Thursday, September 2, 2010

இந்திய திருநாட்டின் மறுமலர்ச்சியில் பெண்கள் -[ பாகம் - 3 ]

ஆஷாதேவி ஆர்யநாயகம்
[1901- 1970]

ஈழத்து மருமகளான ஆஷாதேவி ஆர்யநாயகம் கல்விப்பணி என்பதையே உயிர் மூச்சாகக் கொண்டு, தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தவர். இவருடைய கணவர் ஆர்யநாயகம், ஈழத்து கிராமத்தில் பிறந்து, ஐரோப்பாவில் உயர் கல்வி பயின்றவர்.

அன்ன சத்திரமாயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிர நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத் தறிவித்தல்.

என்ற பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாக இவ்விருவரும் கல்விப்பணி ஒன்றையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்கள்.


ஆஷாதேவி, ஆர்யநாயகம் இருவரும், வார்தாவில் உள்ள மார்வாடி வித்யாலயாவில் ஆசியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஜமுனாலால் பஜாஜ், அவர்களை சாந்திநிகேதனிலிருந்து அழைத்து வந்திருந்தார். 1937ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் சேவாகிராமத்தின் கல்வி மகாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தியாவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் வல்லுனர்கள் அங்கு கூடியிருந்தனர். ஆஷாதேவியும், ஆர்யநாயகமும், இந்த மகாநாட்டு வேலையில் முழுமையாக ஈடுபட்டு, அதில் பெரும் பணியாற்றினர். மகாத்மா காந்தியடிகளின் கல்வித் திட்ட கொள்கைகளினால் பெரிதும் கவரப் பட்டனர், இத்தம்பதியினர்.

கல்வி என்பது இவர்களின் வாழ்க்கையோடிணைந்ததாகவும் மற்றும் ஒவ்வொரு செயலும், கல்வியை ஆதாரமாகக் கொண்டதாகவே இருந்தது. காந்தியடிகள், இந்தியாவில் தொழில் மூலம் கல்வி கற்கும் முறையை விரிவாகத் திட்டமிட்டிருந்தார். குழந்தைகள், தங்கள் கைகளினாலேயே பொருட்கள் தயாரிப்பதை, மிகவும் விரும்பி வரவேற்றனர். அனைத்துக் கல்வியும், ஏதாவது, கைவினைப் பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார்.

உதாரணமாக, குழந்தைகளை, பஞ்சு பொறுக்கிப் போடுவதற்கு, அழைத்துச் சென்று, அது எப்படி விளைகிறது என்கிற விளக்கங்களையும் கற்பிக்கலாம். பஞ்சு விளையக்கூடிய நாடுகள், பலதரப் பட்ட பஞ்சு வகைகள், அதனைப் பயிரிடும் முறைகள் மற்றும், அதன் வளர்ச்சி குறித்த தகவல்கள் போன்றவற்றையும் கற்பிக்கலாம். இந்த முறையில் குழந்தைகளின் கற்கும் ஆவல் கட்டமைக்கப் பட்டு, தெளிவான விளக்கங்கள் அளிப்பதன் மூலம் மண் எப்படி நீரை உரிஞ்சுக் கொள்ளுமோ அது போல அவர்களுடைய ஆழ் மனதில் அனைத்தும் பதிந்துவிடும். எதையும் சிரமப்பட்டு மனப் பாடம் பண்ண வேண்டியத் தேவையுமில்லை. படிப்பும், எழுத்தும், பின்னாளில் வந்து விடும்.

பஞ்சு பற்றி கற்பிக்கும் போதே, பூகோளம் மற்றும் புவியின் வரலாறு மண் வகைகள், இயற்பியல் மற்றும் தாவரவியல், அறிவியல் மற்றும் சமுதாய வளர்ச்சி, வரலாறு மற்றும் பொருளாதாரம், இவையனைத்தும் இணைத்தே கற்பிக்க முடியும். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கையில், தான் எத்தனை முறை சுற்றி வந்தோம் என்று அறிந்து கொள்ள விளையும். அங்குதான், எண்ணிக்கை, எழுத்து மற்றும் கூட்டல் போன்றவைகளை கற்கும் ஆர்வம் உண்டாகிறது. அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு, அதற்குத் தகுந்த புத்தகங்களைப் படிக்கக் கொடுக்கலாம்.

இந்த முறையில் கற்பதால், கல்வி அவர்களுக்கு ஒரு சுமையாக இராமல், தேர்விற்காக மட்டும் படித்து மனப் பாடம் செய்ய வேண்டியத் தேவையும் இருப்பதில்லை. இதையே காந்தியடிகள், ஆரம்பக் கல்வி [Nai Taleem - புதிய கல்வி] என்கிறார். அதாவது, கருவில் ஆரம்பித்து, சமாதியில் முடியக்கூடியதாகும். ஆஷாதேவியும், ஆர்யநாயகமும், இக் கல்வி முறை பாடத்திட்டத்தினால் மிகவும் ஈர்க்கப் பட்டார்கள்.

அறிவியல் அடிப்படையிலான தாக்கத்தையும் மீறி இந்தியா போன்ற நாட்டிற்கு இது போன்ற கல்வியமைப்பே சாலச் சிறந்ததென அவர் நம்பினார். மாணவர்கள் செய்யக் கூடிய வேலைகளின் மூலம் கிடைக்கக் கூடிய ஊதியம் ஆசிரியரின் ஊதியத்திற்கு இணையானதாக இருக்க வேண்டும். இம் முறை, குழந்தைகளை தன்னலத்திற்காக தொழிலாளியாக்குவதான செயல் என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு காந்தியடிகள், தன்னிறைவுதான் நல்ல அடிப்படைக் கல்விக்கு உயிர் நாடியாகும் என்று தெளிவுபடுத்தினார்.

கல்வியாளர்களான ஆஷாதேவியும், ஆர்யநாயகமும், காந்தியடிகளின் கருத்துக்கள் முற்றிலும் சரியானவை என்று நம்பினர். இதில் மற்றொரு சிறப்பம்சம், அறிவாளிக் குழந்தைகளைப் போலவே, மன நலம் குன்றிய குழந்தைகளும் இதே திட்டத்தின் மூலம் கல்வி பயில முடியும்.

இந்தியா முழுவதுமிலிருந்த மாகாணங்களின் கல்வியமைச்சர்கள் மற்றும் திறமைவாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்ட அந்த மகாநாடு பெரும் வெற்றி கண்டது. அதன் இறுதியில் Dr. ஜாகீர் உசேனை [பின்னாளில் குடியரசுத் தலைவரானவர்], தலைவராகவும், ஆஷாதேவி மற்றும் ஆர்யநாயகம் இருவரையும் செயலாளர்களாகவும் கொண்டு, 'இந்துஸ்தானி தலீமி சங்கம்', நிறுவப் பட்டது. அவர்கள் இருவரும், மார்வாடி வித்தியாலயாவை விட்டு விட்டு, காந்தியடிகளுடன் இணைந்து பணியாற்றத் துவங்கினர்.

கணவன், மனைவி இருவரும் சேவாகிராமத்தில் பணிபுரிய இசைந்தனர். இந்தத் தம்பதிகளுக்கு, இரண்டுக் குழந்தைகள், மிது என்கிற 5 வயது பெண் குழந்தை மற்றும் ஆனந்த் என்கிற நடை பயிலும் குழந்தையும் இருந்தனர்.

காந்தியடிகள் ஆசிரமம் அருகில் கட்டிடப் பணி ஆரம்பமாகி, புதிய ஆரம்பக் கல்வி பள்ளிக் கட்டிடம் மேலெழும்பியது. கணவன், மனைவி இருவரும், ஆத்மார்த்தமாக பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிராமத்துக் குழந்தைகளுக்காக புதிய பள்ளிகளும் துவங்கப் பட்டது. ஆசிரம வாசிகளின் சொந்தக் குழந்தைகளும் இந்தப் பள்ளியில் தான் பயின்றனர். மேலும் அந்தப் பள்ளி, நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்கும் ஒரு ஆய்வுக் கூடமாகவும் செயல் பட்டது.

ஆஷாதேவி, ஆர்யநாயகம் இருவருக்கும் விடியற்காலை 4 மணிக்கே, அன்றைய பொழுது விடிந்து விடும். காலை பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கிற பொழுது, இரவு 11 மணிக்குத்தான் முடியும். இடையில் உணவிற்காகத் தவிர ஓய்வென்பதே இல்லாத, முழு நேர உழைப்பில் ஈடுபட்டிருந்தனர். நாடு முழுவதுமிலிருந்து கடிதத் தொடர்பு இருந்தது. அது மட்டுமல்லாமல், வெளி நாடுகளிலிருந்தும் வந்து கொண்டிருந்த கடிதங்களுக்கு சரியான முறையிலான பதில்களும் அனுப்பப் பட்டு வந்தன. 'நயீ தலீம்' பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் பல ஆர்வலர்கள் வருவது வழக்கம். அதில் சாதாரண தொழிலாளிகள் முதல் மிக முக்கியமானவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும், ஆர்வம் காட்டியிருந்தனர்.

மாணவர்களுக்கு விவசாய செயல் முறை விளக்கம் குறித்து, அந்த விவசாய நிலத்திலேயே பயிற்சி அளிக்கப் பட்டது. அவர்கள் சமயலரைப் பணியிலும் ஈடுபடுத்தப் பட்டனர். அவர்களுக்கு சமைப்பதற்கான பயிற்சியுடன், அந்தந்த உணவு வகைகளிலுள்ள, ஊட்டச் சத்துக்கள் குறித்த விழிப்புணர்வும், ஏற்படுத்தப் பட்டது. அங்கு தங்கியிருந்த மொத்த மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்குத் தேவையான சரியான அளவில் சமைக்கக் கூடியப் பக்குவமும் பெற்றிருந்தனர் அந்த மாணவர்கள்.

இசை, நடனம் மற்றும் விளையாட்டு போன்றவற்றிற்கு போதுமான நேரம் இருந்ததோடு, இரவு 9 மணிக்குள் நித்திரைக்குச் செல்லும் வழக்கமும் கொண்டிருந்தனர். அவர்களுக்கான கல்வி போதனை வகுப்பறையில் மட்டுமல்லாமல், நூற்பு அறையிலும் இருந்தது. ஆஷாதேவி அவர்களுக்கு இரபீந்திர நாத தாகூரின் சங்கீதங்களையும் கற்பித்தார்.

இந்தியாவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும், ஆசிரியர்கள் பயிற்சிக்காக வந்து கொண்டிருந்தனர். அவர்களும் தனித் திறமைகள் கொண்டவர்களாக இருந்ததினால் அங்கு மிக ரம்மியமான சூழலே உருவாகியிருந்தது. சோம்பல், களைப்பு இவையேதும் அறியாத வகையில், பணியில் உற்சாகமும், மகிழ்ச்சியும் மட்டுமல்லாமல், முன்னேற்றத்திற்கான சூடான விவாதங்களும் நடைபெற்றன.

ஆரம்பக் கல்வி மகாநாட்டுக் கூட்டங்கள், பல மாநிலங்களிலும் வழக்கமாக நடந்து வந்தது. செயலாளர்களான, கணவன் மனைவி, இருவருமே அந்தச் சுமையையும் ஏற்க வேண்டியிருந்தது. சாந்திநிகேதனில் பயிற்சி பெற்ற ஓவியர், தேவி பிரசாத் குப்தாவும், இணைந்ததால், இந்தக் கல்விச் சூழலில் ஓவிய ஒளியும் நிறைந்தது.

ஆஷாதேவியின், தாய்வழித் தாத்தா காஷ்மீரத்து அரசரின் தனிப்பட்ட செயலாளராக இருந்தவராவார். பதவி மிக முக்கியம் வாய்ந்ததாக இருந்தாலும், குழந்தைகளின் படிப்பிற்கேற்ற சூழல் இல்லாதிருந்ததால், பாட்டி, குழந்தைகளுடன் லாகூரிலேயேத் தங்கிவிட்டார். ஆஷாதேவி லாகூரிலேயே பிறந்து, வளர்ந்தவராவார். அவருடைய தந்தை, பானி பூஷன் அதிகாரி மற்றும் தாய், சர்ஜீபாலா தேவி இருவரும் கல்வியாளார்கள் மற்றும் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருந்தனர். அவருடைய தந்தை டில்லியில் விரிவுரையாளராக இருந்த போதுதான் அன்னி பெசண்ட் அம்மையாருடன் பழக்கம் ஏற்பட்டது. அம்மையார்தான் அவரை, பனாரசிற்கு அழைத்துச் சென்று, தத்துவ விரிவுரையாளராக பணிபுரியச் செய்தார். ஆஷாதேவியின் பால்யப் பருவம், லாகூரிலும் மற்றும் பனாரசிலும் கழிந்தது.

பனாரசில் நல்ல கல்விக்கூடங்கள் இருந்தாலும், அங்கு வங்காள மொழி வழிக் கல்வி இல்லாதிருந்ததால், ஆஷாதேவி, வீட்டிலேயே தனி வகுப்பு மூலம் பயிற்றுவிக்கப் பட்டார். அவருடைய தாயிடம், வங்காள மொழியுடன், இசையும் கற்றுக் கொண்டார். ஒரு பெண் கல்வியில் முதல் நிலையில் இருப்பது, அரிதான காலமாக இருந்த வேளையில், முதல் நிலையில் இருந்த ஆஷாதேவிக்கு, பத்திரிக்கைகள் கொடுத்த விளம்பரத்தை, அவருடைய தந்தை நிராகரித்து விட்டார். காரணம், கல்வி ஒழுங்கான முறையில் பயில வேண்டியது, ஒவ்வொரு மாணவரின் கடமையாகும். அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வியில் பெரிய சாதனையாகாது என்பதாலும்தான்.

ஆஷாதேவியின் கல்லூரிப் படிப்பும் பெரும்பாலும் வீட்டிலேயே இருந்தது. வங்காள இலக்கியத்தில், ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்தார், இவர். கல்லூரியின் இளங்கலை இறுதித் தேர்வின் சிறிது காலம் முன்பு, ஒரு கண்ணில் சில பிரச்சனைகள் வந்தது. தீவிர ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திலும், தன் தாய் படிப்பதைக் கேட்டு, மனதில் பதியச் செய்து, தேர்வில் முதல் நிலையில் தேர்ச்சியும் பெற்றார். அரசாங்கம் , அவருக்கு இங்கிலாந்து சென்று மேற்படிப்பு படிக்க உதவித் தொகையளிக்க முன் வந்தது. 16 வயதே நிரம்பிய ஆஷாதேவியை கடல் கடந்து அனுப்ப மனம் இல்லாமல், அவரை பனாரசிலேயே முதுகலைப் பட்டம் பெறச் செய்தனர். அங்கேயே பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

அதிகாரி குடும்பத்தினர், குருதேவ் இரபீந்திரருக்கு, மிகுந்த நெருக்கமுடையவர்களாக இருந்தனர். சாந்திநிகேதன் அவர்களுடைய சொந்த வீடு போல இருந்தது. குருதேவ் வாழ்ந்து கொண்டிருந்த உத்தராயனுக்கு அருகாமையிலேயே இவர்களுக்கும் வீடு கொடுக்கப் பட்டது. இவருடையத் தந்தை தன்னுடைய பணி ஓய்விற்குப் பிறகு இங்கு தான் வாழ்ந்தார்.

குருதேவ் ஐரோப்பாவிற்குச் செல்ல வேண்டிய சூழலில் சாந்திநிகேதனை கவனித்துக் கொள்ளும் பொருட்டு, ஆஷாதேவி, பனாரசிலிருந்து, வரவழைக்கப் பட்டார். குருதேவ் ஐரோப்பாவில்தான் ஆர்யநாயகம் என்கிற, திறமை வாய்ந்த இளைஞரைச் சந்தித்தார். அவர் தம் படிப்பை முடித்து விட்டு பணியை ஏற்கும் எண்ணத்தில் இருந்தார். குருதேவ் அவருடைய தனித்திறமையின் மீது ஆவல் கொண்டவராகத் தன்னுடன் சாந்திநிகேதனுக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார். ஆர்யநாயகமும் அதனை ஏற்றுக் கொண்டு குருதேவிற்குச் செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். ஆஷாதேவிக்கு , ஆர்யநாயகத்தை மணமுடிக்க ஏற்பாடு செய்யப் பட்டதற்கு குருதேவ் காரணமாகவும் இருந்தார்.

ஆஷாதேவி சாந்திநிகேதனின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி விட்டார். ஒவ்வொருவரும் அவரைச் சகோதரி என்றே அழைத்தனர். எப்படியிருந்தாலும் சாந்திநிகேதன் செல்வந்தர்களின் குழந்தைகளுக்கான பள்ளியாகவே இருந்தது. அந்த வேளையில் தான் காந்தியடிகளின் அழைப்பைக் கேள்விப்பட்ட ஆஷாதேவி அவருடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தார். கணவன், மனைவி இருவரும், 'நயீ தலீமி'ன், முக்கியத் தூண்களாக இருந்து பணியாற்றினர். அனைவராலும், அன்புடன், தாய் தந்தை என்றே அழைக்கப் பட்டனர்.

அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் தலை முடியில் பேன்கள் அதிகமாக இருந்ததால், தன் உதவியாளர்களுடன், சார்லா பெஹன் என்கிற ஆங்கிலப் பெண்ணின் தன்னார்வத் தொண்டினுடனும், அக் குழந்தைகளின், தலை முடியை வெட்டி விட்டு, நன்கு சுத்தம் செய்ததோடு, அவர்களுக்கு, ஒரே நிறத்திலான பாவாடை சட்டைகளும் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு அதே நிறத்தில் கால் சட்டையும், மேல் சட்டையும் அணியச் செய்தனர். இந்தச் சீருடை முறை ஆச்சரியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் பெரு மகிழ்ச்சியடைந்தனர்.

பணிகள் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், காங்கிரசு ஆட்சியில் இருந்தவரை தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருந்த இக் கல்விப் பணி, 1939ம் ஆண்டு, காங்கிரசு ஆட்சி பதவி விலகியவுடன், ஒரு பின்னடைவு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் தான் இத் தம்பதியரின் வாழ்க்கையில் ஒரு பெரும் சோகம் நிகழ்ந்து விட்டது. இவர்களுடைய ஒரே மகன், தவறாக மலேரியா காய்ச்சலுக்குக் கொடுக்கக் கூடிய குயினைன்[quinine] மாத்திரையை எடுத்து அதிகமாக உண்டதனால், இறந்து விட்டான். திடீரென நடந்த இந்த விபத்தின் தாக்கம் இருவரையும் மிகவும் பாதித்தது. தங்கள் சோகத்தை மறக்க பணியில் முழு நேர ஈடுபாடு கொண்டனர்.

காந்தியடிகளின் மறைவிற்குப் பிறகு ஆஷாதேவி ஃபரீதாபாத் சென்று, அகதிகள் முகாமில் சேவை புரிய முடிவெடுத்தார். குழந்தைகளுக்காக பள்ளிகள் ஆரம்பித்தார்.

வினோபா அவர்கள் அனைவரையும் பூதான இயக்கத்தில் கவனம் செலுத்தும் படி வேண்டுகோள் விடுத்திருந்தார். தலீமி சங்கமும் மூடப்பட்டு விட்டதால், பூதான இயக்கத்தில் ஈடுபட்டார்.

ஆர்யநாயகம், ஈழத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்குச் செல்ல பேராவல் கொண்டார். தன்னுடைய இறுதி நாட்களை சொந்த நாட்டில், பிறந்த ஊரில் கழிக்க விரும்பிச் சென்றவர், ஜீன் மாதம், 20, 1968ம் ஆண்டில், மாரடைப்பால் காலமானார். தன் கணவரின் மறைவிற்குப் பிறகு, ஆஷாதேவி, சேவாகிராமத்தில் தங்கி, 'நயீ தலீம்' மை திரும்பவும் உருவாக்க முயற்சித்தார். மகள் மித்துவும், திருமணம் முடித்து, கணவருடன் அமெரிக்க நாட்டிற்குச் சென்று விட்ட நிலையில், இவருடைய உடல் நிலை மோசமானது. ஒரு கண் பார்வையும் இழந்தார். உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், நாக்பூருக்கு அழைத்துச் செல்லப் பட்ட, ஆஷாதேவி, நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப் பட்டு, ஜீன் மாதம், 30ம் நாள், 1970ல் காலமானார்.

தன்னலமற்ற ஒரு சேவையின் அத்தியாயம் முடிவுற்றது. அறியாமை எனும் இருளை நீக்கி, அன்பு நிறைந்த உலகை உருவாக்கி, அறிவு, மகிழ்ச்சி மற்றும் இசை இவை மூன்றுமே உயிர் மூச்சாகக் கொண்டு, எளிமையான வாழ்க்கைக்கு ஒரு முன் உதாரணமாகவும், மகாத்மா காந்தியடிகள் மற்றும் குருதேவ்வின் கொள்கைகளுக்கு ஒரு ஆதாரமாகவும் வாழ்ந்த அவருடைய வாழ்க்கை ஒரு சரித்திரமானது!

இதயப் பிணி......


துன்பத்தை இன்பமாக்கும்
அறிவாளியை மூடனாக்கும்
கோழையை வீரனாக்கும்
வீரனைக் கோழையாக்கும்
ஆசையை அடக்கச் செய்யும்
தேவையை மறுக்கச் செய்யும்
இருளுக்கு ஒளி சேர்க்கும்
ஒளியை மூடி மறைக்கும்
தனிமைக்குத் தீனி போடும்
தனிமையை பிடுங்கித் தின்னும்
அன்புக்கு உறவாகும்
உறவுக்குப் பாலமாகும்
துயருக்கு மருந்தாகும்
கூட்டுக் குடும்பத்தின்
ஆணி வேராகும்....
இதயத்தின் பலமாகும்
இதயத்தின் பிணியுமாகும் - பாசம்

Monday, August 30, 2010

இனியும் விடியும்.............


பதின்மத்தின் பட்டொளி வேட்கை
கொழுந்து விட்டு எரிந்த காலம்
கூண்டுக் கிளி பேசிய காலம்
கூட்டுக் குயில் பாடிய தீரம்
பிரசவ வேதனையில் பூத்த மொட்டுக்கள்
மண்ணில் மணம் பரப்ப
ஏங்கிய ஏக்கம்............................
ஏக்கத்தின் தீவிரத் தாக்கம்
தாக்கத்தை தணிக்கத் தேடிய மேதகம்
திருப்பி அனுப்பி குப்பையாக்கிய சோகம்
முடிவுற்று, புதிய களம் கிடைத்த பூரிப்பு
சொந்தப் பூவாக நினைத்து முகர
கபடமற்ற மழலையென அடியெடுக்க
எண்ணிய எண்ணமாங்கு செயல்பட
முளைத்தது மற்றுமொறு கோடாறி
பல்லில் சிக்கிய துணுக்கென உறுத்தியது.
துணைக் கழைத்த இயற்கை
சீற்றம் கொள்ளாமல் குளிர்ச்சியூட்டினாலும்
மனிதம் மட்டும் மறத்துப் போகிறது.
அழகான பூவென்று அள்ளி முகறும் போது,
ஈழத்து வேதனை போல
வலையில் சிக்கிய பூவெனப் புரிந்தது......
பதின்மத்தின் வேதனை.......தொடர்ந்தது.....