சுப்ரஜா, வாழ்க்கையில் துயரமான பகுதி என்ற ஒன்றையே கனவிலும் கண்டிராத
ராஜா வீட்டு கன்றுக்குட்டியாக துள்ளித் திரிபவள்.கிருஷ்ணா குரூப் ஆஃப் கம்பெனிகள் மற்றும்
கல்வி நிறுவனங்களின் நிறுவனர், கிருஷ்ணராஜின் ஒரே வாரிசு. ’பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’
என்பதால் கஷ்டம் என்பதே
தெரியாமல் வளர்ந்தவள். தம் தளராத உழைப்பினால் ஐந்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும்
அளவிற்கு சொத்து சேர்த்து விட்டவர், கிருஷ்ணராஜ். ஒரே மகளை செல்வச் செழிப்பில் திணறச் செய்பவர்.
நினைத்ததும், கேட்டதும் உடனே கிடைக்கும் வரமும் பெற்றவள். ஆயினும் தான் வளர, வளர கூடவே சேர்ந்து தம் செல்வச் செருக்கின் காரணமான குறும்புகளும் அதிகமாகிக் கொண்டிருந்தது ஒரு நிலையில்
அது தந்தைக்கு வேதனை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஏழ்மையின் துயர் பற்றி எள்ளளவும் சிந்திக்காதவள்,
அதன் பிடியில் சிக்கித்
தவிப்பவர்களின் வேதனையை உணர முடியாமல், மேலும் ரணப்படுத்தக் கூடியவள். தாயின் அதிகப்படியான செல்லத்தினால்
எதையுமே தவறு என்று தெரியாமலே செய்து கொண்டிருப்பவள்.
மகளின் திருமண வயது வந்தபோதுதான் தந்தைக்கு அவள் எதிர்காலம்
பற்றிய கவலையும் உடன் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. திருமண வாழ்க்கையின் அனுசரிப்பு
தம் மகளுக்கு சாத்தியமாகுமா என்ற கவலையும் இருந்தது. அழகும், அறிவும், வசதியும் ஒருங்கே அமையப் பெற்றதால்
ஈயாய் மொய்க்கும் இளைஞர் கூட்டத்திடம் தவறாக மாட்டிக் கொள்ள்க் கூடாதே என்ற கவலையும்
அதிகமானது. விட்டுக் கொடுக்கும் சுபாவமே அறவே இல்லாமல் இருப்பவளால் திருமண வாழ்க்கையை
சரிவர நடத்திச் செல்ல முடியுமா, தன் பெயருக்கும் சேர்த்து பங்கம் வந்துவிடுமோ என்ற கவலையில்
பெற்றோர் இருந்தது நியாயம்தானே. அடிக்கடி இதனைத் தம் நெருங்கிய நண்பனும், உறவினருமான தில்லைராசனிடம்
சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தபோதுதான் தில்லைராசன் கொடுத்த ஊக்கத்தில் ஆறுதல் அடைந்து
கொண்டிருந்தார் கிருஷ்ணராஜ். இன்னொருவர் வீட்டில் சென்று அக்குடும்பத்தாருடன் அனுசரித்து
வாழும் கலை சுட்டுப் போட்டாலும் தம் மகளுக்கு வரப்போவதில்லை என்பதை தெளிவாகப் புரிந்து
வைத்திருந்தவர், நல்ல பையனாகப் பார்த்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுக்க
வேண்டிவந்தது.
தில்லைராசனின் கண்களில் பட்டவன் முத்து. பல மாதங்களாக
அவனைப் பின் தொடர்ந்து அவனைப் பற்றி ஆதியோடந்தமாக விசாரித்து வைத்திருந்தார். முத்துவின்
கடினமான கடந்த காலமும், அவன் கடந்து வந்த தெளிவான பாதையையும் அறிந்தவர், அவனால் எதிர்காலத்திலும் தவறு
செய்ய முடியாது என்பதையும் ஓரளவிற்கு ஊகித்தும் வைத்திருந்தார்.
தம் பெரும்பாலான கல்வி வாழ்க்கையை வடநாட்டில் கழித்துவிட்டு,
பணி நிமித்தம் சென்னை
வந்து சேர்ந்தவன், தானுணடு , தன் வேலையுண்டு என்று இருப்பவன். நுண்ணிய அறிவுத் திறனும், மனிதாபிமானமும், பொறுமையான குணமும் ஒருசேர
அமையப் பெற்றவன். தன்மானம் நிறைந்த முத்துவைத்தம் வழிக்குக் கொண்டுவருவது அவ்வளவு எளிதான
காரியமாக இருக்கவில்லை தில்லை ராசனுக்கு.
திருமணம் என்ற எண்ணமே இல்லாத ஒரு சமயத்தில் அந்தப் பேச்சை
எடுத்ததோடு, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டியும் சொன்னபோது அவனுக்கு கோபம் கொப்பளிக்கத்தான்
செய்தது. தில்லைராசனின் பெரு முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. ஆனாலும் சொத்து,
சுகத்திற்கு ஆசைப்படாமல்
தன்மானம் ஒன்றே முக்கியம் என்று இருக்கும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைப்பது அரிது என்பதால்
எப்படியும் அவனை ஒப்புக்கொள்ளச் செய்வதில் பிடிவாதமாக இருந்தார். இரண்டொரு முறை சுப்ரஜாவை
சந்திக்கும் வாய்ப்பும் அமைய, அவளுடைய குழந்தை உள்ளமும், அழகும் அவனைக் கவரவேச் செய்தது. தன் வருமானத்தில், தன்னுடைய சிறிய வீட்டில் அவள் வந்து
உடன்வாழச் சம்மதம் என்றால் தனக்கும் ஆட்சேபனை இல்லை என்று சொன்னான்.
கிருஷ்ணராஜின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லையென்றாலும்,
தம் மகளால் அடிப்படை
வசதிகள் கூட சரியாக இல்லாத ஒரு எளிமையான வீட்டில் போய் வாழுவது சாத்தியமல்ல என்பதை
உணர்ந்ததாலும், மீண்டும் அவனிடம் போராடி தங்களுடைய வேறு ஒரு தனி பங்களாவில் தங்கிக்கொள்ள சம்மதம்
வாங்க வேண்டியிருந்தது. இன்றளவிலும் தன் சம்பளத்தைத் தவிர மாமனாரின் பணத்தை எந்த வகையிலும்
கணக்கில் கொள்ளாமல் இருக்கும் மருமகனைத் தம் உள்ளத்தின் கோபுர உச்சியில் வைத்து வழிபட்டுக்
கொண்டிருக்கிறார் கிருஷ்ணராஜ். தம் மகளிடமும் ஓரளவிற்கு பல மாற்றங்களைக் காண முடிந்ததில்
உள்ளூர மகிழ்ச்சிதான் என்றாலும், மாற்ற முடியாத சில அடிப்படைக் குணங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு
வாழப்பழகிவிட்ட அவனைக் கண்டு பெருமைப்படாத நாளே இல்லை எனலாம்.
சுப்ரஜா பேசியவுடன் கிளம்பியவன், மாலுவின் போனிற்கு பதில் சொல்ல
முடியாமல் கிளம்பி விட்டான். வழியில் டிரைவிங்கில் இருக்கும் போது திரும்ப போன் அடித்தாலும்
எடுத்துப் பேச முடியாதலால், காரை விட்டு இறங்கியவுடன் பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
முதலில் சுபரஜாவையும், குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரத்தது. குழந்தையை யாரோ கடத்த முயன்றதாகச்
சொன்னாளே என்ற நினைவு வந்தபோது மிகவும் பரபரப்பாக இருந்தது. காரணம் அவளுடைய தந்தைக்கு,
அதாவது தன் மாமனாருக்கு
தொழில்முறை போட்டியில் பல எதிரிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவர்களை ஜாக்கிரதையாக இருக்கச்
சொல்லி அவர் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதும் நினைவிற்கு வந்தது.
மாலை நேரம் என்பதால் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
முதலாளியின் அறையில் சுப்ரஜாவை உட்கார வைத்திருந்தார்கள். தான் ஒரு ஐ.ஏ.எஸ் படிக்கும்
மாணவி என்று சொல்லியும் அதனைக் காதிலேயே வாங்காமல் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டும்
என்று ஒற்றைக் காலில் நிற்பவளை சமாளிக்க முடியாமல், கடை முதலாளி, கணவன் சொன்னால் ஒருவேளை சுப்ரஜா
கேட்கக் கூடும் என்று மாலுவையும் அங்கேயே இருக்கச்
செய்தார். உள்ளே நுழைந்து, குளிரூட்டப்பட்ட அறையிலும் முத்து முத்தாக வியர்வைத் துளிகளுடன்
உட்கார்ந்திருப்பவளைப் பார்க்கும்போதே அவளுடைய டென்சன் புரிந்தது. சுப்ரஜா எப்பொழுதுமே
இப்படித்தான் வெகு எளிதில் கோபப்பட்டுவிடுவாள். ஆனாலும் உடனடியாக வந்த வேகத்தில் அந்த
கோபம் மறைந்தும்விடும்.
“அமிர்தா குட்டிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே..?
எங்கே இங்கே கொடு குட்டிம்மாவை”
என்றவாறு இரு கைகளையும்
நீட்டிக்கொண்டு அருகே சென்றான். நல்ல நிலையில் குழந்தையைப் பார்த்தவுடனே அவனுக்கு மனது
தெம்பாக இருந்தது.
‘அமிர்தா’ என்ற பெயரைக் கேட்டவுடன் ‘அட நம் தாயின் பெயரா இந்தக் குழந்தைக்கு..
முழு பெயர் ஒரு வேளை அமிர்தவல்லி என்ற தம் தாயின் பெயராகவே இருக்குமோ என்று ஆச்சரியமாக
திரும்பிப் பார்த்தவள், “அட நம் முத்து சாரா.. இவருடைய மனைவியும், குழந்தையுமா என்று ஆச்சரியமாக
இருந்தது. அவரைப் பார்த்தவுடன் உயிரே வந்ததுபோல் இருந்தது அவளுக்கு. தன்னையுமறியாமல்
, ‘சார்’
என்று கத்திவிட்டாள்.
“மாலதி, நீயா.. நீ எங்கேம்மா இங்கே...” என்று ஏதும் புரியாதவனாகக் கேட்டான்.
மெல்ல, மெல்ல
இந்தப் பிரச்சனையின் நாயகியே மாலதிதான் என்பதை மனைவி சொல்லக் கேட்டவன், மனம் சற்று ஆறுதலடைய,
“ஓ.. மாலதியை எனக்கு நன்றாகத் தெரியுமே.. அவர் அந்த மாதிரிப்
பெண் இல்லை. குழந்தை தனியாக இருந்ததால்தான் தான் எடுத்து வைத்திருந்ததாகக் கூறுகிறாரே.
அதில் நிச்சயம் உணமை இருக்கும்” என்றபோதும் சுப்ரஜா மேலும், மேலும் விவாதித்துக் கொண்டிருந்தாள்.
“குழநதையை எடுத்துக் கொண்டு வந்தவ்ள், நேராக மேனேஜரிடமோ அல்லது பணி
புரியும் பெண்களிடமோ ஏன் எந்த விவரமும் சொல்லவில்லை. அதுவுமில்லாமல் லிஃப்டிற்காகக்கூட
காத்திருக்காமல் படியில் இறங்கி அவசரமாக வெளியேற வேண்டிய அவசியம் என்ன?”
“மேடம், இல்லை, நீங்க தவறாகவே புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க. லிஃப்ட்டில்
கூட்டம் அதிகமா இருந்ததால படிக்கட்டில் வந்தேன். ஒவ்வொரு செக்ஷனிலும் யாராவது குழந்தையை
தேடுபவர்கள் இருக்கிறாங்களான்னு பாத்துக்கிட்டேதான் வந்தேன். மேனேஜர் அறைக்கு வரும்போதுதான்
என்கிட்ட வந்து ஒரு சேல்ஸ் கேர்ள் குழந்தையைக் கேட்டாங்க...”
“இதையேதானே நீ ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டிருக்கே... ஆனா
நம்பிக்கை வரமாட்டேங்குதே...”
“சுப்ரஜா, நான் சொல்றதை கேளும்மா.. மாலதி அப்படிப்பட்ட பொண்ணு இல்ல..
சரி போகட்டும்.... நீ யாருகிட்ட குழந்தையை கொடுத்துட்டுப் போனே? அதைச் சொல்லு. இல்லேனா அவங்களைக்
கூப்பிடு முதல்ல.. அப்பதான் நடந்ததை ஒழுங்கா
புரிஞ்சிக்க முடியும். அதுக்குள்ள அவசரப்பட்டு ஒரு முடிவு எடுக்காதே”
“எனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப நாளா தெரியும். அவ அப்படிப்பட்டவ
இல்ல.. இந்த அளவிற்கு இவளுக்கு நீங்க ஏன் சப்போர்ட் பன்னனும்.. அப்படி என்ன பெரிய மகாராணியா
இவ... “
மனைவி சொல்வதை கொஞ்சமும் சட்டை செய்யாமல் அந்த சேல்ஸ்
செக்ஷனில் இருந்த பெண்ணைக் கூப்பிட்டு விசாரிக்க ஆரம்பித்தான். முதலில் தனக்குத் தெரியாமல்
குழந்தையை மாலதிதான் எடுத்துச் சென்றாள் என்று சாதித்தவள், முத்துவின் வார்த்தைகளில் இருந்த கண்டிப்பையும்,
கோபத்தையும் கண்டு அஞ்சியவாறு
மெல்ல உண்மையை ஒப்புக் கொண்டாள்.
“ஆமாம் சார், நாந்தான் கொஞ்சம் கேர்லஸா இருந்துட்டேன். கஸ்டமரிடம் பேசிக்கொண்டே
குழந்தை அருகில் இருந்ததை மறந்தே போய்விட்டேன். குழந்தை தானே கீழே இறங்கி போனதை கவனிக்காமல்
இருந்துட்டேன். அப்போதுதான் இவங்க பார்த்து குழந்தையை தூக்கிட்டு வந்திருக்கனும்”
என்று தலையைக் குனிந்து
கொண்டே சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அதற்குள் இத்தனை பொய் பேசி, பாவம் நல்லவர்களையெல்லாம் மனம் நோகச்
செய்துவிட்டாயே.. உனக்கே இது நல்லாயிருக்கா.. அவங்ககிட்டே முதல்ல மன்னிப்புக் கேளும்மா..”
அந்தப் பெண் தயங்கி நிற்க, அதற்குள் சுப்ரஜாவிற்கு மாலதிக்கு
முத்து இந்த அளவு சப்போர்ட் செய்தது சுத்தமாகப் பிடிக்காமல் போக, மீண்டும் தன் கோபத்தைக் காட்ட
ஆரம்பித்தாள்.
“சரி விடுங்க. மன்னிப்பெல்லாம் எதுக்கு கேட்கனும். இவ செய்ததும்
தப்புதானே. குழந்தையை அங்கேயேயில்ல கொடுத்திருக்கனும். எதுக்கு தூக்கிட்டு வந்தா..
சும்மா அவளுக்கு நீங்க ஏன் சப்போர்ட் செய்யனும்.. பேசாம வாங்க” என்றாள் கோபமாக.
ஆனால் முத்து பிடிவாதமாக மாலதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
என்று வாதிட, சுப்ரஜாவிற்கு கோபம் தலைக்கேறி,இவளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம். எதுக்கு இப்படி தலையில
தூக்கி வச்சிக்கிட்டு இருக்கீங்க..”என்று கேட்டதுதான் தாமதம், அதற்குமேல் அடக்க மாட்டாதவனாக,
“ஆம். அப்படித்தான் தலைமேல் தூக்கி வச்சுக் கொண்டாடுவேன்.
அவ யார் தெரியுமா.. அவளைப்பத்தி உனக்கு என்ன தெரியும். அவ.. அவ.. என் கூடப்பிறந்த தங்கச்சி
மாலதி!” என்று
படபடவென பொறிந்து தள்ளினான் முத்து என்கிற முத்தழகன்.
’கூடப்பிறந்த தங்கச்சி’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அதிர்ச்சியில்
அப்படியே வெலவெலத்து நின்றாள் மாலதி...
தொடரும்
நன்றி : திண்ணை
No comments:
Post a Comment