Tuesday, October 13, 2015

புறநானூறு 106



பாடியவர்: கபிலர் 
பாடப்பட்டோன்: வேள் பாரி, 
திணை: பாடாண், துறை: இயன் மொழி


நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.


உரை : சூடும் மலரில் நல்லது, தீயது என்பதெல்லாம் நம்மைப்போல் இறைவனுக்கு இல்லை. அதாவது எவரும் விரும்பாத, குவிந்த மலர்களும், புல்லிய இலைகளையும் கொண்ட எருக்கம் பூவேயானாலும் அதனை உள்ளன்போடு அணிவித்தால் கடவுள் வேண்டாம் என்று மறுக்காமல் ஏற்பார் ! அதைப்போன்று ஏதுமறியா அறிவிலர், புல்லிய குணமுள்ளவர், வறுமையுற்றார் என எவர் வரினும் பாரி வாரி வழங்குவான்!



கடையேழு வள்ளல்களில் முதன்மையானவன் பாரி என்பவன். பேகனாவது நான்கறிவுள்ள ஒரு பறவைக்குத் தன் போர்வையைக் கொடுத்தான். இந்த பாரி பாருங்கள் ஓரறிவு உயிரான ஒரு முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொடுத்தவன். இது நடந்தது ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால். இன்று சிவகங்கை மாவட்டத்தின் பிரான்மலை என்று அழைக்கப்படும், மிகச் செழிப்பான நகரம். முன் காலத்தில் அது பறம்புமலை என்று பெயர் பெற்ற முன்னூறு கிராமங்களைக் கொண்ட வேளிர்குல வழிவந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்த நாடாக இருந்தது. இவர்கள் பேரரசர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். பாரி மன்னன் தம் குடிமக்களிடம் மிகவும் அன்பு கொண்டவனாக இருந்தான். பறம்பு மக்கள் உழைப்பிற்கு சற்றும் அஞ்சாதவர்கள். வீரமும் நிறைந்தவர்கள். பாரி மிகவும் தேகபலம் கொண்ட சிறந்த வீரனாக இருந்தான். தன்னைப்போலவே, தம் மக்களும் பலசாலிகளாக இருக்க வேண்டும் என்பதற்காக தம் நாட்டின் ஊர்கள்தோறும் பல சிலம்புக் கூடங்களை நிறுவி, வாலிபர்களை எல்லாம் சிறந்த சிலம்பு வித்தைகளைப் பயிலச் செய்தான்.

பாரி, சிறந்த கொடை வள்ளலாகவும் இருந்தான். தம்மை நாடி வந்த புலவர்களுக்கும், கூத்தாடிகளுக்கும், ஏழைகளுக்கும், கிள்ளிக் கொடுக்காமல், அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தான். இதனால் பாரியின் புகழ் அண்டை நாடுகளிலெல்லாம் பெரிதும் பரவியது. பாரியின் வள்ளல் தன்மையைப் பற்றி அறிந்த கபிலர், அவரிடம் பாடிப் பரிசில் பெறலாம் என்று வந்தார். பாரிக்கு, கபிலரை மிகவும் பிடித்துப்போக, இருவரும் சிறந்த நண்பர்களாகி இருந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் நட்பை உயிரினும் மேலாகப் போற்றி வந்தனர். கபிலரின் சிறந்த புலமையைக் கண்டு வியந்த பாரி, கபிலரை தன்னுடனேயே தங்கவைத்துக் கொண்டார் . தம் நாட்டு மக்களையும், தம் நாட்டு வளங்களையும், மக்களின் நிறை, குறைகளையும் கண்டறியவும், பாரி, அடிக்கடி நகர்வலம் செல்வது வழக்கம். அப்படி ஒரு முறை நகர்வலம் போனபோதுதான் வழியில் ஒரு முல்லைப் பூங்கொடி, கொழுக்கொம்பு இல்லாமல் வாடி, வதங்கி இருப்பதைக் கண்டு மனம் வருந்தியவர் சற்றும் சிந்திக்காமல் மளமளவென தன் தேரைவிட்டு இறங்கி, அதில் பூட்டியிருந்த இரண்டு குதிரைகளையும் அவிழ்த்து அப்பால் நகரச் செய்து, அந்த முல்லைக் கொடியைத் தம் தேரின் மீது தாராளமாகப் படரும்படி எடுத்துவிட்டான். பின் அந்தக் குதிரை மீது ஏறி தம் அரண்மனை வந்து சேர்ந்தான்.

பாரியின் புகழ் இப்படியெல்லாம் நாடு முழுவதும் பரவிக்கொண்டிருந்ததை, மூவேந்தர்கள் விரும்பவில்லை. பாரியின் மீது பொறாமை கொண்டார்கள். அதன் காரணமாக அவன் மீது போர் தொடுத்து அவனை அடக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பலவாறாக முயன்றும், அவனுடைய கோட்டைக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. மிக அருமையாக அரண்கள் அமைத்து வைத்திருந்தான் பாரி. வீரதீரம் மிக்க அவனுடைய குடி மக்கள் அனைவரும் பாரிக்குக் கைகொடுத்து முழு மூச்சுடன் தங்கள் நாட்டைக் காக்கப் பாடுபட்டனர். பல நாட்கள் கடந்தும், மூவேந்தர்களால் பறம்புமலையினுள் நுழைய முடியாத அளவிற்கு அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருந்தனர். எவ்வளவோ முயன்றும் பாரியின் கோட்டையைப் பிடிக்க முடியாத அந்த அரசர்கள், அவனை உறவாடிக் கெடுக்க முடிவு செய்தனர். பாரிக்கு அழகான இரண்டு மகள்கள் இருந்தனர். அங்கவை, சங்கவை என்ற அவர்கள் அழகு, அறிவு, அன்பு, பண்பு என அனைத்திலும் சிறந்து விளங்கினர். இதை அறிந்த மூவேந்தர்கள், தனித்தனியாக ஒவ்வொருவராக தங்களுக்குப் பெண் கொடுக்கும்படி தூது அனுப்பினார்கள். பாரி பெண் கொடுக்க மறுத்துவிட்டான். காரணம் ஒருவரை விட்டு மற்ற இருவருக்கும் பெண் கொடுத்தால் அது மற்றவருக்கு வேதனை அளிக்கும் என்பதாலேயே அதை மறுத்தார் பாரி. ஆனால் அவர்களுக்கு இந்த காரணம் புரியவில்லை.

ஒரு பௌர்ணமி நாள் வந்தது. பாரியை ஒரேயடியாக வீழ்த்துவதற்கு மற்றொரு திட்டத்துடன், மூவேந்தரும், புதிய புலவர்கள் போல வேடமணிந்து , கையில் யாழினை ஏந்திக்கொண்டு பாரியை வந்து சந்தித்தனர். பாரி அவர்களை அன்பாக வரவேற்று மரியாதையுடன் ஆசனங்களில் அமரச் செய்தான். அவர்கள் மூவரும் பாரியை வானளாவப் புகழ்ந்து பாடி அவனை பெரிதும் மகிழச் செய்தனர். அந்த நேரம் பார்த்து பாரி கொடுத்த எந்த பரிசிலையும் வாங்காமல் அவன் உயிரையே பரிசாகக் கேட்டான். ஐயோ அந்த மாபாவிகளால் இறுதியில் பாரி தன் இன்னுயிரை இழக்க நேரிட்டது. அந்த மூவேந்தர்களின் வஞ்சகம் பாரியின் உயிரையே பலிவாங்கிவிட்டது.
நன்றி : வல்லமை

No comments:

Post a Comment