Monday, April 8, 2019

மறு சீராய்வு?



நம் பள்ளிக் கல்வித் திட்டங்களில் மறு சீராய்வு மிகவும் அவசியம் என்பதே இன்றைய நிலையாக உள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி தோல்வி அடைவதும், மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவதற்கும் அவர்கள் மட்டும் காரணமல்ல. அவர்களின் ஆசிரியர்களுக்கும் இதில் பங்குண்டு. மாணவர்களின் புரிதலுக்கு ஏற்றவாறு கற்பித்தலும் ஆசிரியர்களின் கடமை. மேற்கத்திய நாடுகளில், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் மாதாந்திரத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்குரிய வரைகலை தயாரிக்கப்பட்டு  அவைகள் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மாணவர்களின் வெற்றி தோல்விக்கு முக்கியமாக ஆசிரியர்களையே பொறுப்பாக்கி அவர்களைக் கண்காணிக்கும் வகையில் தனிப்பட்ட கணினித் துறையே செயல்படுகின்றன. நமது நாட்டில் மட்டும் மதிப்பெண்களுக்கு மாணவர்களை மட்டுமே காரணமாகக் காட்டி பெற்றோரும், ஆசிரியர்களும் தப்பித்துக் கொள்கின்றனர். இந்த வகையில் நமது பள்ளிகளிலும், குறிப்பாக அரசு பள்ளிகளில் இது போன்று மறு சீராய்வு செய்வதால் கல்வித் தரம் உயர்வதுடன், மதிப்பெண்கள் குறைவதால் பல மாணவர்கள் தற்கொலை போன்று தவறான முடிவுகள் எடுப்பதிலிருந்து காப்பாற்றலாம். 

பள்ளி மாணவர்களின் கல்வி குறித்த மதிப்பீடு முக்கியம். ஏன்?

மாணவர்களின் கற்றல் செயல்பாட்டின் முக்கியமான பகுதி என்றால் அது, கல்வி குறித்த அவர்களின் புரிதலை நிரூபிக்க வேண்டியதும், கல்வி குறிக்கோள்கள் மற்றும் தரநிலைகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டியதும் அவசியம்.

கல்விக்கான இலக்குகள் நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதால்  மதிப்பீடு என்பது கல்வி கற்பித்தலின் முக்கியமான ஒருங்கிணைந்ததொரு பகுதியாகிறது.  மதிப்பீடுகள் கல்வியின் தரம், வேலைவாய்ப்பு, முன்னேற்றம், அறிவுறுத்தல்கள், பாடத்திட்டங்கள் போன்றவைகளைப் புரிந்து கொள்ள உத்வேகம் அளிக்கிறது.  கற்பிக்க வேண்டியவற்றை சரியாகக் கற்பிக்கிறோமா? மாணவர்கள் கற்க விரும்புவதைக் கற்றறிந்து கொண்டார்களா?  ஆகச்சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கு வழி அமைகிறதா, அதன்மூலம் அவர்தம் நம்பிக்கைகள் வளர்கிறதா போன்ற பல வினாக்களுக்கு விடையளிக்கக்கூடியதாகும் இந்த மதிப்பீடு.

இன்றைய மாணவர்கள் அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறமைகளை மட்டுமல்ல, தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் உலகத்தை எதிர்கொள்ளும் திறன்களையும் முழுமையாகப் பெற வேண்டும். அவர்கள் ஆழ்ந்து சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும், மற்றும் அனுமானங்களை முன்னெடுக்கவும் வாய்ப்பு அமைய வேண்டும். திறன்கள் அடிப்படையிலும் அறிவு மேன்மைகளிலும் நமது மாணவர்களுக்கு புதிய கற்றல் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டிய தேவையும் அதிகமாகிறது. இந்த புதிய கற்றல் இலக்குகள், மதிப்பீடு செய்வதன் மூலமாக புதிய பரிமாணங்களைப் பெறுகிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் மதிப்பீட்டு நோக்கத்திற்காகவும், மதிப்பீடு செய்ய வேண்டியத் தேவைகள் பற்றிய முடிவுகளை எடுக்கும் வகையிலும் மறு சீராய்வு செய்ய வேண்டியதும் அவசியம்.