Monday, August 27, 2012

கள்ளிப் பூக்கள்பவள சங்கரி


திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் குழந்தை இல்லையே என்று ஏங்கி, கோவில், குளம், பூசைகள், வழிபாடுகள் என அனைத்தும் செய்து முடித்த தம்பதியருக்கு ஆண்டவன் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குலம் தழைக்க வந்த குழந்தையை தெய்வமாகக் கொண்டாடினார்கள். தவழுகிற பருவத்தில் தவழ்ந்து, பால் பற்களும் சரியான காலத்தில் முளைத்து, நடைபயிலும் பருவத்திலும், உணவு உண்ணும் பழக்கத்திலும் மற்ற குழந்தைகளைப் போன்றே எந்த மாற்றமும் இல்லாமல் தம் இரண்டு வயதுவரை வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் மூன்றாம் வயது ஆரம்பிக்கும் தருணம், குழந்தையின் போக்கில் பெற்றோர்கள் சில மாற்றங்களை உணர்ந்தனர். குழந்தை திடீரென பெற்றோர்களின் அழைப்பிற்கு கவனம் செலுத்தவில்லை. தனிமைப்படுத்தப்பட்டது போன்றும், சுற்றி நடக்கும் விசயங்களில் ஈடுபாடு இல்லாமலும் நடந்து கொண்டது. இரண்டு வயது குழந்தைக்குரிய மழலை இயற்கையாகத்தான் இருந்தது. நாளாக ஆக, குழந்தையிடம் பல மாற்ற்ங்கள் தெரிய ஆரம்பித்தது. தனிமையில் இருக்க ஆரம்பித்தது. மற்ற குழந்தைகளுடன், பேசவோ, விளையாடவோ செய்யாமல் ஒதுங்கி இருந்தது. பெற்றோருக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை புரிந்தது.

குழந்தையை பள்ளியில் சேர்த்தார்கள். மற்ற குழந்தைகளுடன் கலந்து பழக ஆரம்பித்தால் குழந்தை சரியாகலாம் என்று தோன்றியது. ஆனால் ஆசிரியர்கள் குழந்தையின் பழக்க வழக்கங்களில் இருக்கும் மாற்றங்களைக் கண்டறிந்து மருத்துவம் பார்க்க பரிந்துரை செய்தனர், அந்த நேரத்தில் குழந்தை பட்டாசு போன்ற திடீர் சத்தங்களுக்கும், பளிச்சென்று மின்னும் விளக்கைக் கண்டும், தெருவைக் கடக்கும் போதும் மிகவும் அஞ்சி ஒடுங்கிப்போனது. ஒரு பொருள் வேண்டுமானல் அதிகமான பிடிவாதம பிடித்தோ முரட்டுத்தனமாக நடந்துகொண்டோ எப்படியும் அடைந்தேதீர வேண்டும் என்பது போல நடந்துகொண்டது. மருத்துவரிடம் பரிசோதித்தபோது தாங்கள் இதுவரை கேள்விப்படாத, ஆனால் இன்று கரையான் புற்று போல அமைதியாக வெகு வேகமாக வளர்ந்து, குழந்தைகளின் மன நலத்தை குறிவைத்து தாக்குகின்ற ஆட்டிசம் என்கிற நோயால தாக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சிக்குள்ளானார்கள், பெற்றோர்கள். ASD (Autism Spectrum Disorders,) ADHD/ADD and Behavioral patterns ADHD (Attention Deficit Hyperactive Disorder) , போன்ற நோய்களும் இதில் அடங்கும்.


ஆட்டிசம் நோய் என்பது குழந்தைகள் தங்களின் வெளியுலகத் தொடர்பு மற்றும் சமூகச் சூழலை எதிர்கொள்வதில் உள்ள சிரமங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற மனநலம் சார்ந்த பிரச்சனைகள் கொண்டதே. ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களைச் சுற்றி நடக்கின்ற, குறிப்பாக பலமான ஓசைகள், மிகப்பிரகாசமான ஒளியமைப்புகள் , அதிகமான மக்கள் கூட்டம் போன்றவைகளால் பாதிக்கப்படுகிறார்கள். தங்களுடைய உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில் பெரும் சிரமம் கொள்கிறார்கள். வழமைக்கு மாறான பழக்கங்களும், தனியாக விளையாடுவதிலேயே விருப்பம் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இயற்கையிலேயே சலன புத்தி உடையவராகவும், ஒரே விதமான சாடைகளை திரும்பத் திரும்பச் செய்பவராகவும் இருப்பதால் எளிதாக மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபட்டு இருப்பது அறிய முடிகிறது. கல்வி கற்பதிலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. நேரிடையான கண் பார்வையை முழுமையாக தவிர்ப்பதும், கவன ஈர்ப்பு இல்லாமல் இருப்பதும் இவர்களின் இயல்பு. தனக்கு வேண்டுவதை உணரவோ, பசி எடுத்தால் சொல்லக்கூடிய நிலையோ கூட இல்லாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். இவர்களுக்கு மனநல மருத்துவம் மற்றும் நரம்பியல் மருத்துவம் ஆகிய இரண்டு சிகிச்சைகளும் அவசியமாகிறது. இவையிரண்டும் ராஜ வைத்தியங்கள் என்று அனைவரும் அறிந்ததே. ஒரு சாதாரண நடுத்தர குடும்பச் சூழலில் உள்ள குழந்தைக்கு இது போன்ற வைத்தியங்கள் கிடைப்பது சாத்தியமே இல்லை.


‘Behavioral Therapy’. போன்ற ஒழுக்க நடைமுறைப் பயிற்சிகள் அவசியமாகிறது. குழந்தையின் மன அழுத்தம் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். அதற்கு பெற்றோரின் முழு ஈடுபாடும், தனிப்பட்ட கவனமும் மிக அவசியம். சில குழந்தைகள் ஒரு சில பழக்கங்களை விடாமல் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக, குச்சிகள், பென்சில்கள், சோப்புக் கட்டிகள் போன்றவைகள். ஊஞ்சல், சாய்வு நாற்காலிகள், போன்றவற்றிலும் விடாமல் ஆடிக் கொண்டிருப்பார்கள். சரியான பயிற்சியும், வழிகாட்டுதலும் கிடைத்தால் மட்டுமே இக்குழந்தைகள் ஓரளவிற்காவது சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ முடியும் என்பதுதான் நிதர்சனம்.


தேசிய ஆட்டிசச் சங்கம் The National Autistic Society (NAS) கிட்டத்தட்ட 55க்கும் மேலான வருடங்களைக் கடந்திருக்கும் இவ்வேளையில், முதன் முதலில் ஆட்டிசம் நோய் கண்டறியப்ப்பட்ட குழந்தைகள் இன்று தங்களுடைய ம்த்திய வயதை எட்டியவர்களாக உள்ளனர்.

இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தை பிறக்கும் போதே மிகச் சிறந்த அறிவாளியாகப் பிறக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டு அதற்கான பல குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சில நேரங்களில் அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோரில் யாரேனும் ஒருவர் அதிகப்படியான மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, குடும்பத்தில் புற்றுநோய் சரித்திரம் அதிகமாக உள்ள பெற்றோரின் குழந்தைகளோ, குடி மற்றும் போதை மருந்து பழக்க நோயாளிகளுக்கு பிறக்கும் குழந்தைகளோ இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாகலாம் என்பதும் ஒரு கருத்து இருந்தாலும், அதற்கு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

உலகளவில் தோராயமாக 88இல் ஒரு குழந்தை ஆட்டிசம் நோயினால் அவதிப்படுவதாக அறியவருகிறது. இதற்கான புள்ளி விவரங்கள் அரசாங்கத்தினால் சரியாகக் கணிக்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் விருப்பமாக உள்ளது. ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனிப்பட்ட கவனம் தேவைப்படுகிறது. விசேசமான பள்ளிகளும் அவசியமாகிறது. நகரத்தில் இருப்பது போன்று கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த வசதிகள் கிடைப்பது அரிது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டியது அவசரத் தேவை. இந்தியாவில் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோருக்கு தங்கள் குழந்தையின் பாதிப்பு பற்றிய புரிதலே இன்றி, அந்தக் குழந்தையை மென்மேலும் சிரமத்திற்குள்ளாக்குகிறார்கள். நம் நாட்டில் மிகச்சிறந்த நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் இருந்தும், மற்றைய வளர்ந்த மேலை நாடுகள் போன்று சரியான, விழிப்புணர்வுத் திட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. பலவிதமான வைத்திய முறைகளை விளம்பரம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அறிவியல்பூர்வமாக ஆய்ந்தறியப்பட்ட சரியான, மருத்துவச் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வையும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் தெளிவும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் அவசரத்தேவையாகும். மருத்துவர்களும் சேவை மனப்பான்மையுடன் இக்குழந்தைகளுக்கான சிகிச்சை அளிப்பதில் இயன்றவரை கட்டணத்தில் சலுகைகள் கொடுத்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கலாம்.

உலகளவில் ஆட்டிசம் பற்றிய பல முடிச்சுகள் இன்றளவிலும் அவிழ்க்கப்படாமலே இருப்பது வேதனைக்குரிய விசயம். இந்தியாவில் மருத்துவர்களிடையே ஆட்டிசம் பற்றி பல மாற்றுக் கருத்துகளும், சிகிச்சை முறைகளும் உள்ளன. பல நேரங்களில் நோயாளிகள் தவறான சிகிச்சையைப் பெறுவதற்கும் இது காரணமாகிவிடுகிறது.

ஒரு குழந்தையிடம் மாற்றம் ஏற்படும் போது பெற்றோர் முதலில் தங்கள் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் செல்கின்றனர். குழந்தை சற்று மந்த புத்தி கொண்டுள்ளது. கொஞ்ச நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னாலும், மனநல மருத்துவர், மனோதத்துவ நிபுணர் என செல்கின்றனர் சிலர். இறுதியாக குழந்தைக்கு மனநல பாதிப்பும், கவனக்குறைபாடும் இருப்பதாகக் கூறி ஹைபர் ஆக்டிவ்நோயை கட்டுப்படுத்துவதற்கான மருந்தை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். பல மாதங்கள் மயக்க நிலையில் (sedation) வைத்திருக்கும் மருந்துகளை முயற்சித்துவிட்டு, எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அடுத்து மீண்டும் என்ன பிரச்சனை என்று அலசி ஆராய ஆரம்பிக்கிறார்கள். நகரங்களில் பல மருத்துவர்கள் எளிதாக இந்நோயைக் கண்டறிந்தாலும், இன்னும் கிராமப் புறங்களில் சரியான விழிப்புணர்வு சுத்தமாக இல்லை என்பதுதான் உண்மை.

இந்தக் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகள் புறக்கணிக்கப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். அதற்கான மையங்களும், இல்லங்களும், அக்குழந்தைகள் பெரியவர்களாக வளரும் பொழுது, அவர்களுக்கான அன்றாட தேவைகளையும், எளிதான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டியதும் அரசாங்கத்தின் அவசரத் தேவையாகும். இக்குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோர்களுக்கு இயலாமையோ, அல்லது அவர்களின் இறப்பிற்குப் பிறகோ இவர்களைப் பராமரிக்க்கக்கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட அரசாங்க இல்லங்கள் உடனடியாக கட்டமைக்கப்பட வேண்டியது அவசியம். சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. அதற்கான பிரத்யேகமான தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால் மத்தியதரக் குடும்பங்களே பெரும் அவதிக்குள்ளாகின்றனர். அரசாங்கம் இதனையும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது குறிப்பிடும்படியான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் இல்லை. அதற்கான முயற்சியும் விரைவாக எடுக்க வேண்டியதும் அவசியம்.

ஆட்டிசம், மனநல பாதிப்புகள் மற்றும் பலதரப்பட்ட நோய்களுக்கான, “நிர்மயா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சமூகநலத்துறை அமைச்சர் ஸ்ரீமதி மீராக்குமார் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு ஒரு இலட்சம் ரூபாய் வரை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இத்திட்டம், தில்லி, கைமூர், சண்டிகார், ஜபல்பூர், அகர்தலா, ரேரெய்லி, ஈரோடு, எர்ணாகுளம், அகமதாபத் மற்றும் பாகேசுவர் ஆகிய பத்து மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் / காப்பாளர்களுக்கு ரூபாய் 75000 வரை வருமான வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இரயில் பயணச் சீட்டுகளில் 75% சலுகை அளிக்கப்படுகிறது. இந்தச் சலுகைகள் மட்டும் இவர்களின் வாழ்க்கையின் மேம்பாட்டிற்கு போதுமானதாக இருக்க முடியாது. எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்களை அரசாங்கமும், தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் சங்கமும் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

சமுதாயமும் இக்குழந்தைகள் நலனில் அக்கரையும், அவர்களின் பெற்றோருக்கு ஒத்துழைப்பும் வழங்க வேண்டியதும் அவசியம். யாருக்கு எந்த நேரத்தில் என்ன வியாதி வரும் என்று யாரும் கணிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது நம் கடமையாகும். சமீபத்தில் ஒரு தாய் மனநலம் பாதிக்கப்பட்ட தம் குழந்தையை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்ததறகான காரணமாக, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அக்குழந்தையை தொல்லையாகக் கருதி வீட்டில் குடியிருக்க அனுமதி மறுப்பதையே காரணமாகச் சொல்லியிருந்தது, நெஞ்சைப் பிழியும் செய்தி. ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலே, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரின் தொல்லைகள் ஓரளவிற்கு குறையும் என்பதும் திண்ணம். போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக போர்க்கால நடவடிக்கை எடுத்து அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியதைப்போல இந்த ஆட்டிசம் நோயை ஒழிப்பதற்கும் மற்றும் அக்குழந்தைகளை பராமரிப்பதற்கும் அது போன்ற தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அடுத்து வரும் தலைமுறைகளே கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது என்பது வருத்தத்திற்குரியது.

பி.கு. இதற்கு தகுந்த ஆதாரங்களுடனான செய்திகளை வல்லுநர்களோ, ஆய்வாளர்களோ, பாதிக்கப்பட்டவர்களோ பதிவு செய்தால் அதனை இக்கட்டுரையுடன் இணைக்க ஏதுவாகும்.

நன்றி : திண்ணை வெளியீடு

4 comments:

 1. பெற்றோர்கள் படிக்கவேண்டிய பதிவு இது.மிகப் பிரயோசனமாய் இருக்கும் !

  ReplyDelete
 2. அன்பின் ஹேமா,

  வாருங்கள். வாசிப்பிற்கு நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete
 3. பிரபல பதிவர் பாலபாரதி இதை பற்றி நெறைய எழுதி இருக்கிறார் .

  ReplyDelete
 4. மிக்க நன்றி எல்கே. அவருடைய பதிவையும் சென்று பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

  அன்புடன்
  பவள சங்கரி

  ReplyDelete