Thursday, September 22, 2016

மாயக்கண்ணன் – கோவர்த்தனநேசன்



அருள்மிகு கோவர்த்தனநேசன் ஆலயம் – மதுரா

மாயக்கண்ணன் குழந்தையாக அவதரித்த புனித பூமி மதுரா. இந்தியத் திருநாட்டின் எண்ணற்ற புனிதமான வழிபாட்டுத் தலங்களில் இதுவும் முக்கியமான ஒரு தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 100வது தலம் இது. பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐம்பெரும் ஆழ்வார்களால் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் இது:

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
எனும் சிறப்பு வாய்ந்த இப்பாடல் மிக்க பொருட்செறிவு கொண்டது !

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…


ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ…

குழந்தையின் தாலாட்டு! இந்த இரு சொற்களில் எத்தனைத் தத்துவங்கள்!
தால் என்பது நாவைக் குறிக்கும் சொல். நாவை ஆட்டி இசையாய் எடுத்து, ஊட்டி செல்லக்குழந்தையை ஆராட்டுதல் “தாலாட்டு” எனப்படுகிறது. இந்தத் தாலாட்டில் வல்லினமும், மெல்லினமும் தவிர்த்து, இடையினத்தில் மென்மையாக இசைப்பதே இனிய தாலாட்டுப் பாடலாம். (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) இதுவே குழந்தைகளை அமைதியாக உறங்கச்செய்து, மூளை வளர்ச்சியையும் ஊக்குவித்து, குழந்தையை அமைதியான சூழலில் வளரச்செய்கிறது. வன்மையான வல்லினப்பாடல் குழந்தையை அச்சுறுத்தும். மென்மையான மெல்லினப்பாடல் குழந்தையின் அழுகைச்சத்தத்தில் அமிழ்ந்துவிடக்கூடும். ஆகவே இடையினத்தில் இசைக்கும் பாடலே குழந்தைக்கு ஏற்றதாகும்.  தமிழரின் தன்னிகரில்லா தாலாட்டு, தரணியில் தனித்து நிற்பதன்றோ! வாழ்க தமிழ்! வாழ்க தமிழர் தம்பெருமை!

வாழ்க்கை - LIFE QUOTES