Tuesday, September 24, 2013

வல்லமையில் புத்தக மதிப்புரை போட்டி!


பவள சங்கரி
வாசிப்பினை நேசிப்போம்! 
வாசிப்பினை சுவாசிப்போம்!
நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிறை முத்தமிடப் போனான் பகத்சிங்.

ஒரு முறைக்கு பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகங்கள், படித்தவுடன் பச்சென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் புத்தகங்கள், படித்தவுடன் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிற நூல், இப்படி ஆக்கப்பூர்வமாக நம் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது நல்ல நூல்களின் வாசிப்பு. சில நேரங்களில் உணர்வுப்பூர்வமாக நம்மை ஒன்றிணைத்தும்விடுகிறது. வாழ்க்கையில் உள்ள கோடிக்கணக்கான சுவாரசியங்களும், அதிசயங்களும் ஒரு ஆசிரியரின் பார்வையில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதைவிட ஒரு படி மேலாக அந்த வாசகனுக்கும் ஏற்படுத்துகிறது என்பதே சத்தியம். ஆனால் அந்த வாசகன் அதை எந்த அளவிற்கு உள்வாங்கி வாசிக்கிறான்.. அல்ல..அல்ல… நேசிக்கிறான் .. அல்ல.. சுவாசிக்கிறான் என்பதை வைத்தே அதன் அளவுகோல் நிர்ணயமாகிறது! தாம் இறந்த பின்புகூட தம் சடலத்தின் மீது மலர் செண்டுகள் வைக்க வேண்டாம், மகத்தான புத்தகங்களை வையுங்கள் என்று கேட்டுக்கொண்ட புண்ணியவான் பண்டித நேரு அவர்கள். புற்று நோயால் பாதிப்படைந்து, தன் இறுதி நாளை எண்ணிக்கொண்டிருந்த சமயம், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நேரத்தில், தமக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் என்று கேட்டாராம், அறிஞர் அண்ணா. காரணம் தெரியாமல் விழித்தவர்களிடம் தாம் வாசித்துக் கொண்டிருக்கும் நூலின் மீதமுள்ள சில பக்கங்களை முழுவதுமாக வாசித்து முடிக்க வேண்டும் என்றாராம்! இப்படிப்பட்ட அற்புதமான வாசிப்பை ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று பகிர்ந்து கொள்வதுதானே முறை? வாசிப்பு எனும் தியானத்தை நேசிப்போம்! அதைச் சுவையாக அறிமுகமும் செய்து பரிசுகளையும் வெல்வோம்! வாருங்கள் நண்பர்களே! எழுத்தாளர்களையும், பதிப்பகத்தார்களையும், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசித்து மதிப்புரை வழங்குபவர்களையும் கௌரவிக்கும் விதமாகவே இப்போட்டி நடத்தப்படுகிறது. அனைவரும் கலந்துகொண்டு இப்போட்டியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். இப்போட்டியை நடத்துவதற்கான பரிந்துரையும், பரிசுத் தொகையும் வழங்க, தானே முன்வந்து அறிவித்திருக்கும் கவிதாயினி திருமதி மதுமிதா அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுதல்களும், வாழ்த்துகளும். தமிழ் எழுத்துலகை அரை நூற்றாண்டுக் காலமாகக் கவனித்து எழுதி வரும் மூத்த விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் மாதம் ஒருவரைத் தேர்ந்தெடுக்க இசைந்துள்ளார். அவருக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
போட்டிக்கான விதி முறைகள்:
ஒருவர் எத்தனை மதிப்புரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
போட்டிக்கு அனுப்பும் மதிப்புரைகள், இதற்கு முன் அச்சிலோ, இணையத்திலோ வேறு எங்கும் வெளியாகாத ஆக்கமாக இருக்க வேண்டும்.
மதிப்புரைக்குத் தேர்ந்தெடுத்த நூலின் ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பு, நூல் வெளியான ஆண்டு, பக்க எண்ணிக்கை, விலை, பதிப்பக முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். நூலின் அட்டைப்படத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்புதல் நலம்.
மதிப்புரைகளுக்குப் பக்க எண்ணிக்கை இல்லை.
மாதந்தோறும் தேர்வான 12 மதிப்புரைகளிலிருந்து, ஆண்டின் இறுதியில் சிறந்த மூன்று ஆக்கங்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.
பரிசு பெறுவோர், அயல்நாட்டில் வசிப்பவர் எனில், தம் இந்திய முகவரியை அளிக்க வேண்டும்.
மூல நூல் எந்த மொழியில் இருந்தாலும் அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக இருக்க வேண்டியது அவசியம். மதிப்புரையும் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்.
மதிப்புரைகள் தெளிவான நடையில், யுனிகோடில் இருப்பது அவசியம்.
மாதம் ஒருவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு ரூ. 100 பரிசாக வழங்கப்படும். ஐயா வெங்கட் சாமிநாதன் அவர்கள் மாதம் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஆண்டின் இறுதியில் அதிலிருந்து சிறந்த மூன்று படைப்புகளைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும்.
முதல் பரிசு 1000
இரண்டாம் பரிசு 500
மூன்றாம் பரிசு 300
அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து வருகிற மதிப்புரைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு மாத இறுதியிலும் அதிலிருந்து ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.100 பரிசாக வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுக்குரிய படைப்பின் விவரம் மாதாமாதம் அறிவிக்கப்படும். ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
திரளாக வந்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துகள் நண்பர்களே!
அன்புடன்
பவள சங்கரி

-- பி.கு. இந்த போட்டி அறிவிப்பை தயவுசெய்து தங்கள் வலைப்பூவிலும், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன் நண்பர்களே. நன்றி.


1 comment:

  1. பாராட்டுக்கள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //வாசிப்பினை நேசிப்போம்!
    வாசிப்பினை சுவாசிப்போம்!//

    சந்தோஷம் !:

    ReplyDelete