காத்திருக்கிறாள்
கன்னியவள்
கனிவான மணமகனுக்காக...
கண்ணில் ஓர் காதலுடன்
கையில் மாலையுடன்
சுயம்வர மண்டபமதில்...
காமம் வென்ற (வர)தட்சணை
சாபம் என்றாகிப்போக
கன்னி கழியாமல்
கண்ணீருடன்
வாடிய மாலையுடன்
காத்திருக்கிறாள் கன்னியவள்!
ஏனிந்த கவர்ச்சிப் பருவம்
எதற்கிந்த வரட்டு கௌரவம்?
யாருக்காக இந்த வரம்?
எதற்கிந்த சுயம்வரம்?
சீந்துவாரில்லாமல்......
தெருவெங்கும்
கழுகுப் பார்வைகள்
மனமத அம்புகள்
அர்ச்சனைக்காக மலர்ந்து
தட்சணையின்றி கருகி
கூசிக் குறுகும்
கன்னி மனம்.
என்றேனும் வருவாய்
மாலை சூடுவாய்
நம்பிக்கை இழக்காமல்
காத்திருக்கும் இளமை.
நீட்சியாய் இரவின் புழுக்கம்
தனிமையின் சோகம்
விடியாத இரவு
பலியாத கனவு.
தணலில் காயும்
புழுவாய்
செந்தளிர் வதனம்.
வெய்யில் வெய்துற்ற
பாலையின் தகிப்பில்
கூவல் நன்ணீராய்
உதித்த மாயோனவன்!
கார்த்திகை தீபங்கள்
பூத்த நன்னாளதில்
வந்தான் வசந்தமாய் ஸ்ரீராமன்
மணமேடையேறினாள்
மங்கையவள்!
நாணத்தோடு தலைகவிழ்ந்து
சோபன அறைக்குள்
மங்கலமாய் வாழ்த்துகள்!
காலச்சக்கரம் விரைவாய்
உருண்டோடியது
கடமையும் கட்டிக்காக்கும்
கௌரவமும் பாரம்பரியத்தை
பறைசாற்றியது.
மற்றுமொரு ஸ்ரீராமனாய்
மகவு வாய்க்க
பெருமிதத்தில் தாயுள்ளம்!
மணமகள் வேட்டையில்
தந்தையின் கரிசனம்
பழைமையின் காப்பில்
மீண்டுமொரு சரித்திரம்
ஆரம்பம்!
நன்றி : திண்ணை
No comments:
Post a Comment