பவள சங்கரி
வாசிப்பினை நேசிப்போம்!
வாசிப்பினை சுவாசிப்போம்!
வாசிப்பினை சுவாசிப்போம்!
நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிறை முத்தமிடப் போனான் பகத்சிங்.