Monday, December 17, 2012

வாழ்வே தவமாய்!




    “வீணையடி நீ எனக்கு,
    மேவும் விரல் நானுனக்கு
    பூணும் வடம் நீ எனக்கு,
    புது வயிரம் நானுனக்கு”


 பாரதியின் இந்தப் பாடலை வாசிக்கும்போது மட்டும் கவிதாவின் வீணை சற்றே அதிகமாக குழைந்து, குழைந்து போவது போல்த் தோன்றுவது காட்சிப்பிழையாகக் கூட இருக்கலாம். ஆனால் கவிதாவின் குரலில் ஒலிக்கும் அந்த ஜீவனுள்ள வரிகள் கேட்போரின் செவிகளில் தேன் மழை சொரிந்துவிட்டுச் செல்வதைத் தவிர்க்க இயலாது. கலைமகளின் அந்த இசைக்கருவி இந்தப் பூமகளின் விரல்களின் நர்த்தனத்தில் தேவகானம் பொழிவது உறுதி என்று பிரபல இசை விமர்சக வித்தகர் சுப்புடுவிடமே தம் இளம் வயதிலேயே விருது பெற்ற பெருமையுடையவள். இன்று காதோரம் சில நரை முடிகள் எட்டிப் பார்க்கும பருவத்திலும், குரலிலும், மீட்டும் இசையிலும் சற்றும் தொய்வில்லாத அதே வளம் கண்டு வணங்காதவர் இலர்.  


வழக்கத்தைவிட இன்று ஒருபடி அதிகமாகவே அவளுடைய குரலில் உணர்வுகள் தெரித்து விழுந்தன. கண்களின் ஓரம் முத்துக்கள் மெதுவாக எட்டிப்பார்த்தன. கடந்த சில நாட்களாகவே அவள் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்து கொண்டிருந்தது. புன்னகை மாறாத அந்த முகத்தில் லேசான் சோகம் படர்ந்திருப்பது தெரிந்தது. யாரிடமும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசும் வழக்கமில்லாத, எளிமையான, அமைதியே உருவான அந்த உருவத்தைப் பார்ப்பவர்களுக்கு கையெடுத்துக் கும்பிடத் தோன்றுவது இயற்கை. இன்று மட்டும் முதல் முறையாக அவளுடைய விரல்களில் சிறு நடுக்கம் தோன்றியது தனக்கே ஆச்சரியமாக இருக்க அதற்குமேல் பயிற்சியை தொடர முடியாமல், வகுப்பை பாதியிலேயே விட்டு ஓய்வறையினுள் தஞ்சம் புகுந்தவளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்ற ஆசிரியைகள். இது அவர்களுக்கு ஒரு புதிய காட்சி. மூலையாக ஒரு இருக்கையில் ஏதுமே பேசாமல் மௌனமாக அமர்ந்து கண்களை மூடி மோனத்தவம் இருப்பவரை கலைக்க விரும்பாமல் சத்தமில்லாமல் வெளியேறினர் சக ஆசிரியைகள். மனம் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

தாலி கட்டிய கணவனின் உயிர் இன்றோ, நாளையோ, அல்லது இந்த நொடியோ எப்போது பிரியப் போகிறதென்பது தெரியவில்லை. எந்த நேரமும் செய்தி வரலாம் என்று தெரியும். உயிர் பிரிந்தவுடன் தலைமாட்டில் உட்கார்ந்து அழுது, பின் ஒவ்வொன்றாக சடங்குகள் அரங்கேறும் அந்த நினைவே சுழட்டியடித்தது. பிறந்த வீட்டுக் கோடியும், புகுந்த வீட்டுக் கோடியும் போட்டி போட்டுக் கொண்டு முகம் காணாமல் பின்னிருந்து வீசி, உடல் முழுதும் பாக்கியில்லாமல் மஞ்சள் பூசி, (பலி ஆடு போல) குங்குமப் பொட்டு பெரிதாக வைத்து, மாலை போட்டு கால்மாட்டில் உட்கார வைத்து, கணவனின் உடலோடு சேர்த்து, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் என அனைத்திற்கும் ஒருசேர தலை முழுக்காட்டி, திருமணத்தின் போது கொடுத்த வெற்றிலைப் பாக்கை திருப்பி வாங்குவதன் மூலம்,  பாதியில் வந்த உறவு பாதியிலேயே போய்விட்டதென்று பறை சாற்றி... மூன்றாம் நாள் விடியலில் தாலியை வாங்கி... இப்படி பத்து நாட்களுக்கும் தொடரும் அந்த விதவிதமானக் கொடுமைகளை எண்ணிய போது உடல் ஒருமுறை குலுங்கி அடங்கியது.... இதற்கெல்லாம் தனக்கென்ன உரிமை இருக்கிறது? தனக்கெதற்கு இந்த சடங்கும், சாங்கியமும்? பல கேள்விகள் குடைந்தெடுக்கும் வேதனை!

பால் மணம் தொக்கி நின்ற பதின்மப் பருவம்...  பெரிய மனுசி ஆகிவிட்டதற்கு அடையாளமாக சேலையுடுத்தி, மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய பொட்டும் வைத்து திருமணத்திற்கு தயார் செய்த அந்த நாள், 14 வயதுப் பாவையாக, அந்த 36 ஆண்டுகளுக்கு முந்தைய நாள் இன்றும் பசுமையாக.....

‘ஆகா, இனிமேல் பள்ளிக்கும் செல்ல வேண்டாம், பாவாடை சட்டையிலிருந்து புடவையும், இரவிக்கையும், நகை நட்டுகளும் அணியலாம்... அம்மா, அத்தை போல பெரிய மனுசியாக வலம் வரலாம்’ என கனவுக் கோட்டையில் மிதந்த பருவம். பிறந்தது முதல் தூக்கி வளர்த்த தாய்மாமனே இன்று கணவனாக, உறவு மாறும் காரணமும் சரிவர புரியவில்லை. விழா, விருந்து, கொண்டாட்டங்கள் என கற்பனை சந்தோசத்தில் சிற்கடித்த பருவம். மணநாளில் மங்கலமாய் மனைவியான சிறுமியை ஆதரவாக அணைத்துச் சென்ற ஸ்பரிசம் மட்டுமே இன்றும் உணர்வினுள்!

“வாராய் என் தோழி வாராயோ
 மணப்பந்தல் காண வாராயோ” என தோழிகள் புடைசூழ மணப்பந்தல் கண்டு , அடுத்து நிகழப்போகும் எதுவும் முழுசாக தெரியாமல், விரலை வாயில் வைத்துக்கொண்டு பாட்டி சொன்ன அறிவுரையைக் கேட்டும், கேளாமலும் இருந்த நினைவும் நிழலாடியது.

“கவி, ஏய் இங்கப் பாருடி.... என்ன வெளயாட்டு அங்க.. மாமன் ,மனசு கோணாம நடந்துக்கோ,சரியா. “

“ஏன் பாட்டி, நான் மாமன்கிட்ட எப்ப சண்டை போட்டேன்..?”

“அட, அதில்லைடி கிறுக்கி.. இது வேற. நீ போ,மாமனே சொல்லுவான்.. அவன் சொல்றபடி கேளு போதும்..  மத்ததெல்லாம் அவன் பார்த்துக்குவான்..”

“என்ன பாட்டி நீ சொல்லுற.. என்ன பாக்கணும், செரியா சொல்லு பாட்டி...”

“அதெல்லாம்,ஒன்னும் வேணாம்..  மாமன் பேச்சைக் கேட்டு நல்ல பொண்ணா நடந்துக்கோணும். சத்தம், கித்தம் போட்டு அசிங்கம் பண்ணப்படாது.. தெரியுமா.. ச்மத்தா இருக்கோணும்”

“புரியல பாட்டி.. இப்பவே நானு சமத்தாதானே இருக்குறேன்.. இன்னும் எப்புடி இருக்கணும்”?

“அதெல்லாம் மாமன் சொல்லுவான், அதைப்படியே கேட்டு நடக்கோணும். அப்பதான் அடுத்த வருசமே உன் கையில ஒரு குட்டி பையன் இருப்பான்.. சரியா.. போ பாத்து சூதானமா நடந்துக்கோ...”

தலையும் புரியாமல், வாலும் புரியாமல் என்னமோ சொல்லறாங்க, மாமாவையே கேட்டாப் போகுதுன்னு ரூமுக்குள்ளே போனவளுக்கு ஆச்சரியம்.. சினிமாவில் பார்ப்பது போல, கட்டிலில் சுற்றி பூ தொங்குகிறது, ஊதுபத்தி மணக்கிறது. குத்து விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பக்கத்தில் தட்டு நிறைய வித்விதமான பலகாரங்களும், பழ வகைகளும் வைத்திருக்கிறார்கள். ரூமுக்குள் வரும்போது அம்மா கையில் திணித்த பால் சொம்பில், பாதாம் பால் மணம் மூக்கைத் துளைக்கிறது.

” உள்ளே போனதும் மாமன்கிட்ட கால்ல உழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ,. அப்புறமா  பாலை டம்ளர்ல ஊத்திக் கொடு ” ஏன் மாமா தானே பாலை ஊத்திக் குடிக்காதா, இத்தனை நாள் இல்லாம இன்னிக்கு புதுசு, புதுசா என்னென்னமோ சொல்லுறாங்களே என்று நினைத்தாலும் உள்ளே சென்றவளுக்கு  எல்லாம் வித்தியாசமாகத்தான் இருந்தது. அம்மா சொன்னது போல மாமன் காலில் விழ குனிந்தவளை, பரவாயில்லைம்மா என்று மாமா தடுத்தாலும், விழுந்து கும்பிட்டாள். சற்று தயங்கியவள் பின்பு வெகு இயல்பாக பலகாரத் தட்டை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவளிடம் புதிதாக பேச என்ன இருக்கிறது என்று புரியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் அழகேசன்.

கவிதா பிறந்த போது பதினொரு வயது சிறுவனாக இருந்தாலும், தான்தான் முதலில் குழந்தையை கையில் வாங்குவேன் என்று அடம்பிடித்து கொழுக் மொழுக்கென்ற அந்த ரோசாப்பூவை வாங்கியது நினைவிற்கு வந்தது. அன்று முதல் ஒரு நாளும் அவளைப் பிரிந்தவனில்லை. அவ்வளவு பாசம். பெயருக்கு ஏற்றது போல சுருள் முடியும், துறுதுறு கண்களும், அரும்பு மீசையும், வாளிப்பான உடலும், சிவந்த மேனியும் காண்போரை சுண்டியிழுக்கச் செய்யும் 26 வயது அழகேசனுக்கு. இப்படி ஒரு ரம்மியமான சூழலில் இதெல்லாம் பற்றி ஏதும் புரியாமல் பலகாரங்களை சுவைத்துக் கொண்டிருக்கும் மனைவியைப் .பார்க்க கோபம் கூட வரவில்லை.

“மாமா.. நிம்மதியா சாப்டாச்ச்ச்ச்.. தூக்கமா வருது.. ஒரே களைப்பா இருக்கு மாமா” என்று சொல்லிக் கொண்டே அப்படியே சுருண்டு படுத்தவளை புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டே தானும் அசதியில் தூங்கிய்வன்தான். .சொந்த விவசாயம் என்பதால் அதிகாலையில் எழுந்து வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச கிளம்பியவனைக் கண்டு குடும்பத்தில் அனைவரும் ஆச்சரியப்பட்டதோடு, தடுத்தும் பார்த்தனர். ஆனால் ஒரு புன்சிரிப்புடன் ஒன்றும் பேசாமல் சென்றவனை தடுக்க முடியவில்லை.

மாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கவிதாவை கண்டிக்கவோ, தன் போக்கிற்கு இழுக்கவோ முயற்சிக்காமல் அவள் போக்கிலேயே விட்டுவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான் அழகேசன். குழந்தையிலிருந்து தூக்கி வளர்த்த அக்காள் மகளின் மீது பாசத்தைத் தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் போனது. அவளுக்குத் தேவையானதையெல்லாம் அக்கறையுடன் பார்த்துப் பார்த்து செய்த மாமனின் அன்பில் சுகமாகவே இருந்தாள்.

 அறுவடை சமயம். சில நாட்களாகவே அதிகமாக வேலை என்று பண்ணை வீட்டிலேயே தங்கிக் கொண்டிருந்தான, அழகேசன்.. சாப்பாடும்  பெரும்பாலும் அங்கேயே கொடுத்தனுப்பச் சொன்னான்.. அன்று மாமாவைப் பார்த்து தனியாகப் பேச வேண்டும் என்ற ஆசை முளைக்க தானே மதிய உணவை எடுத்துக்கொண்டு பண்ணை வீட்டிற்குச் சென்றவள், கலகலவென சிரிப்புச் சத்தம் கேட்டு யாராக இருக்கும் என்று யோசித்து, தயங்கியவாறு மெல்ல உள்ளே சென்று கதவு தாழிடப்படாமல் இருக்கவும் அருகில் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கு அவள் கண்ட காட்சி அப்படியே பூமி பிளந்து உள்ளே போய்விட மாட்டோமா என்று எண்ண வைத்தது. தன் அன்பு மாமன் மடியில் இன்னொருவளை நெருக்கமாகக் கண்டவளுக்கு வேறு எப்படி இருக்கும். வந்த சுவடே தெரியாமல் வந்த வழியே அமைதியாகத் திரும்பினாள். உள்ளத்தில் மட்டும் பெரும் போராட்டம்.

சந்திரா, தங்கள் தாத்தா கட்டியுள்ள பள்ளியின் ஆசிரியை. கணவன் வெளிநாட்டில் வேலையில் இருப்பவன். அவ்வப்போது பள்ளி நிர்வாகி என்ற முறையில் அழகேசனை வந்து சந்தித்து, கையெழுத்து வாங்கிச் செல்வாள். இறுதியாக அவள் கணவன் அங்கேயே யாரையோ திருமணம் செய்து கொண்டதாக பேசிக் கொண்டார்கள்.

தன் கணவனுடன் வேறு ஒரு பெண்ணை நெருக்கமாக காணக்கூடாததொரு கோலத்தில் கண்டவுடன், பலதும் பளிச்சென்று புரிந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக வந்த கவிதாவின் போக்கு வெகுவாக மாறிப்போனதற்கான காரணம் எவருக்கும் புரியவே இல்லை.

அரசல் புரசலாக செய்தி வெளியே வந்தாலும், “ஆம்பிளைங்க கொஞ்சம் அப்படி, இப்படித்தான் இருப்பாங்க. எல்லாம் கொஞ்ச நாள் ஆனா சரியாய்ப் போகுமென்று சொல்லிவிட்டு, சந்திராவை ஊரைவிட்டு துரத்த ஏற்பாடுகள் நடந்தபோது, அதை முழுமையாக எதிர்த்து நின்று அவளுக்கு உதவிக்கரம் நீட்டியவளும் கவிதாதான்..

பதின்மப் பருவத்தின் தலைவாசலில் நிற்பவளுக்கு, கட்டிளம் காளையான அழகேசனின் உணர்வுகளைப் புரிந்து அதற்கேற்றவாரு ஈடு கொடுக்க முடியாமல் போனதுதான் பிரச்சனை என்பது நன்கு புரிந்தது. தான் தூக்கி வளர்த்த குழந்தைக்கு இது போன்ற விசயங்களை சொல்லிக் கொடுத்து அவளோடு வாழ்க்கை நடத்தும் பக்குவமும் அவனுக்கு இல்லை. இந்தச்சூழலில் வேறு என்ன வழி இருக்க முடியும் என்று விவரமாகப் பேசி அனைவருக்கும் புரிய வைத்தவளும் அவள்தான்.

“இவ்ளோ வியாக்கியானமா பேசறியேடி, இனிமே உன் மாமனை புரிஞ்சிகிட்டு ஒழுங்கா குடும்பம் நடத்தக் கூடாதா” என்ற தாயின் ஏக்கமான குரல் அவள் வேதனைக் கொள்ளச் செய்தாலும்,

“அம்மா.. அதெல்லாம் முடிந்துபோன கதை. எனக்கும் மாமாவைப் பார்த்தால் அப்படி ஒரு நினைப்பே வரல. இனிமே அதப்பத்தி பேசவேணாமே. மாமாவாவது சந்தோசமா இருக்கட்டுமே, நாம ஏன் அதக் கெடுக்கணும்”

பெற்றோரும், தாத்தா,பாட்டியும் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. தவறு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் நொந்து போனது மட்டுமே அவர்களால் முடிந்தது. இரண்டு விதமான கலாச்சாரங்களின் கால மாற்றத்தின் இடையில் சிக்கிய இது போன்ற கவிதாக்கள் எத்தனையோ பேர்!

 இரண்டு வருடங்களில் பல மாற்றங்களைச் சந்தித்தவள், மெல்ல வீணை பயிற்சி, பிரச்சார சபா இந்தி வகுப்பு என கலையிலும் படிப்பிலும்  கவனம் செலுத்தியவள் ஒதுங்கி வாழவும் ஆரம்பித்திருந்தாள்.

சகோதரியின் வசைகளுக்கு இடையேயும், செய்வதறியாது திகைத்து நிற்கும் கணவனைப் பார்க்க பாவமாக இருக்கும்.

“கவி, வரவர நீ போற போக்கு சரியில்லே.. புருசனைப் பார்த்து காப்பாத்திக்கத் தெரியல. என்ன சொன்னாலும் கேட்கவும் மாட்டேங்கறே.... மனசுல என்னதான் நினைச்சுட்டிருக்கே. கல்யாணமாகி வருசம் மூனாச்சு, இன்னும் வயத்துல ஒரு புழு பூச்சியைக் காணோம். “

அம்மாவின் இதுபோன்ற வசை பாடல்கள் அவளுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக ஆனதால் அதற்கான மதிப்பும் வெகுவாக குறைந்துதான் போனது. அழகேசன் அவளை மெல்ல தொட வ்ரும் நேரமெல்லாம், அவளுடைய பார்வையிலிருந்த கோபம் தீயாய் எரித்து நெருங்கவிடாமல் செய்தது. பலமுறை மன்னிப்பு கேட்பதுபோல கணவன் வந்து நின்றபோதும் புன்னகை ஒன்றே பதிலாக வரும். சந்திராவும், அழகேசனும் சேர்ந்து வாழ தானே முன்னின்று முயற்சிகள் செய்தபோது பெற்றோரும், உற்றாரும், ஊராரும் , தன்னை அறிவு கெட்டவள், சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும் அறிவிலி என்றெல்லாம் கண்டபடி திட்டித் தீர்த்தபோதும் அவள் அதிலிருந்து பின்வாங்கவோ அல்லது தன்னை மாற்றிக் கொள்ளவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தன் வீட்டிலேயே ஒரு தனித்தீவாக வாழ்ந்து கொண்டிருந்த மகளைப் பார்த்து வேதனையில் வெந்தே உயிரைவிட்டனர். அழகேசனுக்கும், சந்திராவிற்கும் பெண் குழந்தை பிறந்தபோது நேரில் சென்று பார்த்துவிட்டு தன்னுடைய கழுத்தில் இருந்த ஒரு செயினைக் கழட்டி குழந்தைக்கு அணிவித்து வந்தாள். இன்றுவரை பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது ஒன்றே தம் தலையாய பணியாகவும் வேறு எதிலுமே நாட்டமில்லாமல் ஒரு தவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவள்.

 தன் இருதய நோய் காரணமாக மரணப்படுக்கையில் கிடக்கும் மாமனை சமீபத்தில் ஒருமுறை பார்க்கச் சென்றபோது, அவன் கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்த கண்ணீர் தன்னை எந்தவிதத்திலும் பாதிக்காது போனது தனக்கே ஆச்சரியமாக இருந்தது. எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. தன் அன்றாட பிரார்த்தனை நேரத்தில் தாய் மாமனுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளவும் தயக்கமும் இல்லை. தன் 36 வருட திருமண வாழ்க்கையின் நினைவுகள் அனைத்தும் பாரமாய் அழுத்த அதன் வேதனை முகத்திலும் எட்டிப் பார்த்தது.

கணவனின் மூச்சு அடங்கும் நேரமாவது தங்கள் வீட்டில் கொண்டுவந்து வைக்கலாம் என்ற உறவினர்களின் ஆலோசனையையும் ஏற்க மனமில்லை.  அதற்கான எந்த உரிமையும் தனக்கு இல்லை என்றே நினைத்தாள்.

அழகேசனின் உயிர் பிரிந்த செய்தி கிடைத்தவுடன் அதை எப்படி கவிதாம்மாவிடம் சொல்வது என்று தயங்கி வாசலில் நின்ற ஆயாம்மாவிற்கு தலை கவிழ்ந்து மேசையின் மீது படுத்திருப்பவளிடம் விசயத்தைச் சொல்லவே தயக்கமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அருகில் சென்று எழுப்புவதற்காக மெல்ல தொட்டும் அசைவற்றிருந்தவளை
 மீண்டும் உலுக்கியபோது தலை கவிழ்ந்தது. உடலில் இருந்த லேசான சூடு வெகு சமீபத்தில் உயிர் பிரிந்ததையும் உணர்த்தியது!


நன்றி: திண்ணை

No comments:

Post a Comment