Tuesday, June 5, 2012

மாறியது நெஞ்சம்!


கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன தொழில் முறையில் இராட்சச இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கியிருந்தன. இன்று புதிதாக கட்டப்படும் ஷெட்டிற்கு மேலே சிமெண்ட்டு அட்டை போடுவதற்காக இரும்பு கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 30 அடியில் நெடிதுயர்ந்த கட்டிடம். நெருப்பில் வேலை செய்யக்கூடிய இடமாக இருப்பதால் அவ்வளவு உயரம் இருந்தால்தான் பாதுகாப்பு, வெப்பமும் சற்று மட்டுப்படும்.. 20 ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் முத்து கார்ப்பெண்ட்டர் வேலை பார்ப்பவர். கைதேர்ந்த வேலைக்காரன். இவர்களுடைய ஐந்தாவது கட்டிடம் இன்று இவன் வேலைபார்ப்பது.. அனாவசியமாக வாய் பேசாமல், காரியத்தில் கண்ணாய் இருப்பவன். எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கி வைத்திருப்பவன்.

அன்று கத்திரி வெய்யில் காலம். 112 டிகிரி... மண்டையைப் பிளக்கும் வெய்யில். மேலே ஏறி கம்பி கட்ட வேண்டும். வெய்யில் என்று பார்த்தால் வேலையாகுமா.. பெரிய இராட்சத இரும்பு கிரில் மேல் தளத்தின் மீது, வேலை செய்வதற்கு தோதாக, இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டு பாதுகாப்பாக மேலே ஏறி, கம்பி கட்டி, ஆணியும், ஸ்குரூவும் வைத்து முடுக்க வேண்டும். இரும்பு கம்பியுடன் சேர்த்து பெல்ட்டை கட்டிக் கொண்டு வேலை செய்வார்கள். உயரம் அதிகம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடு அது.

மனைவி தன்னைப்போல கட்டிட தொழிலுக்கு வந்து வெய்யிலிலும், மழையிலும் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது, அவளுடைய சிவந்த மேனி மெருகு கலையாமல் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அவளை ஜவுளிக்கடையில் வேலைக்குச் சேர்த்து விட்டிருந்தான். அன்று வாடிய முகத்துடன் வேலைக்கு வந்தவன் ஒருவரையும் கண்டு கொள்ளாமல் வழக்கத்திற்கு மாறாக உம்மென்று அவன் பாட்டிற்கு பெல்ட்டை எடுத்து இடுப்பில் மாட்டிக் கொண்டு மளமளவென மேலே ஏற ஆரம்பித்தான். மணி கிட்டத்தட்ட மதியம் 12ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. முத்து திடீரென என்ன நினைத்தானோ தெரியவில்லை, இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டை அவிழ்த்து விட்டான். கீழே நின்று கொண்டிருந்த சிட்டாளுக்கு இவன் ஏன் இப்படி பெல்ட்டை அவிழ்க்கிறான் என்று சந்தேகமாக இருந்தது.. உஸ்...உஸ்ஸ்.. என்று உஷ்ணம் தாங்காமல் சப்தம் எழுப்பியதால், பெல்ட் உறுத்துவதால் கழட்டி விட்டான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டாள் அவள்...

அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக மூழ்கியிருக்க திடீரென அம்மா...... ஐயோ... என்று பேரிரைச்சல். மரண ஒலி என்றால் இதுதான் என்று அனைவரும் உணரும் வேளையில் 30 அடி உயர கட்டிடத்திலிருந்து தொம்மென்று கீழே விழுந்த சத்தம்.. ஐயோ என்று அனைவரும் ஒருசேர கத்திக் கொண்டு சத்தம் வந்த திசை நோக்கி அருகில் ஓட.. அங்கே.. மண்டை உடைந்து இரத்த வெள்ளத்தில் கார்ப்பெண்ட்டர் முத்து! மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.......

ஏம்மா, உனக்கு எத்த்னை த்டவை சொல்றது.. இப்படி ஒரு நாளைப்போல லேட்டா வறியே, இது உன் அப்பன் வீட்டு கடைன்னு நினைப்பா... பேசாம வேலையை விட்டு நின்னுக்கோ. எப்பப் பார்த்தாலும் இதே கழுத்தறுப்பா இருக்கு உன்கிட்ட

சார், மன்னிச்சிடுங்க சார், குழந்தைக்கு உடம்பு சரியில்ல, அஸ்பத்திரியில ஏகப்பட்ட கூட்டம்.கியூவில நின்னு மருந்தும் வாங்கிட்டுவர நேரமாயிடிச்சு சார், இந்த ஒரு முறை மன்னிச்சிசுடுங்க சார்

பேசும்போதே கண்களில் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அவளால் அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை கம்மிவிட்டது. மேனேஜருக்கும் பரிதாபம் வந்ததோ என்னவோ, “போம்மா.. போய் வேலையைப் பாரு. இனிமே இப்படி லேட்டால்லாம் வராதேஎன்று சொல்லி அனுப்பி வைத்தார்..

அந்தப் பெரிய ஜவுளிக்கடையில் விற்பனையாளர் பிரிவில் பில் போடும் வேலை பார்க்கும் இந்த மல்லிகாவிற்கு அந்த வேலைதான் தனக்கும் தன்னை நம்பி இருக்கும் இரண்டு குழந்தைகள், மாமனார், கணவன் ஆகிய அனைவருக்கும் சோறு போடும் அன்னலட்சுமி. இந்த வேலையிலும் பிரச்சனை வந்தால் பிறகு அனைவரும் வயிற்றுக்கு ஈரத்துணிதான் கட்டிக் கொள்ளவேண்டும்..

காலையில் எழுந்திருக்கும் போதே இன்று ஏனோ மனதில் சொல்ல முடியாத வேதனை.. துவண்டு கிடக்கும் தன் இரண்டு வயது குழந்தை திவ்யாவிற்கு நான்கு நாட்களாக காய்ச்சல். கைவைத்தியமாக ஏதேதோ செய்தும் ஒன்றும் பிரயோசனமில்லை. மாமனாரிடம் குழந்தையை விட்டுவிட்டு ஓடி வந்துவிடுகிறாள் வேலைக்கு. பாவம் பெரியவர் குழந்தையை வைத்துக் கொண்டு படாத பாடுபடுகிறார். குழந்தையை வேறு பெரிய தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கையில் காசும் இல்லை. சம்பளம் வர இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. எதையோ யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ஏதோ குறுகுறுப்பாக இருக்கவே திடீரென சுயநினைவிற்கு வந்தவள், சுற்றும் முற்றும் பார்த்தாள்.. சேல்ஸ்மேன் சின்னப்பன், தன்னையே விழுங்குவதுபோல பார்த்துக் கொண்டிருந்தான். உடல் இளைத்துப் போனதால், இரவிக்கை உடம்போடு ஒட்டாமல் தனியாக தொங்கிக்கொண்டிருக்க, குழந்தை பற்றிய நினைவில் தன்னிலை மறந்தவள், சேலை ஒருபுறம் விலகிப்போனதும், தெரியாமல் யோசனையில் மூழ்கிக் கிடந்திருக்கிறாள். இந்த வேதனையையும் சேர்த்தே அந்த கழுகுக்கண்கள் விழுங்கிக் கொண்டிருந்தது... அருவெறுப்பாய் அவனைப் பார்த்த ஒரு பார்வையில் அவன் கூனிக்குறுகிப் போனான்.

காலையிலேயே இன்று கந்து வட்டி ராசு வந்து வீட்டின் முன்னால் நின்று மானம் போக கத்திவிட்டான். இரண்டு மாதமாக வட்டி கொடுக்காவிட்டால் சும்மாவா விடுவான் அந்தப் பாவி.. வாங்கிய பணத்திற்கு மேலேயே வட்டி கொடுத்தாகிவிட்டது. ஆனாலும் முதல் கொடுக்க முடியாதலால் அவன் பேசிய பேச்சு, கணவன் முத்துவை புரட்டிப் போட்டதும் நிசம்தான்.. மனைவியையும், குழந்தைகளையும், அப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த அக்கரை காட்டுபவன். இத்தனைக்கும், குடியோ, கூத்தியோ அல்லது சூதாட்டமோ எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. கார்ப்பெண்ட்டர் வேலையில் நல்ல வருமானமும் உண்டு. நல்ல தொழில் தெரிந்த வேலைக்காரன் என்று மேஸ்திரி பலமுறை புகழ்ந்து, விடாமல் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி இருந்தும் கந்துவட்டிக்காரனிடம் கடன் வாங்கும் அளவிற்கு அப்படி என்னதான் பிரச்சனை இவனுக்கு, வீட்டிற்கும் பணம் ஒழுங்காக கொடுப்பதில்லை. அவ்வப்போது ஏதோ 50ம், 100ம் கொடுப்பதோடு சரி. ரொம்ப நாள் புரியாத புதிராக இருந்த இந்த விசயத்தை துப்பறிந்துதான் கண்டுபிடித்தாள்..

நாட்டில் லாட்டரி சீட்டு ஒழிந்துவிட்டது என்று சட்டம் போட்டாலும், திருட்டுத்தனமாக விற்பவர்கள் விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு பெரிய நெட் ஒர்க்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரூபாய் 3000 கொடுத்தால், 5000க்கு சீட்டு கொடுப்பார்களாம். காலையில் நோட்டை எண்ணிக் கொடுத்துவிட்டு நாள் முழுவதும் லட்சக்கணக்கில் பணம் வரப்போகிறது மனைவியையும், குழந்தைகளையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கப் போகிறோம் என்ற கற்பனைக் கோட்டையுடன் வலம் வருவான். மாலையில் பார்த்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் அல்லது 50 ரூபாய் என்று விழும். பல நாட்கள் அதுவும் கிடையாது. இப்படியே வாழ்க்கை ஓடுகிறது. 100 லட்சமும், கோடியும் ஆகும் நாள் தூரத்தில் இல்லை என்று நம்பிக்கை மட்டும் பெரிதாக இருந்தது. மாலையில் மனம் நொந்து அத்தனை சீட்டுகளையும் கிழித்துப் போட்டுவிட்டு முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு வருவான். தன் கூலிப்பணத்தை வேட்டு விட்டவன், மெல்ல மெல்ல ஊரைச்சுற்றி கடன் வாங்கவும் ஆரம்பித்து விட்டான். இன்று கந்துவட்டியில் வந்து முடிந்திருக்கிறது. அவன் மிகக் கேவலமாக தன் மனைவியை சம்பந்தப்படுத்தி பேசவும் அதைத் தாங்க முடியாமல் நொறுங்கிப் போய்விட்டான் முத்து. இரண்டு குழந்தை பெற்றவள் போலவா இருக்கிறாள்..இவ்வளவு ஏழ்மையிலும் அவளுடைய அழகு மட்டும் குறைவில்லாமல் தானே அனைவரின் கண்களையும் உறுத்துகிறது என்று வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டான்... பாழாய்ப்போன இந்த லாட்டரி சீட்டுப் பழக்கம் சம்பாதிக்கிற காசு அனைத்தையும் முழுங்குவதோடு, கந்து வட்டிக்குக்கூட கடன் வாங்கச் செய்கிறது. என்றாவது ஒரு நாள் மொத்தமாக பெரியதாக பரிசுப்பணம் அடிக்கத்தான் போகிறது தாமும் குடும்பத்தாருடன் பெரிய பொழைப்பு பிழைக்கப் போகிறோம் என்ற கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான்..

என்றும் இல்லாத மோசமான நாளாக அன்று தானும் கணவனை கண்டபடி திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஒரு புறம் இருந்தாலும், ஒரு பெண் எவ்வளவு நாட்கள்தான் பொறுமை காக்க முடியும்.... கோபத்தில் சற்று வார்த்தைகள் நெருப்புத் துண்டாய் வந்து விழுந்ததை அவளாலேயே தடுக்கவும் முடியவில்லை. உள்ளதைக் கொண்டு நிம்மதியாக வாழுவதை விட்டுவிட்டு இப்படி பேராசைப்பிடித்து குடும்ப அமைதியையே குலைக்கிறானே என்று கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்ததும் உண்மைதான். தான் பேசிய அத்தனைப் பேச்சிற்கும் மௌனமே பதிலாக வார்த்தை ஏதும் பேசாமல் தலை குனிந்தவாறே இருந்தானே என்று நினைத்து, நினைத்து மனதில் குமைந்து கொண்டிருந்தாள். அன்று பண்டிகைக்காலம் ஏதும் இல்லாத சமயமாதலால், அந்த உச்சி வெய்யில் நேரத்தில் கடையில் எந்த வியாபாரமும் இல்லாதலால் இவளுடைய சிந்தனை ஓட்டத்திற்கு தடையேதும் இருக்கவில்லை..

ஏய்யா.. நீயெல்லாம் ஒரு மனுசனா.. கட்டிக்கிட்டு வந்தவளுக்கு இப்படி ஒரு அவப் பெயரை வாங்கிக் கொடுத்துப்போட்டியே.. நாண்டுக்கிட்டு சாவலாம் போல இருக்குதுய்யா.. இரண்டு குழந்தைகளை பெத்துப் போட்டுட்டனே.. அதுக அனாதையா தெருவுல நிக்குமேன்னு பல்லைக் கடிச்சிக்கிட்டு உசிரை பிடிச்சிக்கிட்டு இருக்கேன்யா.. த்தூ... நீயெல்லாம் ஒரு மனுசனா...?”

இதுதான் தான் காலையில் இறுதியாக கணவனிடம் பேசியது. திடீரென அந்த ஏ.சி. குளுகுளு அறையிலும், தெப்பமாய் வியர்த்துக் கொட்டியது அவளுக்கு.

ஐயோ, தப்பு செய்துட்டோமே.. இப்படி பேசியிருக்கக்கூடாது. பாவம் மனுசன் எவ்ளோ வேதனைப்பட்டிருப்பாரு.. இன்னும் கொஞ்சம் நிதானமா வார்த்தையை விட்டிருக்கலாம். நரம்பில்லாத இந்த நாக்குல ஏதோ சனிதான் பிடிச்சிப்போச்சி போல. இல்லேன்னா இந்த 10 வருச வாழ்க்கைல ஒரு நாள்கூட இப்படியெல்லாம் தான் பேசியதே இல்லையே..!

மாலை போய் கணவனை சமாதானம் பண்ணும் வரை தன் மனம் ஓயப்போவதில்லை என்பதை அறிந்திருந்தாலும் அதைத் தவிர்க்க முடியவில்லை. சிலந்தி வலையாய் பின்னிய நினைவுகளினூடே சிக்கிய புழுவாய் துடித்துக் கொண்டிருந்தாள். தன் மேசை மீதிருக்கும் இண்டர்காம் ஒலிப்பது கூட காதில் விழவில்லை அவளுக்கு. பக்கத்து செக்‌ஷன் விற்பனைப்பெண் வந்து அவளை உலுக்கி, “போன் அடிப்பது கூட தெரியாமல் அப்படி என்னக்கா நினப்பு உனக்கு.. மேனேஜர் கூப்பிடுவாரு போல.போனை எடு.. நீ உம்பட சீட்டுல இல்லைன்னு நினைச்சு கண்டமேனிக்கு திட்டுவாரு.. சீக்கிரமா எடுத்து பேசுக்காஎன்று போனை எடுத்து கையில் கொடுத்தாள்..

சார்.. சார். என்ன சார். என்ன சொல்றீங்க சார். ஐயோ அப்படியா. கடவுளே...... எஞ்சாமி..என்று அலறியவள் அப்படியே மயக்கம் போட்டு சாய்ந்து விட்டாள்.. அருகிலிருந்த பெண் தாங்கிப்பிடித்து, அதற்குள் மற்றவர்களும் வந்து முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிவித்து விசயம் அறிந்து, மேனேஜரின் அனுமதியுடன் மல்லிகாவை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.

மருத்துவமனையின் வாசலில் தங்கள் ஏரியாவின் அத்துனை கட்டிடத் தொழிலாளிகளும் நின்று கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். இயந்திரமாக யார் பின்னாலோ அப்படியே சென்றவள் கணவனை தீவிர சிகிச்சைப்பிரிவு அறையின் கதவின் கண்ணாடி வழியாக பார்த்தவள் ஓ வென அலற ஆரம்பித்து விட்டாள். சுற்றி மருத்துவர்கள் புடைசூழ தன் அன்புக் கணவனின் உடல் தூக்கிப் போடுவதையும் மருத்துவர்கள் முகத்தில் அபாயரேகை ஓடுவதையும் உணர முடிந்தது அவளால்.. என்னமோ நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது என்பது மட்டும் நன்றாகவே புரிந்தது அவளுக்கு. வெளியில் வந்த மருத்துவர்களில் ஒருவர், “யாரும்மா மல்லிகா .. நீதானம்மா. மனசை தேத்திக்கம்மா. உன் கணவன் பிழைப்பது அரிது. எங்களால் ஆன எல்லாம் செய்துட்டோம். இனி ஆண்டவன் கையில்தான் உள்ளது அவர் பிழைப்பது. உன்னிடம் ஏதோ பேச வேண்டும் என்று ரொம்ப நேரமா துடிக்கிறார் பாவம். போய் பேசிவிட்டு வாம்மா. அவருக்கு தைரியம் சொல்வதுபோல் பேசும்மா. அழுது ஆர்ப்பாட்டம் செய்துடாதே, அதுவே அவருக்கு எமனாப் போயிடும் சரியா.. போம்மா போய் பேசிட்டு வா..

உள்ளே சென்றவள் அழுகையை கட்டுப்படுத்த பிரம்மப்பிரயத்தனம் எடுத்தாள். சத்தம் கட்டுப்பட்டாலும், கண்ணீர் ஆறாய் பெருகி ஓடியது.. சில துளிகள் கணவனின் மீதும் விழ அவன் உடலில் லேசாக ஏற்பட்ட அதிர்வை அங்கிருந்த மானிட்டர் மூலம் அறிய முடிந்தது அருகில் இருந்த செவிலியருக்கு..

என்ன சாமி ஆச்சு. ஜாக்கிரதையா இருக்கப்படாதா.. உன்னைய நம்பித்தான ராசா நாங்கள்ளாம் இருக்கோம். உனக்கு ஒன்னியும் ஆவாது. நீ பிழைச்சு வந்துடுவேன்னு டாக்டருங்க சொல்றாங்க. தைரியமா இருய்யா.

அணையப்போகும் தீபம் சுடர்விட்டு பிரகாசிப்பது போல மிகத்தெளிவாகப் பேசினான் முத்து. தன் முடிவுக் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தும் இருந்தவன் போலத்தான் இருந்தது அவன் பேச்சு.

மல்லிகா, என்னை மன்னிச்சுடு புள்ள.. உன்னைய ராணியாட்டமா வச்சிக்கிடனும்னுதான் நானும் இத்தனை வருசமா போராடிட்டிருக்கேன். ஒரு பிரயோசனமும் இல்ல.. உனக்கு கஷ்டத்துக்கு மேல கஷ்டமா குடுத்துப்பிட்டேன். இனிமே உனக்கு வாழ்க்கைல கஷ்டமே இருக்கக் கூடாதுன்னுதான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். வழியில வரும்போதே மேஸ்திரிகிட்ட எல்லாத்தையும் புரிய வச்சிருக்கேன் முடிஞ்சவற.. அவரு எப்படியும் கூட்டத்தை சேர்த்தி முதலாளிகிட்ட கனிசமா ஒரு தொகை வாங்கித் தருவாரு. அதை வச்சு சூதானமா பொழைச்சுக்கோப் புள்ள.. என்னால முடிஞ்சது அவ்ளோதான். நான் உனக்கு பண்ணது பெரிய பாவம் என்னைய மன்னிச்சிடும்மா. குழந்தைகளை நல்லா படிக்க வைய்யி தாயி.. அப்பாவை நல்லபடியா பார்த்து எடுத்துப் போட்டுடு.. இனியாவது கடன் இல்லாம நிம்மதியா இரும்மா.. மொத்தமா 50 ஆயிரம் கடன் இருக்கும். யார் யாருக்கு கொடுக்கனும்னு எம்பட இரும்பு பொட்டில கணக்கு இருக்கு பாரு. அவிங்களுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை பத்திரமா பேங்கில போட்டுக்கோ. குழந்தைகள நல்லபடியா பாத்துக்கோ தாயி... என்னைய மன்னிச்சிடும்மா.. என்று சொல்லும் போதே திணறல் அதிகமாகி தூக்கிப் போட ஆரம்பித்தது கண்டு நடுங்கிப்போய் விட்டாள் மல்லிகா. அதற்குள் டாக்டர்கள் வந்து சூழ, மெல்ல மெல்ல அவன் மூச்சு அடங்க ஆரம்பித்தது. டாக்டர்கள் தன் கணவனின் மார்பை வைத்து அழுத்தும் கொடுமையை கண்ணால் பார்க்கச் சகிக்க முடியாமல் தலையை திருப்பிக் கொண்டாள். ஒரு நர்ஸ் வந்து அவளை கையைப்பிடித்து வெளியில் கொண்டுவந்து விட்டதுதான் தெரியும்.. உலகமே இருண்டு பிரம்மை பிடித்தது போல ஆகிவிட்டது அவளுக்கு.

எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்து கிடந்தாளோ தெரியவில்லை.. சங்கத்துக்காரர்கள் முதலாளியிடம் தகராறு செய்து கொண்டிருப்பது மட்டும் நன்றாகப் புரிய ஆரம்பித்தது அவளுக்கு. கணவனின் உயிர் பிரிந்து, மூட்டை கட்டி எடுத்துப்போக தயார் நிலையில் இருந்தும் மேஸ்திரியும் மற்ற ஆட்களும் முதலாளியிடம் 5 இலட்சம் கொடுத்தால்தான் ஆச்சு என்று தகராறு செய்து கொண்டிருப்பது புரிந்தது. பணம் கொடுக்காமல் உடலை வாங்க முடியாது என்று பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். மல்லிகா தன் அழுகையை நிறுத்திவிட்டு, தெளிவாக ஒரு முடிவிற்கு வந்தவளாக மளமளவென எழுந்து சென்றாள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் மரத்தடியை நோக்கி.. அவ்வளவு பெரிய முதலாளி பாவம் மரத்தடியில் நின்று கொண்டு சமாதானம் பேசிக்கொண்டிருந்தார். இன்று ஒருவருக்கு இப்படி தங்கள் மேல் தவறே இல்லாதபோதும் 5 இலட்சம் கொடுத்தால் இதுவே ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று அவர் வாதம் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். முதலாளியின் அருகில் சென்ற மல்லிகா,

ஐயா, என் புருசன் மேலத்தான் தப்பு ஐயா. அவரு மனசு அறிந்துதான் தானே பெல்ட்டை கழட்டி விட்டு கீழே விழுந்து உயிரை விட்டிருக்கார். அதனால நீங்க விருப்பப்பட்டதை குடுங்க சார். அனாவசியமா த்கராறெல்லாம் வேண்டாம்.

என்றாள் தெளிவாக.

மேஸ்திரி அவளைப் பார்த்து சத்தம் போட முயன்ற போது கையமர்த்தி, அவர்கள் யாரும் இந்த விசயத்தில் தலையிட வேண்டாம் என்று தெளிவாகக் கூறிவிட்டாள். அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க தயாராகிவிட்டாள். மாமனாருக்கு தகவல் சொல்லி வீட்டை தயார் நிலையில் வைக்க ஆள் அனுப்பிவிட்டு, கணவனின் உடலை ஆம்புலன்சில் ஏற்றியவுடன் அமைதியாக அருகில் சென்று அமர்ந்தவள்.. அதற்குமேல் தாங்க முடியாமல் அழுகை வெடித்துவிட்டது.

இறுதி காரியங்கள் அனைத்தும் முடிந்து, உறவினர்கள், பழகியவர்கள் என அனைவரும் அவரவர் வேலையைப்பர்க்க போய்விட்ட பின்புதான் வருங்காலம் குறித்த பாரம் நெஞ்சை அடைத்தது. மேஸ்திரியும் பிழைக்கத் தெரியாதவள் என்று கண்டபடி திட்டிவிட்டு சென்று விட்டார். அப்போதுதான் வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. முதலாளி அனுப்பியதாக சொல்லி, அவருடைய காரியதரிசி ஒரு பையில் பணம் கொண்டுவந்து கொடுத்தார். கணவன் சொன்ன அதே ஐந்து இலட்சம் பணம் மட்டுமில்லாமல் தன்னுடைய இரண்டு குழந்தைகளும் எவ்வளவு படிக்க விரும்பினாலும் அதன் மொத்த செலவையும் தங்கள் கம்பெனி டிரஸ்ட் ஏற்றுக் கொள்வதாக சட்டப்பூர்வமாக எழுதிக் கொடுத்திருந்தார்கள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.. எல்லாம் கடவுள் செயல் என்று மட்டும்தான் எண்ணமுடிந்தது அந்த நேரத்தில்..

காரியதரிசிக்கு மட்டும் பலமான ஆச்சரியம். முதலில் பணம் கொடுக்க மறுத்த முதலாளி, பின்பு பணமும் கொடுத்து, அந்தக் குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதன் காரணம் புரியாமல் முதலாளியிடமே சென்று கேட்டும் விட்டார். ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்த முதலாளியின் மனதில், லாட்டரி சீட்டின் நெட் ஒர்க்கின் பிரதான தலைவர் பொறுப்பில் இருக்கும் தன்னால் இப்படி எத்துனை குடும்பங்கள் சீரழிந்ததோ தெரியவில்லையே.. இப்படி ஒரு கோணத்தில் இதுவரை தான் சிந்திக்கவே இல்லையே என்று நொந்ததுடன் நிற்காமல் உடனடியாக அந்தத் தொழிலிருந்து விலகுவதாக முடிவும் எடுத்தார்.. முத்துவின் ஆன்மா தன்னை வாழ்த்தும் என்றும் நம்பினார் அவர்!

நன்றி : திண்ணை வெளியீடு


No comments:

Post a Comment