Monday, May 20, 2013

முற்பகல் செய்யின்.......






பவள சங்கரி

பெண்டுலம் வைத்த பழங்கால உயரமான தேக்குமரக் கடிகாரம் டங்.. டங்.. என்று முரட்டுத்தனமாக ஒலிக்கிறது. மணி 12 அடித்திருக்குமோ.. இல்லையில்லை 11 தான் அடிச்சுது. நான் எண்ணிக்கிட்டேனே. இப்பதான வந்து படுத்தேன்.. 12 ஆகியிருக்காது. தண்ணி தாகமா இருக்கே.. கண்ணைத் திறக்க பயம். கையைத் தடவி கட்டிலுக்கருகில் தண்ணீர் பாட்டிலைத் தேடினாள். அயோடா, தண்ணீர் கொண்டு வந்து வைக்க மறந்துட்டேனோ. இருக்காதே. இது வரைக்கும் மறந்ததில்லியே. மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தால் என்ன வந்துடப்போவுது

காக்க, காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க
பாக்க, பாக்க பாவம் பொடிபட.. பில்லி சூனியம் பெரும்பகை அகல..’


சரியாச் சொல்லலையோ..  சஷ்டியை நோக்க.. . ஆமாம் இதுதானே முதல் அடி.. சொல்லிக்கிட்டே மெல்ல கண்ணைத் திறந்து டேபிளில் தண்ணி பாட்டில் இருக்கான்னு.. 0 வாட்ஸ் விளக்கு வெளிச்சம் போதுமானதாகத்தான் இருக்கு. ஆனா பாட்டிலக் காணமே.. யார் எடுத்திருப்பாங்க.. தண்ணி வேணுமே.. இப்பவே வேணுமே. கதவு வேற சாத்தியிருக்கு. அம்மாவைக் கூப்பிட்டா காது கேக்காது. டைனிங் ஹால் வரையில போனாத்தான் தண்ணி குடிக்க முடியும். சரி முதல்ல இருந்து சஷ்டியை நோக்க..  ஐஸ் வாட்டர் குடிக்கலாமா.. தொண்டையெல்லாம் வறண்டு போச்சே. வாண்டாம் பிரிட்ஜ் திறக்க வேண்டாம். டேபிளில் ஜக்குல தண்ணி இருக்குமே குடிக்கலாம். கண் தானா சமயலறைப் பக்கம் போகுதே.. அங்க லைட்டும் இல்லை. ஆனா அந்த மூலையில என்ன வெளிச்சம். எதா இருந்தா என்னா, பாக்காதே. தண்ணியை குடிச்சிப்பிட்டு போ அப்படீன்னு மனசு சொன்னாலும் கண்ணு தானா உள்ளே போகுதே.. ‘களுக்னு சிரிப்புச் சத்தம் வேற.. ஆம்பிளைக் குரலோ.. ஆமாமா .. யாரா இருக்கும். அப்பா.. அப்பா..  திரும்பவும்களுக்உள்ளேயிருந்துதான் சத்தம் வருது.. பளிச்சுனு ஒரு மின்னல். ஐயோ, அங்கே.. அங்கே என்னாது. அடுப்புத் திட்டுல நீட்டி கடக்குறது யாரு.. முகம், கழுத்து எல்லாம் கீறல்அதுல இரத்தம் ஒழுகிட்டிருக்கு.. சிரிப்பு வேற.. அப்படியே எந்திரிச்சி வேற வருதே..

ஏய்.. ஏய், யாரு நீ. என்கிட்ட வராதே.. ஐயோ பயமா இருக்கு. என்னைய ஒன்னும் பண்ணாதே... அம்மா.. அம்மா..” மகளின் மரண ஓலம் கேட்டு சுருட்டிப் பிடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் பருவதம். மகள் பயந்துடப் போறான்னு டீயை குடிச்சுப்பிட்டு கொட்டு, கொட்டுனு முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தவள், தன்னையறியாமல் எப்படியோ கண்ணயர்ந்துவிட்டாள். அந்த கொஞ்ச நேரத்தில் இந்த கலாட்டா. அக்கம் பக்கத்தில் காது கேட்டுவிடப் போகிறது என்று .சியும் போட்டு வைத்தாலும், ரஞ்சனியின் அலறல் அதையும் மீறி வெளியே வந்துவிடுமோ, வேலையாட்களுக்குத் தெரிந்தாலும் பிரச்சனைதான். இன்னும் 10 நாள்தான் இருக்கு கல்யாணத்திற்கு. கல்யாணம் பேசி முடிச்ச இந்த ஒரு மாசத்துல ஒரு வாரம்தான் சந்தோசமா இருந்திருப்பாளோ. திடீர்னு ஒரு நாள் ராத்திரி இப்படி கத்த ஆரம்பிச்சவ, தினமும் இதே வாடிக்கையாப் போச்சு. தர்க்காவுல மந்திரிச்சி தாயத்தும் கட்டியாச்சு. உடுக்கையும்வேப்பிலையும் அடிச்சி பாடமும் போட்டாச்சு. எதுக்கும் மசியல. இதுக்கும் மேல பொறுத்துப் பயனில்லைன்னு, டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய் கவுன்சலிங் கொடுத்திட்டிருக்கு. வேறு என்ன செய்வதென்று  புரியாமல் பயம் வந்தது. மாப்பிள்ளை வீட்டிற்குத் தெரிந்தால் கல்யாணமே நின்னுப் போயிடுமோன்னு கவலையானது கணவனுக்கும், மனைவிக்கும்.

மேகநாதன், முரட்டு மீசையும், தடித்த உருவமும் இல்லாத கடுமையான முகம் மட்டும் உடைய  வட்டி லேவாதேவிக்காரர். பரம்பரையாக இதே தொழில் என்பதால் ஊரில் மரியாதையும் உண்டு, அதே சமயம் நெருங்கி உறவாட எவரும் தயங்குவர். தன்அத்தனை சொத்திற்கும் வாரிசான ஒரே மகளுக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி ஊரையே சல்லடை போட்டு அலசினார். ஆண் வாரிசு இல்லாதலால் தன் தொழிலையும், சொத்தையும் கட்டிக்காக்கும் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்று மிக எச்சரிக்கையாக இருந்தார்புரோக்கர் மூலமாக கிடைத்த வரன் தயாளன். கூட்டுறவு வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் வேலை செய்பவன். வேலையில் மிகவும் கெட்டிக்காரன் என்பதால் நல்ல வருமானம். பெரிய பரம்பரைச் சொத்தெல்லாம் இல்லாவிட்டாலும், தன் சம்பாத்தியத்தில் குடியிருக்க நல்ல வீடும், காரும் வைத்துக்கொண்டு மதிப்பாக வாழ்பவன். பணம் வசூலிப்பதில் மிகக் கடுமையான பேர்வழி என்பதால் முகத்தில் சிரிப்பு என்பதே துளியும் இல்லாமல், முள்ளை வைத்து கட்டிக் கொண்டது போல ஒரு தோற்றத்தை தன் தொழிலுக்காகத் தானே ஏற்படுத்திக் கொண்டவன். நண்பர்களோ, உறவுகளோ கூட நெருங்கிப் பழக அச்சம் கொள்ளும் வகையிலேயே அவனுடைய நடவடிக்கை மாறிப்போயிருந்தது. இரண்டு வருடமாக பெண் பார்த்துக் கொண்டிருந்தும் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்பதால் அவன் தாய்க்கு மிகவும் வருத்தம். தந்தை விட்டுச் சென்ற கடனை அடைக்க, இதைவிட வேறு ஏதும் வழி புலப்படாததால், மகனைத் தடுத்து நிறுத்தவும் வழியில்லை அந்தத் தாய்க்கு. ஊரில் உள்ள அனைவரும் தன் மகனை ஒரு வில்லனாகப் பார்ப்பதில் தாங்கொணாத் துயரம் என்றாலும் வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலை. இந்த நேரத்தில்தான் புரோக்கர் மூலமாக மேகநாதனின் தொடர்பு ஏற்பட, ஆறு மாதமாக அவனைப் பற்றி அலசி ஆய்ந்து திருப்தி ஏற்பட  ஒரு வழியாக திருமணத்திற்குச் சம்மதித்தது லாட்டரியில் அடித்த பரிசாகத் தெரிந்தது. பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்திருந்தவனுக்கு, அழகே உருவாக ஒரு தேவதை வாய்த்துவிட்டதால் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. மேகநாதன் கண்ணிற்கு மட்டும், தான் கதாநாயகனாகத் தெரிந்தது தனக்குக் கிடைத்த வரமாகவே எண்ணினான். உடனடியாக திருமணத் தேதியும் குறித்ததால், இரட்டிப்பு மகிழ்ச்சி தயாளனுக்கு.

ஒரே செல்ல மகள் என்பதால் ரஞ்சனிக்கு கேட்பதெல்லாம் உடனே கிடைக்கும். எந்த குறையும் இல்லாமல் வளர்ந்தாலும் மற்ற சிநேகிதிகளோ அல்லது உறவினரோ சகஜமாக வீட்டிற்கு வரத் தயங்குவது அவளுக்குப் பெரும் குறைதான். வீட்டிலேயே முன் புறம் அலுவலகம் என்பதால்  எப்பொழுது பார்த்தாலும் கூச்சலும், வாகனங்கள் வந்து போய்க்கொண்டும் இருக்கும். நாளடைவில் ரஞ்சனிக்கு இந்த சூழல் பிடிகாமலேப் போனது. சீக்கிரம் ஒரு நல்ல பள்ளி ஆசிரியராகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு வெளியே போனால் போதும் என்றாகிவிட்டது. அப்பா மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த போதே சாடை மாடையாக தன் விருப்பத்தைச் சொல்லியும் துளியும் சட்டை செய்யாமல் தன் விருப்பத்திற்கு மாப்பிள்ளை தேடும் அப்பா மற்றும், அதனை எதிர்த்துப் பேச முடியாமல் தவிக்கும் அம்மாவின் மீதும் கோபம்தான் வந்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக சம்மதம் தெரிவித்தாள். திருமணம் நெருங்கும் இந்த நேரத்தில் ஏதோ கிலி பிடித்தது போல இப்படி அடிக்கடி கனவு வந்து தொல்லை கொடுக்கிறது. இரத்தமே மொத்தமும் உறிந்து எடுத்தது போல உடலெல்லாம் வெளுத்து, பலகீனமாக இருக்கும் மகளைப் பார்த்து பெற்றோர் வருத்தம் கொண்டு செய்யாத வைத்தியம் இல்லை. அன்று அவர்கள் வழக்கமாகப் பார்க்கும் மருத்துவமனைக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு மனோத்தத்துவ நிபுணர் வந்திருப்பதாகவும், ரஞ்சனியை அழைத்து வரும்படியும் செய்தி வந்ததால் உடனடியாகக் கூட்டி வந்தார்கள். அங்கு  பலவிதமான சோதனைகள் செய்து கொண்டிருந்தார்கள். மகள் பெருமளவில் மனதால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பது புரிந்தாலும் அதற்கான காரணம் மட்டும் விளங்கவில்லைபல மணி நேரங்கள் சோதனைக்குப் பிறகு பெற்றோரை வரச்சொல்லி மருத்துவர் சொன்ன விசயம் மேகநாதன் தலையில் இடியாக இறங்கியது.

ரஞ்சனியின் திருமணத்தை உடனடியாக நிறுத்துவதுதான் அவளுடைய நோய்க்கான தீர்வாம். இந்த திருமணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில்தான் இது போன்ற கனவுத் தொல்லைகள் வருகிறதாம்.

திருமணம் உறுதியானவுடன் மகிழ்ச்சியுடன் கன்றாகத் துள்ளிக் கொண்டு தன் ஒரே தோழி மதுவின் வீட்டிற்குச் சென்றாள். வங்கியில் பணிபுரியும் அதிகாரிதான் மாப்பிள்ளை என்று தனக்குத் தெரிந்த செய்தியைச் சொல்லி போட்டோவும் காட்டினாள். இது நடந்து சில நாட்களிலேயே மது ஒருநாள் போன் செய்து உடனே வீட்டிற்கு வரும்படியும் மாப்பிள்ளை பற்றி ஏதோ பேச வேண்டும் என்றும் கூறினாள். அன்று மாலையே மதுவைப் பார்க்கச் சென்றவள், திரும்ப வரும்போது அதிர்ச்சியான முகத்துடன் வந்தாள். வந்தவள் ஒரு வார்த்தைக் கூட யாரிடமும் பேசவும் இல்லை. அதன் பிறகுதான் இப்படி கனவும், பயமும் வந்து அவளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது என்று டாக்டரிடம் கூறியபோது, அவள் தோழி மதுவைச் சந்தித்து நடந்ததை அறிந்து வருமாறு அவர் பதிலளித்தார். அடுத்த நாள் ரஞ்சனியின் தாய் மட்டும் மதுவின் வீட்டிற்குச் சென்று அவளைச் சந்தித்தாள். ஆரம்பத்தில் பயத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லி மழுப்பியவளிடம், கண்ணீர் சிந்தி மகளின் நிலையைச் சொல்லி கெஞ்சிக் கேட்ட பின்பு மெல்ல எழுந்து போய் ஒரு செய்தித்தாளை எடுத்து வந்து கொடுத்தாள். அவள் அம்மா மாவு சலிப்பதற்காக எடுத்துப்போட்ட சற்றே பழைய செய்தித்தாள். அதைப் பிரித்துப் பார்த்தவள், தங்களுக்கு மாப்பிள்ளையாக ஆகப் போகிறவனின் புகைப்படத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சி மேலிட முழுவதும் படித்தாள்.

தயாளன் என்று அவனுக்குப் பெயர் வைத்தது வைத்தவர்களின் தவறு இல்லை. காரணம் அவன் குழந்தையாக இருந்தபோது பிற்காலத்தில் இப்படி ஒரு அரக்க குணம் உள்ளவனாக வருவான் என்று தெரிய வாய்ப்பில்லையே. கூட்டுறவு வங்கியில் பணியாற்றியவன், மேல் வருமானம் வேண்டியிருந்ததால், வசூல் செய்யும் பிரிவிலும் முதலில் ஓய்வு நேரப் பணியாக செய்து கொண்டிருந்தவன், நல்ல கமிஷன் கிடைத்ததால் அதையே முழு நேரப் பணியாக மாற்றிக் கொண்டான். இரண்டு மாதம் தொடர்ந்து தவணை கட்டவில்லையென்றாலே தயாளன் வந்துவிடுவானே என்று எப்படியாவது தலையை அடமானம் வைத்தாவது பணம் கட்டிவிட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் நடுங்கிப் போகும் அளவிற்கு அவனுடைய வார்த்தைகளில் அனல் தெறிக்கும். அப்படித்தான் அன்று மூன்றாவது மாதமாக தவணை செலுத்தாத ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்குச் சென்று கண்டபடி பேசியிருக்கிறான். தாங்க முடியாத கர்ப்பிணி மனைவி மூத்த குழந்தைக்கு உடல் நலம் இல்லாமல் இருதய அறுவை சிகிச்சை செய்ததால் பணமுடை அதிகமாகிவிட்டது என்றும், விரைவில் சரி செய்துவிடுவோம் என்றும், 15 நாட்கள் மட்டும் அவகாசம் கொடுக்கும்படியும் எவ்வளவோ மன்றாடியும், அவளை மேலும், கீழும் பார்த்துவிட்டு,   “இதெல்லாம் மட்டும் உன் புருசனுக்கு முடியும் போது பேங்க்குக்கு பணம் கட்ட மட்டும் முடியாதா”? என்று மேலும் தரக் குறைவாக  எகத்தாளமாக பலதும் பேசியிருக்கிறான். இந்த வேதனை தாங்காத அந்த மனிதர் அன்று இரவே விசம் குடித்ததோடு, அவமானத்தால் கூனிக்குறுகிதம் முகத்தையேக் காணப்பிடிக்காமல் முகமெல்லாம் கூட கத்தியால் தானே கீறிக் கொண்டு இறந்திருக்கிறார். இதைவிடக் கொடுமை அந்த  மனிதர் இறந்த சாவு வீட்டிலும் வந்து, பணத்தை உடனே கட்டணும்னு தகராறு செய்யவும், உறவினர்கள் வேறு வழியில்லாமல் போலீசுக்குப் போன் செய்ய வேண்டியதாகிவிட்டது. போலீஸ் வந்து தயாளனை கைது பண்ணிக் கொண்டு சென்றவரை விவரமாக அந்தச் செய்தித்தாளில் வந்திருந்தது. இதைப் படித்தவுடன், இப்படிப்பட்ட ஒரு அரக்கனையா மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்து தங்கள் ஒரே மகளை கட்டி வைக்கப்போகிறான் தன் கணவன் என்று ஈரக்குலையெல்லாம் நடுங்கிவிட்டது அந்தத் தாய்க்கு. ஒன்றுமே பேசாமல் ஒரு திடமான முடிவுடன் வீடு வந்து சேர்ந்தாள்.

பரிதாபமாக சுருண்டு படுத்திருக்கும் மகளின் அருகில் சென்று, அவளை எழுப்பி உட்காரவைத்து, அப்படியே அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பின் இதத்தில் தன் மனபாரம் அனைத்தும் கரைந்து நிம்மதியடைவதை உணர்ந்தாள். இனிமேல் அந்த பாழாய்ப்போன கனவு வந்த வழியே திரும்பிவிடும் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டது. அன்னையின் மடியில் அன்பு மழலையாய் முந்தானையை இறுக்கிப் பிடித்தவாறு படுத்திருந்தாள் ரஞ்சனி.

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment