பவள சங்கரி
“நான் உலகத்திற்கு எப்படி தோற்றமளிக்கிறேன் என்பது எனக்குத் தெரி்யாது; ஆனால் என்னைப் பொருத்தவரை, ஒரு சிறுவனாக கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன், கண்டறியப்படாத எத்தனையோ உண்மைகள் எம் முன் பெருங்கடலாக விரிந்து கிடக்கிறது. ஆனால் நானோ அவ்வப்போது ஒரு மென்மையான கூழாங்கல்லோ அல்லது சாதாரண சிப்பியைக் காட்டிலும் மேலும் அழகான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறேன் ”.
ஐசக் நியூட்டன்
உள்ளொளியை மதித்துப் போற்றுவோம்!
உயர, உயரப் போன எதுவும் ஓர் நாள் கீழே வந்தாக வேண்டும். கீழே வீழ்ந்ததும் ஓர் நாள் திரும்ப உயரும் காலமும் வரும். ஆனால் இது எப்போதும் எல்லோருக்கும் தானாக நடக்கக் கூடியது அல்ல. பொருளாதார அடிப்படையில் நல்ல நேரங்களும், கெட்ட நேரங்களும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளும் யதார்த்தம். இருப்பினும் அறிவார்ந்த மக்கள் உயர்வு நிலையைக் கொண்டாடுவதுபோல தாழ்வு நிலையையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. எந்த ஒரு தொழிலும் சில காலங்கள் உச்சாணிக் கொம்பிலும், சில காலங்கள் சந்தையில் தாழ்வு நிலையிலும் இருப்பதைக் காண்கிறோம். பொதுவாக உயர்வான நிலையில் இருக்கும்போது எவருக்கும் மனதில் தாழ்வு நிலை வரக்கூடும் என்ற சந்தேகமே எழுவதேயில்லை. பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்பவர்கள், அடிக்கடி இந்த அனுபவத்தைப் பெறக்கூடும். நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ஒவ்வொரு வெற்றியும், பல துன்பங்களின் மீது கட்டப்பட்டிருக்கலாமே தவிர அந்த துன்பங்களாலேயே ஆனது அல்ல என்பதே நிதர்சனம். ஒருவருக்கு பொருளாதாரப் பின்னடைவு என்பது எந்த நேரத்திலும் எழலாம். இது எத்துனைப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும் நம் வாழ்க்கை ஓட்டத்தைச் சீரமைக்கக்கூடிய ஒரு வரப்பிரசாதம் நம்முடனேயே இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை வரத்திற்கு ஏற்றவாரு நம் போக்குகளையும், சக்திகளையும், வெற்றிக்கான வாய்ப்புகளையும் அமைத்துக் கொள்வதால் பொருளாதாரம் ஏற்படுத்துகிற எந்த ஒரு சூழலையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெற்றுவிட முடியும். அப்படி ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் வல்லமை பெற்றதுதான் நம்முடைய உள்ளுணர்வு. இதன் அளவுகோளைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு இயந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.