Thursday, April 30, 2020

கொரோனா கொடுமை 6இந்தியாவில் 300 மாவட்டங்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாகவும், மேலும் 300 மாவட்டங்கள் பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உலக சுகாதார மையம் (WHO) தற்போதுள்ள நிலவரத்தின் அடிப்படையில் கொடுத்துள்ள எச்சரிக்கையையும் புறந்தள்ள முடியவில்லை. உலக அளவில் கொரோனா வைரசு கட்டுக்குள் வருவது எப்போது என்பதை தீர்மானிக்க முடியாத நிலையில் வெகு தொலைவில் இருப்பதாகக் கூறுகிறது. கிழக்கு ஐரோப்பா, இலத்தின், அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் ஆகியவற்றில் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே இருப்பதாகவும், குழந்தைகளை நினைத்து பெரும் கவலை கொள்ள வேண்டிய சூழலாக இருப்பதாகவும் எச்சரிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாம் மேலும் அதிதீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதே உண்மை. இதில் சென்னை போன்ற மாநகரங்களில் கூட மக்களின் அலட்சியப் போக்கால் நோயின் தீவிரமும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகிக்கொண்டு வருவது வேதனைக்குரிய விசயம்.
குணமடைந்த பிறகும் ஒருவர் கொரோனா வைரசை பரப்ப முடியுமா? ஆம். பாதிக்கப்பட்டவர் குணமடைந்த பிறகும் கொரோனா வைரசு உடலில் பல வாரங்கள் நீடித்து இருக்கும் என்கின்றன ஆய்வுகள். அதனாலேயே குணமடைந்த பிறகும், நோயாளிகள் ஐந்து நாட்களுக்கு வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 5 ஆம் நாள் முதல் 13 ஆம் நாள் வரையிலான ஒவ்வொரு நாள் சோதனையும் சிலருக்கு வைரசு பாசிட்டிவாக உள்ளதை முடிவுகள் காண்பித்தன.
இந்த கொரோனா பன்முகம் கொண்ட கொடூரனாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆம், (mutation) 10 வகையாக மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு முயற்சிக்கும் சரியான சவாலாக நின்று அடிக்கிறது. இது எவ்வளவு விரைவாக மாறுகிறது? என்பதை அறிவதே பெரும் சவால் என்கிறார்கள். இந்த தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பின்னரும் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 15 நாட்களுக்காவது தனிமைப்பட்டு குடும்பத்தாருடன் நெருங்கி உறவாடாமல் இருப்பது நலம் என்கிறார்கள். அவர்கள் பருகிய பானங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும், அவர்கள் அடிக்கடி கைகளை கழுவுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மீட்கப்பட்ட நோயாளிகளில் சிலர் மேலும் சில நாட்களுக்கு வைரசு உள்ளவர்களாக (carriers) இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். COVID-19 இலிருந்து முழுமையாக மீட்டெடுப்பதைப் புரிந்துகொள்ள கூடுதல் ஆய்வுகள் தேவை என்கின்றனர்.
கொரோனா வைரசிலிருந்து மீண்டு பின்னர் இரண்டாவது முறையாக நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை ஜப்பான் அறிவித்ததால் இந்த கண்டுபிடிப்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இப்போதைக்கு தொற்று முற்றிலும் விலகிவிட்டது என்று அலட்சியமாக சமூக இடைவெளியைத் தொடராமலோ, அதிக கூட்டம் சேர விடுவதோ ஆபத்தாக முடியும் வாய்ப்பு இருப்பதாகவே உணர முடிகிறது.

https://www.livescience.com/coronavirus-spread-after-recovery.html?fbclid=IwAR0ZIO347_ba9vDGcRftex7Z8pvMaDZyDxN3l3CSHsFk3-WnDH1BYKKzrR4

No comments:

Post a Comment