பவள
சங்கரி
"அருந்ததி, அம்மா
சாப்பிட்டாங்களா? எங்கே ஆளையேக் காணோம்”
“இல்லப்பா, எங்கப்பா
நேரத்துக்குச் சாப்பிடறாங்க.. என்ன
சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. அழுதுகிட்டே
இருக்காங்க. இன்னும் உங்கப்பா செத்த
அதிர்ச்சியில இருந்து மீளவே இல்லை
பாவம். நானும் எவ்வளவோ சமாதானம்
சொல்லிப் பார்த்தேன். வேற என்ன செய்யிறதுன்னு
தெரியல. நீ போய் பாரு
ஜனா”.
கணவனும்,
மனைவியும் மாறி மாறி வருந்திக்
கொண்டிருந்தனர். அப்பாவை திடீரென்று
இப்படி ஒரு விபத்து அள்ளிச்
சென்றுவிடும் என்று கனவிலும் யாரும்
நினைக்கவில்லை. இந்த அறுபது வயதிலும்,
வங்கி மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு
பெற்ற பின்பும் கூட, தான் ஓய்ந்து
உட்காராமல், ஸெராக்ஸ் மிஷின் மற்றும் கம்ப்யூட்டர்
சென்ட்டரும் வைத்து நடத்திக்கொண்டிருந்தவர். அவருடைய சுறுசுறுப்பைப்
பார்த்து இளைஞர்களே
பொறாமை கொள்ளும் அளவிற்கு அவர்தம் நடவடிக்கை இருந்தது
அந்த ஆண்டவனுக்கேப் பொறுக்கவில்லை போலும். 15 வருடமாக தன்னோடு ஒட்டி
உறவாடிய அந்த இரு சக்கர
வாகனமே எமனாகிப் போனது. அப்படி ஒரு
கோரமான விபத்தில் பாவம் மனிதர் அந்த
இடத்திலேயே உயிரை விட்டுவிட்டார். மனைவியிடம்,
சீக்கிரம் வந்து டாக்டரிடம் கூட்டிச்
செல்வதாகச் சொல்லிச் சென்றவர், வெகு சீக்கிரமே போன
கையோடு, கருப்பு வண்டியில் வெள்ளைக்
கட்டுகளுடன் வந்து சேர்ந்த போது
மயங்கிச் சரிந்த மனைவி கௌரி
இன்னும் முழுமையாகத் தெளியவே இல்லை. மகன்
ஜனார்த்தனனும், மருமகளும்
ஒரு குழந்தையைப் போல கௌரி அம்மாவை
கவனித்துக் கொண்டதை அக்கம் பக்கத்தினர்
பாராட்டாத நாளில்லை. நேர, நேரத்திற்கு
கட்டாயப்படுத்தி உணவு உண்ணச் செய்து,
பெரும்பாலான நேரங்கள் கூடவே இருந்து ஆறுதலும்
சொல்லி தேற்றிக் கொண்டிருந்தனர். கௌரியும் மற்ற மாமியார்கள் போல
டிவியின் முன்னால் உட்கார்ந்து சீரியல் பார்த்துக்கொண்டு மருமகளை
அதிகாரம் செய்து வேலை வாங்கும்
வழக்கம் இல்லாதவள் ஆயிற்றே . வீட்டில் எல்லா வேலைகளையும் தானே
இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதோடு மருமகளையும், தன் மகளைப் போலவே,
கண்ணே, பொன்னே என்று தலையில்
தூக்கி வைத்துக்கொண்டல்லவா திரிந்தாள். இன்று அவளுக்கென்று ஒரு
பெருந்துயரம் வந்தபோது தூணாகத் தாங்கி நிற்பதில்
என்ன அதிசயம். திருமணம் ஆகி 12 வருடம் ஆகியும்
குழந்தை பாக்கியம் இல்லாத மருமகளை இன்றுவரை
ஒரு சொல்லேனும் சலிப்பாகப் பேசியவளில்லை. ஆண்டவன் செயல், நேரம்
காலம் வரும்போது எல்லாம் தானாக நடக்கும்
என்று பாடும் பழைய பஞ்சாங்கமாக
இருக்காமல், மருமகளை கோயில் குளங்களுக்குக்
கூட்டிச் செல்வதுடன், ஊரில் உள்ள நல்ல
குழந்தைப் பேறு மருத்துவமனைகள் அனைத்திற்கும்
கூட்டிச் செல்வாள். எந்த வகையிலும் மருமகள்
மனம் தளராமல் தைரியம் சொல்லி
பாதுகாப்பதில் தன் தாயை மிஞ்சியவள்
மாமியார் என்பதில் அப்படி ஒரு பெருமை
அருந்ததிக்கு. வயது ஏறிக்கொண்டே போவதால்
இனி காத்திருந்து பயனில்லையென சோதனைக் குழாய் குழந்தை
முயற்சிக்கலாம் என்று மகனையும், மருமகளையும்
கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்த இந்த நேரத்தில்தான்
இப்படி பேரிடி தாக்கி, உறைந்துபோய்
கிடக்கிறாள் கௌரி. தில்லியில் வேலை
பார்க்கும் மகளும், மருமகனும்கூட அதிக
நாள் லீவு போட்டு தங்க
முடியாத சூழ்நிலையில், அம்மாவை அழைத்துக் கொண்டு
போவதாகச் சொல்லியும், கணவன் வாழ்ந்த இடத்தைவிட்டு
ஒரு அடிகூட எங்கும் நகர
மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும்
தாயை அனுப்ப மகனும் தயாராக
இல்லை. நடந்ததை
ஏற்றுக் கொள்ளும் பக்குவமே இல்லாமல் துவண்டு போய் கிடக்கும்
மாமியாரைத் தேற்றுவதற்கு தன்னால் ஆன அனைத்தும்
செய்து கொண்டிருந்தாள் அருந்ததி. இந்த நேரத்தில்தான், அவளுக்கும்
குழந்தைபேறு உண்டாகி வாந்தி மயக்கம்
என வர ஆரம்பித்திருந்ததால் மெல்ல
தன்னைத் தேற்றிக் கொண்டு தன் கணவனே
குழந்தை உருவில் வரப்போவதாக நம்பிக்
கொண்டு மருமகளை
கவனிக்க ஆரம்பித்திருந்தாலும், முகத்தில் பழைய உற்சாகம் சுத்தமாக
இல்லை.
அம்மா,
மெல்ல தேறி வந்து மருமகளை
கண்ணுக்குள் வைத்து தாங்கிக் கொண்டிருப்பதில்
ஜனாவிற்கு போன நிம்மதி திரும்ப
வந்தது. தன் வியாபாரத்தை கவனிக்க
நேரம் கிடைத்தது. அருந்ததிக்கு ராஜ உபசாரம் நடந்து
கொண்டிருந்தது. எல்லாம்
பழைய நிலைக்கு வந்து கொண்டிருப்பதில் அவரவர்
தம் வேலையை பார்க்க ஆரம்பித்தபோதுதான்
அடுத்த பிரச்சனை ஆரம்பித்தது.
ஆம் யாருமே நினைத்துக்கூடப் பார்க்காத
பிரச்சனைதான்.... நாடகத்தில்
அடுத்தடுத்து காட்சிகள் மாறிக்கொண்டிருந்தால்தானே சுவாரசியம் கூடுகிறது?
அன்று
வெள்ளிக்கிழமை. வழக்கம் போல 5 மணிக்கே
எழுந்து வாசல் தெளித்து செம்மண்
கரையுடன், மாக்கோலம் போட்டு, தலை குளித்து,
சாமி விளக்கேற்றி, சமையலறைக்கு வந்து, பால் பாக்கெட்டை
எடுத்து பாத்திரத்தில் உடைத்து ஊற்றி , மணக்க,
மணக்க பீபரி கொட்டையை அரைத்த
காப்பித்தூளுடன், அளவான சிக்கரி கலந்து
பில்டரில் போட்டு, கெட்டியான டிகாக்ஷன் இறக்கி, அது
வடிவதற்குள் பாலைக் காய்ச்சி இறக்கி
வைத்து, இரண்டையும் கலந்து தேவையான சர்க்கரை
சேர்த்து, சுடச்சுட காப்பியுடன், மகனையும், மருமகளையும் கதவைத்தட்டி எழுப்பிக் கொண்டு நிற்கும் போது
ஏதோ லேசாக தலை சுற்றுவது
போல இருந்தது. இப்போதெல்லாம் அடிக்கடி அப்படி ஆகிறதுதான். ஆனாலும்
இன்று சற்று அதிகமாகத்தான் இருக்கிறது.
சாப்பாடும் சரியாகக் கொள்வதில்லை. அதனால்கூட பலகீனத்தினால் இப்படி ஆகியிருக்கலாம். போகப்போக
சரியாகிவிடும் என்று விட்டுவிட்டாள். ஆனால்
இன்று என்னவோ குடலைப்
புரட்டி வாந்தியெடுக்க வருகிறதே என்று நினைக்கும் போதே,
தொண்டைக்குழி வரை வந்துவிட்டது. அருகில்
இருந்த மேசையின் மீது காப்பியை வைத்துவிட்டு
வாஷ் பேசினுக்கு ஓடிச் சென்று கடகடவென
அப்படியே வாந்தி எடுத்தாள். பித்தம்
அதிகமாகிவிட்டது என்று கொஞ்ச நேரம்
போய் அப்படியே படுத்தவள் கண்ணயர்ந்துவிட்டாள். தோளில் தட்டி ‘கௌரிம்மா.. கௌரிம்மா’ என்று யாரோ கூப்பிடுவது
போல இருந்தது. கணவர் மட்டுமே அப்படித்தட்டி
செல்லமாகக் கூப்பிடுவாரே...
‘என்னங்க...
என்னங்க... எங்க போனீங்க.. ஏன்
இப்படி செய்தீங்க..’
...... ‘ம்ம்ம்ம்ம்ம். சரி..
சரி. வந்த வேலையை முடிச்சிட்டு
சீக்கிரமா நீயும் வந்து சேரும்மா..
உனக்குத் தேவையானதெல்லாம் உன் பீரோவிலேயே இருக்கு.
எதுக்கும் கலங்காதே. தைரியமா இருக்கணும். எல்லாம்
நன்மைக்கே’
விலுக்கென்று
விழித்தவள் மேலெல்லாம் தெப்பமாக நனைந்திருந்தது வியர்வையால்.. ஒன்றும்
புரியாமல் கணவனின் போட்டோவையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தாள். கனவா, நனவா என்று
ஏதும் புரியாமல் மெல்ல எழுந்து சமயலறைப்
பக்கம் சென்று காலை டிபனுக்கு
ஏற்பாடு செய்தாலும், மனதில் இன்னும் கணவன்
சொன்னது ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தது.. மாலை
மருமகளுக்கு மருத்துவமனையில் செக்கப்பிற்கு போக வேண்டிய நாள்
, மகன் வர தாமதமாகும் என்பதால்
தானே அழைத்துக்கொண்டு கிளம்பினாள் கௌரி. ஆட்டோ உருட்டிப்
பெரட்டி ஒரு வழியாகக் கொண்டு
சேர்த்தது. நல்ல வேளையாக திரும்பச்
செல்லும்போது ஜனா வந்து காரில்
கூட்டிச் சென்றுவிடுவான் என்று நிம்மதியாக இருந்தது.
டோக்கன் வாங்கி வந்து உட்கார்ந்திருக்கும்போது,
திரும்பவும் லேசாக தலை சுற்றல். ‘அருந்ததி..
’ என்று மெதுவாக கூப்பிடும்போதே அப்படியே
சரிந்து நாற்காலியிலேயே விழப்போனவளை தாங்கிப்பிடித்து, நர்சை உதவிக்குக் கூப்பிட்டாள்.
உடனே ஓடி வந்த நர்சு
மளமளவென ஸ்டிரெச்சரைக் கொண்டு வரச்சொல்லி அதில்
படுக்க வைத்து டாக்டர் அறைக்கு
கூட்டிச் சென்றாள். பல
சோதனைகளும் எடுக்கப்பட்டு முடிவுகளும் தெரிந்துவிட்டது. டாக்டரம்மா அருந்ததியைக் கூப்பிட்டுச் சொல்லும் வரை அவள் பாவம்
மாமியாருக்கு ஏதோ பெரிய வியாதி
வந்துவிட்டது போல அதிர்ச்சியில் வேண்டாத
தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தாள். ஆனால் டாக்டரம்மா கூப்பிட்டு
அந்தச் செய்தியைச் சொன்னவுடன் அடுத்த நொடி நம்பவும்
முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழப்பத்தில் நின்றிருந்தாள். கௌரியிடம் டாக்டரம்மா ‘அம்மா.. நீங்க உண்டாயிருக்கீங்க..
என்று சொன்னவுடன் ஒன்றும் புரியாமல், ‘அது
என் மருமகள் அம்மா. அவள்தான்
இப்ப முழுகாம இருக்கா..’
இல்லம்மா..
கொஞ்சம் நிதானமாக் கேளுங்க. உங்களுக்கு இப்ப நாலு மாசம்
ஆகியிருக்கு. குழந்தை நன்றாக இருக்கிறது
என்று சொன்னபோது, ‘ஐய, இது என்ன
டாக்டரம்மா, இப்படி உளறுகிறதே.. தீட்டே
நின்னு போனவளுக்கு குழந்தை உண்டாயிருக்குன்னு சொல்லுது..
இதுகிட்ட போய் மருமகளுக்கு வைத்தியம்
பாக்க வந்திருக்கோமே.. முதல்ல டாக்டர மாத்தணும்’
என்று நினைத்து முகத்தை வெறுப்பாக வைத்துக்
கொண்டாள். அதற்குள் அருந்ததி, ஜனாவிற்குப் போன் செய்து வரவழைத்திருந்தாள்.
இருவரையும் டாக்டர் கூப்பிடுவதாகச் சொல்லி
நர்சு வந்தபோது என்னவொ ஏதோவென்று இருவரும்
பதட்டமாகத்தான் சென்றார்கள். டாக்டர் சொன்ன செய்தி
இருவருக்கும் பேரதிர்ச்சி.. நம்ப
முடியாமல் மீண்டும், ‘டாக்டர், அம்மாவிற்கு இப்போது 55 வயசு ஆகிறது. இந்த
வயசிலகூட இது சாத்தியமா’ என்று
கேட்டான் ஜனா. ‘58 வயதிலெல்லாம் குழந்தை பெற்றிருக்கிறார்களே. கணவன், மனைவி
இருவருக்கும் உடல் நல்ல ஆரோக்கியமாக
இருந்தால் இது சாத்தியம்தான். உலகில்
பலருக்கு இது போன்று நல்லபடியாகவே
பிரசவம் ஆகியிருக்கிறது. அதனால் இதில் ஒன்றும்
அதிசயம் இல்லை. இரத்தம் குறைவாக
இருப்பதால் நல்ல சத்தான உணவுடன்
நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.’ என்று
டாக்டர் சொன்னவுடன் ஜனா சட்டென்று, ‘டாக்டர்
இந்த வயதில் இதெல்லாம் அசிங்கம்
இல்லையா.. மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒரே சமயத்தில் பிரசவம்
என்றால் ஊர் சிரிக்காதா, அதுவும்
அப்பாவும் தவறிவிட்ட இந்த நேரத்தில் ...’ என்று
இழுத்தவன், எப்படியாவது அபார்ஷன் செய்து விடச் சொன்னான்.
டாக்டரும், நான்கு மாதம் ஆகிவிட்டதால்
இனிமேல் அதற்கு வாய்ப்பே இல்லை
என்றும் அப்படி செய்தால் அந்த
அம்மாவின் உயிருக்கே ஆபத்து என்பதால் ரிஸ்க்
எடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டார். அந்த
நொடியில் வெட்கத்தால் மகனையும், மருமகளையும் நிமிர்ந்து பார்க்கும் தைரியம்கூட இல்லாமல், வீட்டிற்கு வந்தபின்பும் தன்னுடைய அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்திருந்தாள். ஒரு
முறை மகன் வந்து வேறு
டாக்டரிடம் சென்று குழந்தையை கலைத்துக்
கொண்டு வரலாம் என்று சொன்னபோது,
மகன் ஏதோ தவறான ஒரு
விசயத்தை சொல்லிவிட்டது போலப் பார்த்த அம்மாவின்
மீது முதல் முறையாக கோபமும்,
வெறுப்பும் வந்தது..
அன்றிலிருந்து
கௌரியின் நிலைமையே தலைகீழாக மாறியிருந்தது. இருவரும் ஏனோ அவளை அருவெறுத்து
ஒதுக்க ஆரம்பித்தார்கள். ஏதோ புழுவைப் பார்ப்பது
போன்று அசூசையுடன் தன்னைப் பார்ப்பதை தாங்க
மாட்டாமல் அறையை விட்டு வெளியே
வருவதே இல்லை. வேலைக்காரி கொண்டு
வந்து வைக்கும் சாப்பாட்டை கொரித்துவிட்டு படுத்துக் கிடந்தாள். வயிறு மெல்ல வெளியே
தெரிய ஆரம்பித்திருந்தது. தன்னை வெறுத்து ஒதுக்கும்
அளவிற்கு அப்படி என்ன தவறு
நடந்துவிட்டது என்று புரியாமல் தவித்துக்
கொண்டிருந்தது அந்தப் பேதை நெஞ்சம்.
வீட்டிற்கு வந்த விருந்தாளிகளிடம், வாய்
கூசாமல் அம்மா மகள் வீட்டிற்குச்
சென்றுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்ததோடு, அருந்ததியின் உறவினர் யாரோ இரண்டு
கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் இருப்பது
நல்லதல்ல என்று சொல்லவும் அடுத்த
பிரச்சனை உருவானது. இதையே சாக்காக வைத்துக்கொண்டு
உடனடியாக கௌரியை தில்லியில் மகள்
வீட்டில் விட்டு வரும்படி அடம்
பிடிக்க ஆரம்பித்தாள் அருந்ததி. ஜனாவிற்கும் அதுவே சரியெனப்பட்டது, ஆனால்
சகோதரி சாந்தி இந்த விசயத்தைக்
கேட்ட மறுநொடி தன் மாமியார்
உடன் இருப்பதால் அம்மாவை இந்த நிலையில்
கூட்டி வந்தால் ரொம்பவும் கேவலமாகப்
பேசுவார்கள் என்றும் தானும் வேலைக்குச்
செல்வதால் அம்மாவை கவனித்துக் கொள்ளவும்
முடியாது என்று உறுதியாக மறுத்துவிட்டாள்.
நொடியில் காலம் எப்படியெல்லாம் புரட்டிப்
போட்டுவிட்டது என்று நினைத்து வேதனையில்
துடித்தாள் கௌரி. தன் குடுமபமே
கோவில், கணவனும் குழந்தைகளுமே உலகம்
என்று வாழ்ந்தவளுக்கு எல்லாமே மாயமாகிப்போனது போன்றதொரு
பிரமை. வீட்டில் இதேப் பேச்சாக இருந்தது.
அந்தத் தாய் அவர்களுக்குப் பெரும்
பாரமாகிப் போனாள். எங்கேயாவது ஒழிந்தால்
போதும் என்று நினைக்கத் தொடங்கினார்கள்.
அடுத்த
நாள் காலை வேலைக்காரி சாப்பாடு
கொண்டுவந்து பார்த்தபோது கௌரியின் அறை வெறிச்சோடிக் கிடந்தது.
ஓடிப்போய ஜனாவை அழைத்து வந்து
சொன்னாள். அப்பாவின் போட்டோவும், அம்மாவின் பெட்டியும் காணாமல் போயிருந்தது. நகையெல்லாம்
மேசையின் மீது கழட்டி வைக்கப்பட்டிருந்தது.
ஒரு நொடி அதிர்ச்சியில் ‘அம்மா’
என்று அலறியவன் அடுத்த நொடி, சூழ்நிலையின்
பிடியில் சிக்கியவனாக, ‘கடவுளே அம்மா எங்க
இருந்தாலும் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என்று
மட்டுமே வேண்டிக்கொள்ள முடிந்தது. பெரிய பாரம் குறைந்தது
போல இருவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். காலச் சக்கரம் யாருக்காகவும்
நிற்பதில்லையே. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. அருந்ததிக்கு
பிரசவத்திற்கான நேரம் வந்துவிட்டது. மருத்துவமனையில்
சேர்த்தவனுக்கு அம்மாவின் நினைவும் கூடவே வந்தது. அம்மா
எங்கே என்ன நிலையில் இருக்கிறாளோ
தெரியவில்லையே என்ற வருத்தமும் இருக்கத்தான்
செய்தது. அருந்ததிக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள்
நடந்து கொண்டிருந்தது. குழந்தைக்கு கழுத்தில் மாலை சுற்றியிருப்பதால் சற்று
சிரமம் என்று மருத்துவர்கள் கூறியபோது
அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ஜனா.
‘கடவுளே எப்படியாவது எங்கள் குழந்தையைக் காப்பாற்றிக்
கொடு’ என்று முட்டி மோதிக்கொண்டான்.
ஆனால் டாக்டர் வந்து, இரு
உயிரில் ஒன்றைத்தான் காப்பாற்ற முடியும், நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
என்று கையெழுத்து கேட்டபோது, மனைவிதான் வேண்டும் என்று சொல்லிவிட்டாலும், அவளிடம்
குழந்தை இறந்துவிட்டது என்று எப்படி சொல்வது,
சொன்னால் அவள் தாங்குவாளா என்று
அச்சத்தில் அரற்றிக் கொண்டிருந்தான்.
டாக்டரும்
அருந்ததிக்கு இரத்தப்போக்கு அதிகமாகிவிட்டதால் அவளை மிக ஜாக்கிரதையாகப்
பார்த்துக் கொள்ளும்படியும், சில நாட்களுக்காவது குழந்தை
இறந்த அதிர்ச்சியான செய்தியைச் சொல்ல வேண்டாம் என்றும்
சொல்லிவிட்டார். லேசாக மயக்கம் தெளிந்து
மனைவி கண் விழித்து குழந்தை
எங்கே என்று கேட்கும் பொழுதெல்லாம்,
இன்குபேட்டரில் வைத்திருப்பதாகவும், அடுத்த நாள் கொடுத்து
விடுவார்கள் என்றும் சொல்லிச் சமாளித்துக்
கொண்டிருந்தான். இன்னும் எவ்வளவு நாட்கள்
இது சாத்தியம் என்று நினைத்த போது
மனைவியை எப்படி சமாளிக்கப் போகிறோம்
என்ற அச்சம் மேலிட்டது. அருந்ததி
வேறு என்ன குழந்தை, யாராட்டம்
இருக்கிறது, என்ன கலர் என்றெல்லாம்
துருவித் துருவிக் கேட்கும் போதெல்லாம், அவள் ஆசைப்பட்டது போலவே
பெண் குழந்தைதான், நல்ல கலர், அழகு
என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி சொல்லிச் அவளை
சரிகட்டுவது சிரமமாகத்தான் இருந்தது. மயக்கம்
தெளிய ஆரம்பித்திருந்தது.
இன்று
மனைவியிடம் மெல்ல உண்மையைச் சொல்லிவிட
வேண்டும், ஒருவேளை வீட்டில் போய்ச்
சொல்லி ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிட்டால்
என்ன செய்வது, இங்கேயே சொல்லிவிட்டால், ஏதாவது
அவசரம் என்றால் இங்கேயே பார்த்து
சரி செய்துகொண்டு போய்விடலாம் என்று நினைத்தான். மனைவி
கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான், மனதெல்லாம் ரணத்துடன். டாக்டர் வந்து பார்த்து
பில்லை வாங்கிச் செல்ல கூப்பிட்டவுடன், இன்னும்
இரண்டு நாட்கள் இருக்கட்டும் என்று
சொல்லலாம் என நினைத்து டாக்டரின்
அறைக்குச் சென்று தன் மனதில்
உள்ளதைச் சொன்னான் ஜனா, டாக்டரும் அதற்கு
ஒப்புதல் அளிக்கவும், எப்படியாவது மனைவியிடம் குழந்தை தங்கவில்லை என்பதைச்
சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே
வந்தான். அறைக்குள் நுழைந்தவுடன் அங்கு மற்றொரு கட்டிலில்
ஒரு துணியில் சுற்றி ஏதோ நெண்டிக்கொண்டிருப்பது
தெரிய ஓடிச்சென்று பார்த்தான். ஒரு
பெண் குழந்தை பட்டுக் கன்னத்துடன்,
பொக்கை வாய்ச் சிரிப்புடன் அன்று
மலர்ந்த ரோசாப்பூவெனக் கிடந்தது. மேலே சுற்றியிருந்த அந்த
பச்சை வண்ண நூல் சேலைத்
துணியைப் பார்த்தவுடன், இது அம்மாவின் சேலையல்லவா,
அம்மா இங்கு பக்கத்தில்தான் எங்கேயாவது
இருக்க வேண்டும். அம்மா என்று சொல்லிக்கொண்டே
ஓடப் போனவனுக்கு அருகிலிருந்த கடிதம் ஒன்று கண்ணில்
பட்டது.
“அன்பு
மகனுக்கு,
உன்
அன்புத்தாய் கௌரி எழுதுவது.நான்
நலமாக இருக்கிறேன். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் இருவரையும் நினைத்துத்தான்
வருத்தமாக உள்ளது. உன் குழந்தை
இறந்தது எனக்குப் பெரும் அதிர்ச்சி. எல்லாம் விதியின் செயல்.
மனம் வேதனைப்படாதே. நாம் கனவிலும் நினைக்காத
ஏதேதோ நடந்துவிடுகிறது. ஆனால் காரணம் இல்லாமல்
காரியங்கள் இல்லை. அருந்ததிக்கு என்
பரிசாக இந்தக் குழந்தையைக் கொடுத்துவிடு.
உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த
ஆசிகள். உங்களுக்கு எந்த குற்ற உணர்வும்
வேண்டியதில்லை. என் காலம் முடிந்துவிட்டது.
இனிதான் உங்கள் வாழ்க்கையில் வசந்தம்
வீசப்போகிறது. மகிழ்ச்சியாக இருங்கள்.
என்றும்
உங்கள் அன்பை மறவாத
அம்மா.
ஜனாவிற்கு
திடீரென்று அம்மாவை உடனே பார்க்க
வேண்டும் என்ற பேராவல் வந்தது.
அவசரப்பட்டு தாயெனும் தெய்வத்தை இழந்துவிட்டோமே என்று உள்ளம் துடித்தது.
குழந்தையை அருந்ததியின் அருகில் போட்டுவிட்டு வெளியே
ஓடினான். அம்மா எங்காவது கண்ணில்
சிக்க மாட்டாளா என்று.. அருகில் எங்கு
தேடியும் கிடைக்காததால், குழந்தை நினைவு வந்தவுடன்
மீண்டும் மருத்துவமனைக்கு ஓடினான்.. அங்கு அருந்ததி, குழந்தையை
அள்ளி அணைத்து பாலூட்டிக் கொண்டிருந்தாள்....
கணவன்
தனக்காக வைத்துவிட்டுப் போன அந்தப் பணம்
இன்று கைகொடுக்க ரிசிகேசத்தில், மக்கள் சேவையே மகேசன்
சேவையென, முடியாதவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியைச்
செய்து காலத்தைக் கடத்திக்கொண்டு, கணவனின் அழைப்பிற்காகக் காத்துக்கிடந்தாள்,
கௌரி.
No comments:
Post a Comment