Thursday, April 30, 2020

தூய்மை இந்தியா



முயல் ஆமை கதைதான் நினைவிற்கு வருகிறது. ஒரு காலத்தில், வெளிநாட்டவர் மட்டுமன்றி, வெளிநாட்டுவாழ் பெரும்பாலான இந்தியர்கள் கூட நம் இந்தியாவை அசுத்தமான நாடு என்று கேவலமாகப் பேசி அவமானப்படுத்தியதையும் மறக்கமுடியாது. நமது பிரதமர் வீடு தோறும் கழிவறை இருக்கவேண்டும், பொது இடங்களை மக்கள் கழிப்பிடங்களாக்கக்கூடாது என்று உறுதியெடுத்து தீவிரமாகச் செயல்படுத்தியதில், அதில் ஓரளவிற்கு வெற்றியும் கண்டுள்ளோம். 4, 5 ஆண்டுகளுக்கு முன்புகூட கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், பொது இடங்களை கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்தது பழக்கத்தில் இருந்து வந்துள்ளது. இன்று நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளிலும் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது குற்றச் செயலாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் நம் மக்கள் அதை எளிதாகப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டனர். இன்று கொரொனா புண்ணியத்தால் பொது இடங்களில் எச்சில் உமிழ்வதும் குற்றமாக்கப்பட்டு அதுவும் பழக்கத்திற்கு வந்துவிட்டது. நமது நகராட்சி, மாநகராட்சிகளும் தூய்மையான கழிவறைகளை அமைத்துவிட்டால் தூய்மையான இந்தியாவை விரைவில் காணப்போவது உறுதி. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளான பிரான்சு, இத்தாலி, இசுபெயின், அமெரிக்கா, ஈக்குவேடர் போன்ற நாடுகளின் இன்றைய நிலைமையைக் காணும்போது அதிர்ச்சியாக உள்ளது. நம் இந்தியாவைப் பொருத்தவரை தற்போதைய இந்தக் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே தூய்மையான நோயற்ற இந்தியாவாக இருப்பது உறுதியாகும்.

கொரோனா கொடுமை 7



கொரோனா தொற்று உயிர் காக்கும் மருத்துவமனைகளின் மனிதாபிமானத்தையுமா கொன்று போட்டுவிடும்? சில நாட்கள் முன்பு ஈரோட்டின் ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் இந்தக் கொடுமை நடந்துள்ளது. மேட்டூரைச் சேர்ந்த ஒரு எலக்ட்ரீசியனின் 7 வயது மகனுக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்துள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையில்தான் அந்தக் குழந்தைக்கு இதே பிரச்சனைக்காக மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அந்தச் சிறுவனுக்கு நேற்று திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட அதே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவம் பார்க்க முடியாது என்று திருப்பியனுப்பியிருக்கிறார்கள். பெற்றோர் எவ்வளவோ மன்றாடியும், கெஞ்சியும் குழந்தைக்கு மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். பின்னர் அச்சிறுவனை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது, வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது. என்ன கொடுமை இது ... இந்த அவசரமான பேரிடர் காலத்தில் அரசாங்கம் இதற்கெல்லாம்கூட பொறுப்பேற்க முடியுமா .. இவர்களெல்லாம் எதற்கு மருத்துவமனை நடத்துகிறார்கள்? சுயநலப் பேய்கள் ... திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .

கொரோனா கொடுமை 6



இந்தியாவில் 300 மாவட்டங்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாகவும், மேலும் 300 மாவட்டங்கள் பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக சுகாதார மையம் (WHO) தற்போதுள்ள நிலவரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ள எச்சரிக்கையையும் புறந்தள்ள முடியவில்லை. உலக அளவில் கொரோனா வைரசு கட்டுக்குள் வருவது எப்போது என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் வெகு தொலைவில் இருப்பதாகக் கூறுகிறது. கிழக்கு ஐரோப்பா, இலத்தின், அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் ஆகியவற்றில் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே இருப்பதாகவும், குழந்தைகளை நினைத்து பெரும் கவலை கொள்ள வேண்டிய சூழலாக இருப்பதாகவும் எச்சரிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாம் மேலும் அதிதீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை. இதில் சென்னை போன்ற மாநகரங்களில் கூட மக்களின் அலட்சியப் போக்கால் நோயின் தீவிரமும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகிக்கொண்டு வருவது வேதனைக்குரிய விசயம்.
குணமடைந்த பிறகும் ஒருவர் கொரோனா வைரசை பரப்ப முடியுமா? ஆம். பாதிக்கப்பட்டவர் குணமடைந்த பிறகும் கொரோனா வைரசு உடலில் பல வாரங்கள் நீடித்து இருக்கும் என்கின்றன ஆய்வுகள். அதனாலேயே குணமடைந்த பிறகும், நோயாளிகள் ஐந்து நாட்களுக்கு வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 5 ஆம் நாள் முதல் 13 ஆம் நாள் வரையிலான ஒவ்வொரு நாள் சோதனையும் சிலருக்கு வைரசு பாசிட்டிவாக உள்ளதை முடிவுகள் காண்பித்தன.
இந்த கொரோனா பன்முகம் கொண்ட கொடூரனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆம், (mutation) 10 வகையாக மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு முயற்சிக்கும் சரியான சவாலாக நின்று அடிக்கிறது. இது எவ்வளவு விரைவாக மாறுகிறது? என்பதை அறிவதே பெரும் சவால் என்கிறார்கள். இந்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 15 நாட்களுக்காவது தனிமைப்பட்டு குடும்பத்தாருடன் நெருங்கி உறவாடாமல் இருப்பது நலம் என்கிறார்கள். அவர்கள் பருகிய பானங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும், அவர்கள் அடிக்கடி கைகளை கழுவுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மீட்கப்பட்ட நோயாளிகளில் சிலர் மேலும் சில நாட்களுக்கு வைரசு உள்ளவர்களாக (carriers) இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். COVID-19 இலிருந்து முழுமையாக மீட்டெடுப்பதைப் புரிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் தேவை என்கின்றனர்.
கொரோனா வைரசிலிருந்து மீண்டு பின்னர் இரண்டாவது முறையாக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை ஜப்பான் அறிவித்ததால் இந்த கண்டுபிடிப்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு தொற்று முற்றிலும் விலகிவிட்டது என்று அலட்சியமாக சமூக இடைவெளியைத் தொடராமலோ, அதிக கூட்டம் சேர விடுவதோ ஆபத்தாக முடியும் வாய்ப்பு இருப்பதாகவே உணர முடிகிறது.

https://www.livescience.com/coronavirus-spread-after-recovery.html?fbclid=IwAR0ZIO347_ba9vDGcRftex7Z8pvMaDZyDxN3l3CSHsFk3-WnDH1BYKKzrR4

கொரோனா கொடுமை 5



"எங்களுக்கு சாப்பாடோ, பணமோ தரவேண்டாம். வேலை கொடுத்தால் போதும். அரசு சொல்வதைக் கேட்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து உழைத்து சாப்பிட்டுக்கொள்வோம்" - 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை கொடுக்க வேண்டி பெண் கூலித்தொழிலாளி கேட்ட விதம் நெஞ்சை உருக்குகிறது. பசிக்கொடுமையையும், தானம் பெற்று பசியாறி சுயகௌரவம் பாதிக்கப்படும் வேதனையையும் உணரும்போது கொரோனாவின் கொடுமை இன்னும் எவ்வளவு தூரம் சென்று அடுத்து எத்தனை உயிர்களின் உணர்வுகளைக் கொல்லப் போகிறதோ தெரியவில்லையே என்று வேதனையாக உள்ளது .. இறைவா

கொரோனா கொடுமை .. 4





நோய் தொற்று உள்ளவர்கள் பீதியின் காரணமாக அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாவதைக் காணமுடிகிறது. அதுவும் மருத்துவமனையில் பணியில் இருப்பவர்கள் என்றால் மற்ற சாதாரண பொது மக்களைப் பற்றி என்ன சொல்வது. கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பொது மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் (counseling) கட்டாயம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று உள்ள ஒருவர் அந்த தனிப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு இரவு உணவு வழங்க ஊழியர்கள் சென்றபோது படுக்கையில் அந்த நபர் படுக்கையில் இல்லை. மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல்,  சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார், ஆம்புலன்சோடு சென்று அவரை அவர் வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றிய 55 வயதான இவருக்கு கடந்த 24-ம் தேதிதான் கொரோனா அறிகுறி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நடந்தே வீட்டுக்கு வந்துள்ளார்.  விவரம் அறிந்து கூட்டிச்செல்ல வந்த சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு தராமல், வீட்டுக்குள் இருந்து மொட்டை மாடிக்கு ஓடியவரை போலீசார் பின்தொடர்ந்து, மருத்துவமனைக்கு வாருங்கள், இல்லாவிட்டால் உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று வேண்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ, `என்னை யாராவது பிடிக்க முயற்சி செய்தால், உங்களைக் கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிவிடுவேன்'  என மிரட்டியுள்ளார் . மருத்துவமனையில் தங்கியிருக்க பிடிக்காததால் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்வதாகக் கூறியுள்ளார்.  இது போன்ற நேரத்தில் உளவியல் வல்லுநர்களின் ஆலோசனை அவசியம் தேவைப்படுகிறது.


இதே போல, அமெரிக்காவில் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா வைரசால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல்வேறு மனநல சவால்கள் ஏற்பட்டுள்ளன.  மருத்துவர் லோர்னா என்பவர் மருத்துவமனையில் பணியாற்றிய போது, மிக உயர்ந்த திட்டங்களை அவசர சிகிச்சைப் பிரிவில் பெரும் சவாலுடன் நிறுவிய திறமையான மருத்துவர்.  கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று போரிட்டவர். டாக்டர் லோர்னா கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் போது, தன்னைக் காட்டிலும் தன்னுடன் பணிபுரிபவர்களின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். இப்படிப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொள்வது என்பது வேதனையளிக்கக்கூடியது. இது குறித்து அவருடன் கொரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள், கொரோனாவால் நிகழும் அனைத்து வகையான கொடூரமான சம்பவங்களுக்கும் பதிலளிக்கத் தயாராகிவிட்டோம்., உடன் பணிபுரியும் மருத்துவ நண்பர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம் என வருந்தியிருக்கிறார். அதோடு கொரோனா தொற்றால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகள் ஆம்புலன்சிலிருந்து இறக்கப்படுவதற்கு முன்பே இறந்துகொண்டிருக்கும் காட்சியைக் கண்டு மனம் நொந்து போயிருக்கிறார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக லோர்னாவுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்து வந்த அவர் சுமார் ஒன்றரை வாரங்களிலேயே தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று 49 வயதான இந்த மருத்துவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.