Wednesday, June 1, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில்! (11)

வெண்ணிலவில் ஒரு கருமுகில் ! (11)


ஹோவென 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக கர்சித்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி! வெண்பனி நுரையாக பொங்கி வழியும் நீர்க்கோலம்.1846 ஆம் ஆண்டிலிருந்து உலக மக்களையெல்லாம் கவர்ந்து இழுக்கின்ற ஒரு கற்பனைக்கெட்டாத அற்புத கலைக் களஞ்சியம்! வாழ்நாளில் ஒரு முறையேனும் அந்த அதிசயத்தைக் கண்டுவிடத் துடிக்கும் மனித மனம்.கண்டபோதும் மீண்டு வர மனமின்றி அதற்குள்ளேயே கரைந்து போய்விடத் தோன்றும் மாயத் தோற்றம்! வட அமெரிக்காவின் மிகப்பழமையான,வரலாற்றுப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்விழ்ச்சியின் அழகை வர்ணிக்க சாமான்ய மனிதரால் ஆகாது.இயற்கையை அள்ளிப் பருகி, அதை அற்புத முத்துக்களாக வெளிக்கொணர்ந்து கோர்த்து அழகிய கவி மாலையாக்கித் தந்திட ஒரு கவியாக இருக்க வேண்டுமன்றி அவந்திகா போல ஓவியராக இருக்க வேண்டும். படகில் நீர்வீழ்ச்சியின் மிக அருகே செல்லும் போது அந்த நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகள் நம்மைச்சுற்றி பூமாறிப் பொழிந்து நனையச் செய்து இன்ப அதிர்வுகளை ஏற்படுத்தும் இனிய சூழல்.கடந்த மாதம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்த போது தன் நண்பர்கள் குழுவுடன் இந்த அற்புதத்தில் நனைந்து திளைக்க வேண்டி, வந்திருந்தாள் அவந்திகா.

படைப்பாளிகள் இது போன்று காணக்கிடைக்காத அரியக் காட்சிகளை கண்டபின்பும் வாளாவிருக்க இயலுமோ? அவந்திகாவும் அப்படித்தான். இந்த அழகை அள்ளி எடுத்து வரும் முயற்சியுடன் தயாராகத்தான் சென்றிருந்தாள், வரைப்பலகை மற்றும் வண்ணங்களுடன். அடக்கவொண்ணாத ஆவலுடன் அவள் வரைந்த அந்த ஓவியம் ஒரு சரித்திரம் படைத்தது. படைப்பாளிகளின் பார்வைகளில் அகப்படுவதே வித்தியாசமான காட்சிகள்தானே.ஆம், நயாகரா நீர்வீழ்ச்சியின் குளிர் சாரலுடன் ஆனந்தமாக குலவிவிட்டு அத்துணை காட்சிகளையும் கண்களில் தேக்கிக் கொண்டு, அதை வண்ணங்களுடன் குழைத்து ஓவியமாகத்தீட்ட கையும், மனமும் துடிக்க, அதற்காக பசும் புல்வெளியினூடே, சீகல் பறவைக் கூட்டங்களினூடே, ஓர் இடத்தைத் தேர்வு செய்தவள், அங்கு ஒரு தென்னிந்தியத் தம்பதியினர் அழகான ஒரு பச்சிளங்குழவியை கொஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டு அந்த தாய்மையின் அழகிலும், மழலையின் சிரிப்பிலும் உள்ளம் பறிகொடுத்து நின்றிருந்த சமயம், அக்குழந்தையின் தந்தை தாங்கள் உண்டு மீந்து போன உணவுப் பொட்டலத்தை குப்பைத் தொட்டியில் கொண்டு சென்று போட, அதையே கவனித்துக் கொண்டிருந்த, நெடிதுயர்ந்த ஒரு அமெரிக்க, மனிதர், முதுமையின் வாசலில் இருந்த அவர், அந்த உணவுப் பொட்டலத்தை பாய்ந்து சென்று எடுத்து வேகமாக உண்ண ஆரம்பித்ததையும் ஆச்சரியமாக கண் கொட்டாமல் கண்டவள், இக்காட்சிகள் அனைத்தையும் அழகான வண்ண ஓவியமாகத் தீட்டினாள். அந்த நிதர்சனமான காட்சியின் ஓவியத்தைக் காண ஒரு சிறு கூட்டமே அங்கு கூடிவிட்டது.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர், இந்த ஓவியத்தின் அழகில் மயங்கியவர் அவந்திகாவைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அவளுடைய மற்ற ஓவியங்கள் பற்றியும் அறிந்து கொண்டதன் விளைவாக ஒரு ஓவியக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்து, அதன் மூலம் நல்ல வரவேற்பும் பெற்றிருந்தாள் அவந்திகா! மிக இளகிய மனம் படைத்த அவந்திகாவின் கண்களில் சிக்கிய அத்துனை காட்சிகளும் உயிர் பெற்று எழுவதைக் காணக் கண் கோடி வேண்டும் என்றுதான் அவளைப் புகழ்ந்து கொண்டிருப்பர் அவள் நண்பர்கள்.அதேக் கண்காட்சியை திரும்பவும் நியூ ஜெர்சியில் நடத்த வேண்டுமென்ற நண்பர்களின் கட்டாயத்தினால் இந்த டெபுடேஷன் சமயத்தையே இதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாமே என்று முடிவெடுத்தாலும் அதற்கு அவளுக்கு பல உதவிகள் தேவைப்பட்டன. இதற்குத்தான் முக்கியமாக தினேஷிடம் கேட்டிருந்தாள்.அவந்திகா பொதுவாக எவரிடமும் உதவி என்று பெரும்பாலும் வந்து நிற்கக்கூடிய பெண் அல்ல என்பது அனிதாவும் அறிந்திருந்ததால், அவள் வேறு வழியின்றியே தங்கள் உதவி நாடி வீடு தேடி வந்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அவளுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற உறுதியுடன் தான் மாறனைப் பற்றிக் கூறினார்கள்.

அவந்திகாவிற்கு இளமாறன் என்ற அந்த பெயர் எங்கோ கேட்டதுபோல் இருந்தாலும், அவளுக்கு அதுபற்றி ஆய்வு செய்யும் எண்ணம் தோன்றவில்லை. மேலும் இளமாறன் என்ற அந்த இளைஞன் குறித்து அவளுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் உருவாகியிருந்தது. நாடு விட்டு நாடு வந்து தனி ஒரு பெண்ணாக ஓவியக் கண்காட்சி நடத்துவது என்பது சாமன்ய காரியம் அல்ல என்பதை அறிந்திருந்தாலும், நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால், துணிச்சலுடன் ஒப்புக் கொண்டாள். அவர்களும் நல்ல படியாக கண்காட்சியை, வாஷிங்டன் வாழ் மக்கள் மெச்சும்படி நடத்தி விட வழிவகுத்தனர்..அதே போல் எளிதாக நியூ ஜெர்சியிலும் நடத்த முடிய வேண்டுமே என்ற கவலை இருந்தாலும், தினேஷும் அனிதாவும், இளமாறன் பற்றிக் கூறியதும் அங்கேயும் நல்லபடியாக கண்காட்சியை நடத்த முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்தது அவளுக்கு.
--
மாறன் பயணக் களைப்புத்தீர சுகமாக வெண்ணீரில் ஷவர் குளியல் போட, நேரம் போனதே தெரியாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரம், விடாமல் தொலைபேசி அழைப்பு இடையில் நுழைந்து சுய நினைவிற்கு கொண்டு வந்தது.

‘ஓ....எவ்வளவு நேரமாக குளித்துக் கொண்டிருக்கிறோனோ தெரியவில்லையே என, அவசரமாக பூத்துவாலையை எடுத்து சுற்றிக் கொண்டு ஓடி வந்தான்.

‘ஹலோ.....

‘ஹலோ, நான் தினேஷ். மாறன்தானே..?’

‘ஹலோ, ஆமாம் தினேஷ். நலம்தானே.

' ம்ம்..நலமாக இருக்கிறேன். நீயும், உன் மனைவியும் நலம்தானே ?’

’ ம்ம்...நலம்தான், மாறன். சரி அப்பா இப்போது எப்ப்டி இருக்கிறார். நாலைந்து நாட்களாக உன்னை தொடர்பு கொள்ள நினைத்து முடியாமல், ரம்யாவை தொடர்பு கொண்டேன். அவர்தான் நீ ஊருக்குச் சென்றிருக்கும் விவரத்தைக் கூறினார். அப்பா இப்போது நலமாக இருக்கிறார் அல்லவா?’

‘ ம்ம் .. நன்றாக இருக்கிறார். ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆண்டவன் அருளால் இப்போது தேறிக் கொண்டிருக்கிறார்.’

‘ நல்லது மாறன். எனக்கு ஒரு உதவி ஆக வேண்டும் உன்னால். அதனால்தான் நாலைந்து நாட்களாக உன்னை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ‘

‘ சொல்லுப்பா, என்ன விசயம்’

‘ ஒன்றுமில்லை. என் மனைவியின் உறவினர் ஒருவர் சென்னையிலிருந்து வந்திருக்கிறார். ஒரு பிரபல கம்பெனியில் பணிபுரிகிறார். அவர் கம்பெனியில் வேலை சம்பந்தமாக நியூ ஜெர்சியில் மூன்று மாதம் தங்க வேண்டியுள்ளது. அதனால் அங்கு தங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து த்ர முடியுமா. அவர் மற்றவர்களிடம் எளிதில் பழகத் தயங்குபவர். எனக்கும் அங்கு வேறு ஒருவரையும் பழக்கம் இல்லை. ‘

‘ ஓ அவ்வளவுதானே, பார்த்தால் போகிறது. அவருக்கு எவ்வளவு நாட்கள் தங்க வேண்டும், எது போன்று தங்குமிடம் வேண்டும், தனியாகவா அல்லது வேறு யாருடனாவது பகிர்ந்து கொள்ள முடியுமா என்று தெரிந்தால் அதற்கு தகுந்தது போல் பார்க்கலாம். ‘ என்றான்.

’ ஏன் மாறன், உங்கள் குரலில் ஒரு உற்சாகமே இல்லையே, இன்னும் தந்தையின் நினைவாகவே இருக்கிறீர்களா. நானும் சிரமம் கொடுக்கிறேனா?’

‘அதெல்லாம் ஒன்றுமில்லை தினேஷ். நீங்கள் சொல்லுங்கள். போகப் போக சரியாகிவிடும். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன். சொல்லுங்கள்’

தினேஷிற்கு மாறன் இருக்கும் மன நிலையில் அவனை தொந்திரவு செய்வது தவறாகப் பட்டாலும், வேறு வழி தெரியவில்லை. புதிய இடத்தில் ஒரு பெண் தனியாகப் போய் தங்க வேண்டுமானால் அதில் எத்துனை சிரமம் இருக்கும் என்பதும் அறிந்ததுதானே. அதனால் மாறனிடம் அவந்திகா பற்றி அனைத்து விவரங்களும் கூறி தகுந்த உதவி செய்யச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை.

அவந்திகாவும் வேறு யாராவது பெண் தோழிகள் கிடைத்தால் அவர்களுக்கு சிரமம் இல்லையென்றால் அறையைப் பகிர்ந்து கொள்வதில் சிரமம் இல்லை என்றே கூறியிருந்தாள். அதனால் தினேசும் அது போன்றே ஏதாவது தங்குமிடம் கிடைத்தால் அவந்திகாவிற்கும் துணையாக இருக்கும் என்று முடிவு செய்து மாறனிடம் அது போன்றே பார்க்கும்படி கூறினான்.

மாறனும், ரம்யாவிடம் கேட்டால் ஏதாவது செய்வாள், அல்லது அவள் அறையிலேயே தங்குவதிலும் சிரமம் இருக்காது என்றும் நினைத்தான். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடாக இருந்தாலும் அதில் இருவர் தங்கியிருக்கிறார்கள். ரம்யாவும் ஊருக்குச் சென்றால் திரும்புவதற்கு எப்படியும் 30 நாட்கள் ஆகும். அதனால் அது வரையிலாவது அவள் அறையில் தங்கிக் கொள்ளலாம் என்றும் நினைத்து, காலையில் ரம்யாவிடம் கேட்டு விட்டு முடிவு சொல்வதாகச் சொல்லி முடித்தான் தினேசிடம். போனை வைத்தவுடன் தான் அவனுக்கு நினைவு வந்தது அந்தப் பெண் யார், பெயர், வேலை பார்க்கும் கம்பெனி விவரம் ஏதும் கேட்காமல் விட்டு விட்டோமே என்பது. சரி நாளை ரம்யாவிடம் பேசிவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் படுக்கையறைக்குச் செல்ல முற்பட்டான்.

மனதில் எந்த சலனமுமில்லாமல் அமைதியான உறக்கமாகவே இருந்தது. காலையில் ரம்யாவிடம் மறக்காமல் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டான். தன்னுடைய எதில்கால வாழ்க்கையைப் பற்றி எந்த முடிவும் எடுக்கும் நிலையில் தனது சூழல் இல்லயென்றாலும், பெற்றோரின் நிலையை அனுசரித்தே தன் முடிவும் இருக்க வேண்டியதன் அவசியமும் உணர்ந்திருந்தான்.

ஆனாலும், நாம் எடுக்கும் எந்த முடிவும் விதியின் போக்கைக் கட்டுப்படுத்துவதில்லையே.அதன் விருப்படியேதானே ஒருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தன் மனக்கோவிலில் தெய்வமாக வீற்றிருக்கும் மகராசியை பூரண கும்பம் கொண்டு வரவேற்கப் போகிறானோ அல்லது அஞ்சி ஒடுங்கி தன்னையே ஏமாற்றிக் கொள்ளப் போகிறானோ என்பதை முடிவு செய்யப் போகும் அந்த விதியின் தேவதையும், மாற்னைப் போலவே, அமைதியாக சலனமில்லாமலுறங்கிக் கொண்டிருக்கிறதோ...........காலம் பதில் சொல்லும்!

தொடரும்.