Wednesday, November 21, 2012

நம்பிக்கை ஒளி! (7)






பவள சங்கரி

நம்பிக்கை ஒளி! (6)

நம்முள் இருப்பது அனைத்துமே நல்ல குணங்கள், தம்மால் அனைவருக்கும் உதவியே அன்றி உபத்திரவம் இல்லைபோன்ற எண்ணங்களெல்லாம் நம்மையறியாமல் நமக்குள் ஒரு செருக்கை விதைதுவிடுவதோடு அது விரைவாக எதிர்வினையையும் கூட ஏற்படுத்திவிடுகிறது. தான்என்ற அகங்காரம் என்று இதைத்தான் சொல்கிறார்களோ? எது எப்படியோ, மாலதிக்கு எல்லா விசயங்களிலும் தானே முடிவெடுக்கும் வழமை ஊறிவிட்டது. கேள்வி கேட்கும் நிலையில் இருந்த அக்காவும் இன்று இல்லை, சின்னம்மாவிடம் பகிர்தல் மட்டுமே சாத்தியம். பரமு தன்னைவிட இளையவள். இந்த நிலையில் தான் செய்வது சரி என்ற முடிவிற்கு வர தீர யோசித்துத்தான் செயல்படுகிறாள். ஆனாலும் அனுபவம் இல்லாத சில விசயங்களில் என்ன முடிவு எடுப்பது என்று குழப்பமே மிஞ்சுகிறது. உற்ற தோழமையோ, தக்க ஆலோசனை வழங்கக்கூடிய உறவோ இல்லாத வேதனை அப்போதுதான் வெளிச்சம் கொண்டது. தாயையும், தமக்கையையும் நினைத்து மனம் வேதனையடைந்ததுதான் கண்ட பலன்.


அன்புச் செல்வன் என்ற பெயரை நினைக்கும் போதே உள்ளத்தில் தேனாறு ஓடியதைத் தவிர்க்க முடியவில்லை. மனம் கட்டுக்குள் அடங்காமல் ஏதோ பௌதீக மாற்றங்களை நடத்திக் கொண்டுதானிருக்கிறது, பாவம் அந்த பேதை. உறவுகள் ஒவ்வொன்றாக விலகிச் செல்லச் செல்ல இடிதாங்கியாக ஏற்றுக் கொண்ட மனது இன்று இந்த ஒரு உறவால் இழந்த அனைத்தும் மீண்டும் கிடைத்து விட்டது போன்று ஆனந்த சாகரத்தில் நீந்த ஆரம்பித்துவிட்டது. அவன் தனக்கே, தனக்கென பிறந்து, வளர்ந்தவனோ என்றுகூட எண்ண ஆரம்பித்த வேளையில்தான் அறிவு விழித்தெழுந்தது. தன் படிப்பிற்குத் தேவையில்லாத தடையை தானே தேடிக் கொள்கிறோமோ என்று தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் எதை வேண்டாம் என்று ஒதுக்க நினைக்கிறோமோ அதுவே நம்மை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வதுதானே இயற்கை. ஏதோ இழக்கக்கூடாததை  இழந்துவிட்டது போல மனதில் ஒரு வெறுமையும், முகத்தில் ஒரு சோகமும், அதை மறைக்க ஒரு முகமூடியும் என பாரம் கூடிக்கொண்டுதான் போனது. இந்த நேரத்தில்தான் அன்புச் செல்வன் வந்து திகு திகுவென எரியும் அப்படி ஒரு திரியைப் பத்திப் போட்டுவிட்டான். அதற்குமேல் அவளுடைய வைராக்கியம் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாய் இளகித்தான் போனது!

அன்று காலை அன்புச் செல்வன் வகுப்பிற்குள் நுழையும் போதே அவன் கணகள் தீவிரமான தேடலுடனேதான் இருந்தது. மாலுவின் கண்களை
நேருக்கு நேர் அவனுடைய பார்வை ஊடுறுவிய போது அதன் வேகம் தாங்காமல் அவளின் பார்வை தானே தாழ்ந்தது. இரவு முழுதும்
தூங்கியிருக்கமாட்டான் என்பதைச் சிவந்த அவன் கண்கள் உணர்த்தியது. மதிய இடைவேளை வரை கூடிய மட்டும் அவன் பார்வையை தவிர்த்தே வந்தவள், அதற்குமேல் தப்பிக்க முடியவில்லை. கேண்டீனில் வழககமாக அமரும் இடத்திற்கு நேரடியாக வந்தவன், அவள் எதிரில்
அமர்ந்து உற்று நோக்கியவாறு, எடுத்த எடுப்பில், “மாலு வில் யூ மேரி மீஎன்றான்.

இதைச் சற்றும் எதிர்பாராதவள் தடுமாறித்தான் போனாள். திருமணம் என்பது பற்றிய எண்ணமே துளியும் இல்லாதலால் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. ஆனாலும் அவன் மீண்டும் முன்னைவிட மிக அழுத்தமாக, அதேக் கேள்வியைக் கேட்டபோது அவளால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தன் படிப்பு முடியும்வரை அது போன்ற பேச்சிற்கே இடமில்லை என்று தெளிவாக்க நினைத்தவளுக்கு,
மீண்டும், மீண்டும் அதேப் பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பவனிடம் மறுத்துப்பேச இயலவில்லைதான்.. தம் வீட்டில் தனக்கு வேறு ஏற்பாடு
செய்ய ஆரம்பித்திருப்பதால் மாலுவின் விருப்பம் தெரிந்தால்தான் மேற்கொண்டு தான் பெற்றோரிடம் பேச முடியும் என்பதையும் சொன்னான்.

பதில் ஏதும் சொல்ல முடியாமல் தவித்தவ்ளின் மனதில் தன் குடும்ப சூழ்நிலை பற்றி தெரிந்தால் அவன் ஒருவேளை தன்னை மணக்க மறுக்கக்கூடும் என்று நினைத்தாள். அதற்கு மேல் அமைதியாக இருப்பது சரியாகாது என்ற நினைப்பில் மெல்ல பேச ஆரம்பித்தபோதே அவளைத் தடுத்து  நிறுத்தி தனக்கு எல்லாமே முன்னமே தெரியும் என்று சொன்னபோது, அவன் மீதிருந்த அன்பு பன்மடங்கானது அந்த நொடியில்! அன்று மாலை சின்னம்மாவிடம் இது பற்றி பேசலாமா என்ற யோசனையும் வந்தது.

இதில் பல பிரச்சனைகள் எழப்போவது தெரிந்தும் அவளால் அவனுடைய உண்மையான அன்பை புறக்கணிக்க முடியவில்லை. தில்லைராசன் ஐயா இதை எப்படி எடுத்துக்கொள்வாரோ என்ற அச்சமும் ஒரு காரணம். இந்தச் சூழலில்தான் முத்து சாரின் பார்வையில் பட்டு இப்போது தன்னை வந்து சந்திக்கச் சொல்லிவிட்டுப் போகிறார். இவருக்கு எதற்குத் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கோபமாக வந்தாலும், ஏதோ ஒரு சக்தி அவளை அடக்கி வாசிக்கச் செய்தது.

மிஸ், மாலதி, வாங்க, உட்காருங்க..... என்ன ஆச்சு உங்களுக்கு.? முக்கியமான பரீட்சை நேரத்தில் படிப்பைக் கெடுக்கிற இந்த விசயமெல்லாம் தேவையா என்று யோசித்து செய்யுங்கள். நம் வாழ்க்கையை நாமே தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களின் பொறுப்பு மிக அதிகம். அதை உணர்ந்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது தவறோ என்று நினைக்க வைக்கிறீர்களே..

என்ன சார்,என்ன நடந்துவிட்டதுன்னு இப்படி பேசறீங்கன்னு புரியல... படிப்பிலிருந்து என் கவனம் சித்றும் வாய்ப்பு எப்போதும் வராது, ஐ.ஏ.எஸ் பட்டம் வாங்க வேண்டும் என்பது என் உயிர் மூச்சில் கலந்த ஒன்று

உங்கள் நடவடிக்கையில் அப்படித் தெரியவில்லையே.. நேரடியாக பேச்சுக்கு வருகிறேன்.. அன்புச் செல்வனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?......  அவருக்கும் நமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத உயரம் அல்லவா, இது தெரிந்துதான் இப்படி நடந்து கொள்கிறீர்களா. எனக்குப் புரியவில்லை

முதலில் இந்த மனிதர் யார் தன் சொந்த விசயத்தில் தலையிடுவதற்கு என்று கோபப்ப்பட்டாலும், அவர் நமக்குஎன்று தன்னையும் சேர்த்துப் பேசியபோது காரணம் ஏதும் புரியாவிட்டாலும், அவளுக்குப் பிடித்திருந்தது. அதில் ஏதோ ஒரு பாதுகாப்பு தெரிந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

சார், நாங்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர்  அன்பு செலுத்துவதில் என்ன பிரச்சனை? அதற்கும் என் படிப்பு கெடுவதற்கும் என்ன சம்பந்தம்?”

அன்புச் செல்வனின் குடும்ப நிலை தெரியுமல்லவா.. எவ்வளவு கட்டுப்பாடான குடும்பம் தெரியுமா? அவனுக்கு ஏற்கனவே சொந்தத்தில் பெண் பார்த்து முடிவு செய்திருக்கிறார்கள். அவனுடைய பெற்றோர் அந்தப் பெண்ணையே மணமுடிக்கும் உறுதியோடு இருக்கிறார்கள். இவன் உன்னை மனதில் வைத்துக்கொண்டு மறுத்து வருவது தெரிந்து மிகவும் கோபமாக இருக்கிறார்கள். தில்லைராசன் ஐயா நேற்று போன் செய்திருந்தார். பெற்றோரின் வெறுப்பின் மீது உங்கள் காதல் கோட்டையைக் கட்டி என்ன சுகத்தைக் காண முடியும்? சுயநலத்திற்காக எடுக்கும் முடிவு பின்னாளிள் பிரச்சனையை ஏற்படுத்தலாம். திருமணம் என்பது இரு மனங்களின் சொந்தப் பிரச்சனை என்று இன்றைய தலைமுறையினர் தவறான முடிவெடுக்கின்றனர். இரு குடும்பம் சம்பந்தப்பட்ட விசயம் இல்லையா.. இது ? காலம் முழுவதும் சுகமாக வாழ வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரும் மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் திருமணத்தில் அதை நாம் எதிர்பார்க்க முடியுமா?”

அவன் குரலில் இருந்த கனிவுடன் கூடிய கண்டிப்பு அவளை சிந்திக்க வைத்தது. உள்ளுக்குள் எதையோ இழப்பது போன்ற வேதனை
ரணமாக்கியது. இதற்கு மேல் ஏதும் பேசக்கூடிய நிலையில் அவளும் இல்லாதலால், முத்துவும் ஆழ்ந்த யோசனையில் இருப்பது புரிய,
வருகிறேன்என்ற ஒத்தை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

தனக்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல அன்புச் செல்வன் வேகமாக நெருங்கி வந்து, நடந்தது பற்றி கேட்டபோது, கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. படபடவென பட்டாம்பூச்சியாய் துடிக்கும் அந்த இமைகள், களைப்பின் கனம் தாங்காமல் சோர்ந்து கிடப்பதைக் காணச் சகியாமல்,

நான் போய் முத்து சாரிடம் பேசி வருகிறேன், இது நம் சொந்த விசயம், இதில் தலையிட அவருக்கு என்ன உரிமை இருக்கிறதுஎன்று கோபப்பட்டபோதும், அவள் அவனைத் தடுத்து நிறுத்தவே செய்தாள். முத்து சொன்னதில் இருந்த நியாயங்கள்தான் அதற்கான காரணம்.

வேண்டாம் அன்பு. இப்போது இதைப்பற்றி அவரிடம் பேச வேண்டாம். நாமும் கொஞ்சம் யோசிப்போம். நீ முதலில் உன் பெற்றோரை சமாதானம் செய்ய பாருப்பா.. அவங்க வருத்தத்தை சம்பாதிக்க எனக்கும் விருப்பமில்லை

அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் மாலு. நீ சும்மா மனசைப் போட்டு குழப்பிக்காதே....

அன்புச் செல்வனின் வார்த்தை ஆறுதலிப்பதற்குப் பதிலாக மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. பரீட்சை முடியும்வரை இந்தச் சிந்தனையை தூரத் தள்ளி வைக்கும் முயற்சியில் போராட்டமே தொடர்ந்தது.

தீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் அன்று கடைவீதியில் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. கடைவீதியின் மத்தியில் அமைந்த மிகப்பெரிய, பிரபலமான கடை. சின்னம்மாவிற்கு, சுங்குடிச் சேலையும் பரமுவிற்கும், தனக்கும் சுடிதாரும் வாங்கலாம் என முடிவு செய்துகொண்டு சென்றவள், அங்கு சுடிதார் செக்‌ஷனில் துணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று தூரத்தில் குழி விழுந்த ஆப்பிள் கன்னமும், ரோசா வண்ணமுமாக ஒரு அழகு குட்டித் தேவதை தன்னையே பார்த்துக் கொண்டிருக்க, ஓடிப்போய் அள்ளி அணைத்துக் கொள்ளத் துடித்தாலும், அக்குழந்தையின் தாய் என்ன சொல்லுவாரோ என்ற தயக்கத்தில், சுற்று முற்றும் பார்த்தாள். ஆனால் அருகில் யாரும் இல்லை. குழந்தைக்கு 1 1/2 வய்துதான் இருக்கும், இவ்வளவு சின்னக் குழந்தையை விட்டுவிட்டு எங்கே போயிருப்பார் இவளின் தாய் என்று தேட ஆரம்பித்தாள், கடையில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் குழந்தை கீழே இருப்பது தெரியாமல் யாராவது நசுக்கி விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு. அதன் தாயை தேட ஆரம்பித்தாள். சுற்று வட்டாரத்தில் யாரும் குழந்தையைத் தேடுபவர்கள் தென்படவில்லை. எல்லோரும் அவரவருக்குத் தேவையான  துணியைத் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருந்தனர். மெதுவாக ஒவ்வொரு பிரிவாகச் சென்று பார்க்க ஆரம்பித்தாள். , நேரே கேஷ் கட்டும் கவுண்ட்டரில் சென்று குழந்தையை ஒப்படைப்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தவள் . லிப்ஃடிற்கு கூட்டம் அதிகம் இருந்ததால் படியின் வழியாக இறங்கி வந்து கொண்டிருந்தாள். கேஷ் கவுண்ட்டரை நெருங்குவதற்குள் பின்னால் இருந்து யாரோ அதோ குழந்தை, குழந்தை என்று கத்திக்கொண்டே அருகில் வந்து, “ கொடும்மா, குழந்தையை எங்கே தூக்கிட்டுப் போறே..என்று கடையில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தையை பிடுங்கப் பார்த்தாள்.

என்ன ஏது என்று புரிந்து, நடந்ததைச் சொல்வதற்கு வாயைத் திறப்பதற்குள், மளமளவென கூட்டம் கூடிவிட்டதஅந்தச் சலசலப்பில் அவள் பேச்சு எடுபடவில்லை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே வந்தவள், ஒரு நவநாகரீகமான, பெண், அவளிடமிருந்த படபடப்பு அவள்தான்
குழந்தையின் தாயாக இருக்க வேண்டும என்பதை உணர்த்தியது. ஓடி வந்தவள் வெடுக்கென்று குழந்தையைப் பிடுங்கிக் கொண்டாள்.
செக்யூரிட்டியும் வந்துவிடவே, கடை முதலாளி, மாலு ஏதோ குழந்தையை கடத்திக் கொண்டு போகவே  வந்துவிட்டது போல துருவித் துருவி
கேள்வி கேட்க ஆரம்பித்து, குழந்தையை நீ ஏனம்மா எடுத்து வந்தாய்.. என்று கேட்டபோது அவள் நடந்ததைக் கூறினாள்.

அதற்குள் அந்த சேல்ஸ் செக்‌ஷனில் இருந்த பெண், “மேடம் டிரையல் ரூமிற்கு போன போது, என்னிடம்தான் குழந்தையைக் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார்கள். நான் குழந்தையை பக்கத்தில் ஸ்டூலில் உட்கார வைத்துவிட்டு கஸ்டமருக்கு புடவை
காண்பித்துக் கொண்டிருந்தேன், திரும்பிப் பார்த்தால் குழந்தையைக் காணவில்லை. வேகமாக தேடிக்கொண்டு வரும்போதுதான் இந்தப் பெண் எடுத்துச் செல்வதைப் பார்த்தேன்.என்றாள்.

எல்லோரும் மாலதியை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தவுடன், அவமானத்தால் கூனிக்குறுகிப் போனாள். குழந்தையின் தாய் இந்தக் கடைக்கு வாடிக்கையாக வரும் மரியாதைக்குரிய கஸ்டமர்  என்பது. முதலாளி கொடுத்த முக்கியத்துவத்திலிருந்தே தெரிந்தது. அந்தப் பெண்ணிற்கு கண், மண் தெரியாமல் கோபம் வந்தது. போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பவளை முதலாளி சமாதானம் செய்து கொண்டிருந்தார். ஆனாலும் அவள் கோபம சற்றும் குறைவதாக இல்லை. மாலுவிற்கு டென்சன் தலைக்கேற கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அந்தப் பெண் தன் கணவருக்குப் போன் செய்து உடனே வரும்படி சொல்லிக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என்று புரியாத குழப்பமான சூழலில் அவளுக்கு முத்துவின் நினைவுதான் வந்தது. போன் செய்தபோது பிசி டோன் வந்து கொண்டிருந்தது...... திரும்பத் திரும்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள்..

தொடரும்

நன்றி :திண்ணை வெளியீடு

No comments:

Post a Comment

கழுகும் – சிறுமியும்

  கழுகும் – சிறுமியும்   அதீத மகிழ்ச்சி கூட சில சமயங்களில் பெரிய தண்டனையாக மாற லாம் . அப்போது தாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியற்றவர் என்...