”ஏப்பா.... சந்திரா பொண்ணு வீட்டுக்காரங்க எப்ப பார்க்க வர்ரீங்கன்னு கேட்டு அனுப்பியிருக்காங்க.. நீ ஒன்னுமே சொல்லாம இருக்கியே...?”
“கல்யாணம் பண்ணிக்கற நிலைமையிலா இப்ப இருக்கு நம்ம் வீடு... அக்கா குழந்தைக்கு மொட்டையடிக்கிறதுக்கு போயிட்டு வந்து சீர் பத்தலைன்னு அவிங்க மாமியார்கிட்ட பேச்சு தின்ன விசனமே தீரல.. ஆச்சு தங்கச்சியோட கட்டு சோறு விருந்தும் வந்தாச்சு.. அவ குழந்தைப்பேறுக்கு வரப்போற நாளும் தூரமா இல்ல... இந்த லட்சணத்துல வர சம்பளம் வாயுக்கும், வவுத்துக்குமே சரியாயிருக்கு.. இதுல இன்னொரு டிக்கட்டை சேத்துக்கணுமா... போகட்டும்மா.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பாக்கலாம்..”
“ஏம்ப்பா. இன்னும் கொஞ்ச நாள் போனா மட்டும் எங்கனா மேல இருந்து கூரைய பிச்சிக்கிட்டுக் கொட்டப் போகுதா.. வர புள்ள நல்லா தையல் தைக்குமாம், அதுவும் நாலு காசு சம்பாதிக்காமயா இருக்கப்போவுது....”
“இல்லமா.. தங்கச்சி பிரசவமாவது முடியட்டும் பாக்கலாம்...”
அம்மாவிடம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாலும், வேலைக்கு வந்தும் நினைவு முழுவதிலும் அந்தப் பெண்ணின் முகமே நிழலாடியது. சம்பிரதாயமாக பெண் பார்க்கும் படலம் நடக்காவிட்டாலும், அக்காவின் நெருங்கிய உறவு என்பதால் சில விசேசங்களில் பார்த்து சொக்கிப்போன அனுபவம் இன்று வாட்டி எடுக்கிறது. தள்ளிப்போடுவதால் நட்டம் தனக்குத்தான் என்பதும் புரிந்தது. அம்மா சொன்னதுபோல, தனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருப்பதற்கான பெரிய சிறப்புக் காரணம் ஏதும் தன்னிடமில்லை என்பதும் தெரிந்ததுதானே.. மனதில் இருந்த குழப்பரேகை முகத்திலும் தெரிந்த்து.