Sunday, July 29, 2012

கனலில் பூத்த கவிதை!


என்னா துணிச்சல் அந்த பொம்பிளைக்கு.. ராத்திரி 10 மணிக்கு டெம்ப்போ வண்டீல ஏறிக்கிட்டு எவனோடயோ வரா... இவள்ளாம் ஒரு பொம்பிளையா...

அண்ணே... அந்தம்மா வண்டியில நூலு பைய ஏத்திக்கிட்டு அலைஞ்சு, திரிஞ்சு வருது பாவம்....அதப்போயி...

என்னடா பேசுத..நீ.. நம்ம சாதி சனம் என்ன பேசும்.. தனியா ஒரு பொம்பிளை இப்புடி சுத்திப்புட்டு வந்தா..

அண்ணே..போதும்னே...நிப்பாட்டுங்க.... அந்த அக்கா வந்துடப்போவுது பாவம்.. காதுல கேட்டா விசனப்படும்

என்னடா.. சொம்மா ஃபீலிங்க் .. வரட்டுமே.. என்னா இப்போ.. என்ன பண்ணிப்போடுவா அவோ.. இல்லாத்த நான் என்னத்த சொல்லிப்போட்டேன்... போவியா...

அண்ணே...அண்ணே...

வந்துட்டியா.. வா.. எப்ப வந்த...

நீங்க இருக்கறத சொன்னீங்களே.. அப்பவே வ்ந்துபோட்டேன்

சரி..சரி.. பையை எண்ணி உடு.. நான் ஊட்டுக்குப் போகோணும்... நேரமாச்சு..

அக்கா.. மனசில ஒன்னியும் வச்சிக்காதக்கா... அண்ணனைப்பத்திதான் உனக்குத் தெரியுமில்ல....

உடுப்பா.. எல்லாம் நம்ம விதி... அந்த மனுசன் அம்போன்னு உட்டுட்டுப் போனப்பவே நானும் போயி சேர்ந்திருக்கோணும்.. இரண்டு புள்ளைக இருக்கே.. என்னமோ போ.. எத்த்னையோ பேருகிட்ட எவ்வளவோ கேட்டாச்சு.. இது ஒன்னும் பெரிசில்ல விடு.. நேரமாச்சு நான் வாரேன்...

வழக்கம் போல கதவை தட்டிக்கிட்டு 10 நிமிடங்களாகக் காத்திருந்தவள் அம்மா தட்டுத் தடுமாறி வந்து கதவை திறக்கும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். இந்த 68 வயசுல அம்மாவும் பாவம், சக்கரை வியாதியோட வீட்டு வேலைகளையும் தூக்கிப்போட்டு மல்லுகட்டிக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள் அதற்கு மேல் நிற்க முடியாமல் அசதி ஆளைத்தள்ள, அப்படியே திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள் சரசு. அம்பிகா டெக்ஸ் ராசு இன்று பேசியது அவளை வாட்டி எடுத்தது... தான் காதில் கேட்டுவிட்டது தெரிந்தும் கூட துளியும் கவலைப் படாமல் எகத்தாளமாகப் பார்த்த பார்வை இன்னும் மனதில் நிற்கிறது....சே.. என்ன மனிதர்கள் இவர்கள்... தங்கள் வீட்டுப் பெண்கள் மட்டும் தெய்வப்பிறவிகள். வாழ்க்கைப் போராட்ட அலையில் சிக்கித் தவிக்கும் தன்னைப்போல ஒரு மனுஷியைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு மனிதாபிமானவாவது காட்டக்கூடாதோ என்று ஆத்திரம் பொங்கி வந்தது... கதவு திறக்கும் ஓசை கேட்டு மெதுவாக எழுந்து உள்ளே செல்லத் தயாரானாள்.. எப்படியும் வழக்கம்போல அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டும் என்று தெரிந்தாலும், திருப்பி பதில் பேசும் மனநிலை கூட இன்று இல்லை..அம்மா சாப்பிடச் சொல்லி பலமுறை சொல்லியும், எதுவும் பிடிக்காதலால் சாப்பிட்டுவிட்டதாக ஒரு பொய்யை சொல்லிவிட்டு நேரே படுக்கைக்குச் சென்றாள்... தன்னையறியாமல் கடந்துபோன சம்பவங்களின் ரணம் கண்களில் கண்ணீராக வடிந்தது....

நடுத்தரக் குடும்பமானாலும், அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. கணவன் நடேசன் நூல் புரோக்கர் தொழில். போதுமான வருமானம். இரண்டு குழந்தைகள்தான் என்றாலும் மூத்தவள் ஒரே அடமாக இன்ஞீனீயரிங் படிப்பு படித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து பேமெண்ட் சீட்டில் கல்லூரியில் சேர்ந்து விட்டாள். சின்னவன் 10ம் வகுப்பு படிக்கிறான்.. எல்லாவற்றையும் தானே சமாளித்துக் கொண்டு வீட்டில் எந்த பிரச்சனையும் தலை காட்டாமல் வாழ்க்கைச் சக்கரத்தை உராய்வின்றி ஒழுங்காக செலுத்திக் கொண்டிருந்தான். நேரத்திற்கு சமைத்தோமா, சாப்பிட்டோமா, டிவி சீரியல் பார்த்து அழுதோமா, எப்படியெல்லாம் அடுத்தவரை கொடுமை செய்ய முடியும் என்று கற்றுக்கொண்டோமா என்று நிமதியாக போய்க்கொண்டிருந்தது அந்த கடவுளுக்கே அது பிடிக்காமல் போய்விட்டது போல..

ஒரு நாள் காலை தூங்கி எழுந்தவுடன், உடம்பு என்னவோ போல இருக்கிறது என்று சொல்லிய மனிதர், பல் துலக்கி, முகம் கழுவி, காப்பி சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் படுத்து ஓய்வெடுப்பதாக சொல்லி படுத்தவர், கொஞ்ச நேரத்திலேயே வியர்த்துக் கொட்டி, நெஞ்சுவலி என்று துடித்துப் போனார். பக்கத்தில் குடியிருந்த ஆட்டோக்காரர் நல்ல வேளையாக கிளம்பிக் கொண்டிருந்தார். சொன்னவுடன் அவசரமாக வந்து, அலுங்காமல் மருத்துவமனை கொண்டுவந்து சேர்த்து விட்டார். பரபரப்பாக எல்லா சோதனைகளும் எடுத்து, இருதயத்தில் அடைப்பு என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.. எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அறுவை சிகிச்சைக்கு பணம் பிரட்டுவதுகூட சிரமம் இல்லாமல் தொழில்முறை நண்பர்கள் கொடுத்து உதவினார்கள். நல்லபடியாக அறுவை சிகிச்சையும் முடிந்தது. மருத்துவமனையில் இருந்த அந்த பதினைந்து நாட்களும் சரசு கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம்..

உதவி கேட்பார்களே என்று அஞ்சி ஒதுங்கிய உறவுகள், தன்னால் உதவ முடியவில்லையே என்று ஏங்கும் நல்லெண்ணத் தோழர்கள் என்று அனைத்து ரகமும் அத்துபடியானதோடு முக்கியமாக தொழில் நுணுக்கம் கற்றுக்கொண்டாள். நடேசன் தன் வியாபாரத் தொடர்புகளை தள்ளிப்போட விரும்பவில்லை.. செலவுகள் அதிகமாக இருந்ததால் தேவையும் அதிகமாகிவிட்டது. வருமானம் அவசியமாகிவிட்டது. மகனும், மகளும் படித்துக் கொண்டிருக்கிற சூழலில் சரசு மட்டும்தான் உதவி செய்ய முடியும் என்ற நிலை. ஏழாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த சரசு எழுதப் படிக்க நன்கு தெரிந்து வைத்திருந்தது நல்லதாகப்போனது. கணவரின் வழிகாட்டுதலும், குடும்பச்சூழலின் அழுத்தமும் அவளை வெகு எளிதாக பாடம் படிக்க வைத்தது..தொழில் சம்பந்தப்பட்ட நண்பர்கள் அனைவரின் எண்களும், முகவரிகளும் ஒரு டைரியில் குறித்து வைத்திருந்ததால் வேலை எளிதாகவும், குழப்பமில்லாமலும் இருந்தது.

நடேசன் படுத்துக் கொண்டே, தம் மனைவிக்கு, நூலின் தரம் பிரித்துப் பார்ப்பதில் ஆரம்பித்து, விதவிதமான கவுண்ட்டுகள், வார்ப், வெப்ட் என்ற பாவு நூல், ஊடை நூல் ஷேட் வேரியேஷன், விலை நிர்ணயம் மற்றும் கமிஷன் விவரங்கள், நூல் விற்பனையாளர் சங்கத்தில் இணையும் முறை வரை அழகாக குழந்தைக்குச் சொல்வது போன்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்து அவ்வப்போது செய்யவும் வைத்து, அவளுடைய தன்னம்பிக்கையையும் வளர்த்து, பெரிய சாதனை செய்து கொண்டிருந்தான்.. ஒரு மனிதனுக்கு சூழ்நிலை வாய்க்கும் போதுதான் அவரவர் திறமையும், அதை பயன்படுத்தும் தெளிவும் புரிகிறது. தன்னால் இவ்வளவு பொறுமையாக, சொல்லிக் கொடுக்க முடியும் என்பதையும் அப்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. அதைவிட அதிகம் படிப்பறிவும் இல்லாமல், பட்டறிவும் இல்லாமல், குடும்பமே கோவில், கொண்டவனே தெய்வம் என்று வாழ்ந்து கொண்டிருந்த சரசு இவ்வளவு திறமையாக, விரைவில் அனைத்தையும் கற்றுக் கொண்டு உடனடியாக களத்தில் இறங்குவாள் என்பது நினைத்துகூட பார்க்க முடியாத ஒன்று. அதுவும், ஆண்கள் மட்டும் செய்யக்கூடிய ஒரு தொழிலாக காலம் காலமாக புழங்கி வரும் நூல் புரோகரேஜ் தொழில்... நேரம் காலம் பார்க்காமல் வெளியூர் செல்ல வேண்டும், லாரி, டெம்ப்போ என்று நூல் பையுட்னேயே தாமும் பயணம் செய்ய வேண்டிவரும். பெரும்பாலும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வர முடியாது. இரவு, பகல் பார்க்க முடியாது.. இப்படிப்பட்ட ஒரு தொழிலில் ஒரு பெண் ஈடுபடுவது எளிதல்லவே.. ஆனாலும் திருமணம் ஆகி இந்த 22 ஆண்டு கால வாழ்க்கையில் கணவனின் தொழிலில் உள்ள நெளிவு, சுளிவுகளும் ஓரளவிற்காவது அவள் சிந்தையிலும் நுழைந்துதான் இருந்திருக்கிறது என்பதும் அவளுக்கே ஆச்சரியமாகவே இருந்தது..

அம்மாவை கொண்டு வந்து துணைக்கு வைத்துவிட்டு, நர்சிடமும் சொல்லிவிட்டு அவ்வப்போது வசூல் என்றும் நேரில் பார்த்து ஆர்டர் வாங்க வேண்டியவர்களை சந்திக்கவும் போக வேண்டிய கட்டாயமும் இருந்தது.. முன்பின் வியாபாரம் சம்பந்தமாக எந்த தொடர்புமே இல்லாமல் போய் ஜவுளிக்கடையில் நின்றபோது சங்கடம் அதிகமாக இருந்தாலும் கணவன் கொடுத்த ஊக்கமும், போனில் சம்பந்தப்பட்டவரிடம் பேசிவிட்டு அனுப்புவதாலும் சமாளிக்க முடிந்தது அவளால்...

அன்று வெள்ளிக்கிழமை. காலையிலேயே குளித்து, விளக்கேற்றி, பூசை முடித்து,வரும் வழியில் கோவிலில் போய் கணவன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தாள்.. இன்னும் இரண்டொரு நாளில் வீட்டிற்கு கூட்டிச் செல்லலாம் என்று மருத்துவர் சொன்னது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. இன்னும் 3 மாதம் என்ன 6 மாதம் கூட ஓய்வெடுக்கட்டும், பொன் போல பார்த்துக் கொள்ள தன்னால் முடியும்போது என்ன பிரச்சனை வ்ந்துவிடப் போகிறது என்று நினைத்துக் கொண்டே, நவக்கிரகம் சுற்றிவந்து கும்பிட்டு, கோவிலின் வெளிப்பிரகாரம் சுற்றிவிட்டு, கொடிமரம் வீழ்ந்து வணங்கி , எழுந்தவள், கையில் இருந்த திருநீறு, குங்குமத்தை கோவிலின் வெளித் திண்ணையின் மூலையில் இருந்த துண்டு காகிதம் எடுத்து அதில் கொட்டி பொட்டலம் மடித்து, கணவனுக்கு எடுத்துப் போவதற்காக கொட்டியபோது, சரியாக ஒரு குழந்தை ஓடிவந்து அப்படியே தட்டிவிட அத்துனை பிரசாதமும் கீழே கொட்டிவிட்டது.. அதிர்ச்சியில் வியர்த்துக் கொட்டியது, உள்ளேபோய் வேறு குங்குமம் வாங்கலாம் என்றால் சுவாமிக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் வெளியில் வைக்கப்பட்டிருந்த திருநீறு, குங்குமம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு கிளம்பினாள், உறுத்தலுடனே...

மருத்துவமனை வந்தவள் தன கணவனின் அறையில் ஏதோ பரபரப்பாக இருப்பதைப் பார்த்து மயங்கி விழாத குறையாக நெருங்கினாள்.. அங்கு அவள் அம்மா ஓடிவந்து கட்டிக் கொண்டு, திடீரென்று மருமகனுக்கு நெஞ்சுவலி வந்ததால் தான் டாக்டரை கூட்டி வந்ததாகச் சொன்னார்.. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றிருந்தவளை மருத்துவர் அழைக்கவும் சுய நினைவிற்கு வந்தாள்.. திரும்பவும் மாரடைப்பு வந்துவிட்டதாம்.. ஏதோ சில நேரங்களில் இப்படியும் நடக்குமாம்.. பிழைப்பது அரிதாம்.. போய் பார்க்கச் சொன்னார்கள்.. சுற்றி மிஷ்ன்களின் நடுவே கண்களில் நிறைய செய்திகளுடன் சுற்றுமுற்றும் தன்னை தேடும் கணவனைக் கண்டபோது, சப்த நாடியும் ஒடுங்கிப்போய் விட்டது அவளுக்கு..அருகே அழைத்தவன், மெல்ல வாயில் போட்டிருந்த மாஸ்க்கை எடுக்க முயற்சித்தவனை தடுத்தாள். அருகில் இருந்த நர்சும் வேண்டாம் என்று தடுக்க, அவன் பிடிவாதமாக எடுக்க முயற்சித்தபோது, அந்த நர்சு போய் டாக்டரிடம் சொல்ல, அவரும் வந்து பார்த்து நிலைமையைப் புரிந்து கொண்டு சற்று நேரம் பேச அனுமதிக்கும்படி சொன்னார்..

கண்களில் மாலை, மாலையாக கண்ணீர் கொட்ட, மனைவியின் முகத்தையே உற்று நோக்கியவன், மெல்லிய குரலில், அவளுக்கு தைரியம் கொடுக்க ஆரம்பித்தான்.. தலைமாட்டில் தான் எழுதி வைத்திருந்த வரவு செலவு கணக்குகள், கடன் கணக்குகள் சீட்டை எடுத்துக் கொடுத்தான். என்ன நினைத்து எப்போது இதையெல்லாம் எழுதி வைத்திருந்திருப்பாரோ தெரியவில்லையே என்று அந்த நேரத்திலும் தோன்றியது. இனி எந்த பிரச்சனை வந்தாலும் துணிந்து நின்று போராட வேண்டும் என்றும், ஊருக்காக வாழாமல் தனக்கென்று ஒரு நியாயமும், தர்மமும் வைத்துக்கொண்டு அதன்படி போனால் போதும் என்றும் யாருக்காகவும், சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்பதையும், தொழில் பற்றிய ஒரு சில முக்கியமான விசயங்களையும் சொல்லும் போதே மேல் மூச்சு அதிகமாக எடுக்க நர்ஸ் வந்து திரும்பவும் மாஸ்க் போட்டுவிட்டு போனாள். இறுதியாக குழந்தைகள் படிப்பு முக்கியம் என்று அழுத்தமாகச் சொன்னது நன்கு பதிந்தது. சில மணித்துளிகளில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது... சுயநினைவே இல்லாமல் இயந்திரமாக இழுப்பார் பக்கம் அப்ப்டியே போனதுதான் தெரியும்.. எல்லாம் முடிந்து ஏழு நாட்களாகிய நிலையில், சடங்கு சாங்கியம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மகள் ப்ரியா. கைபேசியை எடுத்து வந்து ,

அம்மா, அப்பாவோட மொபைல் ரொம்ப நேரமா அடிச்சிட்டிருக்கு

போனை வாங்கி அமைதியாக ஹலோஎன்றாள். இன்று அது தன்னுடைய தொடர்பு சாதனமாக மாறியிருந்தது.

எதிர்முனையில் ஸ்ரீராம் மில் முதலாளி. வாடிக்கையாக அந்த மில்லிற்கு வியாபாரம் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் நடேசன். கடந்த ஒரு மாதமாக அவர் வெளிநாடு டூர் போய் வந்ததால் நடந்தது ஏதும் தெரியாமல் வழக்கம்போல் போன் செய்திருக்கிறார். பேசியவரிடம் நடந்தது ஏதுமே சொல்லாமல்,

சரிங்... சரிங்ணா... சரிங்கோ. அவர் வர்றத்துக்கு இல்லீங்கோ.. நான் நேரில் வந்து எல்லா விசயமும் சொல்றேனுங்க..

என்று சொல்லிக் கொண்டிருந்த அன்னையைப் பார்த்து மகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. போனை வைத்துவிட்டு ப்ரியாவிடம் நான் போய் ஸ்ரீராம் மில் அதிபரை சந்தித்துவிட்டு வருகிறேன். யாராவது கேட்டால் ஏதாவது சொல்லி சமாளித்துவிடு என்று சொல்லிவிட்டு மகனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள். உறவினர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாகத்தெரிந்தது. கணவன் இறந்து 10ம் நாள் துக்கம்கூட தீரவில்லை அதற்குள் இவள் எங்கே போகிறாளோ, தெரியவில்லையே என்று கோபமாகவும் வந்தது. எதுவுமே பேசாமல் கிளம்பி ஆட்டோ பிடித்து நேரே ரஹீஜா காம்ப்ளெக்ஸ் சென்றாள் அங்குதான் ஸ்ரீராம் மில் அதிபர் தங்குவது வழக்கம்..

வழியெல்லாம் தாம் என்ன பேசவேண்டும் என்பது பற்றிய நினைவுடனேயே மௌனமாக வந்தாள். மகன் வாயே திறக்காமல் அமைதியாக வந்து கொண்டிருக்கிறான். உறவினர்கள் என்னவெல்லாம் பேசப்போகிறார்கள் என்று புரிந்தாலும், அதைப்ற்றியெல்லாம் கவலைபட்டு தம் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக்க விருப்பமில்லை. கண்வன் கொடுத்த கடன் பட்டியல் கண் முன்னே வந்தது..

வரவேற்பறையிலேயே காத்து இருந்தவர், நடேசன் வராமல் தான் வருவதாக ஏன் சொல்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.. ஒவ்வொரு முறையும் இவர் வரும்போதெல்லாம் , நடேசன் இவருடன் இரண்டு நாட்கள் முழுவதும் பயணம் சென்று தங்கள் வாடிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஸ்ரீராம் மில முதலாளி பணம் வசூலில் எப்படி கறாராக இருக்கிறாரோ அதே அளவிற்கு, தம்முடைய நூல் தரம் காக்க வேண்டிய கடமையிலும் சரியாக இருக்கக் கூடியவர். வாடிக்கையாளர்கள் திருப்தியாக இருக்கிறார்களா என்பதை சில மாதங்களுக்கு ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து கொள்ளுவார். அது அவருடைய வியாபார தந்திரம். நூல் சந்தையில் மிகவும் மரியாதைக்குரியவர். இதெல்லாம் அடிக்கடி தன் கணவன் பேசுவதைக் கேட்டிருக்கிறாள்.

சற்றும் தயங்காமல் அவரை நெருங்கி கும்பிட்டுவிட்டு பேச்சை ஆரம்பித்தாள். அவர் தன்னை முன்பின் பார்த்திராவிட்டாலும், ஒரு சில திருமண விசேங்களில் சரசு அவரை பார்த்திருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் இருக்கவில்லை. உள்ள நிலைமையை தடையில்லாமல், மிகைப்ப்படுத்தாமல் அவள் சொல்லிய விதமும், அவள் கண்களில் மின்னிய அந்த தன்னம்பிக்கை ஒளியும் அவருக்கு சரசு மீது ஒரு நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்தியது. தன்னையறியாமல் எழுந்து நின்று கண்கள் கலங்க கையெடுத்து கும்பிட்டார் அவர். அவளுடைய பேச்சில் இருந்த தெளிவும், சுயமாக நின்று சூழலைச் சமாளிக்க அவள் எடுக்கும் முயற்சியும் நன்கு புரிந்தது. அதற்கு தன்னால் ஆன உதவிகளைச் செய்வது என்று முடிவும் எடுத்ததன் விளைவே இன்று சரசுவின் நிற்காத ஓட்டம்........

எங்கோ சேவல் கூவும் சத்தம் சுய நினைவிற்குக் கொண்டுவந்தது. மகள படித்து முடித்த கையோடு பெரிய கம்பெனியில் வேலையும் கிடைத்து, மூன்று மாத பயிற்சிக்காக பூனா சென்றிருக்கிறாள். மகன் விரும்பியபடி விவசாயக் கல்லூரியில் அவனை சேர்த்து விட்டாள், கோய்ம்புத்தூரிலேயே கல்லூரி இருப்பதால் அவனை பிரிய வேண்டிய அவசியமும் இல்லாது போனது. இன்று கடனெல்லாம் கட்டி முடித்து நிம்மதியாக தொழிலையும் கவனிக்க முடிகிறது. தம் வெற்றிகள் கொடுத்த ஊக்கம், புல்லுறுவிகளின் இது போன்ற சீண்டல்களை படைத்தவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை கொள்ளச் செய்தது. தம் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தம் பணியை தொடர்ந்து கொண்டிருந்தாலும் சக மனிதர்களின் கேலியும், கிண்டலும், பொறாமையும், போட்டியும் தன்னை அலைக்கழித்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் கலையையும் காலமே அவளுக்கு கற்றுக் கொடுத்தது.

இதோ மீண்டும் உற்சாகம் வந்துவிட்டது. தன் வழிப்பாதையில் உள்ள கல்லையும், முள்ளையும் அகற்றி முன்னேறும் வித்தை இப்போது கைவந்த கலையாகிவிட்டது அவளுக்கு. வழக்கம்போல காலை எழுந்து சுறுசுறுப்பாக, தம் பணிகளைத் தொடர கிளம்பிவிட்டாள். இரவு அம்பிகா டெக்ஸ் கடைக்கு பையை இறக்கிப் போட்டுவிட்டு வந்திருந்தாள். நேரே சென்று அவரிடம் பணம் வசூல் செய்து பேங்க்கில் சென்று கட்ட வேண்டும். அவர் வழக்கமாக பத்து மணிக்குத்தான் கடைக்கு வருவார். அதனால் அம்மாவிடமும், மகனிடமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, நிம்மதியாக கிளம்பினாள் தம் இரு சக்கர வாகனத்தில். அம்மா அழகாக வண்டி ஓட்டிக்கொண்டு போகும் அழகை கற்றுக்கொடுத்த மகன் பெருமை பொங்கப் பார்த்தான்.

சரியாக பத்து மணிக்கெல்லாம் டாண்என்று திறந்திருக்கும் அம்பிகா டெக்ஸ் கடை இன்னும் பூட்டியே இருக்கிறதே என்னவாகியிருக்கும் என்று யோசித்துக் கொண்டே நெருங்கியவளை, அவர் கடையில் வேலை பார்க்கும் மணி வந்து,

அக்கா.. விசயம் தெரியுமா உனக்கு. எங்க முதலாளி பொண்ணு கூட படிக்கிற வேற மதத்துக்கார பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு, நியூஸ் பேப்பர்ல செய்தி குடுத்திருக்கு..

அடடா.. ஏன் இப்படி செய்தது இந்தப் புள்ள.. அவிங்க அப்பாகிட்ட கெஞ்சியாவது சம்மதிக்க வச்சிருக்கலாமே.. தானே போய் இப்படி அனாதையாட்டமா கல்யாணம் பண்ணிக்கனுமா...? பாவம் பெத்தவிங்க மனசு என்னா பாடுபடும்.. கடவுளே..

ஆமாங்க்கா.. எங்க முதலாளி பத்திதான் உனக்குத் தெரியுமே.. சாதி, சனம்னு பேசியே கழுத்தறுப்பாறு.. இந்த காலத்து புள்ளைக் எங்க அதெல்லாம் காதுல வாங்குதுக. தன்னோட வாழ்க்கை, சந்தோசம்னுல்ல அந்த நேரத்துக்கு தகுந்தாப்போல முடிவு எடுக்குதுக.. இவரு புத்தி தெரிஞ்சுதான் அந்தப் புள்ள ரெஜிஸ்டர் ஆபிசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு, போலிசுல போய் பாதுகாப்பு வேணுமின்னு நிக்குதாம்.. எல்லாருமா சேர்ந்து இப்ப அங்க போய பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டிருக்காங்க...

அடக்கடவுளே.. பாவம் அந்த அண்ணன் மனசு என்ன பாடுபடும்.. நல்ல மனுசன் பாவம்..

என்னக்கா நீ.. எப்பப் பார்த்தாலும் உன்னை கேவலமா பேசற ஆளு அவுரு. அவருக்குப் போயி பாவப்படுறியே..

அடப்போப்பா.. தேளோட குணம் கொட்டுறதுதானே.. அதுக்கென்ன பண்ண முடியும்..

இரண்டு நாட்கள் கழித்து அவரைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு பணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவள் அடுத்து ஆக வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாள். சலனமற்ற அவளுடைய வாழ்க்கைப் பயணம் தெளிந்த நீரோடையாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நன்றி : திண்ணை வெளியீடு

,

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...