Monday, September 23, 2013

குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..


பவள சங்கரி
DSC09812-167x300

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக விவேகானந்தரும் இளமை முதலே காசியில் இருக்கும் கைலாயநாதரின் தவக்கோலத்தை சிலையுருவில் விரும்பி வழிபட்டதால் தானும் துறவியாக வேண்டும் என்பதில் நாட்டம் அதிகமானது. தியானத்தில் அதிக ஈடுபாடு கொண்டு தன் ஆன்ம சக்தியையும் பெருக்கிக் கொண்டிருக்கிறார். பாம்பு ஊர்வது கூட அறியாமல் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த ஆத்ம ஞானம் பலருக்கும் வழிகாட்டியாக, ஆசைக் கடலில் அகப்பட்டு அல்லற்பட இருந்தோரை  மீட்டு இறைவழியில் செலுத்தி நித்திய இன்பம் காணச்செய்தது.இதெல்லாம் இருக்க, இன்றும் இளம் வயதிலேயே துறவறம் வாங்குவதென்பது,, குடும்பத்தையும், உலகியல் இன்பங்களையும் விட்டு ஒரு குறுகிய எல்லைக்குள் தங்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக தோற்றம் ஏற்படுத்துகிறது. வெகு சமீபத்தில் அப்படி ஒருவரைச் சந்தித்தபோது என்னுள் எழுந்த பல கேள்விக்கணைகளுக்கு  பொறுமையாக அவர் பதில் சொன்னவிதம் ஏதோ இருப்பதை உணர்த்தத்தான் செய்தது. மீனாட்சி இன்று குகப்பிரியானந்தாவாகி, விரைவிலேயே , இன்னும் ஓராண்டுகால படிப்பு முடிந்தவுடன்,  பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டதன் அச்சாரமாக  சித்த வித்தியானந்தா  என்ற பட்டத்தையும் வெல்லப்போகும் இவருக்கு இந்த எண்ணம் தோன்றியது தன் 13 வயதில் என்கிறார். சுவாமி தயானந்த சரசுவதி அவர்களின் ஆசிரமத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இவரைச் சந்தித்தபோது, வணங்கி ஒதுங்கி நிற்க வேண்டியவர் என்பதில்லாமல், ஒரு தோழமை உணர்வே ஏற்பட்டது. ஒரு சிறு வியாபாரியின் மகளாக, வேலூரில் பிறந்து வளர்ந்த இவருக்கு, துறவறம் என்பது என்ன என்று தெரிந்துகொள்ளும் தேடல் ஆரம்பித்திருக்கிறது. வேலூரில் அடிக்கடி வாரியார் சுவாமிகளின் சமயச் சொற்பொழிவு நடைபெறும் காலம் அது. மாலை நேரங்களில் இது போன்று எங்கு சமய சொற்பொழிவுகள் நடந்தாலும் தவறாது கலந்து கொள்வது வழக்கமாகியிருக்கிறது. பள்ளியிறுதி வகுப்பு முடித்தவுடன் இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவறத்தில் ஈடுபடும் எண்ணம் தோன்றியிருக்கிறது. துறவறத்திற்கான மிகவும் இள வயது என்பதால் ஒரு வருடம் குழந்தைகள் பள்ளியில் சேவை செய்துகொண்டு பயிற்சி எடுத்தபின்பு மடத்தில் சேரலாம் என்றிருக்கிறார்கள். ஒரு வருடம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு சில அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சேலம் சாரதா கல்லூரி மடத்தில் சென்று தன்னை இணைத்துக்கொண்டு பி.ஏ. வகுப்பில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடிப்பதற்குள் பிரம்மச்சரியத்திற்கான அடிப்படை பயிற்சிகள் அனைத்தும் முடித்து, பகவத்கீதை, வேதாந்தம் என ஓரளவிற்கு தேர்ச்சியும் பெற்றிருக்கிறார். சேர்ந்த புதிதில் ஒரே வண்ண மஞ்சள் நிற சேலை மட்டுமே உடுத்த வேண்டும். அதன் பிறகு 10 ஆண்டுகள்  சைதன்யா என்கிற வெள்ளை சேலையில் சிகப்பு கரை  வைத்த  சேலை உடுத்த வேண்டியிருந்தது.  பின் 2000ம் ஆண்டில்  தன்னுடைய 35 வது வயதில் பிரம்மச்சரிய தீட்சை எடுத்த பின்பு காவி உடை வழங்கப்பெற்றிருக்கிறார். புருச சுத்தம் நாராயண சுத்தம், பிரம்ம சுத்தம்,  தேவாரம் திருவாசகம், இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற அனைத்திலும் தேர்ந்த ஞானம் கொண்டிருக்கிறார் அம்மையார்.


அன்றாடம், விடியற்காலை 4. 30 மணி முதல்  5.30 வரை பிரார்த்தனை செய்து, 5.30 முதல் 6.30 வரை பூ பறித்தல், பின் 7.30 மணி வரை உடற்பயிற்சி யோகா என அனைத்தும் முடித்து, 7.30 மணி முதல் 8 மணி வரை  சுவாமி சித்பவானந்தா அவர்களின் விளக்க உரைகளுடன் மந்திர உச்சாடணைகளை  முடித்து காலை 8 மணிக்கு காலை உணவு, அதன் பின் 9 மணிக்குள் அவரவர் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டும். 12.30 முதல் 2 வரை ஓய்வு பிறகு மீண்டும் மதியப் பணிக்குத் திரும்ப வேண்டும். மாலை 5 முதல் 6.30 வரை பிரார்த்தனை 7 மணி முதல் 7.30 வரை  மடத்திற்குள் இருக்கும் பணிகள்,. 8 மணி  வரை தியானம். அதற்குப் பிறகு இரவு உணவு, பின் ராமகிருஷ்ணர் உபதேசம், ஏனைய மகான்கள் வாழ்க்கை முறைமைகள் பற்றிய உபதேசம். 9.30 வரை நடக்கும் . பிறகு 10 மணிக்கு உறக்கம். அடுத்த நாள் இதே வழமையாக நின்று, நிதானிக்க, யோசிக்க நேரமில்லாத இடைவிடாத இறைப்பணி.  கைக்குத்தல் அரிசி, மசலா பொருட்கள் தவிர்த்த கட்டுப்பாடான உணவு. குறிப்பிட்ட காலங்களுக்கொரு முறை   பணியிடம் மாற்றம்.  இதுவரை 11 பணியிடங்கள் மாறியிருக்கிறார்.


தற்போது ஆணைக்கட்டியில் உள்ள தயானந்த சரசுவதி ஆசிரமத்தில்  இருக்கிறார்.  இங்கு முழுவதும் தத்துவார்த்த வகுப்புகளுக்குத்தான் முதலிடம் என்கிறார்.  தன்னுடைய மதம் சார்ந்த கொள்கையை அறிந்து கொள்ள வேண்டியே ஒருவர்  வேதம் படிக்க வேண்டியது  அவசியமாகிறது.  சங்கர பாஷ்யம் என்ற மூல நூலிலிருந்து கீதை விரிவுரைகள், பதவுரைகள்  தயானந்த சுவாமிஜி பாரம்பரியத்தோட சொல்லிக்கொடுப்பதற்கு. ஈடு இணை இல்லை என்கிறார். வெளிநாட்டவர் 50 க்கும் மேற்பட்டவர் வந்து நமது வேதமும், கலாச்சாரமும் கற்று கொள்கின்றனர் என்பவர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இங்கு வந்து வேதம், சமஸ்கிருதம் மற்றும் நம் கலாச்சாரம்  பற்றி படிக்க வருபவர்களுக்குத் தேவையான உதவியை அவர்களுடைய அரசாங்கம் வழங்குகிறதாம். ஆனால் நம் நாட்டில் அது போன்ற உதவியோ, அல்லது கிருத்துவ மதம் மற்றும் இசுலாமிய மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு உதவுவது போல நம் இந்து மதத்தில் புனித யாத்திரை செல்வதற்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. இந்திய பொருளாதாரமே அதற்கு எந்த விதத்திலும் சாதகமாக  இல்லை என்கிறார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வந்தும்  சந்நியாசம் வாங்குகிறார்களாம். அதற்கு அவர்கள்   முதலில் சட்டப்படி விவாகரத்து வாங்கினால்தான் செல்லுபடியாகும் என்ற ஆச்சரியமான தகவலும் கொடுக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற்ற பின்பே சந்நியாசம் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.


இத்துனை சிரமப்பட்டு பெறும் சந்நியாசத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்பதே நமது சந்தேகம். இதை அவரிடமே நான் கேட்டபோது, அவருடைய தெளிவான பதில், “வேதாந்தம் என்பது  அடுத்தவருக்கு சொல்லித்தருவதற்காக  படிப்பது அல்ல. பணிந்தும் கேட்டும் பணிவிடை செய்தும் வந்து கேட்போருக்குச் சொல்லிக் கொடுத்தால் போதும்.. உன்னதமான  வேத பாடத்தை அப்படி எளிதாகப் பெற  முடியாது. அதற்கான தகுதியுடையவர்கள் மட்டுமே அதனை உணர்ந்து கற்க முடியும் ” என்பதே எங்கள் குருவின் வாக்கு என்கிறார்.


‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்றால் இப்படி இத்துனை வேதப்பாடம் அனைத்தும் கற்பதோடு நின்று அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகிறதே, என்று கேட்டபோது,
பிரேமானந்தா,  நித்தியானந்தா, சங்கர் பாபா, கல்கி போன்ற விஷப்பூடுகளின் வளர்ச்சி உண்மையில் நல்லனவற்றை பகுத்தாய்ந்தறியும்  சக்தியை பாழாக்குகிறது. அதனால் மக்களிடையே நம்பிக்கை குறைந்து வருவதால் எங்களாலும் எளிதாகச் சென்று மக்களுக்கு தொண்டாற்ற முடியாமல் போகிறது. குறிப்பாக வட நாடு மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும், தமிழ்நாட்டில் அதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, என்கிறார். தங்கள் குருவின் வாக்குப்படி,  ‘காடு முழுவதும் முட்கள் நிறைந்திருக்கும் போது அதனைச்  சுத்தம் செய்ய ஒருவருக்கு ஒரு பிறவி போதாது. அதனால் செருப்பு போட்டுக்கொண்டு கடந்து செல்வதே புத்திசாலித்தனம். அறியாமை மட்டுமே இன்றைய  இத்தகைய நிலைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.  அந்த அறியாமை முதலில் விலக வேண்டும். அதற்கு தெளிவான சிந்தனை வேண்டும். நம்மைச் சுற்றி தெய்வீக அலை பரவ வேண்டும். சந்நியாசிகளைச் சுற்றி இருக்கும் அந்த தெய்வீக அலை பல மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்று இவர் சொல்வதை முழுமையாக ஏற்க மனம் ஆதாரத்தைத் தேடுகிறது! கர்ம யோகமோ, பக்தி யோகமோ அல்லது ஞான மார்க்கமோ, எதுவாயினும் அவரவர் தர்மப்படி வாழ  வேண்டும் என்பதே கீதை. காட்டும் பாதை. எடுத்துக்கொண்ட வாழ்க்கையை  முறைப்படி வாழ வேண்டும்.


இறுதியாக  சித்து வேலை என்று அம்மையார் வர்ணித்த விசயங்கள் பற்றி மீண்டும் கேட்டபோது, லிங்கம், திருநீறு போன்றவைகள் வரவழைக்கும் வித்தகம்  பார்ப்பதற்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்பிக்கைக்கு உரியதாகவும் தென்படலாம்.  ஆனால் அது தெய்வ சக்தியின் உச்ச நிலையை அடைவதற்கு பெருந்தடையாக இருக்கக்கூடியது. அதாவது, முள்ளுச் செடியைச் சாப்பிடும் ஓட்டகம்  தன் இரத்தத்தின் சுவைதான் அது என்ற உணர்வே இல்லாமல் அதை இரசித்து  ருசித்து, மேலும், மேலும் உண்ணுகிறது. அது போலத்தான் இந்த சித்து விளையாட்டும், தன் சக்தியை தானே சுவைத்து மேற்கொண்டு உன்னத நிலைக்குச் செல்வதற்கு தடையேற்பட தானே காரணமாகிவிடுகிறார்கள். ஆனால் பொது நலம் கருதி, தன் சுயநலம் தவிர்த்து, சித்து மூலம் மானுட சேவையில் சிறந்து விளங்குவதும் ஒரு வகையில் பாராட்டுக்குரியதோ என்று கேட்டபொழுது, இப்படி எண்ணுவது முழுமையான அறியாமை என்கிறார். இந்த அறியாமை இருளைத்தான் போக்க வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம் என்கிறார். சந்நியாசம் பெறுபவர்கள் இந்த ஆன்ம பலத்தைத்தான் முதலில் பெற வேண்டியுள்ளது. மக்கள் எங்களை ஏற்கும் பக்குவம் வரும்போது நாங்களும் வெளியில் வந்து சேவை செய்யக் காத்திருக்கிறோம். ஆனால் அதற்கான சூழல் தற்போது இல்லை. போலிகள் ஏற்படுத்துகிற தீய அலைகளின் தாக்கம் முற்றிலும் மறைய வேண்டும் என்கிறார்.


“நம் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது  ஆன்மீகம் . இதனாலேயே  தான் நம் இந்தியா சீரும், சிறப்புமாக வாழுகிறது. அந்த சக்தி என்றென்றும் நம் நாட்டை வாழவைக்கும் என்பதில் ஐயமில்லை. எவரும் வந்து வாழ வைக்க வேண்டிய நிலையில் நம் இந்தியாவும், நம்முடைய இந்து மதமும் இல்லை. இதனை வெளிநாட்டவர் புரிந்து கொண்டுள்ள அளவிற்கு நம் நாட்டவர் உணரவில்லை என்பதுதான் வேதனை. அவர்கள் நம் நாட்டிற்கு வந்து, மூன்று மாதங்களுக்கு மேல் வாழத் தகுதியில்லாவிட்டாலும், திரும்பத் திரும்ப சிரமப்பட்டு விசாவை புதுப்பித்துக்கொண்டு, தங்கியிருந்து நம் வேதங்களையும், கலாச்சாரங்களையும், பாரம்பரியங்களையும், பணிவுடன் கற்றுக் கொள்வதோடு தங்கள் நாட்டிலும் சென்று நம் கலாச்சாரத்தின் பெருமையை பரவச் செய்கிறார்கள் என்பதே நாங்கள் காணும் உண்மை நிலை. ஆனால், 5000 – 10,000 ஆண்டுகள் பழமையான  நம் பாரம்பரியத் தத்துவங்களை முழுமையாகப் படித்துணர்ந்து, அதனை ஆத்மார்த்தமாக, தவறின்றி  சொல்ல சரியான ஆளில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதுதான் அறியாமை எனும் கழிவுகள் நிறைந்த பாத்திரமாக மாறி இருக்கிறது. தப்பைச் சொல்லி புரிஞ்சிக்கிட்டிருக்காங்க.. காலிப் பாத்திரமாக இருக்கும்போது நல்லவைகளை நிரப்ப எளிதாக இருக்கும். ஆனால் இன்று அல்லவைகளை வெளியேற்றவே பல காலம் வேண்டும் போல் உள்ளது. பகவானின் அருளால் அது நடக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்கிறார்.


ஆரம்பத்தில் தோழமை உணர்வு மட்டுமே உந்தித்தள்ள அதன் போக்கிலேயே அமைந்த காரசாரமான விவாதங்கள், இறுதியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தியது. ஒரு வேளை இதைத்தான் தெய்வீக அலை என்கிறாரோ என்று எண்ணத்தோன்றியது. நல்ல சுத்தமான எண்ணங்கள்தானே தெய்வீக அலை என்பது? என் பாத்திரத்தை காலியாக்கிக்கொண்டு, காலில் விழுந்து ஆசி பெற்று திரும்பினேன்.
—————-

--
 ​நன்றி : திண்ணை​
 

                                                              
                  

1 comment:

  1. ஒட்டகம் உதாரணம் உட்பட அனைத்தும் அருமை...

    ReplyDelete