Thursday, April 30, 2020

கொரோனா கொடுமை .. 4





நோய் தொற்று உள்ளவர்கள் பீதியின் காரணமாக அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாவதைக் காணமுடிகிறது. அதுவும் மருத்துவமனையில் பணியில் இருப்பவர்கள் என்றால் மற்ற சாதாரண பொது மக்களைப் பற்றி என்ன சொல்வது. கொரோனாவுக்கு எதிரான தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களில் பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பொது மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் (counseling) கட்டாயம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்று உள்ள ஒருவர் அந்த தனிப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கு இரவு உணவு வழங்க ஊழியர்கள் சென்றபோது படுக்கையில் அந்த நபர் படுக்கையில் இல்லை. மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல்,  சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸார், ஆம்புலன்சோடு சென்று அவரை அவர் வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றிய 55 வயதான இவருக்கு கடந்த 24-ம் தேதிதான் கொரோனா அறிகுறி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நடந்தே வீட்டுக்கு வந்துள்ளார்.  விவரம் அறிந்து கூட்டிச்செல்ல வந்த சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைப்பு தராமல், வீட்டுக்குள் இருந்து மொட்டை மாடிக்கு ஓடியவரை போலீசார் பின்தொடர்ந்து, மருத்துவமனைக்கு வாருங்கள், இல்லாவிட்டால் உங்களால் உங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று வேண்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ, `என்னை யாராவது பிடிக்க முயற்சி செய்தால், உங்களைக் கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிவிடுவேன்'  என மிரட்டியுள்ளார் . மருத்துவமனையில் தங்கியிருக்க பிடிக்காததால் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்வதாகக் கூறியுள்ளார்.  இது போன்ற நேரத்தில் உளவியல் வல்லுநர்களின் ஆலோசனை அவசியம் தேவைப்படுகிறது.


இதே போல, அமெரிக்காவில் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ஒருவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அமெரிக்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா வைரசால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நியூயார்க் நகரத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல்வேறு மனநல சவால்கள் ஏற்பட்டுள்ளன.  மருத்துவர் லோர்னா என்பவர் மருத்துவமனையில் பணியாற்றிய போது, மிக உயர்ந்த திட்டங்களை அவசர சிகிச்சைப் பிரிவில் பெரும் சவாலுடன் நிறுவிய திறமையான மருத்துவர்.  கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று போரிட்டவர். டாக்டர் லோர்னா கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் போது, தன்னைக் காட்டிலும் தன்னுடன் பணிபுரிபவர்களின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவராக இருந்துள்ளார். இப்படிப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொள்வது என்பது வேதனையளிக்கக்கூடியது. இது குறித்து அவருடன் கொரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள், கொரோனாவால் நிகழும் அனைத்து வகையான கொடூரமான சம்பவங்களுக்கும் பதிலளிக்கத் தயாராகிவிட்டோம்., உடன் பணிபுரியும் மருத்துவ நண்பர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நிலைக்கு வந்துவிட்டோம் என வருந்தியிருக்கிறார். அதோடு கொரோனா தொற்றால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகள் ஆம்புலன்சிலிருந்து இறக்கப்படுவதற்கு முன்பே இறந்துகொண்டிருக்கும் காட்சியைக் கண்டு மனம் நொந்து போயிருக்கிறார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக லோர்னாவுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்து வந்த அவர் சுமார் ஒன்றரை வாரங்களிலேயே தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று 49 வயதான இந்த மருத்துவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  



No comments:

Post a Comment