Friday, September 13, 2019

மெக்கன்சியின் சுவடிகள்








கர்னல் காலின் மெக்கன்சி என்ற இசுகாட்லாந்து நாட்டவர். இவர் தென்னிந்திய வரலாறு குறித்து பல்வேறு ஆவணங்களைத் தொகுத்தவர். ஆதாரப்பூர்வமான முதல் தென்னிந்திய நிலவரைப் படத்தை உருவாக்கியவரும் இவர்தான்! 1816இல் தொடங்கப்பட்ட, தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த இவரது ஆவணத் தொகுப்பு, இவர் 1783இல் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்தபோது புத்துயிர் பெற்றது. இவர் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய போர்களில் பங்கு பெற்றதோடு பல்வேறு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் முதலில் சென்னை மண்டலத்திற்கும் பின்பு அனைத்து இந்தியாவிற்குமான முதல் தலைமை நில ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றார். இத்தகைய பணியே இவரை தொல்பொருள்களைச் சேகரிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவர் சேகரித்தவற்றுள் கல்லிலும் செம்பிலுமாக இடம் பெற்றுள்ள 3000 சாசனங்களும் 15 மொழிகளைச் சேர்ந்த 1568 சுவடித் தொகுப்புகளும் 8076 கல்வெட்டுகளும் 2630 பாறை ஓவியங்களும் 78 வரைபடங்களும் 6218 நாணயங்களும் 102 படிமங்களும் அடங்கும் என்பது ஆச்சரியமான தகவல். அதைவிட ஆச்சரியமான தகவல், இவ்வாறு தொகுக்கப்பட்ட மெக்கன்சியின் சுவடிகளில் 1534 சுவடிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவடிகளாகும். இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை, சாதியமைப்பு, அரசர்கள், பாளையக் காரர்கள், பழங்குடி மக்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கிய சுவடிகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 6000க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி, தாமிரம் நாணயங்களையும் சேகரித்துள்ளார்.
மெக்கன்சி சுவடிகளுள் பத்துச் சுவடிகள் குறும்பர் பற்றிய செய்திகளைக் கொண்டவை. இவற்றுள் ஏழு சுவடிகள் மூலச்சுவடிகள்; எஞ்சிய மூன்றும் படியெடுக்கப்பட்டவை. இவை குறும்பர் இனப்பழங்குடி குறித்த செய்திகள், குறும்பர் என்னும் இடைச்சாதியார், குறும்பர் கைபீது, பட்டிப்புலக் கிராம கைபீது, குறும்பர் சரித்திரம், குறும்பர் வரலாறு, படுவூர் பாண்டுக்குழி வரலாறு, கூத்த நாச்சித் தோப்பில் சந்தை கூடிய வரலாறு என்ற ஏழு தலைப்பின் கீழ் வெவ்வேறு கோணங்களில் இச் சுவடிகளின் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. இப் பகுதியில்தான் 1816ஆம் ஆண்டுக்கு முன்னர் குறும்பர்கள் காடுகளிலும் சமவெளிகளிலும் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை மெக்கன்சி உறுதிபடுத்துகின்றார்.
மெக்கன்சியின் பெரும்பாலான சுவடிகள் சென்னை பல்கலைக்கழகத்தில் அரசு ஓரியண்டல் கையெழுத்துப் பிரதி நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பாதுகாக்கப்பட்டு, சென்னை பிரசிடென்சி கல்லூரி நூலகத்தில் உள்ளது.


No comments:

Post a Comment