Thursday, September 22, 2016

மாயக்கண்ணன் – கோவர்த்தனநேசன்



அருள்மிகு கோவர்த்தனநேசன் ஆலயம் – மதுரா

மாயக்கண்ணன் குழந்தையாக அவதரித்த புனித பூமி மதுரா. இந்தியத் திருநாட்டின் எண்ணற்ற புனிதமான வழிபாட்டுத் தலங்களில் இதுவும் முக்கியமான ஒரு தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 100வது தலம் இது. பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐம்பெரும் ஆழ்வார்களால் 50 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது.
ஆண்டாள் அருளிய திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் இது:

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.
எனும் சிறப்பு வாய்ந்த இப்பாடல் மிக்க பொருட்செறிவு கொண்டது !

அயோத்திக்கு ஒரு ‘ராமஜென்ம பூமி’ என்பதுபோல், உத்தரபிரதேச மாநிலத்திற்கு, மதுரா எனும் ‘கிருஷ்ண ஜென்ம பூமி’ என்று இந்துக்களால் போற்றி வழிபடப்படுகிறது.
இவ்வாலயம் ஜஹாங்கீர் எனும் முகலாய மன்னரின் ஆட்சிக்காலத்தின் போது, ஆர்ச்சாவைச் சேர்ந்த ராஜா வீர் சிங் பந்தேலால் என்பவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. ஆயினும் இங்குள்ள ஆதி கோயில் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்னரே கண்ண பகவானின் கொள்ளுப் பேரனால் கட்டப்பட்டது என்றும் புராணக்கதை உள்ளது. முதன் முதலாகக் கட்டப்பட்ட கோயில், கி.பி. 1017 ஆம் ஆண்டில் முகமது கஜினியால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனோடு சேர்ந்து இன்னும் பல கோயில்கள் மற்றும் புத்த விகாரங்களும் அழிக்கப்பட்டுள்ளன. அதன்பின் பிற்காலங்களில் இக்கோயில் பல்வேறு வகையான கட்டுமான மாற்றங்களுக்கு உட்பட்டபின்பு தற்போது உள்ள ஆலயம் தென்னாட்டு கட்டுமான பாணியில் அமைந்துள்ளது. 1965 ஆம் ஆண்டில் இக்கோவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.
புராணங்களின் அடிப்படையிலும் மதுரா நகர் தோன்றிய வரலாறு அறியப்படுகின்றன. ஒரு சமயம் இலவணாசுரன் எனும் அசுரனை அழிக்கும்பொருட்டு, முனிவர்கள் இராமபிரானை வேண்டி நிற்க, இராமர் தமது இளவல் சத்ருக்கனனை அனுப்பி மது எனும் நகரத்தின் அரசனான இலவணாசுரனை அழிக்கச்செய்தான். சத்ருக்கனன் அவனைக் கொன்றுவிடுகிறான். பின் யமுனை நதிக்கரையில் அழகிய அர்த்தசந்திர வடிவத்தில் மதுரா நகரை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்நகரத்தை சத்ருக்கனன் வம்சத்தினர் ஆண்டு வந்துள்ளனர். அவனை அடுத்து வசுதேவர் பரம்பரை ஆண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
மதுரா என்ற திருநாமத்தில் இந்த திவ்யதேசம் குறிப்பிடப்பட்டாலும், இது மதுரா, பிருந்தாவன், கோவர்த்தனகிரி என்ற மூன்று தலங்கள் அடங்கியதாகக் கருதப்படுகிறது.
மதுரா உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ஆக்ராவிற்கு வடக்கே 50 கி.மீ. தொலைவிலும், தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனமும் 22 கி.மீ. தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் விளங்குகிறது.
மதுராவில் ‘ஜன்மபூமி’ எனும் பெயரில் கண்ணன் பிறந்த சிறைச்சாலையே பெரிய ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
aka
இவ்வாலயத்தின் மூலவர் கோவர்த்தநேசன், பாலகிருட்டிணன் நின்ற திருக்கோலத்துடனும், கிழக்கே திருமுக மண்டலம். பிரம்மா, வசுதேவர், தேவாதி மற்றும் இந்திராதி தேவர்களுடனும் திருக்காட்சியளிப்பது சிறப்பு. கோவில் முற்றத்தில் துளசி மாடம் காணப்படுகிறது. வசு தேவரும், தேவகியும் கையில் விலங்கோடும், கம்சன் குழந்தையை தலைகீழாகப் பிடித்தபடி கையில் வாளுடன் ஆக்ரோசமாக நிற்கும் சிற்பமும் காணப்படுகின்றன. வசுதேவரும், தேவகியும் உட்கார்ந்திருக்கும் காட்சியும், மேலும் பல சிற்பங்களையும் காண முடிகிறது. தசாவதாரக் காட்சிகளும் ஓவியங்களாக தொங்கவிடப்பட்டுள்ளன. ஒரு பழம்பெரும் ஆஞ்சநேயர் ஆலயமும் உள்ளது.
கோவர்த்தனத்தில் கண்ணன் மலையைக் குடையாகப் பிடித்த தலத்தில், அத்திருப்பாதம் பதிந்த இடம் இன்றும் சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. கண்ணன் ஆநிரை மேய்த்துக்கொண்டு ஆடிப்பாடி களித்திருந்த பிருந்தாவனத்தில் ‘ரங்க மந்திர்’ எனும் பெயரில் தென்னாட்டுப் பாணியில் அமைந்துள்ள இவ்வாலயத்தில் தமிழ்நாட்டு வைணவர்களே பூசைகள் செய்து வருகின்றனர்.

முகலாய மன்னன் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தின் போது இவ்வாலயத்தின் அருகில் மிகப்பிரம்மாண்டமான மசூதி ஒன்றும் கட்டப்பட்டது.



ஆக்ரா மற்றும் தில்லி ஆகிய இரு ஊர்களுக்கும் இடையே அமைந்துள்ள மதுரா எனும் கோவிலை ஒட்டி அமைந்துள்ள ஒரு குளத்தில் தான் கம்சன் கிருட்டிணனுக்கு முன் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் போட்டு கொன்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த குளத்தைப் பார்ப்பதையோ, அங்கு செல்வதையோ மக்கள் தவிர்க்கிறார்கள் என்கிறார்கள். பாசி படிந்த நிலையில் அழகான வடிவத்துடன் அமைந்துள்ள குளம் இது. நீர் தானாக ஊறியபடி உள்ளதாகவும் கூறுகிறார்கள். குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே இக்கோவிலில் தீபாராதனை செய்கிறார்கள். கிருஷ்ணர் பிறந்த இடம் “பால கிருஷ்ணா ” என்று கண்ணன் மனைவியுடன் உள்ள இடத்தை “ராதா-கிருஷ்ணா” இடம் என்றும் கூறுகின்றனர்.
கண்ணன் அவதரித்த திருத்தலத்திற்கு செல்லும் பாதை மிகவும் குறுகலாக உள்ளது. நம் மாயக்கண்ணன் பிறந்தது ஒரு சிறையின் அறைக்குள்தான் அல்லவா? வழி நெடுகிலும் சுவற்றில் கிருட்டிணர் பிறந்த வேளையில் நிகழ்ந்த அனைத்துச் சம்பவங்களும் அழகிய ஓவியங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கண்ணபெருமான் படுத்துறங்கிய தொட்டில் போன்றவைகளும் காணக்கிடைக்கின்றன. அதை அனைவரும் பக்தியுடன் தொட்டு வணங்குகின்றனர். “கிருஷ்ண பகவான்க்கி ஜே”, கிருஷ்ண பரமாத்மாக்கி ஜே” என்று பக்தர்கள் உளம் உருக குரல் கொடுத்தபடி மெய்மறந்து வழிபடுகின்றனர். அங்கி போன்ற பெரிய உடை அணிந்து தம் துணையுடன் காட்சி தரும் வித்தியாசமான கிருட்டிணர் திருவுருவைக் காணமுடிகிறது.
மதுராவில் கால் பதித்தவுடன் குட்டிக்கண்ணனின் பிஞ்சுப் பாதங்கள் பதித்து ஓடியாடிய இடங்களில்தான் நாமும் நிற்கிறோம் என்கிற ஒரு உணர்வு மேலோங்கி நம்மை மெய்சிலிர்க்கச் செய்வதை தவிர்க்க இயலாது என்பதே நிதர்சனம். அந்த தெய்வக்குழந்தை அவதரித்த அந்த பாதாளச்சிறைக்குச் செல்லும் பாதை மிகக் குறுகியதாகவும், வளைந்தும் நெளிந்தும் இருந்ததைப் பார்த்தபோது 2000 – 3000 ஆண்டுகளுக்கு முன்பே இத்துணை சிறப்பான கட்டிடக்கலையை அமைத்திருப்பது எங்கனம் சாத்தியம் என்ற ஆச்சரியம் எழாமல் இல்லை. வெறும் கருங்கல் படுக்கை மட்டுமே உள்ள அச்சிறை அறையிலிருந்து அத்துணைக் காவல்களையும் மீறி வசுதேவர் எப்படித்தான் அந்தக் குழந்தையை மாற்றியிருக்க முடியும்? தம் உயிருக்கு அஞ்சி கம்சன் எத்தகைய பாதுகாப்பு அரண் அமைத்திருக்கிறான் என்பதும் பேராச்சரியம்தான். இப்படிப்பட்ட ஒரு சிறையிலிருந்து மீண்டு வருவது தெய்வ சங்கல்பம் இன்றி கற்பனையிலும் நடக்கவொண்ணா நிகழ்ச்சி என்பதே சத்தியம். இத்தகைய ஒரு தெய்வீக சக்தியை அந்த இடத்தில் உணர்ந்து மெய்சிலிர்ப்பது இன்றளவும் நடந்துகொண்டிருப்பதே இந்த வரலாற்றிற்கான ஆதாரம் எனலாம்!
இக்கோவிலின் தீர்த்தம், இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதித் தீர்த்தம் என்பன.
இந்திரன் தமக்குப் படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் மாயக்கண்ணன் உண்டுவிடும் கோபத்தில், பெரும் மழையாகப் பொழிந்து ஊரை அழிக்க முடிவெடுக்கிறான். அதனால் மக்களும், ஆவினங்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று வருந்தும் கோபாலன் கோவர்த்தன மலையைத்தம் ஒற்றை விரலில் தூக்கி சிரமேற்கொண்டு ஊரையே காக்கிறான். பின் இந்திரன் ஏதும் செய்வதறியாது பணிந்து வந்த வழியே திரும்பி செல்கிறான். மதுராவில் பிறந்து வளர்ந்து கம்சனைக் கொன்று பெற்றவர்களைக் காத்து, அவர்களை தூவாரகையில் குடியமர்த்தி தானும் உடன் வாழ்கிறான்.
கம்சன் என்பவன் அரக்க குணம் படைத்தவன். இவன் தன் சகோதரி தேவகி மற்றும் அவளுடைய கணவர் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தையால்தான் தனக்கு மரணம் நேரும் என்பதை தேவகியின் திருமணத்தன்றே ஒலித்த அசரிரீ மூலமாக அறிகிறான். தன் உயிர் பயத்தில் தங்கையையே கொல்ல முயன்றவனை , எட்டாவது பிறக்கும் குழந்தையை மட்டும் கொன்றுவிடலாம், சகோதரியை கொன்ற பாவம் அவனுக்குத் தேவையில்லை என்று வசுதேவர் அறிவுறுத்துகிறார்.
அதனால் தன் சகோதரியையும், அவள் கணவனையும் சிறையில்அடைக்க உத்தரவிடுகிறான் கம்சன்.தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் குளத்தில் அடித்துக் கொன்றுவிடுகிறான். அடுத்து உருவான ஏழாவது கரு கலைந்துவிடுகிறது. வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகினியின் வயிற்றில் திருமாலின் அருளால் பலராமனாக அவதரிக்கிறது. பின் தேவகி கம்சனிடம் தன் ஏழாவது குழந்தை கருவிலேயே கலைந்துவிட்டதாகக் கூறுகிறாள். எட்டாவது குழந்தைக்காக கம்சன் காத்திருக்கும் வேளையில் திருமாலின் திருவருளால் உருவான யோகமாயா பிரிதொரு இடத்திலிருந்த நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் பெண் மகவாகப் பிறக்கவும் ஆசிர்வதிக்கப்படுகிறாள். .
aka2
ஆவணிமாதம் தேய்பிறை அஷ்டமி திதி, ரோகினி நட்சத்திரத்தில் நள்ளிரவில் எட்டாவது மகனாகச் சிறையினில் பிறக்கிறான் ஆலிலைக் கண்ணன்.கம்சனிடமிருந்து எப்படியும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று வசுதேவரும்,தேவகியும் தவித்துப்போகிறார்கள். பெருமழை கொட்டித் தீர்க்கிறது. யசோதையிடம் குழந்தையைக் கொண்டு சேர்க்குமாறு அசரிரீ ஒலித்ததோடு, வசுதேவருக்கு வழியும் காட்ட, அவர் குழந்தையை கூடையில் சுமந்துசெல்ல, ஆதிசேடன் எனும் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, கரை புரண்டோடும் யமுனை நதி வெள்ளமும்கூட வசுதேவருக்கு வழிவிட, அக்கரையிலிருந்த நந்தகோபன் அரண்மனையில் சென்று யசோதை அன்னையிடம் குழந்தையை சேர்க்கிறார் . பின் யசோதைக்குப் பிறந்த யோகமாயாவை எடுத்துக்கொண்டு வந்து தேவகியின் அருகில் வைக்கிறார் வசுதேவர். குழந்தை பிறந்த செய்தி அறிந்த கம்சன் பெண்குழந்தையா என்று ஆச்சரியப்பட்டாலும் அந்தக் குழந்தையையும் உயிரோடு விட துணிவின்றி அதையும் மற்ற குழந்தைகளைச் செய்ததுபோன்றே குளத்துச் சுவரில் அடித்துக்கொல்ல முயல்கிறான். மாயக் குழந்தை விண் நோக்கிப் பறக்கிறது. எட்டாவதாகப் பிறந்த மாயவன் மறைந்து வளர்கிறான். எப்படியும் கம்சனைக் கொன்றுவிடுவான் எனக்கூறி வானில் மறைகிறாள் யோகமாயா. கோகுலக் கண்ணன் பிருந்தாவனத்தில் வளர்கிறான்.

ஆலிலைக்கண்ணன் அவதரித்த புனித பூமியான மதுரா நகரும், கோபாலனாக ஆடிப்பாடித் திரிந்து வளர்ந்த பிருந்தாவனமும், ‘விரஜபூமி’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கண்ணனுக்கு உகந்த பால், வெண்ணெய், இனிப்பு வகைகள் என அனைத்தும் கடைவீதி முழுவதும் நிறைந்திருக்கக் காணமுடிகிறது. மண் குவளைகளில் மணக்க, மணக்கப் பால் கிடைக்கிறது. வீதியெல்லாம் கோபாலனின் பசுக்கள் எண்ணற்றவை சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

மதுராவிலிருந்து 15 கி.மீ. தொலைவில், வடக்கில், யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பிருந்தாவன நகரம் ஒரு காலத்தில் அழகே உருவானதாகவும், ராசலீலைக்கு தோதான இடமாகவும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. கிருட்டிணரின் குறும்புகளுக்கும், காதல் லீலைகளுக்கும் உகந்ததோர் அழகிய இடம் இந்த பிருந்தாவனம். மதுரா நகருக்கு நேர்மாறாக இந்த பிருந்தாவனம் கனவுகளும், கற்பனைகளும் மேலோங்கி நிற்கும் வகையில் கோலாகலமாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. ராதாவும்,கிருட்டிணனும் காதல் மயக்கத்தில் தங்களை மறந்த நிலையில் பரவசம் பொங்கும் எழில்கோலத்துடன் காட்சியளிக்கிறார்கள்! அந்த தெவீகக் காதலின் தீவிரத்தன்மையை உணர்த்துவது போன்ற ஆனந்தகோலம் . பக்தர்களும் கிட்டத்தட்ட அதே மயக்கத்தில் ‘ராதே ,கிருஷ்ணா..’ என்று மனமுருகி வழிபடுவதையும் காணமுடிகிறது. அடுத்து வெகு அருகில் ராதாரமணர் கோயிலைக் காணலாம்.
ஒரே சாளக்கிராம கல்லில் செதுக்கப்பட்ட கவின்மிகு உருவச் சிலையை இக்கோவிலில் காணமுடிகிறது. அருகிலேயே மரத்தாலான ‘ஹோகி’ எனும் இருக்கையும், ஒரு மேல்துண்டும் (சால்வை) உள்ளன. சைதன்ய மகாபிரபு இக்கோயிலுக்கு பரிசாக அளித்ததாகச் சொல்கிறார்கள்.
கோவிலின் எதிர்புறம் அழகிய கிருட்டிணன் சிலை உள்ளது. அதன் அருகில் ராதையின் சிலைக்குப் பதிலாக அழகிய கிரீடம் மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
images-10
இந்நகரில் திரும்பிய புறமெல்லாம் நூற்றுக்கணக்கில் ஆலயங்களும், எண்ணற்ற மலைத்தொடர்ச்சிகளும், புனிதக் குளங்களும் உள்ளன. பிரம்ம குண்டம், கோவிந்த குண்டம் போன்றவைகள் பெரிதும் பூசிக்கப்படுகின்றன. இவற்றுள் மிக அழகியதும், பிரபலமானதுமான ஆலயம் என்றால் அது 1590 ஆம் வருடத்தில் அமைக்கப்பட்ட கோவிந்த தேவன் ஆலயம். 100 அடி உயரத்தில், 10 அடி அகலத்தில், சிலுவை வடிவில், இரு நிலைகளில் கட்டப்பட்டுள்ளதாகும். மற்றும் பல சிறிய ஆலயங்களையும் இங்கு காணமுடிகிறது.
ஸ்ரீகிருட்டிணரின் அவதாரத்திற்கு ஆதாரமாக புதைந்திருந்த பல கலைப்பொருட்களை இந்த இடங்களிலிருந்து தோண்டியெடுத்துள்ளார்கள். இந்த கலைப்பொருட்கள் ஆலயத்தின் அருகிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவில் அளவிற்கு வேறு எந்த கோவிலும் இந்த அளவிற்கு முகலாய ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் என்று கூறமுடியவில்லை. தற்போது உள்ள ஆலயம் 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக உள்ளது. கைபேசியோ, புகைப்படக் கருவிகளோ உள்ளே எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் உட்புறம் புகைப்படம் எடுக்க இயலவில்லை. விச்ராம் மலைத்தொடர் என்ற இடத்தில்தான் கிருட்டிணர் கம்சனை அழித்தவுடன் மனச்சாந்தி பெறும்பொருட்டு ஓய்வெடுத்த புனித இடமாகக் கருதப்படுகிறது.
images-11
மதுரா என்ற இந்த நகரம் ஏனைய மற்றைய நகரங்களைப் போன்றல்லாமல், இறைவடிவான கண்ணபெருமான் அவதரித்து, விளையாடி, வளர்ந்து, கம்சனை அழித்து, கோவர்த்தன மலையை ஒற்றை விரலில் தூக்கியது என்று இப்படி பல திருவிளையாடல்கள் புரிந்த புண்ணியபூமி. இன்றும் பிருந்தாவனம் மதுராவின் அரசுக்கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. கிருட்டிணர் பிருந்தாவனத்தை விட்டு என்றுமே நீங்குவதில்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இன்றும் உள்ளது. ஆகையால் இந்த புனிதத் தலத்தில் தரிசனம் பெறும் எந்த ஒரு ஆன்மாவும் உள்ளத்தூய்மையும், தெய்வத்தன்மையும் பெறுவதாகவும் நம்பிக்கை உள்ளது.
கோவர்தனமலை – ஸ்ரீகிருட்டிணர் தம் ஒற்றை விரலில் தூக்கிப்பிடித்து வருணதேவனிடமிருந்து மக்களையும், மாக்களையும் காத்ததாகக் கூறப்படும் இம்மலை 7 மைல் நீளம் கொண்ட 400 ஆண்டுகள் பழமையானது. ஜெய்ப்பூரின் மான் சிங் நிர்மாணித்த செயற்கை ஏரியான மான்சி கங்காவும் சேர்ந்து இத்தலத்திற்கு என்றும் நினைவில் நிற்கும் பேரழகைக் கொடுக்கிறது.
பர்சானா என்ற இப்புனிதத் தலம் கோவர்தனமலையின் வடக்குப் புறம் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுதான் ஸ்ரீகிருட்டிணரின் காதல் நாயகி ராதையின் அவதாரத் தலமாம். மதுராவிலிருந்து பக்தர்கள் இங்கேயும் வந்து தரிசனம் செய்துவிட்டுத்தான் செல்கிறார்கள். இந்த இடம் பிரம்மாசரன் என்றும் அழைக்கப்படுகிறது.
நந்தகோவன் – மதுராவின் வடகிழக்கில் 51 கி.மீ. தொலைவில் ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில்தான் கோபாலனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபனும், தாய் யசோதையும் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கான ஒரு பரந்த நினைவாலயமும் எழுப்பப்பட்டுள்ளது. 12 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ரூப் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
கோகுலம் – மதுராவின் தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள மாதவனின் மாய நகரம்! கோபாலனை செவிலியர்கள் இரகசியமாகப் பாதுகாத்த புண்ணிய பூமியும் இதுதான். கோபாலனின் அவதார தினத்தின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். வல்லபாச்சாரியார் என்ற பெரும் ஞானி பல்லாண்டுகள் வாழ்ந்த பூமியும் இதுதான்.
மதுரா செல்லும் வழி –
விமானம் மூலமாக, தில்லி சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தால், அங்கிருந்து மதுரா 150 கி.மீ. தொலைவில் உள்ளது. தில்லிக்கு பல பெரு நகரங்களிலிருந்து விமானப் போக்குவரத்து உள்ளன. தில்லியிலிருந்து மதுராவிற்கு வாடகை மகிழுந்தில் 6 மணி நேரத்தில் சென்றடையலாம்.
மும்பை – தில்லி – சென்னை ஆகிய நகரங்களின் இடையில் இரயில் போக்குவரத்தில் மதுரா ஒரு முக்கியமான இணைப்புப்பாதையாகும். மதுராவிற்குச் செல்ல பல்வேறு நகரங்களிலிருந்து முன்பதிவு வாடகை மகிழுந்துகள் கிடைக்கின்றன.
ஆக்ரா, ஃபாய்சாபாத் மற்றும் அலகாபாத் போன்ற நகரங்களிலிருந்து அரசு பேருந்துகளும், சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தில்லியிலிருந்து மதுராவிற்குச் செல்ல பேருந்து வசதியும் உண்டு.
நன்றி : சொற்கோவில் இதழ் பிரசுரம்

No comments:

Post a Comment