Wednesday, August 11, 2010

அனைத்து ஆன்மாக்களின் தினம் .....[..ஹேலோவீன் தினம்]




மூட நம்பிக்கைகள் என்பது, நினைவிற்கு எட்டாத காலந்தொட்டே, மனிதர்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. இது மனிதனின் சக்திக்குக் கட்டுப் படாத, புரிந்து கொள்ள இயலாத ஒரு வகை இனம் புரியாத அச்சத்தின் பிரதிபலிப்பே ஆகும்.இதற்கு நவ நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கக் கூடிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளும் விதி விலக்கல்ல.

அந்த அச்சத்தின் உச்சம் தான் இவர்கள் கொண்டாடும் 'ஹேலோவீன்' தினமாகும். ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதம் முதல் தேதி கோடைக்காலம் முடிந்து, பனிக்காலம் தொடங்கும் சமயம் இந்த ஹேலோவீன் தினம் கொண்டாடுவார்கள். அன்று ஒவ்வோரு வீட்டின் முன்பும் பூசனிக்காயை அலங்காரம் செய்து வெளியே வைக்கிறார்கள்.ஹேலோவீன், மூட நம்பிக்கைகள், மக்கள் மரபு வழி நம்பிக்கைகள், புராணங்கள் மற்றும் சகுனங்கள் குறித்த நம்பிக்கைகள் இவைகளை நம்புபவர்களுக்கு, மேலும் பலம் சேர்க்கிறது.
. இதன் பின்னனியில், பல வேடிக்கையான நம்பிக்கைகளும் வழக்கத்தில் உள்ள்து .
ஹேலோவீன் தினத்தன்று,
பாரந்தூக்கியால் மேலே ஏற்றப்பட்ட, எரியும் மெழுகுவர்த்தி, துர் ஆவிகள் மற்றும் பேய்களின் ஊளையிடல்களைத் தவிர்க்கச் செய்கிறதாம்.

இந்த தினத்தில் ஒரு மெழுகுவர்த்தி திடீரென, காற்றினாலோ, அல்லது மூச்சுக் காற்றினாலோ அணைந்து விட்டால் இறந்து போனவரின் ஆவி, தங்களை அழைப்பதாக நம்பப் படுகிறது.

இந்த தினத்தில் எப்பொழுதும் புதிய மெழுகுவர்த்திதான் ஏற்றுவார்கள். அந்த குறிப்பிட்ட மெழுகுவர்த்தியை அந்த நாளைத் தவிற மற்ற வேறு எந்த நாட்களிலும் ஏற்றக் கூடாதாம்.அப்படிச் செய்தால் கெட்ட சகுனங்களும், கட்டுப் படுத்த முடியாத வேறு ஏதாவது ஆச்சரியமான விசயங்களும் நிகழக் கூடுமாம்.

ஹேலோவீன் இரவில் விளக்கை கைகளில் ஏந்திக் கொண்டு நீரூற்று இருக்கும் இடத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களுடைய எதிர்காலக் கணவனை நிழலுறுவில் காண முடியுமாம்.

இந்த தினத்தின் நடு இரவில் ஒரு புதிய செந்நிற மெழுகுவர்த்தி ஏற்றி சூரிய உதயம் வரை, அது அணையாமல் இருந்தால், மிக யோகமாகுமாம்.

அந்த ஹேலோவீன் தினத்தில் தன்னைத் தொடரும் காலடிச் சத்தங்களைக் கேட்டு திரும்பியோ, சுற்றியோ பார்க்கக் கூடாதாம். காரணம் இறப்புக் கூட தொடந்து வரக்கூடுமாம்.

தலையற்ற நிழல் உருவத்தையோ [?] நிழலே இல்லாத உருவத்தையோ பார்க்க நேர்ந்தால் அது கண்டிப்பாக அடுத்த ஆண்டிற்குள் இறப்பதற்கான கெட்ட சகுனம் என்று நம்பப் படுகிறது.

தொன்று தொட்டு வரும் வழக்கமாக, ஹேலோவீன் தினத்தன்று, சொக்கப்பணை போன்ற பெருந்தீ வளர்த்து, அதைச் சுற்றி வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்த பலர், நின்று கொண்டு, அந்தத் தீ அணைந்து, சாம்பலானவுடன், அவரவர் நிற்கும் அந்த இடத்தின் அருகில் கூழாங்கல்லை அந்த சாம்பலுக்குள் புதைத்து வைப்பார்கள். அடுத்த நாள், ஏதாவது கல் இடம் மாறியோ அல்லது ஊறுபாடு உண்டாகியிருந்தாலோ, அந்தக் கல்லுக்குச் சொந்தக்காரர்கள் 12 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்பதற்கான அறிகுறியாகக் கருதுகிறார்கள்.

வௌவால் வீட்டை மூன்று முறை வலம் வந்தால் அதுவும் இறப்பிற்கான தீய சகுனமாம்.

இந்த தினத்தில் பிறக்கும் நபர், ஆவிகளைப் பார்க்கவும், அதனுடன் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.

அன்று சிலந்திப் பூச்சியைப் பார்த்தால், அது இறந்து போன, தங்களை அதிகமாக நேசித்துக் கொண்டிருந்த, ஒருவரின் ஆவி, தன்னை கவனித்துக் கொண்டிருப்பதாக அர்த்தமாம். இப்படி நம்ப முடியாத ஆதாரமற்ற பல தகவல்களைச் சொல்கின்றனர்.

நம்மூர் பூனை சகுனம் கூட அவர்களும் நம்புகிறார்கள் கருப்பு பூனை, சூனியக்காரியுடன் சம்பந்தப்பட்டதால், அந்த சூனியக்காரியேக் கூட பூனை வடிவில் வரக்கூடுமாம். இறந்தவர்களின் ஆவிகூட பூனையிடம் தங்கியிருக்குமாம். பூனை குறுக்கே போனால் திரும்பிப் போய்விட வேண்டுமாம், இல்லாவிட்டால் தீயவை நடக்குமாம்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின், "சூனியக்காரியின் கொப்பரை" [The witche's caldron] என்ற கவிதையில் சூனியக்காரியின் அங்க வர்ணனை மிக வேடிக்கையாக இருக்கும்.

" பல்லியின் வகைக் கண்கள்,மற்றும் தவளையின் பாதம்
வௌவாலின் உரோமம், மற்றும் நாயின் நாக்கு"
விரியன் பாம்பின் முட்கள், மற்றும் குருட்டுப் புழுக்களின் கொடுக்கு
பல்லியின் கால், மற்றும் ஆந்தைக் குஞ்சின் இறகுகள்
இப்படிப் போகிறது கவிதை.

ஹேலோவீன் தினத்தில் குழந்தைகள் மாறு வேடங்கள் அணிந்து கொண்டு, குறிப்பாக சூனியக்காரி, பேய், கார்ட்டூன் கேரக்டர்கள் இப்படி ஏதாவது உடை அணிந்து கொண்டு, வீடு வீடாகச் சென்று , 'trick or treat ' என்று கேட்பார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் வித விதமான சாக்லேட்கள், அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்புவார்கள். சென்ற வருடம் அது போலத்தான், ஒரு கருப்பு அண்ணாச்சியின் வீட்டை ஒரு 6 வயது குழந்தை அழைப்பு மணியை இரண்டு , மூன்று முறை அடித்து விட்டது. அந்தக் குழந்தையின் பெற்றோரும் நடை மேடையைத் தாண்டி தெருவில் நின்று பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

குழந்தை அழைப்பு மணியை அடித்ததினால், உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவரின் தூக்கம் தடைப்பட்ட கோபத்தில், வேகமாகத் துப்பாக்கியுடன் வெளியே வந்தவன் யார் என்று கூடப் பார்க்காமல், குழந்தையை , படபடவென இரு முறை சுட்டு விட்டான். குழந்தை அதே இடத்தில் துடிதுடித்து இறந்து விட்டது.பெற்றோரின் கண் முன்னாலேயே நடந்த இந்த அநியாயத்தினால், அந்தத் தாய் மயங்கி விழுந்து, அவரையும், குழந்தையையும், ஆம்புலன்ஸ் வந்து எடுத்துச் சென்றது. அடுத்தத் தெருவில் நடந்த இந்த சம்பவம் கேட்டு, எங்கள் ஈரக் கு லையே நடுங்கி விட்டது.

Monday, August 9, 2010

யானைக்கும் அடி சறுக்கும்.............



  • சில நேரங்களில் பெரிய திறமைசாலிகள் கூட ஒரு சின்ன விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்கள். தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு எளிதாக ஏமாந்து விடுவார்கள். அப்படித்தாங்க ஒரு சம்பவம் சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன்.

.ஒரு பெரிய பஞ்சாலை அதிபர், தன்னுடைய தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்கி, அதனை முதல் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற பேராவலினால், பழைய அதிகாரிகளையெல்லாம் நீக்கி விட்டு புதியவர்களை வேலையில் அமர்த்தினார். புதிய நிர்வாக அதிகாரி அன்று பதவி ஏற்றுக் கொண்டு , தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து தவறுகளுக்கான காரணங்களைக் கண்டுபிடித்து, அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற முடிவோடு உள்ளே நுழைந்தார்.

தன்னுடைய முதல் நாள் பதவி ஏற்பின் போது, உதவியாளர்கள் புடைசூழ, சுற்றிப் பார்ப்பதற்காக தொழிற்சாலையின் உள்ளே நுழைந்தார். அந்தப் பகுதியில் அனைவரும் ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ஒருவன் மட்டும் ஓரமாக, இடுப்பில் கைவைத்துக் கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட அதிகாரி,

ஆகா, தன்னுடைய கண்டிப்பையும், தொழில் தத்துவத்தையும், மற்றவர்களுக்கு உணர்த்த அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு, வேலை செய்யாமல் நின்று கொண்டிருக்கும் அந்த இளைஞனை அருகில் அழைத்து,
நீ ஒரு மாதத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறாய்?", என்று கேட்டார்.
. "10000 ரூபாய்", என்று பதி்லளித்தான் அவன், கேள்விக்கான காரணம் புரியாமலே!

பையிலிருந்து 10000 ரூபாய் எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்து,
இந்தா, உன்னுடைய 10000 ரூபாய் எடுத்துக் கொண்டு இங்கிருந்து போய்விடு, திரும்பவும் வராதே ", என்று கூறினார்.
அந்த இளைஞன், ஆகாகா, தான் இன்று முழித்த முகம் மிக நல்ல முகம் போல என்று எண்ணி வியந்து, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு உடனே சென்று விட்டான்.
அந்த உயர் அதிகாரி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, மற்ற பணியாட்களைப் பார்த்து,.
" என்ன வேலை அவன் இங்கு செய்கிறான்", என்று கோபமாகக் கேட்டார்.
அவன் வடை கொடுக்க வந்தான் சார்", என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே கூறினான் அதில் ஒருவன்.

இதைக் கேட்ட அந்த அதிகாரியின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!