பவள சங்கரி
நிலையான குறிக்கோளும், தெளிவான சிந்தையும்!
நாம் எல்லோருமே வாழ்க்கையில்
வெற்றியாளர்களாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறோம். எங்கு வெற்றி, எதில்
வெற்றி என்று நிலையான ஒரு குறிக்கோள் இருந்தால்தானே அந்த வெற்றிப் பாதையை
நெருங்க முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது இலக்கு இல்லாத ஓர்
பயணம் போன்றது. மேலோட்டமாக, பொத்தாம் பொதுவாக ஒரு குறிக்கோள் என்பதைவிட
உறுதியான மற்றும் நிலையானதொரு குறிக்கோளைக் கொண்டிருத்தல் வேண்டும்.
அதற்குத் தெளிவான சிந்தனை வேண்டும். நாம் சாதிக்க நினைக்கும் விசயங்களை
முதலில் பட்டியலிட வேண்டும்.
உதாரணமாக நம் இலட்சியம் குடியிருப்பதற்கு
ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த வீடு எந்த அளவில், எந்த
இடத்தில், அதாவது நகரத்தின் மையப் பகுதியிலா அல்லது நகர எல்லையை விட்டு
அமைதியான ஒரு பகுதியிலா என்பது போன்றதோடு அதற்கான செலவு எவ்வளவு ஆகும்
போன்ற அனைத்தையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். இதில் மிக முக்கியமானது
நம் சக்திக்கு உட்பட்ட இலட்சியமாக இருக்க வேண்டியது. நம் தகுதிக்குத்
தகுந்த குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வாடகை வீட்டில்
குடியிருக்கும் ஒரு அரசாங்கப் பணியில் இருப்பவரின் ஆசை அதைவிட சற்றே
பெரிதான, கொஞ்சம் அதிகமான வசதிகளுடன் கூடியதான் ஒரு சொந்த வீடு கட்ட
வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் உடையவராக இருந்தால் அது சாத்தியமாவதில்
பெரிய பிரச்சனை இருக்காது. தாம் செய்யும் வேலையை நல்ல விதமாகச் செய்வதோடு,
கூடுதலான நேரப் பணியையும் (overtime) ஏற்றுக் கொள்ளலாம். எந்த வங்கியில்
குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள், அதைத் திருப்பிச் செலுத்தும் வழி
எந்த அளவு சாத்தியம் போன்ற அனைத்தையும் தெளிவாகத் திட்டமிடல் அவசியம்.
இப்படி திட்டமிட்ட விசயங்களைத் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் பதிவிட
வேண்டியதோடு அதனைத் தாமும், தம் குடும்பத்தாரும் அன்றாடம் அதிகமாகப்
புழங்கும் இடத்தில் கண்ணில் படும்படியாக வைக்க வேண்டியது அவசியம். இது
கேட்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் பல வெற்றியாளர்கள்
இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது விசாரித்துப்
பார்த்தால் அறியலாம். ஒரு வீடு கட்டுவது என்பது அந்த குடும்பத் தலைவன்
மற்றும் சம்பாதிக்கும் மனைவி ஆகிய இருவரின் கையில் இருந்தாலும், ஓய்வு
பெற்ற பெற்றோர் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகியோருக்கும் இந்த இலட்சியம்
அறிந்திருந்தால் குடும்பத்திலோ அல்லதுதனிப்பட்ட முறையிலோ தேவையற்ற
அதிகப்படியான செலவினங்களைக் குறைத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும்
முக்கியத்துவம் கொடுத்தும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு பெரிதும் துணையாக
இருப்பார்கள். அந்த இலட்சியத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அடைவது
எப்படி?