தில்லைத் திருக்கோவில் - சிதம்பரம்
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே
திருமூலர்
பூலோகத்தின் புனிதபூமி, சொர்க்கம் என்று போற்றப்படுகிற நம் தமிழ்திருநாட்டில் தெய்வ மணங்கமழும், சிவாலயங்களில் தலைசிறந்து விளங்குவது தில்லைச்சிற்றம்பலம்.. ‘சிவாயநம என்று சிந்திப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை’ என்பதற்கிணங்க சோழ மன்னர்களும்,பாண்டிய மன்னர்களும் எண்ணிலடங்கா கோவில்களை எழுப்பியுள்ளனர். எத்தனையோ கோட்டைகளும், கொத்தலங்களும், பல்வேறு காரணங்களால் அழிந்து பட்டாலும்,இறைவனுக்காக எழுப்பப்பட்ட ஆலயங்கள் நிலைபெற்று பல்லாயிரம் ஆண்டுகளாக நின்று கொண்டிருப்பதே அவனருளிற்கு சாட்சியல்லவா?
‘தில்லைவனம்’ என்று பெயர் கொண்ட இத்திருத்தலம் தென்னார்க்காடு மாவட்டத்தில்,கொள்ளிடம் என்னும் காவிரியின் பிரிவுக்கு வடக்கிலும், மணிமுக்தா நதிக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளிக்கும் உள்ள பிரதான இரயில் பாதையின் இடையே உள்ளது. சிதம்பரம் நிலையத்திலிருந்து சுமார் 1கி.மீ தூரம் மேற்கே சென்றால் நகரத்தின் மையப்பகுதியில் நான்கு கோபுர வாயில்களுடன் கூடிய திருக்கோவிலைத் தரிசிக்கலாம்.
சம அளவிலான கோபுரங்கள்:
நான்கு இராஜ கோபுரங்கள் உள்ள இத்திருத்தலத்தில் அனைத்து கோபுரங்களும் 135 அடியாக சம உயரம் கொண்டவைகளாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.ஏழு நிலைகளைக் கொண்ட இந்த கோபுரங்களில் 13 பெரிய செப்புக் கலசங்கள் உள்ளன. கீழ்ப்பகுதியில், 90 அடிநீளமும், 60 அடி அகலமும் கொண்ட, வளைந்த தோற்றம் கொண்ட கோபுர சிகரங்களைக் கொண்டுள்ளது. 40அடி உயரம் கொண்டதாகவும் அமையப்பெற்றுள்ளது. பரத நாட்டியக்கலைத் தொடர்பான மிக அழகிய சிற்பங்களும் கண்ணைக்கவரும் வகையில் அமைந்துள்ளன. தெற்கு கோபுரத்தின் மீது சுவாமியின் கொடி கட்டப்பட்டுள்ளது.
தில்லை எனும் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்ததால் இத்தலம் தில்லை வனம் என்று அழைக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் கிழக்கில் உள்ள பிச்சாவரம் எனும் பறவைகள் சரணாலயத்தின், அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் இன்றும் மிகுதியாகக் காணப்படுகின்றன. பெரும்பற்றப் புலியூர் என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது. கோவில் என்று சொன்னாலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். வில்லிப்புத்தூராழ்வார் மொழிந்தது போன்று, “பொன்னம்பல நாதன் கழல் பொற்போடு பணிந்தான்” என்பதன் மூலம் சிதம்பரத்திற்கு பொன்னம்பலம் என்ற பெயரும் வழங்கிவருவது தெரிகிறது. சித் + அம்பரம் = சிதம்பரம். ‘சித்’ என்றால் அறிவு. ‘அம்பரம்’ என்றால் வெட்டவெளி. ஆகையால் ‘ஞானாகாசம்’என்று இத்தலம் வழங்கப்படுகிறது. இத்தலத்திற்கு புலியூர், வியாக்கிரபுரம், பூலோக கைலாசம்,புண்டரீகபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.
தல பெருமை:
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே. (திருஞானசம்பந்தர்)
இத்தலத்தின் தல விருட்சம் - தில்லைமரம். திருமூலட்டானக் கோவில் மேற்குப் பிரகாரத்தின் மேல்பால், கருங்கல் வடிவில் இருக்கின்றது. சிதம்பரம்,பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக அமைந்து விளங்குவது.
மாணிக்கவாசக சுவாமிகள், சிவத்தலங்கள் அனைத்தும் வழிபட்டுக் கொண்டு வந்தவர்,தில்லையம்பதியை அடைந்தவர், இத்திருத்தலத்திலேயேத் தங்கி , தில்லைக்கூத்தனை வழிபட்டு, கண்டபத்து, குலாப்பத்து, மூன்று அகவல்கள், குயில்பத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி,திருத்தோணோக்கம், திருத்தெள்ளேணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார்,அன்னைப்பத்து, கோயில்பதிகம் கோயில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்தமாலை திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து முதலியன பாடியருளினார். ”மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே” என்று போற்றிப்ப்ரவுகிறார்.
இத்தலத்து திருக்கோவிலில் சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, இராசசபை என்னும் ஐந்து மன்றங்களும் அமைந்திருந்தாலும், சிவன், விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகளும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படிஅமையப்பெற்றது தனிச்சிறப்புடையதாம். பிரம்மா,விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோவில் கொண்டுள்ள ஒரேதலம் இஃதாம்.
மாணிக்கக் கூத்தனை வந்தில்லைக் கூத்தனைப்
பூணிற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யார்உரைப் பாரே.
திருமந்திரம்.
ஓம் என்னும் பிரணவத்தின் வடிவான தில்லைக்கூத்தன், ஐந்தெழுத்துச் சொரூபியான நடராசப் பெருமானின் திருக்கூத்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் உணர்த்துகின்றது. உலகம் விராட்புருடன் வடிவம்; திருவாரூர் அதன் மூலாதாரம், திருவானைக்கா கொப்பூழ், திருவண்ணாமலை மணிப்பூரகம், திருக்காளத்தி கண்டம்,காசி புருவமதியம், சிதம்பரம் இருதயம் என்பர். உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டே நடைபெறும் ஆனந்தத் தாண்டவத்தை, அடியார்களின் பொருட்டு, இருதயத்தானமாகிய சிதம்பரத்தில் ஆடிக்காட்டியருளுகின்றார். சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் அமைந்து விளங்கும் பத்துத் தீர்த்தங்களில் சிவகங்கை என்னும் தீர்த்தம் சிவ வடிவமாகவே அமைந்து விளங்குவதாக சிதம்பர மான்மியம் கூறுகிறது.
அப்பரடிகள், தில்லையம்பலத் திருக்கோயிலின் முற்றத்திலும், திருவீதிகளிலும், உழவாரப்பணி செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், ’கருநட்ட கண்டனை’ என்னும் திருவிருத்தமும், ‘பத்தனாய்ப் பாட மாட்டேன்’ என்னும் திருநேரிசையும், ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்னும் திருக்குறுந்தொகையும் பாடியருளினார்.
திருத்தொண்டர் புராண வரலாறு:
அருண்மொழித்தேவர் என்னும் பெரியார், ’சேக்கிழார்குடி’, எனும் குடியில், தொண்டை நாட்டுக் குன்றத்தூரில் பிறந்த சிவநெறிச்செல்வராவார். சேக்கிழார் என்றே வழங்கப்பட்ட இவர்,அநபாயன் என்றும், திருநீற்றுச் சோழன் என்றும் புகழப்பெற்ற இரண்டாம் குலோத்துங்க சோழனின் தலைமை அமைச்சராக பணிபுரிந்து வந்தார்.
சமணம் பரவிவந்த அக்காலத்தில் அமைச்சர் சேக்கிழார், சிவத் தொண்டர்களின் வரலாற்றை அழகுற எடுத்தியம்ப, மன்னனும் மனம் மகிழ்ந்து, தொண்டர்தம் வரலாற்றையெல்லாம் தொகுத்து ஒரு காவியமாக்கும்படி பணிக்க, சேக்கிழார் பெருமானும், தில்லை வந்து அம்பலவாணரைப் பரவி நிற்க, ஐயனும் ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுக்க அதனையே தம் காப்பியத்தின் தொடக்கமாகக் கொண்டு, திருக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து, ‘திருத்தொண்டர் புராணம்’ என்கிற அருள் மணம் கமழும் அரிய பெரியபுராணத்தைப் பாடியருளினார். அகம் மகிழ்ந்த குலோத்துங்க மன்னனும் சேக்கிழாரையும்,திருத்தொண்டர் புராணத்தையும் யானை மீது ஏற்றி நகர் வலமாகக் கொணர்ந்து சிறப்பிக்க,தில்லையிலேயே அக்காப்பியம் அரங்கேறியது.
சிவநெறிப் பெரியார்களாகிய திருநீலகண்டர், கோச்செங்கட்சோழர், கணம்புல்லர், கூற்றுவர் முதலான நாயன்மார்களும், மறைஞான சம்பந்தராகிய சந்தான குரவரும், இரணியவர்மனும் வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சுகர் முதலிய முனிவர்களும், இத்தலத்தில் முக்தியடைந்த பெருமைகளும் கொண்டது தில்லைத்தலம்.
இறைவன் - இறைவி பெயர்கள்:
இறைவனின் திருநாமங்கள்!: மூலட்டானேசுவரர், திருமூலநாதர்.
சிவாலயங்கள் அனைத்திலும் அர்த்தசாம பூசைகள் முடிந்த பின்னர் எல்லாத் திருக்கோவில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலத்தான இலிங்கத்தில் ஒடுங்குவதால் இம்மூர்த்திக்கு ‘மூலட்டானேசுவரர்’ எனும் பெயர் வழங்கலாயிற்று.
மேலும், சபாநாயகர், விடங்கர், மேருவிடங்கர், தட்சிண மேருவிடங்கர், ஆகிய காரணப்பெயர்களும் வழங்கப்படுகிறது. மேலும் இலக்கியங்களில், திருச்சிற்றமபலமுடையார்,தில்லை நாயகத் தம்பிரான், ஆனந்தத் தாண்டவப் பெருமான், பொன்னம்பலக் கூத்தர் என்னும் திருப்பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
இறைவியின் திருநாமங்கள்!
உமையம்மையார், சிவகாமசுந்தரி.
இத்தாயாரின் ஆலயம் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில், சிவகங்கைத் திருக்குளத்தின் மேற்குப்புறத்தில் மிக அழகாக அமைந்துள்ளது.
திருக்கோவிலின் அமைப்பு:
இத்திருக்கோவில் ஐம்பத்தியொரு ஏக்கர் நிலப்பரப்பில், கிழக்கு,மேற்கு, தெற்கு, வடக்கு எனும் நான்கு பக்கங்களிலும் கம்பீரமான இராச கோபுரங்கள் அமைந்து அழகூட்டுகின்றன. இந்நான்கு இராச கோபுரங்கள் ஒவ்வொன்றும் 135 அடி (405மீ) உயரமும், ஏழு தளங்களும், பதின்மூன்று பெரிய செப்புக கலசங்களும் கொண்டது. இவ்விராச கோபுரங்கள் 90 அடி(27மீ) நீளமும், 60அடி(15மீ) அகலமும் உள்ள நீண்ட சதுர அமைப்புடன் கூடிய அடிப்பகுதியை உடையவை. 36அடி உயரம் வரை நேராகவும், கருங்கல்லாலும் கட்டப்பட்டவை. அதன் மேல்பகுதிகள் சிறிது சிறிதாக நேராகச் சென்று சிகரத்தில் முடிகின்றன. இக்கோபுரத்தின் சிகரங்கள் வ்ளைத்த கூரை போன்ற அமைப்புடையவை.
நான்கு இராச கோபுரங்களின் கீழ் அமைந்துள்ள கோபுர வாயில்கள் நான்கும் மிகவும் உயரமானவை. ஒவ்வொரு இராச கோபுர வாயிலும் 40 அடி (12மீ) உயரம் கொண்டு விளங்குகிறது. இராசகோபுர வாயிலின் இரு புறங்களிலும் நாட்டிய முத்திரை என்கிற பரதக்கலை சிற்பங்கள் அழகாகக் காணப்படுகின்றன. நடராசப் பெருமானார் தெற்கு முகமாக திருநடனம் புரிந்தருளுவதால் தெற்கு கோபுரத்தின் மீது சுவாமியின் கொடி கட்டப்பட்டிருக்கிறது. கோவிலின் உள் நுழைந்ததும் கோபுரத்தின் இரு புறங்களிலும், தென்பக்கத்தில் விநாயகப் பெருமானும், வடப்பக்கத்தில் சுப்பிரமணியரும் கிழக்கு முகமாகக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கக் காணலாம். தெற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தாலும் விநாயகரும், சுப்பிரமணியரும் சிறிய திருவுருவங்களில் காட்சி தருகிறார்கள். மேல் பாகத்தில் இரு புறங்களிலும் சுவாமியின் துவார பாலகர்களில் முதல்வர்களாக, ஆட்கொண்டார்,அய்யாக்கொண்டார் சந்நிதிகள் இருக்கின்றன. நான்கு கோபுரங்களைச் சுற்றியும் சுமார் 30அடி (9மீ) உயரமுள்ள கருங்கல்லாலான மதிற்சுவர், வீரப்ப நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கோபுரத்தின் வழியாகக் கோவிலுக்குள் சென்றால் தென்மேற்கு மூலையில் கிழக்கு முகமாக முக்குறுணி விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. சுமார் 8 அடி உயரமுள்ள் இவ்விநாயகர் போன்று பெரிய உருவமுள்ளவராகவும், மூர்த்திகரமாய் உள்ள திருவுருவை வேறு எந்தத் தலத்திலும் காண இயலாது.
கற்பக விநாயகர் கோவில்:
தல விநாயகரான கற்பக விநாயகர் சந்நிதி வெளிப்பிரகாரத்தின் வலப்பக்கமாகச் சென்றால் மேற்கு கோபுரத்தை அடுத்து வெளிப்புறமாக அமைந்துள்ளது.இப்பெருமான் ஏழு திருக்கரங்களுடன் நர்த்தன விநாயகராகக் காட்சி தருகிறார்.
சுப்பிரமணியர் திருக்கோவில்:
மேற்கு கோபுரத்தின் உட்புறத்தில் வடக்குப் புறத்தில் கிழக்கு முகமாக பாலசுப்பிரமணியர் திருச்சந்நிதி அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டிக்கு ஆறு நாளும், சூரசம்ஹார விழாவும் நடைபெறுகிறது.
சோமசுந்தரர் கோவில்:
வெளிப்பிரகாரத்தில் மேலும் வடக்கே சென்றால் மதுரை சோமசுந்தரக்கடவுள் திருச்சந்நிதி அமைந்துள்ளது. அதற்கு வடக்கில் நூற்றுக்கால் மண்டபமும் அம்மண்டபத்திற்கு அருகில் ஒற்றைக்கால் மண்டப விநாயகர் எனப்படுகின்ற திருமூல விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளது. இச்சந்நிதிக்கு எதிரில் சிவகங்கைத் தீர்த்தமும் (குள்ம்), இதைப் போன்றதொரு பெரியதாகவும், நாற்புறமும் படிக்கட்டுகள் அமைந்ததாகவும் வேறு தலத்தில் எங்குமில்லை.
சிவகாமசுந்தரி அம்பாள் கோவில்:
மூன்றாம் பிரகாரமாகிய இவ்வெளிப்பிரகாரத்தில் மேலும் வடக்கே சென்றால், ஞானசக்தியாகிய சிவகாமசுந்தரி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. வேறு எத்தலத்திலும் இல்லாத சித்ரகுப்தர் சந்நிதி இக்கோவிலில் அமைந்துள்ளது. கொடிமரம் இருக்கும் மண்டபம் மிக விரிவானது. இடைத்தாங்கல் ஏதுமின்றி இவ்வளவு அகலமான கருங்கல் மண்டபம் வேறு எங்கும் காண முடியாது. கருங்கல் தூண் மரத்தூண் போல வேலைப்பாடு அமைந்திருப்பதும், தொங்குகின்ற கருங்கல் சங்கிலியும், சிற்ப வேலைப்பாடுகளும் குறிப்பிடத்தக்கவை.
பாண்டிய நாயகர் கோவில்:
இம்மூன்றாம் பிரகாரத்தில் மேலும் வடக்கே சென்றால் வடக்கு முகமாக துர்க்கையம்மன் சந்நிதி அமைந்துள்ளது. இதன் வடக்கே சண்முகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தேர்போல கருங்கல் சக்கரங்கள் யானைகள் ஆகியவற்றுடன் அமைந்து அழகுற காட்சியளிக்கிறது.
இக்கோவிலின் வடக்குப் புறத்தில் தெற்கு முகமாக உள்ள சண்முகர் சந்நிதிக்கு கிழக்கில் நவக்கிரகங்களால் பூசிக்கப்பட்ட நவலிங்கக் கோவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே ஐந்து சபையில் அன்னமய கோசமான ராசசபை என்னும் ஆயிரக்கால் மண்டபம் அமைந்துள்ளது. இங்கிருந்து தெற்கே சென்றால் கோவிலுக்குள் செல்லும் வழி அமைந்துள்ளது.
உட்பிரகாரத்தை அடைந்தவுடன் தெற்குப்புறமாக வலப்பக்கம் சென்றால் கிழக்குப்பிரகாரம் முடிந்து தெற்குப் பிரகாரம் தொடங்குகின்றது. இங்கு காலசங்காரமூர்த்தி சந்நிதி மனோமய கோசமாகிய நிர்த்தன சபையில் காளியுடன் ஆடிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தி சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன. இந்நிர்த்தன சபையும் ஒரு தேர் வடிவில் அமைந்துள்ளன. தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் மிக அழகாக அமைந்துள்ளன.
அங்கிருந்து நடராசமூர்த்தியின் கொடிமரத்துக்கு வந்து ஆனந்த நடராசரைத் தரிசித்துக்கொண்டு மேலும் வலமாக வந்தால் இலக்குமி சந்நிதியையும், தண்டாயுதபாணி சந்நிதியையும் கண்டு வழிபடலாம். மேற்குப் பிரகாரத்தில் தேவாரம் இருந்த இடத்தைக் காண்பித்த , திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதியும் , பொல்லாப் பிள்ளையார் சந்நிதியும் அமைந்துள்ளது. மேற்குப் பிரகாரத்தில் கடைசியில் கிழக்கு முகமாக அப்பர், ஞானசம்பந்தர் சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வர் சந்நிதியும் அமைந்துள்ளது.
வடக்குப் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, மல்லிகேசுவரர், வல்லப கணபதி, மோகன கணபதி ஆகியோர்கள் சந்நிதி அமைந்துள்ளன. நடுவில் உள்ள வடக்கு முகமாகச் சென்றால் விநாயகர்,சிவலிங்கம், கருங்கல்லில் சமைக்கப்பெற்ற இத்தலத்துப் புனிதமரம் ஆகியவை அமைந்துள்ளன.
இங்கு 63 நாயன்மார்களும்,இவர்கட்கு எதிரில் சுவரின்மேல் சிவபிரானின் 26 மூர்த்தங்களும்,ஸ்ரீசக்கரங்களும், ஸ்ரீதேவியின் அம்சமும் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இங்கு சண்டேசுவரர் சந்நிதியும், கிழக்கே அருணாலாசலேசுரர் சந்நிதியும் அமைந்துள்ளன.
அருணாலேசுரர் சந்நிதியிலிருந்து தெற்குப் பக்கமாக வந்தால், ஆதிமூலமாயும், சுயம்பு மூர்த்தியாகவும் உள்ள மூலட்டானேசுவரர் சந்நிதி உள்ளது.
இக்கோவிலின் மிகப்பழமையான கல்வெட்டு ‘திருமூலநாதர்’ பற்றியதுதான் ஆதித்த சோழன் திருமூலட்டானத்துப் பெருமானடிகளுக்கு நந்தா விளக்கு அளித்தது பற்றியது. வடமொழிப் புராணமான சூத சம்கிதை வாயு சங்கிதைகளில் மூலட்டானேசுவரர் பற்றி உள்ளதால் இதன் தொன்மையை உணரலாம். அடுத்து ஐயப்பன் சந்ந்தியும், திருவிழா மண்டபமும், யாகசாலையும் காணப்படுகிறது.
தேவசபை என்கிற ‘பேரம்பலம்’ மேற்கு நோக்கிச் சென்றால் காணப்படும். உற்சவ மூர்த்தங்கள் இங்குதான் இருக்கின்றன. மேற்குப்புறத்தில், சட்டநாதர் சந்நிதி, சனீசுவரர் சந்நிதி,நவக்கிரகங்கள் சந்நிதி, அர்த்தசாம அழகர் சந்நிதி ஆகியவை அமைந்துள்ளன.
முதற் பிரகாரத் திருக்கோவில்:
முதற்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் சிற்றம்பலத்தின் தங்க ஓடுகள் வேய்ந்த விமானம் தெரியும். இங்குதான் ஆனந்த நடராஜ மூர்த்தி சிவகாம சுந்தரியுடன் நித்தியமும் ஆனந்தத் தாண்டவம் ஆடியருளுகிறார்.
பொன்னம்பலத் தத்துவம்:
ஞானசபை என்கின்ற பொன்னம்பலம், சிற்றம்பலம் என்பது, சித்சபையும், கனகசபையும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதாகும். சித்சபை எனப்படுகின்ற பொன்னமபலத்தின் மேல் ஒன்பது சக்திகளான தங்கக் கலசங்கள் உள்ளன. பொன்னம்பலத்தில் 64 கைம்மரங்கள் உள்ளன. இவை64 கலைகளாகும். மனிதனால் ஒவ்வொரு நாளும் விடப்படுகின்ற சுவாசங்களின் எண்ணிக்கையை உணர்த்துவதாக 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன. மனிதனுடைய சுவாச சஞ்சார ஆதாரமான நாடிகளின் எண்ணிக்கையை உணர்த்துவதாக 72,000 ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.
கனகசபையில் உள்ள பதினெட்டுத் தூண்களும், பதினெண் புராணங்களை உணர்த்துவன. ஐந்து வெள்ளிப்படிகளும் ஐந்தெழுத்துக்களை உணர்த்துவன. வெள்ளிப் பலகணிகள் தொண்ணூற்றாறும், தொண்ணூற்றாறு தத்துவங்களை உணர்த்துவன. சித்சபையில் உள்ள ஐந்து தூண்களும் நான்கு வேதங்களை உணர்த்துவன. பிரமபீடத்தின் உள்ள பத்து தூண்களில் கீழ் ஆறு தூண்களும் ஆறு சாத்திரங்களை உணர்த்துவன. மேல் இருக்கும் நான்கு தூண்களும் நான்கு வேதங்களை உணர்த்துவன.
சிதம்பர இரகசியம்:
சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு, ஆராத்தி காட்டப்பெறும் போது, திருவுறுவம் ஏதும் தோன்றாமல், தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டு காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலே வில்வதளம் தொங்குவதன் இரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதே ஆகும்.
சிவன் விஷ்ணு சந்நிதிகள்:
சித்சபையில் நடம்புரியும் நாதனை தரிசித்துவிட்டு, பிரகாரமாக வந்தால், விநாயகர்,இலிங்கோத்பவர், சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி அருகிலுள்ள வழியில் மேலே சென்றால் ஆகாயலிங்கத்தை வழிபடலாம். பின்னர் கீழே வந்து பள்ளியறைக்கு அருகில் ஜைமினி,பிட்சாடனர், பைரவர், சந்திரர், குரியர், சண்டேசுவரர் சந்நிதிகளையும் காணலாம். இப்பிரகாரம் வழியாக வந்து மீண்டும் நடராசர் சந்நிதி அடைந்து எதிரில் உள்ள படிகளின் மீது நின்று பார்த்தால் தெற்கு முகமாக உள்ள நடராசர் சந்நிதியையும், கிழக்கு முகமாக உள்ள கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியும் கண்டு வழிபடலாம். இவ்வாறு ஒரே இடத்தில் நின்று,சிவன், விஷ்ணு இரு தெய்வங்களையும் வழிபடும் வகையில் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
இப்புனித தலத்தில் மிகச் சிறப்புற்று விளங்குவது, சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம்,நிருத்த சபை, ராசசபை என்கின்ற ஐந்து சபைகளாகும்.
மூர்த்தி தலம், தீர்த்தம் என்னும் மூன்றன் பெருமையுடைய இத்தில்லைத் தலத்தில் விசேடமான தீர்த்தங்கள் பத்து. அவைகளாவன: சிவகங்கை, பரமானந்தகூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம், சிவப்பிரியை, புலிமடு, குய்ய தீர்த்தம்,திருப்பாற்கடல் ஆகியவைகளாகும்.
கல்வெட்டுகள்:
தில்லைச் சபாநாயகரின் கீழைக் கோபுரத்தில் இரண்டு கல்வெட்டுப் பாடல்கள் உள்ளன. இதிலிருந்து குலோத்துங்கன் திருமாலின் அம்சமாகத் தோன்றினான் என்பதும், இவன் தில்லைநாய்கரின் கோவிலை விரிவாக்கக் கருதி தன்னுடைய ஆட்சியின் 26ம் ஆண்டில் தில்லைத் திருப்பணியைத் தொடங்கினான் என்றும் தெரிகின்றது.
குலோத்துங்கனின் 46,47 ஆம் ஆண்டுக் கல்வெட்டுகள் திருமூலத்தானரின் கோவில் புறச் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தன. பின்னர் ‘நடராசன் - கோவிந்தராசன்’ கோவில்களை வளைத்துப் புதிதாக எடுக்கப்பட்ட திருச்சுற்று மாளிகையின் வடசுவரில் பொறிக்கப்பட்டன. திருமூலத்தானர் கோவில் இக்காலத்தில் புதுப்பிக்கப் பெற்றது.
தில்லையின் சபாநாயகர் கோவிலின் முதல் திருச்சுற்று மேற்குப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டில் வடமொழிப்பாடல்கள் 31ம், தமிழ் வெண்பாக்கள் 36-ம் இடம் பெற்றுள்ளன.
தில்லை நடராசப் பெருமானுக்கு நாள் தோறும் ஆறுகால பூசைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமன்றி, திருவனந்தல் என்னும் பால் நைவேத்தியம் என்ற சிறப்பு நைவேத்தியமும் வழங்கப்படும்.
திருவிழாக்கள் :
நடராசப்பெருமானுக்கு ஓர் ஆண்டில் இரண்டு பெரிய திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவை ஆண்டுதோறும் மார்கழித் திருவாதிரையிலும், ஆனி உத்திரத்திலும் நிகழ்ந்து வருகின்றன. ஆனித்திருமஞ்சனம், மார்கழித் திருவிழா, சித்திரை வருடப்பிறப்பு, திருவாதிரை நட்சத்திரம், அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிரதோஷம், வெள்ளிக்கிழமை, கார்த்திகை ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும். அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்தியடைந்த நாட்கள் ஆகிய நாட்களில் விசேட பூசைகள் நடைபெறும்.
சித்சபையில் விளங்கும் நடராசப் பெருமானின் திருவுருவம்,விஞ்ஞானம், சமயம், கலை அனைத்தையும் ஒன்றாக்கி விளக்கும் ஓர் உண்மை ஒளியாகும். சோழப்பேரரசன் இராசராசன் காலத்தில்தான் இத்திருவுருவம் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதன் பின்னரே அனைத்து சிவாலயங்களிலும் இத்திருவுருவம் அமையலாயிற்று என்கின்றனர்.
அருமையானத் தமிழ்ப்பாடல்கள்.
ReplyDeleteகோவில் விவரங்களும் பிச்சாபுரம் விவரமும் சுவாரசியம். பிச்சாபுரம் சென்று பார்க்கத் தூண்டுகிறது.
படங்கள் ஏனோ தளமேறவில்லை..
அன்பின் அப்பாதுரை சார்,
ReplyDeleteவணக்கம். பிச்சாவரம் அருமையான இடம். படங்கள் திரும்பவும் முயன்றிருக்கிறேன்.. நன்றி.
அன்புடன்
பவள சங்கரி
சிறப்பான கட்டுரை, பாராட்டுக்கள்.
ReplyDeleteநான் மிகவும் லயிக்கும் கோவில்.. மீண்டும் சென்று வந்த திருப்தி! வாழ்க!
ReplyDeleteஅன்பின் திரு கவி செங்குட்டுவன்,
ReplyDeleteதங்கள் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புட்ன்
பவள சங்கரி
அன்பின் மோகன்ஜி,
ReplyDeleteஉண்மை. தில்லையம்பலம் அனைவர் மனத்தையும் லயிக்கச் செய்யும் ஆலயம் என்பதில் ஐயமேது. தங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
பவள் சங்கரி