மன நிறைவும் கிடைக்கிறது.
தேவையற்ற தீய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் அறவே நெருங்க முடியாத அளவிற்கு உள்ளத் தெளிவு ஏற்படுகிறது .
சமுதாயத்தில் பொது மக்களிடம் பழகும் தன்மை மற்றும் சக மனிதரை மதித்துப் போற்றும் வள்ளல் தன்மையும் இயல்பாவதும் சிறப்பு.
தம் எதிர்காலம் குறித்த தெளிவான குறிக்கோள் அமைப்பதற்கான அடிப்படை விழிப்புணர்வு பெற முடியும் நிலை.
தன்னம்பிக்கை, குழுவாக இணைந்து பணிபுரியும் திறன், விடாமுயற்சி, பொறுமை, தாம் நினைத்ததை சொற்கள் மற்றும் செயல்கள் மூலமாக வெளிப்படுத்தும் திறமை.
ஆசிரியர்களிடம் நட்புறவுடன் மற்றும் அன்புடன் பழகும் வாய்ப்பு.
சமுதாயத்தில் தானும் ஒரு சாதனையாளர் என்ற மன நிறைவு.
தங்களுக்கு இது போன்ற சமூகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான கால அவகாசம் எவ்வாறு கிடைக்கிறது என்று கேட்ட பொழுது தாளாளர் ஜெயபாரதி அவர்கள் அமைதியான புன்சிரிப்புடன், மனம் இருந்தால் மார்கமுண்டு என்று கூறியதில் அர்த்தம் இருப்பதாகவே உணர முடிந்தது.
இப்படி இன்னும் பலப்பல காரணங்களை மாணவர்கள் குறிப்பிட்டதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இம்மாணவர்களின் எண்னங்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படுவதற்காக அப்பள்ளித் தாளாளர் திருமதி ஜெயபாரதி மற்றும் முதல்வர் , ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து, நாமும் இனி ஆசிரியர் உமாமகேசுவரி அவர்களுக்கு நடந்த கொடுமை நடக்காது என்ற நம்பிக்கையும் முளைவிட மன நிறைவுடன் வந்தோம்!
நன்றி : வல்லமை வெளியீடு.
-
உதயன் படங்களைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றியவை... நன்றி. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு. (மீன்கொத்தி...
-
கண்ணதாசனின் ‘சேரமான் காதலி' (சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்) தமக்கென ஒரு உலகைப் படைத்துக்கொண்டு அதில் தாமே சக்கரவ...
-
பவள சங்கரி h ttps://www.youtube.com/watch?v=AXVK2I37qbs சமுதாயத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்திய, சிவவாக்கியர், ‘புரட்சிச் சி...