நகரத்தின் மையப்பகுதியில் பரபரப்பான ஒரு சாலை. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இடப்புறம் பெரிய காம்பவுண்ட் போட்ட கட்டிடம். அதற்குள்ளே நுழைந்தவுடன் இரு புறமும் அடர்ந்த மரங்கள், செடி கொடிகள்.. மேற்கொண்டு உள்ளே செல்லச் செல்ல பாதை நீண்டு, கட்டிடங்கள் ஒவ்வொன்றாக வரும்.. அக்கட்டிடத்தின் பின் கோடியில் ஒரு பழைய கட்டிடம். வர்ணமெல்லாம் வெளுத்துப் போய், சுவர்கள் பெயர்ந்து தனியாக ஒதுங்கியிருந்தது.. அந்த மொத்தக் கட்டிடமே ஒரு தனித்தீவு போல இருந்தாலும், இந்த பாழடைந்த அறை மேலும் ஒரு வித்தியாசமான தனித்தீவு.... இரவு மணி பணிரெண்டு! நிசப்தமான வேளை. அங்கங்கு நாயின் ஊளையிடல். கூக்.. குதூக்... குக்..குக்..... வித்தியாசமான பறவைகளின் ஒலிகள். சில்லென்று காற்று இதமாக வீசினாலும் பக்கென்று இருதயம் துடிக்கும் ஓசை அதையும் மீறிக்கேட்கும் படபடப்பு.. சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி செக்ஷனில் ஒரு நடுநடுங்கும் குளிர் இருக்குமே.. அப்படி ஒரு குளிர். ஒரு பூச்சிக்கொல்லி வாடையுடன், மட்டமான செண்ட் வாடையும் கலந்து அத்துடன் ஒரு அழுகிப்போன வாடை, இது அத்துனையும் கலந்து ஒரு வாடை...... ஆம் அது ஒரு பிணவறை! formaldehyde என்ற ஒரு மருந்து வாடை.. பிணத்தை கெடாமல் பாதுகாக்கும் ஒரு திரவம்.. அதில் ஊறிக்கிடக்கும் பிணங்களின் அணிவகுப்பு!
நடுங்கும் குளிரில் தெப்பலாக வியர்வை.. கரப்பான் பூச்சியைக் கண்டாலே அஞ்சி நடுங்கும் சுபாவம். பஞ்சின் மெல்லடிப் பாவை! நல்ல ரோசாப்பூ வண்ண நிறம் தற்போது செக்கச் சிவந்து...பேயறைந்தது போன்ற தோற்றம்.. தலை தட்டாமாலை சுற்றுவது போல கிர்ரென்று ஒரு நிலை.. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத ஒரு அமானுஷ்ய நிலை.. இயந்திரமாய் தள்ளாடி நடந்து... நடந்து.. ஒரு குறிப்பிட்ட 8ம் எண் பிணத்தைத் தேடி காற்றில் கால்கள் அலைந்து சரியாகச் சென்று குறிப்பிட்ட அந்த 8ம் எண் பிணத்தின் அருகில் சென்று ........ நடுக்கத்துடன் மெதுவாக முகத்திரையை வி...ல...க்......க.... ஓ... அது ஒரு ஆணின் முரட்டு உருவம்.. அடர்ந்த மீசை. உறுதியான முகம்..திறந்த நிலையில் முட்டைக்கண்கள். திறந்த வாய்.. கையில் கொண்டு சென்ற சாக்லேட் மிட்டாயை மெல்லப் பிரித்து அந்த வாயினுள் போட்டு.... அப்பாடீயோவ்...... என்று திரும்பி வெளியே ஓட எத்தனிக்கும் நேரம்..
“லபக்....... கிர்ர்ர்ர்ர்... இன்னொரு மிட்டாய்” என்று பலமான சத்தம்... எங்கிருந்து..... என்று சிந்திக்க முடியவில்லை.. கண்கள் குத்திட்டு நிற்க, ஏதோ ஒன்று எழுந்து நின்று ஹ....ஹா.... என்று நகைப்பது போன்ற காட்சி விரிய... அவ்வளவுதான் தெரியும்.. அப்படியே மயங்கி சரிந்ததுகூட உணர முடியவில்லை...
குளிர்காலம் துவங்கிவிட்டதன் அறிகுறியாக அந்தக் காலனியில் காலை மணி ஆறாகியும் நிசப்தம். ஒருவரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. வழக்கமாக 5 மணிக்கெல்லாம் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுபவர்கள் கூட இந்த குளிருக்குப் பயந்து இழுத்துப் போர்த்திக் கொண்டு வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். பால்காரரும் தாமதமாக வருவதால் காபியும் தாமதமாகத்தான் கிடைக்கும் என்பதால் தூக்கம் வராதவர்களும் படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் கண்களை மூடியபடி கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். அழகாக சீட்டுக்கட்டு மாளிகை போன்று ஒன்று போல் கட்டப்பட்ட அழகான வீடுகள். அடுத்தடுத்து நெருக்கமான வீடுகள். ஒரே வண்ணத்தில் , வீட்டின் முன் புறமும், பின் புறமும் அழகிய சிறிய தோட்டத்துடன் வடிவமைக்கப்பட்ட காலனி. சுத்தமாக பராமரிக்கவும், ஒரு கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கவும் ஒரு சங்கம் அமைத்து அதற்கு தலைவரும் வைத்து அந்தக் காலனியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து மற்ற தெருக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கினர் என்றே சொல்லலாம்..
சங்கரராமன் குடும்பம் மிக அமைதியான அழகான குடும்பம். ஆஸ்திக்கு ஒரு ஆணும், ஆசைக்கு ஒரு பெண்ணும் என்று அளவான குடும்பம். குழந்தைகள் இருவரும் படிப்பில் படு சுட்டிகள். மூத்தவன் மணிகண்டன் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் முதல் நிலை மாணவன். இளையவள் காயத்ரி, பள்ளியிறுதித் தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவி. மிக எளிதாக இலவச சீட்டில் சென்னையின் முதல் நிலை மருத்துவக் கல்லூரியில் நுழைந்து விட்டாள். மிக அமைதியான பெண். பேச்சும், செயலும் மிக மென்மையாகவும், பெருந்தன்மையாகவும் இருக்கும். காலனியில் அத்துனைப் பேருக்கும் செல்லப் பெண் அவள். அந்தக் காலனிக்கு அவர்கள் வந்தபோது காயத்ரிக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும்.. துறுதுறுவென்ற கண்களும், அமைதியான அந்த அழகும் எளிதில் அனைவரையும் கவர்ந்துவிட்டது...
ஒவ்வொரு வருடமும் நண்பர்கள் தினத்தை காலனியில் அனைவரும் சேர்ந்து பாட்லக் பார்ட்டியாகக் கொண்டாடுவார்கள். அதாவது அனைவரும் அவரவர் வீட்டிலிருந்து ஒரு சில உணவுகள் தயாரித்துக் கொண்டுவந்து, மொட்டை மாடியில் நிரந்தரமாக காலனிக்காரர்களின் குடும்ப விழாவிற்காக அமைக்கப்பட்ட அந்த ஹாலில் வைத்து, அனைவரும் சேர்ந்து உண்டு மகிழ்வர்.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், விளையாட்டு என்று ஒரே கும்மாளமாக பொழுது கழியும்.. அன்றும் அப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பித்த பார்ட்டி, இரவு பத்து மணிக்குத்தான் முடிந்தது... எல்லோரும் அவரவர் சொந்தக் கவலையை சற்று நேரம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, அனைவருடனும் கலந்து உற்றார், உறவினர் போல, நட்போடு பழகி, ஒரு குடும்பமாக் மகிழ்ந்து இருப்பார்கள்.
இரவு அலுத்து, சலித்துப் போய் அனைவரும் அவரவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சங்கரராமன் குடும்பம் மட்டும் அன்று ஏதோ கோவில் பிரார்த்தனை என்று திருத்தணி முருகன் கோவிலுக்குச் சென்று விட்டார்கள். ஏனோ சில நாட்களாகவே அவர்கள் எதிலும் சரியாகக் கலந்து கொள்வதில்லை. குடும்பத்தில் ஏதோ பிரச்சனை போல.. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், தவித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனாலும் குடும்பம் என்றால் நல்லதும்,கெட்டதும் ஆயிரம் இருக்கும், அதில் அடுத்தவர் வீட்டு விசயத்தில் அனாவசியமாக மூக்கை நுழைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை என்றே அனைவரும் பொறுமை காத்தனர். இந்த ஒரு முக்கியமான காரணத்தினாலேயே அங்கு சண்டை, வாக்குவாதம் என்ற குழப்பமெல்லாம் இல்லாத நட்புறவு பேணும் காலனியாக இத்தனை ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது..
அன்று எல்லோரும் அலுத்துப்போய் படுத்து உறங்கிவிட்டார்கள்.. திடீரென சங்கரராமன் வீட்டில் வீல் என்ற அலறல் சத்தம். இரவு வாட்ச்மேன் அப்போதுதான் கைத்தடியை வீடு வீடாக தட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏ.சி. அறை என்பதால் சத்தம் அதிகம் வெளியே வரவில்லை. இருந்தாலும் வாட்ச்மேனுக்கு ஏதோ சந்தேகம் வர அவர்கள் வீட்டில் மட்டும் இரண்டு மூன்று முறை சேர்த்தே தட்டிவிட்டுச் சென்றார். இரவு பணிரெண்டு மணி.. அதற்குமேல் சத்தம் கொடுப்பது சரியாக இருக்காது ஏதோ சந்தேகத்துடனே நகர்ந்து சென்று விட்டார்.
அடுத்த நாள் சங்கரராமன் வீட்டில் ஒரே அமைதி. அவர் காலையில் வழக்கம்போல அலுவலகம் கிளம்பி சென்றுவிட்டார்...மகன் மணிகண்டனும் கல்லூரி கிளம்பியாகிவிட்டது. மருத்துவக் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் காயத்ரி மட்டும் வீட்டில் இருக்கிறாள். பக்கத்து வீட்டில் சமூக சேவகி சாரதா அம்மா இருக்கிறார்கள். அவரும், அவர் கணவர் சம்பந்தமும், இருவரும் தங்கள் ஓய்வுக் காலத்தை, ஏழை எளிய மக்களுக்கும், அனாதை குழந்தைகளுக்காகவும், சேவை செய்யும் சில அமைப்புகளில் தொடர்பு கொண்டு தங்கள் பொன்னான நேரங்களை அச்சேவையில் ஈடுபடுவதன் மூலம் அமைதி காண்பவர்கள். அன்று சாரதாம்மா சாதாரணமாக யார் வீட்டிற்கும் அனாவசியமாகச் செல்லாதவர்கள், சில நாட்களாக காயத்ரி கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டினுள்ளேயே அடைந்து கிடப்பதைக் கண்டு என்னவென்று விசாரிக்க வேண்டும் என்றே அவர்கள் வீட்டிற்குச் சென்றார். எப்போதும் கலகலவென வரவேற்கும் சரசு அன்று ஏனோ வாசலுடன் அனுப்புவதிலேயே குறியாய் இருப்பவர் போல பட்டும் படாமலும் பேசி அனுப்பப்பார்த்தார். சாரதா அம்மாவும் அதைக் கண்டு கொள்ளாமல் உள்ளே இயல்பாகச் சென்று சோபாவில் அமர்ந்து கொண்டார்.
”எங்கே நேற்று பாட்லக் பார்ட்டிக்குக் கூட நீங்கள் யாருமே கலந்து கொள்ளவே இல்லையே... சும்மா பாத்துட்டுப் போலாம்னுதான் வந்தேன்..”
“ம்ம்ம்ம் ஆமாம் மாமி, நாங்கள்லாம் நேத்திக்கு ஆத்துலயே இல்ல.. கோவிலுக்குப் போனோம். வர நாழி ஆயிடுத்து.. அதனால நேரே வீட்டிற்கு வந்துட்டோம்’ என்றாள் .
“ஓ அப்படியா.. நல்ல விசயம்தானே, குடும்பத்தோடு கோவிலுக்குப் போறது மன நிம்மதி கொடுக்கற நல்ல விசயமாச்சே.. அதிருக்கட்டும் காயத்ரி இன்றும் காலேஜீக்குப் போகலையா? வீட்டில் இருப்பாள் போல இருக்கே..?”
“ம்ம் ஆமாம் மாமி. அது வந்து.. அவளுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. ரெஸ்ட்டில இருக்கா, சரியான உடனே போயிடுவோ...”
அப்படியா... என்று கேட்டுக் கொண்டே வெகு இயல்பாக காயத்ரியின் அறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார் சாரதாம்மா.. ஆனால் அதை விரும்பாதவர் போல சரசு,
“அவ தூங்கறா மாமி, டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே.. நன்னா தூங்கினாத்தானே உடம்பு சீக்கிரம் குணமாகும், இராத்திரியே சரியா தூங்கறதில்ல.....” என்று ஏதோ சொல்ல வந்தவர் நாக்கைக் கடித்துக் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டார்.
அதற்குமேல் கட்டாயப்படுத்தி உள்ளே செல்வது சரியாக இருக்காது என்று அவர்களிடம் சொல்லிக்கொண்டு பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என அமைதியாகக் கிளம்பிவிட்டார் சாரதாம்மாள்.
இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தது காலனி. அவரவர்கள் அமைதியாக அவரவர் வேலையில் தீவிரமாக இருந்தனர். அன்று வெள்ளிக்கிழமை. மாலையில் விளக்கேற்றி நமஸ்காரம் செய்துவிட்டு சரசு, காயத்ரியை அழைத்து நமஸ்காரம் செய்துகொள்ளச் சொன்னாள். ஏனோ பூஜை அறைக்குள்ளேயே வர மறுத்தவள், முகமெல்லாம் வெளிறிப்போய் உடல் இளைத்து மிகக்களைப்பாக இருந்தாள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அறையை விட்டே வெளியே வர மறுத்துக் கொண்டிருந்தாள். நிலைமையின் அபாயம் மெல்ல புரிந்தபோது அதிர்ச்சியின் உச்சத்தில் சரசு மாய்ந்து போனாள். கல்லூரிக்கு அதிக நாட்கள் விடுமுறை எடுக்க இயலாத நிலை..
காயத்ரி, அன்று இரவு வழக்கம்போல படுக்கையறைக்குச் சென்றவள் சென்ற சில நிமிடங்களிலேயே வீல் என்ற அலறலுடன் வெளியே ஓடிவந்து அம்மாவின் அறையில் வந்து மடி புகுந்தாள்.. இதற்குள் சத்தம் கேட்டு என்னவோ ஏதோவென்று அக்கம் பக்கத்திலிருந்து அனைவரும் ஓடிவர, சரசு உடனே காயத்ரியை அறையினுள்ளே தந்தையுடன் விட்டுவிட்டு வெளியே வந்தவள், தான் தான் எதையோப் பார்த்து பயந்து அலறியதாக சமாளித்தாலும் அவர்களின் முகத்தில் தெரிந்த சந்தேக ரேகை எதையோ உணர்த்தினாலும் கண்டுகொள்ளாமல் அவர்களை அனுப்பி கதவைச் சாத்திவிட்டு வந்துவிட்டாள். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி உடனடியாக செயல்பட வேண்டிய கட்டாயமும் புரிந்தது..
மறுநாள் மாலை சாரதாம்மாள் வந்து கதவைத் தட்டவும், மேஜிக் ஐ மூலமாகப் பார்த்து தெரிந்து கொண்டவள் கதவை திறப்பதற்கு முன்பு காயத்ரியை அவளுடைய அறைக்கு அனுப்பிவிட்டு வந்து மெதுவாகக் கதவைத் திறந்தாள். சாரதாம்மாவுடன் இன்னொரு பெண்ணும் வந்திருந்தார். 25 வயது மதிக்கத்தக்க அந்தப்பெண் மிகச் சூட்டிப்பானவளாகத் தெரிந்தாள். யார் இந்தப்பெண் இதுவரை இந்த காலனியில் பார்த்ததில்லையே என்று சந்தேகமாக அவளைப் பார்ப்பதைப் புரிந்து கொண்ட சாரதாம்மாள், இவள் என் தூரத்து உறவு, பெங்களூருவில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாள். கம்பெனி வேலையாக சென்னை வந்தாள். அப்படியே என்னையும் பார்க்க வந்தாள் என்று சொல்லிவிட்டு, காயத்ரியை கண்களால் துளவினாள். அதை உணர்ந்த சரசு, ”காயத்ரி ஓய்வெடுக்கிறாள். உடம்பு சரியில்லையோன்னோ... அதான்.. ” என்று இழுத்தாள்.
ஆனால் அதை துளியும் சட்டை செய்யாத சாரதாம்மாள், வினிதா என்ற அந்தப் பெண்ணைப் பார்த்து, “போம்மா, அந்த கோடியில இருக்கற ரூம்தான் காயத்ரியோடது.. நீ போய் அவகிட்டே பேசிட்டிரு..”
வினிதா உள்ளே சென்றபோது காயத்ரி சுருண்டு ஒரு ஓரமாக கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தாள்.. பார்க்கவே பாவமாக இருந்தது. காயத்ரி என்று பெயரை கூப்பிட்டுக் கொண்டே அருகில் சென்றாள். விலுக்கென எழுந்து உட்கார்ந்தவள் கண்களில் ஒரு அச்சம். முகமெல்லாம் வெளுத்துப்போய் அந்த அழகிய வதனம் பொலிவிழந்து, துவண்டுபோய் இருந்தது. அவளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாள். அவளைப் பேச வைப்பது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை அவ்வளவு மிரண்டு போய் இருந்தாள். முதலில் எடுத்த எடுப்பிலேயே கல்லூரிக்குப் போகவில்லையா என்று கேட்டவுடன் பாவம், மிகவும் நடுங்கிப் போனாள். பிறகு மெல்ல காயத்ரி படிக்கும் அதே கல்லூரியில்தான் தன் தங்கை படிப்பதையும் சொல்லி, நடந்தது அனைத்தும் தனக்கும் தெரியும் என்பதை வெளிக்காட்டிக் கொண்டாள். தன் தங்கையும் ஆரம்பத்தில் இது போன்ற சூழலில் எப்படி சமாளித்தாள் என்று பக்குவமாக எடுத்துச் சொன்னாள். மாணவர்கள் ரேகிங் பண்ணுவது என்பது மிகத் தவறான விசயமாக இருந்தாலும், அளவாக இருக்கும் போது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகத்திற்கும், புரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு அல்லவா.எல்லை மீறாத வரை பிரச்சனை இல்லை. என்று ஆரம்பித்தவள் எவ்வளவோ பேசியும் காயத்ரி மனம் சமாதானமடையவில்லை. அவள் பயம் சற்றும் குறைந்தபாடில்லை. இனி அந்த கல்லூரிக்குப் போகப்போவதில்லை என்பதில் குறியாக இருந்தாள்.அடுத்து வினிதா சொன்னதைக் கேட்ட காயத்ரி முழுவதுமாக மாறிப்போனாள்....
ஆம், வினிதா ஒரு நாள் தன் அலுவலகத்தில் மீட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தன்னுடைய இருசககர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவள்,ஆளரவம் இல்லாத ஒரு இடத்தில் தன் வாகனம் பஞ்சர் ஆகிப்போக இறங்கி தள்ளிக்கொண்டு வந்தவளை வழிமறித்து வம்பு பண்ணிய ஒரு குடிமகனிடமிருந்து, தான் கற்றுக் கொண்ட தற்காப்புகக்லை காப்பாற்றிய விதத்தை எடுத்துச் சொன்னபோது அவளுடைய கண்களில் தெரிந்த நம்பிக்கை வினிதாவை மேலும் உற்சாகமாக அவளிடம் பேச வைத்தது.
அடுத்த முப்பது மணித்துளிகள் காயத்ரியின் வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய வகையில் நம்பிக்கை தருவதாக அமைந்தது. வினிதா அடுத்த நாள் தானே நேரில் வந்து காயத்ரியை கல்லூரியில் கொண்டுபோய் விட்டவள், அவளை வம்பு செய்தவர்களின் நடவடிக்கைகளை கவனிக்கும்படி பேராசிரியர்களிடம் சொல்லிவிட்டு வந்தாள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அந்த மாணவர்கள் மிக அன்பாக அவளிடம் நடந்து கொண்டது ஆச்சரியமாக மட்டுமில்லாமல் நெகிழ்வாகவும் இருந்தது.. தேவையில்லாமல் தான் மனதை குழப்பிக் கொண்டு இருந்தோமே என்று வருந்தினாள். இதே தெளிவு கல்லூரியில் தன் முதல் நாள் ரேகிங்கின் போது இருந்திருந்தால் அதற்கு உடன்பட்டு இப்படி பயந்து நடுங்கியிருக்க வேண்டியிருந்திருக்காதே என்றும் சிந்திக்கலானாள். சக மாணவர்களிடம்கூட இப்படி அஞ்சி நடுங்கும் நிலையில் இருந்திருக்கிறோமே என்று வெட்கித் தலைகுனிந்தாலும், தெளிய வைத்த வினிதாவிற்கு மனதார நன்றி சொன்னாள்.அன்று மாலையே கராத்தே வகுப்பில் இணையவும் முடிவு செய்தாள்.
நன்றி: திண்ணை வெளியீடு
எதிர்பாராத முடிச்சும் அவிழ்ப்பும். கதையை ரசித்தேன். நன்றி சொல்லவேண்டியது பக்கத்து வீட்டம்மாளுக்கும். இது போன்ற சிலர் தொந்தரவு செய்கிறார்களென்று நினைத்திருக்கிறேன் - கடைசியில் எதிர்பாராத உதவி அங்கிருந்து தான் வரும்.
ReplyDeleteபாராட்டுக்கள்,.
மேஜிக் ஐ?
ReplyDeleteஅன்பின் அப்பாதுரை சார்,
ReplyDeleteமிக்க நன்றி. மேஜிக் ஐ என்று நம் கதவுகளில் (main entrance)நடுவில் சிறு கண்ணாடி வைப்பார்கள்.. உள்ளேயிருப்பவர்கள் மட்டும் வெளியே இருப்பவர்களைக் காண முடியும். வெளியே இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது. பாதுகாப்பிற்காக இதை கதவில் பொருத்துகிறோம். அந்தக் கண்ணாடி வழியாக பார்த்துவிட்டு கதவை திறப்பது... இதைத்தான் மேஜிக் ஐ என்பார்கள்.. மிடில் கிளாள் பாதுகாப்புக் கருவி...
அன்புடன்
பவள சங்கரி.