Thursday, December 15, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(28)

பவள சங்கரி

ஒரு சமீபத்திய சர்வேயின்படி, வேலைக்குச் செல்லும் பெண்களின் 50 சதவிகிதம் பெண்களுக்கு மட்டுமே , தங்கள் குழந்தைகளுடன் முழுமையாக நேரம் கழிக்க இயலாததன் குற்ற உணர்ச்சி இருக்கிறதாம். 80 % பெண்கள் ஆண்களைவிட மிக திறமைசாலிகளாகவும், ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளைச் செய்யக்கூடிய திறன் படைத்த சகலகலாவல்லிகளாக இருக்கின்றனராம். 45% பெண்கள் தங்கள் ஓய்வு நேரம் முழுவதையும் குழந்தைகளுடன் கழிப்பதே சுகம் என்கிறார்களாம்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தவள், நினைவுகள் திசை திரும்ப அப்படியே புத்தகத்தை கவிழ்த்து மார்பின்மீது வைத்துவிட்டு, விட்டத்தை நோக்கியவாறு சிந்தனையில் ஆழ்ந்து விட்டாள், அவந்திகா.. அறையின் நறுமணத் தெளிப்பானின் மணம் நாசியை நிறைக்க, மனமும் வாழ்க்கையின் சுகந்தம் நாடி அசைபோட ஆரம்பித்ததில் ஆச்சரியம் இல்லையே.

தீர யோசித்து, தீர்க்கமான ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். திருமணத்திற்குப் பிறகு குறைந்தது 4 அல்லது 5 ஆண்டுகளாவது வேலைக்குப் போவது என்ற எண்ணத்தையே மறந்து, அன்பு கணவனுக்கு அழகாக சமைத்துப்போட்டு, தேவையான பணிவிடைகள் செய்து, விரைவிலேயே குழந்தையும் பெற்றுக் கொண்டு , கண்ணுங் கருத்துமாக குழந்தையை வளர்ப்பது மட்டுமே முழு நேரக் கடமையாக எடுத்துக் கொண்டு, எஞ்சிய நேரங்களில் ஓவியங்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கிக்கொண்டு இன்பமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று கற்பனைக் கோட்டை கட்டி வைத்து விட்டது என்னவோ நிசம்தான். ஆனால் மாறனிடம் கலந்தாலோசிக்காமால் தானே முடிவெடுத்து விட்டோமே என்று ஒரு புறம் தயக்கமாக இருந்தாலும், அவனும் இந்த முடிவை கட்டாயம் ஆதரிப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. காரணம் அவனும் தன்னைப் போல ஹோம்லி டைப் ஆசாமிதானே என்ற எண்ணமும் கூடவே வந்து கற்பனைக்கு மேலும் உரமிட்டது.

ஆனால் அவளுக்கே இது சற்று அதிகப்படியாகத்தான் தெரிந்தது. காரணம் தான் பல முறை இலை மறைவு காய் மறைவாக தன் விருப்பத்தை வெளிப்படுத்திய போதும், கண்டுகொள்ளாமல் இருக்கும் மாறனை என்ன செய்வதென்றே புரியவில்லை அவளுக்கு. ஒரு வேளை ஆரம்பத்தில் தான் பெற்றோர் விருப்பப்படிதான் தன் திருமணம் என்று கூறி, அவனை சட்டை செய்யாமல் இருந்ததற்கு பழி வாங்குகிறானோ என்றுகூட நினைக்கத் தோன்றியது அவளுக்கு. எப்படியும் அவனிடம் நேரிடையாக பேசிவிட வேண்டும் என்று முடிவும் செய்து வைத்திருந்தாள். அதற்கானதொரு சரியான சந்தர்ப்பமும் வரும் எனவும் காத்திருந்தாள். அந்த சந்தர்ப்பம் இதற்கு முன்பு இரண்டொரு முறை வந்த பொழுதும் , அவன் பிடி கொடுக்காமல் நழுவிச் சென்றதும் நினைத்தால் கவலையாகத்தான் இருந்தது. இருந்தாலும் , எது எப்படி இருந்தாலும், தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் அது மாறனுடன் மட்டுமாகத்தான் இருக்க முடியும் என்ற உறுதியான நினைவு மட்டும் இருந்தது. அடுத்த நாள் காலை முதலில் இதை தன் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருந்தாள்.

அம்மா கட்டாயம் , ஜாதகம், பொருத்தம் என்றெல்லாம் காரணம் காட்டி மறுப்பு தெரிவித்தாலும், அப்பா எப்படியும் அம்மாவை சமாதானப்படுத்தி, எளிதாக சம்மதிக்கவும் வைத்துவிடுவார் . பிறகு அப்பாவை நேரே மாறனின் தந்தையிடம் சென்று பேசச் சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக மாறனிடம் உறுதியாக பேசிவிட வேண்டும் என்றும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தவள், எவ்வளவு நேரம் ஆனதோ தெரியாமல் இரவு உணவையும் மறந்து அப்படியே உறங்கியும் போனாள்.

காலையில் எழுந்தவள் , அவளுடைய பிரியமான கலெக்‌ஷன்ஸ் மெல்லிசைப் பாடல்களை வைத்துக் கொண்டு , ஒரு கையில் தேநீர் கோப்பையையும் பிடித்துக் கொண்டு, லேசான நாணத்தையும் சுமந்து கொண்டு தன்வீட்டு தொலைபேசி எண்ணை சொடுக்கியவள், மறு முனையில் நீண்ட மணியோசை மட்டுமே விடையாகக் கிடைக்க, காத்திருக்க வேண்டியதாகியது.

அனு காலையில் எழுந்தது முதலே ஒரே பரபரப்பாக இருந்தாள். எந்த விசயத்தையும் மிக நிதானமாக கையாள்பவள், இதில் மட்டும் என்னவோ சற்று பரபரப்பு தொற்றிக் கொள்வதை தவிர்க்க முடியவில்லைதான். காரணம் நல்ல ஒரு வாழ்க்கை தன் கை நழுவிச் செல்வதை ஏற்றுக் கொள்வது சிரமம்தான். அதைவிட தன்னைப்பெற்றவர்களிடமும் இதைப்பற்றி தானே சொல்ல வேண்டிய கட்டாயம் வேறு. ரம்யா என்னவோ மிக எளிதாகத்தான் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். அம்மாவும், அப்பாவும் தன் திருமணத்தில் எத்துனை ஆர்வமும் , நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பது அவளுக்கு எந்த அளவு புரியப் போகிறது. அவள் கண்முன் தெரிவதெல்லாம் இப்போது தன் உயிர்த் தோழனின் நல்வாழ்க்கை மட்டுமே. அதை எப்படியும் முடிப்பது என்ற உறுதியோடுதான் வந்திருக்கிறாள். களையிழந்து போன தன் வாழ்க்கையைப் பற்றியே நினைக்க நேரமில்லாதவள், எங்கேயிருந்து தன் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படப் போகிறாள். தன்னையறியாமல் ஒரு பெருமூச்சு வர அந்த சத்தம் கேட்டு அம்மா அருகில் வந்து, வாஞ்சையாக ‘என்னம்மா’ என்று கேட்க, அதற்கு மேல் அவளால் தன் மனப்பாரத்தை இறக்கி வைக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கினாலும் எப்படியோ சொல்லி முடித்தாலும், அவள் அம்மாவின் முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சியை சமாளிப்பதும் சிரமமாகத்தான் இருந்தது. ஒரு வழியாக அம்மாவை சமாதானம் செய்ய முயற்சித்தாலும் அவள் தந்தையை எதிர்கொள்வது அவ்வளவு சாமான்ய காரியமாக இல்லை அவளுக்கு.

பெரியவர்களாகப் பார்த்து நல்ல நேரமும் , காலமும், சோதிடமும், ஜாதகமும் பார்த்து பொருத்தம் பார்த்து முடிந்த கல்யாணம் எப்படி முடிவிற்கு வரும் என்று பேரதிர்ச்சி மட்டுமே அனுவின் தந்தைக்கு எஞ்சியிருந்தது. ஆயினும் அனு சொன்ன சில விசயங்கள் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்ததால், தங்கள் மகளின் அமைதியான எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு மனதை தேற்றிக் கொள்ள தயாராவதைத் தவிர வேறு வழியும் இல்லை அவர்களுக்கு.

தன்னையறியாமல் மனதில் ஏற்பட்ட இழப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுறுசுறுப்பாகத் தயாரானாள் மாமாவின் வீடு நோக்கி. மாமாவிடம் பக்குவமாக பேசவேண்டும். இருதய நோயாளி.. அதற்காக தன்னை முதலில் தயார்படுத்திக் கொண்டாள். தன் கவலையை துளியும் வெளிக்காட்டாமல், தன்னை இந்த விசயம் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பதாக அழகாக நடிக்க வேண்டும். சற்று கடிமான காரியமாக இருந்தாலும், நடத்தியே ஆக வேண்டும். நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர் நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள் என்று தெரியும் போது அதன் பாதிப்பு சொல்லில் விளக்க முடியாதது. அந்த வகையில் மாறனின் தந்தையும் இந்த விசயத்தை தவறாகப் புரிந்து கொண்டு மகனை வெறுக்காமல் இருக்க வேண்டுமே என்றும் ஆதங்கப்பட்டது. இந்த நிமிடம் வரை மாறன் தன் சுயநலம் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படாமல் ,மனதிற்குள்ளேயே வைத்து பூட்டி வைத்துக் கொண்டுதானே இருக்கிறான். ரம்யா முயற்சி எடுக்கவில்லையென்றால் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே புதைத்து விட்டு, இரண்டு உயிர்களின் நிம்மதியற்ற வாழ்க்கைக்கு காரணமாகியிருப்பான். ஒரு வகையில் ரம்யா செய்த செயல் பாராட்டிற்குரியதே.

இப்படி பல விதமான யோசனைகளுடன் தான் மாறனின் வீடு வந்து சேர்ந்தாள்.. இவ்வளவு நாட்கள் இல்லாமல் இன்று ஏதோ அந்த வீடு அவளுக்கு அன்னியப்பட்டுப் போனது போல் இருந்தது. ரம்யாவிற்கும் போன் செய்து விட்டு கிளம்பியதால் இன்னும் சற்று நேரத்தில் அவளும் வந்து சேர்ந்து விடுவாள். அவளுடன் சேர்ந்தே போகலாம் என வீட்டின் முகனையில் காத்துக் கொண்டு நின்றிருந்தாள். அங்கு நடைமேடையில் நின்று கொண்டு பிச்சை எடுக்கும் ஒரு சிறிய பெண் ஒவ்வொருவரிடமும் நெருங்கி காசு கேட்கும் போது, மறுதலிக்கப்பட்ட போதும், சற்றும் கலங்காது அதே முகபாவத்துடன், எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல், இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற போக்கில் தொடர்ந்து சலிக்காமல் கையேந்திக் கொண்டிருந்ததைப் பார்க்க சங்கடமாக இருந்தாலும், அந்த சிறு வயதில் இந்த அளவிற்கு ஒரு மனத்தெளிவை அவள் சூழல்தான் கொடுத்திருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. வேறு ஒரு சமயமாக இருந்தால் கட்டாயம் இதை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு சென்றிருக்க மாட்டாள் அனு.. அந்தப் பெண்ணிற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ முயற்சித்திருப்பாள். ஆனால் இன்று தன் மனநிலை அதற்கு இடங்கொடுக்காததும் அவளுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியது.

பல்வேறு சிந்தனைகள் அருகில் ஆட்டோவில் இருந்து ரம்யா இறங்கியதைக்கூட கவனிக்க முடியாமல் செய்தாலும் அதை உணர்ந்து கொண்ட ரம்யா அவளைத் தட்டி நினைவிற்கு கொண்டு வந்தாள். இருவரும் அதிகம் பேசும் மனநிலையில் இல்லாதலால் சம்பிரதாயமாக நலம் விசாரித்துவிட்டு மாறனின் வீடு நோக்கி நடந்தனர். நல்ல வரவேற்பும் , அருமையான பில்டர் காப்பியும் சற்று நேரத்தைக் கடத்தினாலும், இவர்கள் ஏதோ பேச வந்திருக்கிறார்கள் என்பதும் புரியாமல் இல்லை மாறனின் தந்தைக்கு. மெல்ல விசயத்தை ஆரம்பித்தாள் அனு. மாறன் சில நாட்களாகவே எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் பேசுவதையும், அனுவிடம் அதிகம் ஒட்டுதல் இல்லாமல், மற்ற இளைஞர்கள் போல் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணிடம் அடிக்கொரு முறை போனில் பேசுவதும், பரிசுப் பொருட்கள் வாங்கி அனுப்புவதும், இப்படி எதையுமே செய்யாத மகனைப் பார்த்து ஆச்சரியப்பட்டும் இருக்கிறார். இருந்தாலும் அதன் பின்னணியில் இத்துனை பெரிய அதிர்ச்சியான தகவல் இருக்கும் என்று உணரவில்லை அவர்.

அனு அமைதியாக அதே சமயம் அழுத்தமாக சூழ்நிலையை விளக்கிய விதம் அவரை அதிர்ச்சியிலிருந்து சிறிது சிறிதாக மீட்டுக் கொண்டு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆரம்பத் தவறு தன் மீது இருந்ததும் அவருடைய சமாதானத்திற்கு காரணமானது. தான் தவறுதலாக புகைப்படம் அனுப்பப் போகத்தானே இப்படியெல்லாம் நடந்து விட்டது என்றும் புரிந்தது. ஆனாலும் அந்தப் பெண் பல வகையிலும் மாறனுக்குப் பொருத்தமாக இருந்த போதிலும் முக்கியமான ஜாதகப் பொருத்தம் இல்லாமையால்தானே அந்த பெண்ணை ஒதுக்க வேண்டியதாகியது. அதனை திரும்பவும் எப்படி ஒப்புக் கொள்வது என்று பெரும் குழப்பமாக இருந்தது.

லக்னத்துக்கு , ஒன்று , மூன்று,ஐந்து, ஏழு , ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் இராகு அல்லது கேது ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் இருந்தால் அது பிதுர் தோஷம் என்பார்களாம். இது உரிய ஜாதகரின் வாழ்க்கையில் திருமணத்தடை, புத்திர பிறப்புத் தடை, நல்ல வாழ்க்கைத் திருப்புமுனைகளை அனுபவிக்க இயலாமல் போகுதல் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் இருப்பது போன்றவைகளால் தினசரி வாழ்க்கையே ஒரு போராட்டமாகிவிடும் என்பார்கள். அதனாலேயே அவந்திகாவின் ஜாதகத்தை திருப்பிக் கொடுத்தது இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.அதுவும் அந்த ஜாதகம் தன் உற்ற தோழனின் மூலமாக வந்ததால் மறக்கவில்லை. அதற்குப் பிறகு கூட பல முறை தன் நண்பன் அது பற்றி பேசியும் தான் பிடி கொடுத்து பேசாதலால் தானே அவன் நிறுத்தினான். அனுவை நிச்சயம் செய்த பின்பு சுத்தமாக இது பற்றி கேட்பதையே மறந்து விட்டான். ஆனாலும் அவருக்கு இதில் முழுமையாக உடன்பாடு இல்லை என்பது அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. ரம்யா அவரிடம் தெளிவாக மாறனின் நிலை குறித்தும் அவந்திகாவிடமும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்த பின்பு அவரால் அதிகமாக மறுப்பேதும் சொல்ல முடியாவிட்டாலும், உடனடியாக ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தனக்கு யோசிக்க அவகாசம் வேண்டும் என்றும் சொன்னார். ஏதேனும் இந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்ய முடியுமா என்று விசாரிக்கவும் வேண்டும் என்றார்.

இதற்கு மேலும் அவரைக் கட்டாயப்படுத்தி சங்கடப்படுத்துவது சரியல்ல என்பதை உணர்ந்தவர்களாக இருவரும் கிளம்பினார்கள். ரம்யாவும் ஒரு வாரத்தில் தான் திரும்பவும் அமெரிக்கா கிளம்புவதாகச் சொல்லிவிட்டு விடை பெற்றாள். அனுவிற்கு மட்டும் விடை பெறும்போது இருதயத்தில் ஒரு பெரிய பந்து வந்து அடித்தது போன்று ஒரு அதிர்வு ஏற்பட்டது. இவ்வளவு நாள்கள் இருந்த உரிமை திடீரென பறிக்கப்பட்டது போல் உணர்ந்தாள். எப்படி இருந்தாலும் அது தன்னுடைய மாமன், மாமி வீடு என்பதால் அவள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் பழையபடி எந்த உரிமையும் கொண்டாட முடியாது என்ற நிதர்சனம் முள்ளாய் குத்தியது. மௌனம் மட்டுமே மருந்தாகிப் போக ஏதும் பேசாமல் அமைதியாக வெளியே வந்தாள். ரம்யா அவளை இறுக அணைத்து உச்சி முகர்ந்ததில் உண்மையான அன்பும் பாசமும் வெளிப்படையாகத் தெரிந்தது.

அதற்கு மேல் அனுவுடன் இருந்து அவளை சங்கடப்படுத்த விரும்பாதவளாக அவசரமாக வீட்டிற்கு கிளம்ப வேண்டும் என்று எதையோ ஒரு காரணம் சொல்லி கிளம்பினாள். அனுவிற்கும் சற்று தனிமை தேவையாக இருந்ததனால், ரம்யாவை திரும்பவும் ஆட்டோ பிடித்து ஏற்றி விட்டு, தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு வீடு நோக்கிச் செல்லலானாள்……

அவந்திகா வெகு நேரத்திற்குப் பிறகு பெற்றோரின் தொடர்பு கிடைக்க, ஆவலாக பேச்சைத் துவக்கினாள்…..

தொடரும்.

படத்திற்கு நன்றி

Tuesday, December 13, 2011

எண்ணங்களும், வண்ணங்களும்


எண்ணங்கள் காட்டும் வண்ணங்கள்!
வெண்மையும் செம்மையும் காவியம்!
பசுமையும் செம்மையும் ஓவியம்!
இயற்கையும் இனிமையும் இதம்!
இசையும் நாதமும் சுகம்!
இலையும் தளையும் பக்குவம்!
சருகும் துளிரும் நித்தியம்!
மனமும் குணமும் அநித்தியம்!

Sunday, December 11, 2011

சங்கமம்-2011 வர்றீங்கதானே?

சங்கமம்-2011 வர்றீங்கதானே?

சங்கமம்-2011
இணையச் சிலந்திக்கூட்டில் பல தளங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நம்மை ஒரு கோட்டில் மீண்டும் இருத்திப்பார்க்க, இந்த ஆண்டும் ஈரோடு தமிழ்வலைப்பதிவர்கள் குழுமம் அழகானதொரு சந்திப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.


வலைப்பக்கம்(blog), WordPress, Facebook, Twitter, BUZZ போன்ற பல தளங்களில் உறவாடும் இணைய உறவுகளை ஒன்று திரட்டி அகமகிழும் முகமாக ”சங்கமம் 2011” எனும் கூடல்த்திருவிழா ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

2009, 2010ஆம் ஆண்டுகளில் இது போன்ற கூடல்கள் மிகச் சிறப்பாக நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இந்த ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி ஈரோட்டில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டுகளின் சங்கமம் குறித்த இடுகைகள்.

எங்கு, எப்போது, என்ன?
சங்கமம்-2011 நிகழ்வு 18.12.2001 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என எங்கள் குழு வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.

ஏன் சங்கமம்?
ஏன் இப்படியான நிகழ்வை மிகுந்த பொருட்செலவோடு, கடினப் பணிக்கிடையிலும் நடத்த வேண்டும் என்ற கேள்விகள் எப்போதாவது எழுந்தாலும், இணைய உலகத்தில் இதயத்திற்கு நெருக்கமாகக் கண்டெடுத்த எம் தமிழ்சொந்தங்கள் அந்தக் கேள்விகளை அகற்றி ஆண்டுக்கொருமுறை கூடிப் பழகவேண்டும் என்று ஆவலை நிறையவே ஊட்டுகிறது.

எல்லாச் சன்னல்களையும் திறந்துவிட்டு, இந்த இணைய சமூக வலைத்தளம் நம் பசிக்குத் தீனி போட்டு, உள்ளே உருண்டு, புரண்டு கொண்டிருப்பதை நம்மிலிருந்து வெளியே எடுத்து, தனக்குள் தாங்கி, பலதரப்பட்ட வகையில் அங்கீகாரம் அளித்து, புதியதொரு உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து வைத்திருக்கிறது. வெறும் எழுத்துகளாலும், படங்களாலும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதாவது நேரிலும் சந்தித்து மகிழலாமே என்ற ஆசையின் வெளிப்பாடுதான் இந்தக் கூடல்.

கலந்துகொள்ள:
முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு

தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

இது கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு உறுதிப் படுத்தியதையொட்டியே நிகழ்வுக்கான இருக்கைகள், உணவு ஏற்பாடு செய்யமுடியும். இவ்வளவு வலியுறுத்திக் கேட்பதன் மிக முக்கியக்காரணம் மதியம் சைவ / அசைவ உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. சரியான எண்ணிக்கை தெரியாத போது உணவு போதாமல் அமையவோ, கூடுதலாக அமைந்து வீணாகவோ வாய்ப்பிருப்பதை முற்றிலும் தவிர்க்கவே. நிகழ்ச்சியன்று அரங்கிற்குள் 9.30க்குள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதுமில்லை.
மேலதிக விபரங்களுக்கு:
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக்
(பொருளர்) 97881-33555,
ஆரூரன்
- 98947-17185 ,
கதிர்
– 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர்
- 98658-39393,
ராஜாஜெய்சிங்
- 95785-88925,
சங்கவி – 9843060707
நிகழ்வின் வெற்றியும் சிறப்பும் தங்கள் கைகளில் மட்டுமே அமைந்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராக இருக்கின்றோம்

வர்றீங்கதானே!?