Friday, May 24, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (13)


பவள சங்கரி




“மனிதன் நாற்பது நாட்கள் உணவில்லாமல் உயிர் வாழலாம், மூன்று நாட்கள் நீரில்லாமலும், கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் காற்று இல்லாமலும்கூட வாழலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு நொடி மட்டுமே வாழ முடியும்”
ஹேல் லிண்ட்ஸே
‘பதறாத காரியம் சிதறாது’
இது முதுமொழி. எந்த ஒரு காரியத்தையும் பதற்றம் இல்லாமல் நிதானமாகச் செய்யும்போது தவறுகள் நேராமல், கால விரயமும் தவிர்க்கப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் நம் முன்னால் பரந்து கிடக்கும் பல வேலைகளில் எதை முதலில் செய்வது, எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்று முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் பதற்றம் வந்தால், காரியமே கெட்டுவிடும். எந்த வேலையையும் உருப்படியாக செய்து முடிக்க முடியாமலே போய்விடலாம். அதை விடுத்து நிதானமாக, ஒரு சில நிமிட நேரங்களே அதற்காக ஒதுக்கி தெளிவாகச் சிந்திக்க ஆரம்பித்தாலே, குறிப்பிட்ட அந்த முதலில் செய்ய வேண்டிய வேலையில் ஆரம்பித்து, படிப்படியாக அனைத்தும் ஒழுங்கான முறையில் நடந்தேறும். பதற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு சூழல் உருவாகும்போது அது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும், மீண்டும் அதைப்பற்றியே சிந்திக்க ஆரம்பிக்கும்போது, மன உளைச்சல் அதிகமாகி, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க நாம் முதலில் செய்யக்கூடியது, பதற்றம் ஏற்படுத்தக்கூடிய அந்தத் தவிர்க்க முடியாத சூழலை ஏற்றுக்கொள்வதுதான்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. நம்முடைய கருத்துக்களையோ, அல்லது எண்ணங்களையோ அடுத்தவர் மீது திணிக்க நினைப்பது சரியல்ல. சுழலும் பூமியைக் கட்டுப்படுத்தும் வல்லமை நம்மிடம் இல்லை என்பதே சத்தியம் அல்லவா. அதுபோலவே எந்தச் சூழலாயினும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தவரின் தவறுகளை, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற தாரக மந்திரத்தையும் நினைவில் கொள்ளும்போது அது நம் மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்கவல்லது. மனதை முழுமையாக நம் பணியில் செலுத்தி , தேவையற்ற சிந்தனைகளை விலக்கி வைப்பது நல்லது. பிரச்சனைக்கான வேரையும், சம்பந்தப்பட்டவர்களின் மன நிலையையும் மற்றும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாரு அதற்கான தீர்வுகளைக் காண்பது உத்தமம். அடுத்தவர்களின் மன உணர்வுகளை மதித்து, அதற்கேற்றவாரு சூழ்நிலையைக் கையாளத் தெரிந்தவரே, மன அழுத்தம் இல்லாத அமைதியான செயல் திறன் பெற்று ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை அடையக்கூடியவர் ஆகின்றனர். நல்ல நட்போ அன்றி உறவோ பலப்பட வேண்டுமாயின், எத்தகைய பிரச்சனையாயினும், சமாதானத்திற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். பிரச்சனையால் உறவு முறிந்து போவதைக் காட்டிலும், அதற்காக வளைந்து கொடுப்பதே சரியானது. சில பிரச்சனைகளே நமக்கு உந்துசக்தியாக அமைந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம். அப்படிப்பட்ட பிரச்சனைகளை அடையாளம் கண்டு நம் முன்னேற்றத்திற்கு அதைப் பயன்படுத்திக் கொள்வதும் அறிவார்ந்த செயல். அதேபோல, சில பிரச்சனைகளுக்கு தீர்வே காண முடியாமலும் போகலாம். அது போன்றவற்றை விடாமல் பற்றிக் கொண்டு தீர்வு தேடி கால விரயம் செய்வதைக் காட்டிலும், அதனை அப்படியே உள்ளபடியே ஏற்றுக் கொண்டு, மன உளைச்சலைத் தவிர்க்கக்கூடிய உபாயத்தைக் காண்பது சிறந்தது. குறிப்பிட்ட அந்த பிரச்சனையிலிருந்து தள்ளி நின்று, நம் கவனத்தை வேறு பணிகளில் ஆழ்ந்து திசை திருப்பிவிடுவதே நன்மை பயக்கக் கூடியது.
‘பொறுத்தார் பூமியாள்வார்!’
“பொறுமை கசப்பானதானாலும், அதன் கனி இனிமையானது”
_ அரிஸ்டாடில்
பொறுமை கடலினும் பெரிது என்பதும் முதுமொழி. அதனால்தானோ என்னவோ அத்துனை அகன்ற பொறுமையை கடைபிடிப்பதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது. சிக்னலில் நிற்கும் போது மஞ்சள் விளக்கு எரிந்து, அடுத்து பச்சை விளக்கு எரிவதற்குள்ளாகவும், நம் பின்னால் தொடர்ந்து வருகிற அரசுப் பேருந்து விடாமல் வழி கேட்டு ஒலிப்பானை அழுத்தித் தொடரும் வேளையிலும், நம் பொறுமையை எடை போட்டுக்கொள்ளலாம். இந்த பொறுமையற்ற தன்மையால் படபடப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதாகிறது. ரயில் நிலைய பயணச்சீட்டு வாங்க நிற்கும் நீண்ட வரிசையிலோ, உணவு விடுதியில் காத்திருக்கும் வேளையிலோ, வங்கியில் காத்திருக்கும்போதோ, மருத்துவமனையில் மருத்துவரை அணுக உள்ளே இருக்கும் நோயாளி வெளியில் வரும் வரையிலோ, கடைத்தெருவில் மற்றும் கடையில் சாமான்களைக் கட்டிக் கொடுக்கும் வரையிலோ இப்படி அன்றாடம் பல இடங்களில் நம் பொறுமையைச் சோதித்துக் கொள்ளலாம். என் நண்பர் ஒருவருடன் ஒரு முறை சிற்றுந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அவர் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். யோகாசனம், தியானம் என்று ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்பவர். அன்று ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருக்கும் போது வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் ஓட்டுநர், கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதே, மக்கள் காத்திருப்பார்களே என்று படபடப்பாக பதில் சொன்னபோது, அவர் ரொம்பவும் சாதாரணமாக, ‘நம் பொறுமையை சோதித்துக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பு’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கிறார். அவரே சொன்ன இன்னொரு சம்பவம், தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், எதிர்த்த வீட்டில் இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்ததால் தன்னை உதவிக்கு அழைத்த வேளையில் தன்னால் பொறுமையாக அந்தச் சூழலைக் கையாண்டதால் மட்டுமே, மருத்துவ ஊர்தி வந்து சேரும்வரை, அவர்கள் சொன்ன அறிவுரையின்படி அவருக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்து அவரைக் காப்பாற்ற முடிந்தது என்பதையும் சொன்னார். பல நேரங்களில் குழந்தைகள் ஆர்வமாகத் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாமலும், அடுப்பில் வைத்திருக்கும் குக்கர் முழுமையாக சத்தம் வந்த பின்பும், அந்த ஆவி அடங்கி அதைத் திறக்க வேண்டிய காலம் வரை கூட பொறுமையில்லாமலும் தவிக்க வேண்டியும் வந்துவிடுகிறது.
பொறுமையாக இருப்பதினால் நம்மால் சாதிக்கக்கூடியது அதிகம் என்று நம் அறிவு உணர்த்தினாலும், சில நேரங்களில் நம் உணர்வு அதை மறைத்துவிடுகிறது. அதற்கான பயிற்சியை நம் சூழ்நிலைகள் தானாக நமக்குக் கொடுக்கும்போது அதை ஏற்றுக் கொள்வது மட்டுமே சிறந்த வழி. அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தொழில் என்று வரும்போது பொறுமை என்ற ஒன்றின் அத்தியாவசியம் நன்றாகவே உணரப்படும். உதாரணமாக சொத்து வாங்கி விற்கும் தொழிலில் (ரியல் எஸ்டேட்) சில மணி நேர பொறுமை காத்தல்கூட கனிசமான வருமானத்தை அதிகரிக்கவோ அல்லது, பெருத்த நட்டம் வராமலோ காக்கக்கூடும். சூழ்நிலையை உணர்ந்து தேவையான நேரத்தில் பரபரப்பாக முடிவெடுக்காமல் பொறுமையாக நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றிகளை குவிக்க முடியும். இதற்கு நல்ல உதாரணம் விளையாட்டு வீரர்கள். இரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி, உடனே பந்தைப் போடு, சீக்கிரம் என்றெல்லாம் சத்தம் செய்தாலும், சற்றும் அசராமல், பொறுமையுடன் அமைதி காத்து, தக்க தருணம் அறிந்தே விளையாடத் துணிவார்கள். அப்படிப்பட்டவர்களே சிறந்த வீரர்களாகவும் பிரகாசிக்க முடியும்.
வாழ்க்கையும் ஒரு விளையாட்டு போலத்தானே! சரியாகத் திட்டமிட்டு, நிதானத்துடன் செயல்பட்டு முன்னேறுபவர்களே வெற்றியாளர் ஆகின்றனர் அல்லவா?
தொடர்வோம்
படத்திற்கு நன்றி:

நன்றி : வல்லமை

Monday, May 20, 2013

முற்பகல் செய்யின்.......






பவள சங்கரி

பெண்டுலம் வைத்த பழங்கால உயரமான தேக்குமரக் கடிகாரம் டங்.. டங்.. என்று முரட்டுத்தனமாக ஒலிக்கிறது. மணி 12 அடித்திருக்குமோ.. இல்லையில்லை 11 தான் அடிச்சுது. நான் எண்ணிக்கிட்டேனே. இப்பதான வந்து படுத்தேன்.. 12 ஆகியிருக்காது. தண்ணி தாகமா இருக்கே.. கண்ணைத் திறக்க பயம். கையைத் தடவி கட்டிலுக்கருகில் தண்ணீர் பாட்டிலைத் தேடினாள். அயோடா, தண்ணீர் கொண்டு வந்து வைக்க மறந்துட்டேனோ. இருக்காதே. இது வரைக்கும் மறந்ததில்லியே. மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தால் என்ன வந்துடப்போவுது

காக்க, காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க
பாக்க, பாக்க பாவம் பொடிபட.. பில்லி சூனியம் பெரும்பகை அகல..’

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...