கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை ஆகிய பஞ்சமாபாதகங்கள் என்பது மிகவும் பெரியதொரு பாவம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரமும் கழுவாயும் உண்டு என்கிறது புறநானூறு.
வேதத்தில் வல்லவர்களான அந்தணர்களைக் கொல்வது, பெண் கொலை புரிவது , குழந்தைகளை அழிப்பது போன்றவைகள் கொடும் பாவம் என்று கருதப்பட்டாலும் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வதுதானாம்.
பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக்
கொன்ற பாதகத்தில் கொடும் பொய்
என்பது செஞ்சடை வேதிய தேசிகர் வாக்கு. – திருப்பனந்தாள் புராணம்
“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பழமொழி உறுதியாகச் சொல்லும் உண்மையும் இதுதான்.
வள்ளுவப் பெருந்தகை இதையே
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று (297)
அதாவது பொய்யாமையை மட்டும் கடைபிடித்தால் போதும்; மற்ற எந்தவொரு தர்மமும் நீ செய்ய வேண்டிய தேவையில்லை என்கிறார்.